Published:Updated:

அவள் பதில்கள் 15: எந்நேரமும் வேலை போகலாம்... எப்படிச் சமாளிப்பது?

அவள் பதில்கள் 15
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள் 15

சாஹா

அவள் பதில்கள் 15: எந்நேரமும் வேலை போகலாம்... எப்படிச் சமாளிப்பது?

சாஹா

Published:Updated:
அவள் பதில்கள் 15
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள் 15
நான் சிங்கிள் வுமன். என்னை நம்பி என் பெற்றோரும் எட்டு வயது மகளும் இருக்கிறார்கள். வேலையிடத்துச் சூழல் சரியாக இல்லை. எந்த நேரத்திலும் என்னை வேலையைவிட்டு அனுப்பலாம் என்ற நிலையில், இன்னொரு வேலை கிடைக்கும்வரை வீட்டின் நிதி நிலைமையை நான் எப்படிச் சமாளிப்பது... கடன் வாங்குவது சரியான முடிவா? - என்.லலிதா, தூத்துக்குடி
அவள் பதில்கள் 15: எந்நேரமும் வேலை போகலாம்... எப்படிச் சமாளிப்பது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் ரேணு மகேஷ்வரி.

கோவிட் போன்றதொரு பெருந்தொற்றுக் காலத்தை மருத்துவ உலகின் உச்சக்கட்ட சோகம் என்றே சொல்ல லாம். இந்த நிலையில் ஒருவர் வேலையையும் இழப்ப தென்பது பொருளாதார சுமையையும் கூட்டுகிறது. ஒரு குடும்பத்தில் இருவர் சம்பாதிக்கும்பட்சத்தில் பெண்ணின் வருமானம் பிரதானமல்ல, கூடுதல் சப்போர்ட் என்ற நிலையில் பொருளாதார இழப்பை ஓரளவுக்கு சமாளித்துவிட முடியும்.

பெருந்தொற்றுக் காலத்தில் இயல்பாகவே குடும்பத்தில் குறைக்கப்பட்ட செலவுகளின் மூலம் கொஞ்சம் சமாளிக்க லாம். குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவும் பிற வீட்டு வேலைகளுக்கும் ஆட்கள் கிடைக்காத நிலையில் பல பெண்களும் வேலையைவிட்டு அந்தப் பொறுப்புகளைக் கையில் எடுக்க முடிவு செய்வதும் இந்த அடிப்படையில்தான்.

ஆனால், அந்தப் பெண்தான் குடும்பத்தில் பிரதான வருமானம் ஈட்டுபவராக இருக்கும்போதுதான் அவரது வேலையிழப்பு என்பது பிரச்னைக்குரியதாகிறது. அந்த நிலைமையை நீங்கள் எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள் என்பது உங்களுடைய பொருளாதார நிலை, உங்கள் வயது மற்றும் வாழ்வின் எந்தக் காலகட்டத்தில் இருக் கிறீர்கள் என்று பல விஷயங்களைப் பொறுத்தது. வேலையிழப்பு என்பது தற்காலிகமானது. ஆனாலும் அந்தச் சூழலைச் சரியாகக் கையாளாவிட்டால் அது ஏற்படுத்தும் விளைவுகள் நிரந்தர பாதிப்புகளாக மாறக் கூடும். இந்த நிலையில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைச் சொல்கிறேன்.

உங்களுடைய சொத்து, கடன் மற்றும் செலவினங்களை முதலில் பட்டியலிடுங்கள். அடுத்த ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடத்துக்கு அல்லது இன்னொரு வேலை கிடைக்கும்வரை குடும்பத்தை நடத்தும் அளவுக்குப் பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். அந்தப் பணமானது உங்களுடைய முதலீடு மற்றும் அவசரகால நிதியிலிருந்து வருவதாக இருக்கட்டும்.

கடன் வாங்கி நிலைமையைச் சமாளிக்க நினைக்காதீர்கள். முதலீடுகளை மட்டுமே பயன்படுத்துங்கள். வேறு வழியே இல்லை, கடன் வாங்கியே ஆக வேண்டும் என்ற நிலையில் பாதுகாப்பான லோன்களை நாடுங்கள். நகைக்கடன், தங்கத்தின் மீது வழங்கப்படும் கடன்களில் வட்டிவிகிதம் குறைவு என்பதால் அவற்றை யோசிக்கலாம்.

கிரெடிட் கார்டு பேமென்ட்டுகளைக் கட்டத் தவறாதீர்கள். அதைத் தவிர்ப்பது அந்தச் சூழலுக்கு அது சுலபமாகத் தெரிந்தாலும் பிறகு உங்களுடைய நிதிநிலைமையில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பர்சனல் லோன்களை மறுசீரமைப்பு செய்ய நினைக் காதீர்கள். உங்கள் குடும்பத்தாரின் உடல்நலம் தொடர்பான செலவுகளை அலட்சியப் படுத்தாதீர்கள். ஹெல்த் இன்ஷூரன்ஸ் கட்டணத்தைக் கட்டத் தவறாதீர்கள். எல்லா வற்றுக்கும் மேலாக இதுவும் கடந்துபோகும் என நம்புங்கள்.

பயமோ, பதற்றமோ உங்களை அவசரமான, தவறான முடிவுகளை எடுக்கவைத்து, நிதிநிலைமையில் இன்னும் சிக்கல்களையே ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

@ கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு வாய்ப்புண் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? சாதாரணமாகவே அடிக்கடி வாய்ப்புண்ணால் அவதிப் படுவோருக்கு ஏதேனும் தீர்வுகள் உண்டா?

- பாலசுப்ரமணியம்

அவள் பதில்கள் 15: எந்நேரமும் வேலை போகலாம்... எப்படிச் சமாளிப்பது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி.

கொரோனாவால் ஏற்பட்ட வாய்ப்புண் ணுக்கும் சரி, சாதாரணமாக வரும் வாய்ப் புண்ணுக்கும் சரி... சித்த மருத்துவத்தில் அற்புதமான தீர்வுகள் உள்ளன. அப்படியோர் அற்புதமான மருந்து தேங்காய்ப்பால். உடைத்து இரண்டு, மூன்று நாள்களான தேங்காயிலிருந்து எடுத்த பாலாக இருக்கக் கூடாது. அப்போது ஃப்ரெஷ்ஷாக உடைத்த தேங்காயிலிருந்து பால் எடுத்து காலை முதல் மாலை 4 மணிக்குள் குடிக்கலாம். இரவு நேரத்தில் தேங்காய்ப்பால் குடிப்பது சிலருக்கு செரிமான கோளாறுகளை ஏற்படுத்தலாம் என்பதால் அதைத் தவிர்க்கவும்.

20 முதல் 30 மில்லி அளவு தேங்காய்ப்பாலை குடிக்கலாம் அல்லது அதில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்தும் குடிக்கலாம். தேங் காய்ப்பால் ஏற்றுக்கொள்ளாது என்பவர்கள் வெறும் கடுக்காய்ப் பொடி அல்லது திரிபலா பொடி இரண்டில் ஒன்றில் அரை டீஸ்பூன் சாப்பிடலாம்.

வாய்ப்புண்ணை குணமாக்குவதில் மாசிக்காய் மிகச் சிறந்தது. அதை இழைத்து வாயில் புண் உள்ள பகுதியில் தடவிக் கொள்ளலாம். அல்லது மாசிக்காய் சூரணம் கிடைக்கிறது. அதில் அரை டீஸ்பூனை எடுத்து வெறும் தண்ணீரில் கலந்து குடிக்கலாம். எல்லாவிதமான கீரைகளுமே வாய்ப் புண் ணுக்கு ஏற்றவை, குறிப்பாக மணத்தக்காளிக் கீரை. இரண்டு, மூன்று இலைகளைக் கழுவி விட்டு பச்சையாக அப்படியே மென்று விழுங்கலாம். பச்சையாக சாப்பிடப் பிடிக்காத வர்கள், ஒரு கைப்பிடி மணத்தக்காளிக்கீரையுடன் நான்கைந்து சின்ன வெங்காயம், ஒரு டீஸ்பூன் சீரகம், அரை டம்ளர் தேங்காய்ப்பால் சேர்த்து குறைந்த தணலில் 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து உப்பு சேர்த்து சூப் மாதிரி அருந்தலாம். இதை இருவேளை சாப்பிட்டாலே நல்ல பலன் தெரியும்.

