தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்!

 அவள் விருதுகள் 2021
News
அவள் விருதுகள் 2021

பாமா, தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமும் கம்பீரமும் வாய்ந்த படைப்பாளி. இலக்கியம் என்பது வெறும் புனைவு அல்ல... அது ரத்தமும் சதையுமான சமூக வாழ்விலிருந்து உருவாவது என்று உறுதியாக நம்பும் தீர்க்கமான எழுத்தாளர்.

மருத்துவம், சமூக சேவை, இலக்கியம், விவசாயம், விளையாட்டு, சினிமா என பற்பல தளங்களிலும் சிகரம் தொட்டுக் கொண்டிருக்கும் சாதனைப் பெண்களைப் பாராட்டி பெருமைப் படுத்தும் வகையில் விருதுகள் வழங்கி வருகிறது அவள் விகடன். அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்கான அவள் விருதுகள், வரும் நவம்பர் 18-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. சிறப்புமிக்க அவள் விருதுகளைப் பெறவுள்ள பாராட்டுதலுக்குரிய பெண்களின் பட்டியல் இங்கே...

 அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்!

கலை நாயகி - வாணி ஜெயராம்

‘தமிழிசைக்கு முக்கியத்துவமே இல்லை; இங்கும் இந்தி இசையின் தாக்கமே நிலைபெற்றிருக்கிறது’ என்கிற குரல்கள் தமிழகத்தில் பலமாக ஒலித்துக்கொண்டிருந்த காலம் அது. ஆம்... 1950, 60-களில் டீக்கடைகள் தொடங்கி, திரையரங்குகள் வரை எங்கெங்கு காணினும் இந்திப் பாடல்களே ஒலித்துக்கொண்டிருந்தன. அத்தகைய கால கட்டத்திலேயே தமிழகத்திலிருந்து புறப்பட்டு, இந்தி (பாலிவுட்) திரையிசையில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியவர் வாணி ஜெயராம். ஒட்டுமொத்த இந்தியாவையும் மயக்கிய குரலுக்குச் சொந்தக்காரர். 1971-ல் இந்தியில் வெளியான ‘குட்டி’ திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக வெற்றிப் பயணத்தைத் தொடங்கினார்.

வேலூரில் பிறந்து, சென்னையில் வளர்ந்த வாணி, பாலிவுட்டில் முன்னணிப் பாடகியாக வலம் வந்து கொண்டிருந்த வேளையில், தென்னிந்தியத் திரையுலகமும் அவரை ஆரத்தழுவி வரவேற்றது. `மல்லிகை என் மயங்கும்‘ என்ற பாடல் தமிழகத்தில் பட்டித்தொட்டி யெங்கும் ஓங்கி ஒலித்தது. மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா எனப் பல மொழிகளிலும் இவரின் கிராஃப் அசுர வேகத்தில் உயர்ந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், சங்கர் கணேஷ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று ஜாம்பவான்கள் பலருடைய இசையிலும் இவர் பாடிய பாடல்கள், ‘அபூர்வ ராக’ங்கள்!

‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...’ என்று ஆரம்பித்து, தான் பாடிய பாடல்கள் வழியே வாழ்க்கைக்கான அனைத்து உணர்வு களையும் நமக்குக் கடத்திய வாணி, 19 மொழிகளில் பாடிய ஒரே பாடகி. 20,000-க்கும் மேற்பட்ட பாடல்கள், மூன்று தேசிய விருதுகள், பல மாநில அரசுகளின் விருதுகள் எனப் பல்வேறு சாதனைகளுடன் அரை நூற்றாண்டுக்கும் மேலாக உற்சாகம் குறையாமல் பாடிக் கொண்டிருக்கும் இந்த ‘இசைவாணி’க்கு ‘கலை நாயகி’ விருதை வழங்குவதில் பெரும் மதிப்பு கொள்கிறது அவள் விகடன்.

 அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்!

எவர்கிரீன் நாயகி - மீனா

‘ரஜினி அங்கிள்... எங்க இருக்கீங்க...’ என்கிற குரலுக்குச் சொந்தமான ‘க்யூட் குழந்தை’ மீனா. அவருடைய பெயரைப் பிற்காலத்தில் தென்னிந்தியாவே உச்சரிக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 1982-ல் வெளியான ‘நெஞ் சங்கள்’ படத்தில் அறிமுகமாகி, ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ உட்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் பருவமங்கை ‘சோலை’யாக வந்து நின்றபோது, தமிழ் ரசிகர்கள் அடைந்தது ஆனந்த அதிர்ச்சி.

