Published:Updated:

Aval Vikatan Awards 2020: சுசீலா முதல் ஊர்வசி வரை... 2020-ன் சாதனைப் பெண்கள் இவர்கள்!

Aval Vikatan Awards 2020
Aval Vikatan Awards 2020

சேவை, சினிமா, மருத்துவம், வேளாண்மை என பலதரப்பட்ட துறைகளைச் சார்ந்த பெண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது அவள் விகடன்.

பல்வேறு துறைகளில் சாதித்த சாதனைப் பெண்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் விருதுகள் வழங்கி மகிழ்கிறது அவள் விகடன். அந்த வகையில் 2020-ம் ஆண்டுக்கான அவள் விருதுகள் பட்டியல் அவள் விகடன் இதழில் வெளியாகியுள்ளது. 19 பிரிவுகளில் சேவை, சினிமா, மருத்துவம், வேளாண்மை என பலதரப்பட்ட துறைகளைச் சார்ந்த பெண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது அவள் விகடன்.

`தமிழன்னை' சுசீலா

பெற்றோரால் கைவிடப்பட்டு, ஆதரவின்றி தவிக்கும் பெண் குழந்தைகளை அரவணைத்து தங்குமிடம், உணவு, கல்வி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்து அவர்களை நல்ல நிலைக்கு உயர்த்தும் உன்னத நோக்கத்தில் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியால் 1931-ம் ஆண்டு அவ்வை இல்லம் தொடங்கப்பட்டது. அவரது கனவுத் திட்டத்தின் வேருக்குத் தனது தன்னலமற்ற உழைப்பை நீராகப் பாய்ச்சி, இல்லத்தின் அறப் பணிகளைச் செழுமைப்படுத்தியவர் இப்போதைய அதன் தலைவர் சுசீலா

'தமிழன்னை' சுசீலா
'தமிழன்னை' சுசீலா

அடையாறு புற்றுநோய் நிறுவனத் தலைவராகச் சேவையாற்றி மறைந்த டாக்டர் வி.சாந்தாவின் தங்கையான சுசீலா சேவைப் பணிகளுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டுள்ளார். அமைதியும் எளிமையுமாகக் கல்வி அறிவு பாய்ச்சும் சுசீலா, புகழ் ஒளியிலிருந்து விலகியிருக்கும் நம்பிக்கை வெளிச்சம்.

`மாண்புமிகு அதிகாரி' டாக்டர் பிரப்தீப் கெளர்

கோவிட்-19 பற்றி அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் முக்கியப் பங்காற்றும் மூத்த விஞ்ஞானியான பிரப்தீப் கௌர், ஐ.சி.எம்.ஆர் - தேசிய பரவு நோயியல் நிறுவனத்தின் துணை இயக்குநர். பள்ளிப் படிப்பு பஞ்சாபில், மருத்துவம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் முடித்த பிரப்தீப், தமிழகத்தின் மருமகள்.

'மாண்புமிகு அதிகாரி' டாக்டர் பிரப்தீப் கெளர்
'மாண்புமிகு அதிகாரி' டாக்டர் பிரப்தீப் கெளர்

கடந்த 16 ஆண்டுக்கால அனுபவத்தில் பல்வேறு தொற்றுநோய் தீவிர நோய்ப் பரவல் நிலைகளைக் (Epidemic) கையாண்டிருக்கிறார். தொற்றாநோய்கள் மற்றும் தீவிர நோய்ப் பரவல் கண்காணிப்பு ஆகிய திட்டங்களுக்காகத் தமிழக அரசுடன் இணைந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் பிரப்தீப்பின் சேவை கொரோனா காலத்தில் மிகப்பெரியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`வைரல் ஸ்டார்' `அராத்தி' பூர்ணிமா