தேங்காய்ப்பாலில் பீட்ரூட் சாறு கலந்தும் குடிக்கலாம். அகத்திக்கீரையை சூப்பாக செய்தோ, சாறெடுத்தோ குடிப்பதும் பலன் தரும். ஏலக்காயைப் பொடியை பாலிலோ, தேங்காய்ப் பாலிலோ கலந்து குடிக்கலாம். ஏலக்காய் விதைகளை அப்படியே மென்று அதன் சாற்றை விழுங்கினாலும் பலன் தெரியும். கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாறெடுக்கவும். அத்துடன் சிறிது எலுமிச்சைப்பழச்சாறும் இனிப்புக்கு பனங்கற்கண்டோ, நாட்டுச்சர்க்கரையோ சேர்த்துச் சாப்பிடலாம். இனிப்புச்சுவை பிடிக்காதவர்கள் இதில் சீரகத்தூளும் சிறிது உப்பும் சேர்த்துக் குடிக்கலாம். மேலே குறிப்பிட்ட தேங்காய்ப்பால் சிகிச்சைகளை நீரிழிவுக்காரர்களும் பின்பற்றலாம். அவர்கள் தேங்காய்ப்பாலில் இனிப்புக்காக எதையும் சேர்க்காமல் அப்படியே எடுத்துக் கொள்ளலாம்.

அவள் பதில்கள் 15: எந்நேரமும் வேலை போகலாம்... எப்படிச் சமாளிப்பது?

@ கைகால்கள் மரத்துப்போவதாக நிறைய பேர் சொல்லக் கேட்கிறேன். ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக இருக்குமா? கைகால்கள் மரத்துப்போவது கொரோனாவின் அறிகுறியா?

- எஸ்.செல்லம்

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி.

சில நேரத்தில் ஆக்ஸிஜன் குறைவதால் கைகால்கள் மரத்துப்போகலாம். உதாரணத் துக்கு நம்முடைய சூழலில் இருக்கும் காற்றில் 21 சதவிகிதம்தான் ஆக்ஸிஜன் இருக்கும். மீதி மற்ற வாயுக்கள் கலந்திருக்கும். அந்த 21 சதவிகிதத்திலிருந்து சுவாசித்துதான் நமக்கு உடலின் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 99 சதவிகிதமாக இருக்கிறது. அந்த நிலையில் பெரிய பாதிப்புகள் வருவதில்லை.

ரத்த உயிர்வளிப் பரிமாற்றத்தில் 99 சதவிகிதத் தேவைக்கு இந்த 21 சதவிகித ஆக்ஸிஜன் அளவு போதுமானது. ஆனால் நம் உடல்நலம் பாதிக்கப்படும்போதோ, நுரையீரல் பாதிப்பு அதிகரிக்கும்போதோ, காற்றுப் பரிமாற்றத்தில் மாற்றங்கள் வரும்போதோ 21 சதவிகித ஆக்ஸிஜன் நமக்குப் போதாமல் போகலாம்.

அதாவது சேதமடைந்த நுரையீரல்களில் பிராண பரிமாற்ற நிலைகளில் பிறழ்வுகள் ஏற்படலாம், அப்போது இந்த 21 சதவிகித வளிமண்டல ஆக்ஸிஜன் நம் உடலுக்குப் போதாமல், ரத்த ஆக்ஸிஜன் அளவில் குறைபாடு ஏற்படும்

உடலுக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என்பதன் அறிகுறியாக மூச்சு வாங்கும். அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் சிலருக்கு கைகால்களில் குடைச்சல், மரத்துப் போன உணர்வு, பார்வை மங்குதல், மூச்சுத் திணறல் போன்றவை வரலாம். தவிர சத்துக் குறைபாட்டின் காரணமாகவும் சிலருக்கு கைகால்கள் மரத்துப் போகலாம். மற்றபடி கைகால்கள் மரத்துப்போவதை இதுவரை யாரும் கொரோனாவின் அறிகுறியாகச் சொல்லவில்லை. தேவையற்ற பயம் வேண்டாம்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம்.

உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.