‘அங்கிள்’ என்று குட்டிக்குழந்தையாக தான் அழைத்த ரஜினியுடன், பின்னாளில் ‘எஜமான்’ படத்தில் ஜோடிபோட்டு டூயட் பாடியது, தமிழ் சினிமா மறக்க இயலாத வரலாறு. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளின் உச்ச நாயகர்களுடன் ஜோடி சேர்ந்த மீனாவின் திரைத்துறை வளர்ச்சி, அசாத்தியமே! அழகும், நடிப்புத் திறனும் ஒருங்கே அமைந்த மீனா, தன் விழிகளின் காந்த விசையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டார். ஐந்து மொழிகளில் இதுவரை 190 படங்களில் நடித்திருக்கும் மீனா, சின்னத்திரை யிலும் தடம் பதித்திருக்கிறார். ‘த்ரிஷ்யம்’ படத்தின் வெற்றியால் மலையாளத்தில் அடுத்த இன்னிங்ஸையும் வெற்றியுடன் தொடங்கி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகப் பெருமக்களின் அன்பு குறையாதவராக வலம் வந்துகொண்டிருக்கும் மீனா வுக்கு, ‘எவர்கிரீன் நாயகி’ விருதை வழங்கி பெருமிதம் கொள்கிறது அவள் விகடன்.

 அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்!

வைரல் ஸ்டார் - ஷிவாங்கி

தமிழகச் சின்னத்திரை ரசிகர்கள் கூட்டத்தை தன் கலகல பேச்சாலும் நடிப்பாலும் கட்டிப்போட்டுக் கொண்டிருப்பவர்களில் ஷிவாங்கிக்கு முக்கிய இடமுண்டு. ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் போட்டியாளராக சின்னத்திரையில் நுழைந்து, இசைத்திறனை நிரூபித்தவருக்கு இன்ப அதிர்ச்சியாகக் கிடைத்ததுதான், ‘குக் வித் கோமாளி’ வாய்ப்பு. ‘இந்தப் பொண்ணு நடிக்குதுப்பா’ என்று ஆரம்பத்தில் கிண்டல் செய்தவர் களையும், ‘இந்தப் பொண்ணோட குணமே இப்படித்தான் போல...’ என தங்கள் வீட்டுப்பெண்ணாக ஏற்றுக்கொள்ள வைத்தன ஷிவாங்கியின் குறும்பான குணாதிசயங்கள். ‘குக் வித் கோமாளி’ இரண்டாவது சீசனில், அஷ்வின், புகழ், பாலா போன்ற சக போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுடன் இணைந்து, கண்ணில் நீர்முட்டும் அளவுக்கு நகைச்சுவை ரகளைகள் செய்து, சின்னத் திரையின் செல்லப் பிள்ளையாக வைரல் ஆனார்.

‘இப்படியொரு தங்கச்சி எனக்கில்லையே’ என நடிகர் சிவகார்த்திகேயனையும் பொறாமைப்பட வைத்ததுடன், அவருடன் இணைந்து ‘டான்’ திரைப் படத்தில் நடித்து வெள்ளித்திரையிலும் அடியெடுத்து வைத்தார். ‘நாய் சேகர் ரிட்டர்ன்’ஸில்’ நடித்து வடிவேலு வின் அன்பையும் பெற்றிருக்கிறார். கடந்த ஆண்டு சின்னத்திரையின் சிறந்த என்டர்டெயினராகவும் பரிணமித்த ஷிவாங்கிக்கு ‘வைரல் ஸ்டார்’ விருதை அளித்து வாழ்த்துகிறது அவள் விகடன்.

 அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்!

பசுமைப் பெண் - கீதாலட்சுமி

கோயம்புத்தூரிலிருக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் என்ற பெருமை மட்டுமல்ல, அகில இந்திய அளவில் வேளாண் பல்கலைக்கழகக்தின் முதல் பெண் துணை வேந்தர் என்கிற சாதனைக்கும் சொந்தக்காரர் கீதாலட்சுமி. விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் புத்துயிரூட்ட பாரம்பர்ய விவசாய முறைகளுடன் நானோ தொழில்நுட்பம், டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி, ரோபோடிக்ஸ் என அதிநவீன தொழில்நுட்பத்தை இணைக்கிறார். சாகுபடியை அதிகரிக்கும் வியூகங்களை வகுக்கிறார். வானிலை, விளைபொருள்களின் விலை உள்ளிட்டத் தகவல்கள் விவசாயிகளின் அலைபேசிக்கு குறுஞ் செய்தியாக, குரல் செய்தியாக அனுப்பப்படுகின்றன. தமிழக அரசின் உழவன் செயலி, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பேரிடர் மேலாண்மை எனச் சுழல வைக்கும் பொறுப்புகளுக்கான செயல் திட்டங்கள் படபடக்கின்ற அவர் மேசையில்.

இன்னொரு பக்கம், வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பை முடித்து வெளியே வரும்போது வேலைவாய்ப்புடனோ, வேலைவாய்ப்பை உருவாக்கித் தருபவர்களாகவோ வர வேண்டுமென, தனது 26 ஆண்டுக்கால பேராசிரியர் பணி அனுபவத்துடன் அவர்களைப் பட்டைத் தீட்டும் பொறுப்பிலும் மிளிர்கிறார். வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்ற மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் சாசனங்களை எழுதிக்கொண்டிருக்கும் கீதாலட்சுமிக்கு, ‘பசுமைப் பெண்’ விருது வழங்குவதில் பெரும் உவகை கொள்கிறது அவள் விகடன்.

 அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்!

செயல் புயல் - கன்யா பாபு

ஷாம் நடிப்பில் வெளியான `6 மெழுகுவர்த்திகள்' படத்தில் கடத்தப்பட்ட தன் குழந்தையை மீட்பதற்கான போரில் அவர் சந்திக்கும் ஒவ்வொரு நொடி அனுபவமும் நம்மை அச்சத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுவிடும். அத்தகைய அச்சத்தை நிஜத்தில் தினம்தோறும் சந்தித்துக்கொண்டே இருக்கிறார் கன்யா பாபு.

பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகவும், வெளிநாடு களில் வீட்டு வேலை பார்ப்பதற்காகவும் கடத்தப்பட்ட அல்லது விற்பனை செய்யப்பட்ட பெண்களையும் குழந்தைகளையும் கடந்த எட்டு ஆண்டுகளாக மீட்டு வருகிறார், குழந்தைகள்நல ஆர்வலரான கன்யா பாபு. நாற்பது பேரை கடந்த மூன்று ஆண்டுகளில் மீட்டிருக்கிறார். இந்த முயற்சியில், தன் உயிரைக்கூட பணயம் வைத்து சுழன்றுகொண்டிருக்கிறார் கன்யா பாபு. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சொந்த குடும்பத்தினரே வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்வதில் ஆரம்பித்து, ‘இந்த வழக்கில் ஆர்வம் காட்டுவதிலிருந்து நீ விலகாவிட்டால் அவ்வளவுதான்’ என்று வீடு தேடி வரும் கொலை மிரட்டல் வரை கன்யா சந்தித்த, சந்தித்துக்கொண்டிருக்கிற அச்சுறுத்தல்கள் ஏராளம். இதற்காக இவர் நடத்திக்கொண்டிருக்கும் போராட்டங்கள் சொல்லிமாளாதவை. பிச்சையெடுப்பதற்காகக் கடத்தி வரப்பட்ட ஒரு குழந்தையைக் காப்பாற்றப் போய், தன் குழந்தைகளுடன் கொலைவெறிக் கும்பலிடம் சிக்கி மீண்ட திகில் அனுபவமும் உண்டு. ஆனாலும், தன்னுடைய செயல் களில் சமரசம் செய்துகொள்ளாமல் துணிந்து நடைபோட்டுக் கொண்டிருக்கும் கன்யா பாவுக்கு ‘செயல் புயல்’ விருது வழங்குவதில் பெருமை கொள்கிறது அவள் விகடன்.

 அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்!

இலக்கிய ஆளுமை - பாமா

பாமா, தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமும் கம்பீரமும் வாய்ந்த படைப்பாளி. இலக்கியம் என்பது வெறும் புனைவு அல்ல... அது ரத்தமும் சதையுமான சமூக வாழ்விலிருந்து உருவாவது என்று உறுதியாக நம்பும் தீர்க்கமான எழுத்தாளர். தான் எதிர்கொண்ட சமூகத்தின் குரூர முகத்தையும் தான் பார்த்த சாதிய பாலின வர்க்க பேதங்களின் கொடுமைகளையும் தன் கூர்மையான மொழியின் மூலம் அடையாளப்படுத்தி வருபவர்.

பள்ளி ஆசிரியரான பாமா, எழுத்தை நோக்கி நகர்ந்து, ‘கருக்கு’ எனும் தன்னுடைய முதல் நாவலை 1992-ம் ஆண்டில் வெளியிட்டபோது, பலதளங்களிலும் வீரியமான விவாதங்கள் கிளம்பின. தன் வரலாறு பாணியில் எழுதப் பட்டிருக்கும் ‘கருக்கு’, சாதி, மத அடுக்குகள் கெட்டி தட்டிப் போன ஒரு கரிசல் காட்டு கிராமத்தின் கதை. ஆனால், யாருக்காக அந்த நாவலை எழுதினாரோ, அந்தச் சமூக மக்களே அவரை எதிர்த்ததுதான் பரிதாபம். ‘சங்கதி’, ‘வன்மம்‘, ‘மனுஷி’ ஆகிய இவரது பிற நாவல்கள்... தமிழ் இலக்கிய உலகுக்கு மேலும் வளம் சேர்த்தவை. இவரின் படைப்புகள் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகியவற்றில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பலதரப்பின் கவனத்தையும் ஈர்த்தது. ‘கருக்கு’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு, இந்திய ஆங்கில இலக்கியத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘கிராஸ் வேர்டு’ விருதை வென்றெடுத்தது. தமிழ் இலக்கிய உலகில், எழுத்தின் மூலமாகவே வலிமையாகப் பேசும் ஆளுமைகளில் நம் காலத்தில் வாழும் படைப்பாளர் பாமா. இவருக்கு `இலக்கிய ஆளுமை'க்கான விருதை வழங்குவதில் உவகை கொள்கிறது அவள் விகடன்.

பட்டியல் தொடரும்...

 அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்!