அராத்து' என்பார்களே… அப்படி `அராத்தி'. பூர்ணிமாவுக்கு யூடியூப் என்பது கனவோ, டைம் பாஸோ அல்ல. கல்விக்கடன் துரத்த ஏற்கெனவே அனுபவமுள்ள குறும்பட நடிப்பை முழுநேர தொழிலாக்கிக்கொண்டார். வாடகை அதிகமென்பதால் நண்பர்களுடன் சென்னையில் ஒரே வீட்டை ஷேர் செய்து கொண்டு, யூடியூபே சரணம் என சுழல ஆரம்பித்தார்

'வைரல் ஸ்டார்' `அராத்தி' பூர்ணிமா
'வைரல் ஸ்டார்' `அராத்தி' பூர்ணிமா

கோடம்பாக்கத்துக்குள் அடியெடுத்து வைத்து விட்டாலும், `யூடியூபை விட மாட்டேன்' எனச் சொல்லும் அராத்தி தமிழக சிறுநகரப் பெண்களின் இன்ஸ்பிரேஷன்.

`யூத் ஸ்டார்' அபர்ணா பாலமுரளி

தமிழ் சினிமா நாயகிகளில் `பொம்மி’ வித்தியாசமானவள். கனவைத் துரத்தும் நாயகனுக்கு உதவியாக மட்டும் நின்றுவிடாமல் `எனக்கும் கனவு உண்டு. அதை நாந்தான துரத்தணும்’ என சொன்னவள். `சூரரைப் போற்று' படத்தில் பொம்மி கதாபாத்திரத்துக்கு உயிர் தந்த அபர்ணாதான் சென்ற ஆண்டின் கோலிவுட் குயின்.

'யூத் ஸ்டார்' அபர்ணா பாலமுரளி
'யூத் ஸ்டார்' அபர்ணா பாலமுரளி
திரைக்கு வெளியேயும் வென்றுவிட்டாள் `பொம்மி'... மஞ்சுவுக்கும் நீலாம்பரிக்கும் நடந்தது என்ன?

அடிப்படையில் ஆர்க்கிடெக்ட்டான அபர்ணாவுக்கு கிளாசிக்கல் டான்ஸும் தெரியும்; நன்றாகப் பாடவும் தெரியும். இந்தப் பன்முகத் திறமையால் ரசிகர்களின் அன்பை அள்ளிய அபர்ணா `யூத் ஸ்டார்’தான்.

`எவர்கிரீன் நாயகி' ஊர்வசி

8 வயதில் ஊர்வசியைக் குழந்தை நட்சத்திரமாக்கி மகிழ்ந்தது மலையாள சினிமா. அவரை, `முந்தானை முடிச்சு' படத்தின் மூலம் கதாநாயகியாக்கி அழகு பார்த்தது தமிழ் சினிமா. அங்கு தொடங்கிய அவரின் கலக்கல் கரியர் இன்றுவரை ஓயவில்லை. 2020-ல் எந்த நடிகையைவிடவும் அதிகம் பேசப்பட்டவர் ஊர்வசிதான்.

'எவர்கிரீன் நாயகி' ஊர்வசி
'எவர்கிரீன் நாயகி' ஊர்வசி

கனவுக்காரனின் அம்மாவாக `சூரரைப் போற்று'வில் அழ வைத்தவர், கலகக்காரனின் அம்மாவாக `மூக்குத்தி அம்ம'னில் சிரிக்க வைத்தார். திரை தாண்டி ஓ.டி.டி பக்கம் குதித்த இந்த சகலகலாவல்லி, `புத்தம்புதுக் காலை'யில் ரொமான்ஸையும் விட்டு வைக்கவில்லை. 44 ஆண்டுகளாக மக்களை மகிழ்விக்கும் ஊர்வசிக்கு இன்னும் 44 ஆண்டுகள் ஆனாலும் மக்களின் மனதிலொரு தனி சிம்மாசனம் உண்டு.

எந்தெந்தப் பிரிவுகளில் யார் யார் விருதைப் பெற்றுள்ளனர், விருது பெற்றவர்களைப் பற்றிய கூடுதல் விவரங்கள் என முழு விவரத்தையும் அறிந்துகொள்ள இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு