ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்! - தொடர்ச்சி

அவள் விருதுகள் 2021
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் விருதுகள் 2021

பெண்ணென்று கொட்டு முரசே!

பற்பல துறைகளிலும் தடம்பதித்து, சாதனை படைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு, ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி மகிழ்கிறது அவள் விகடன். அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் இடம்பிடித்த சிலர் கடந்த இதழில் இடம்பெற்றனர். அதன் தொடர்ச்சி இதோ...

அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்! - தொடர்ச்சி

தமிழன்னை பத்மா சுப்ரமண்யம்

`பாட்டுக்கொரு பாரதி' என்கிற கூற்றைப் போல் `பரதத் துக்கொரு பத்மா' எனப் பலரின் மனதிலும் ஆழப்பதிந்திருக் கிறார் பத்மா சுப்ரமண்யம். நடனக் கலைஞர், கலையியல் ஆராய்ச்சி அறிஞர், நடன இயக்குநர், பாடகர், இசையமைப் பாளர், ஆசிரியர், எழுத்தாளர் எனப் பன்முகம்கொண்ட பத்மா, 1943-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தந்தை கே.சுப்பிரமண்யம், விடுதலைப்போராட்ட வீரர். கூடவே, திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என்றெல்லாம் பெருமை பெற்றவர். கலையார்வம் கொண்ட பத்மா, பிரபல பரதநாட்டிய மேதை வழுவூர் ராமையா பிள்ளையிடம் முறைப்படி பரதம் கற்றவர். இசையிலும் முறைப்படி தேர்ச்சி பெற்றவர்.

`தமிழ்நாடு நாட்டார் இசை' மற்றும் `தெய்வத்தமிழ்' இசை ஆகிய தலைப்புகளில் இசைக்கோப்புகளை வெளியிட்டுள்ளார். நாட்டியம் தொடர்பான ஆராய்ச்சிகளிலும் உச்சம் தொட்டிருப்பவர் பத்மா. கோயில் சிற்பங்களில் காணப்படுகிற நடன அசைவுகள் குறித்த ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவுக்காக, ஆயிரம் நாட்டியக் கலைஞர்களை ஒருங் கிணைத்து தானும் சேர்ந்து அந்தக் கோயிலில் ஆடிய ஆகப்பெரும் சாதனைக்கு சொந்தக்காரர். கலைமாமணி, பத்ம, பத்மபூஷண் உள்பட நூற்றுக்கும் மேலான விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

பரத நாட்டியத்தையே தன் உயிர்மூச்சாகக் கொண்டு, 60 ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்ச்சியாகச் செயலாற்றி வரும் பத்மா சுப்ரமண்யத்துக்கு ‘தமிழன்னை விருது’ வழங்கு வதில் பெருமை கொள்கிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்! - தொடர்ச்சி

மாண்புமிகு அதிகாரி டாக்டர் சுதா சேஷய்யன்

அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றிணைந்த அபூர்வம்... டாக்டர் சுதா சேஷய்யன். எழுத்தாளர், சொற்பொழிவாளர், பேச்சாளர், அறிவிப்பாளர், வர்ணனையாளர், மருத்துவர் என பற்பல முகம். அனைத்துக்கும் மணிமகுடம்... தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்.

பெற்றோர் வழியில் மருத்துவரான சுதா, அறுவை சிகிச்சை நிபுணராக தேர்ச்சி பெற்றதுடன், பொது நிர்வாகம், மருத்துவ மனை நிர்வாகம் என மேற்படிப்புகளையும் முடித்து சாதித் திருப்பவர்.

மருத்துவம், மருத்துவ அறிவியல் தொடர்பான புத்தகங்களை சாமான்ய மக்களும் புரிந்துகொள்ளும்படி எழுதியிருக்கிறார். உலக அளவில் போற்றப்படும் ‘Encyclopedia Britannica’ - பொது அறிவு நூலை, விகடன் பிரசுரத்துக்காக ‘பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியம்‘ எனத் தமிழில் மொழிப்பெயர்த்த முதல் பதிப்பாசிரியர்; `மருத்துவக் களஞ்சியம்' என்ற புத்தகத்தின் ஆசிரியர், `Atlas of clinical gross anatomy’ என்ற மனித உடற்கூறியல் புத்தகத்தின் ஆசிரியக்குழு ஆலோசகர்... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

கொரோனா தடுப்பூசி ஆய்வுகளில் இவரது ஈடுபாடும் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கவை. மூலிகைகள் குறித்த ஆய்வில் ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி வைரல் குணங்களைக் கண்டறிந்தவரின் அறிவுத் தேடல், தொடர்கிறது.

கால்பதித்த அனைத்திலும் தனிமுத்திரையைப் பதித்துக் கொண்டிருக்கும் டாக்டர் சுதா சேஷய்யனுக்கு ‘மாண்புமிகு அதிகாரி’ விருது வழங்குவதில் பெருமை கொள்கிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்! - தொடர்ச்சி

அவள் ஐகான் பிரியா பவானிஷங்கர்

பழகிய முகம், அழகிய முகம் இதுதான் பிரியா பவானி ஷங்கர். அனைவரின் மனதிலும் `அட, நம்ம பக்கத்து வீட்டுப் பொண்ணு' என்று சட்டென்று ஒட்டிக்கொள்ளும் அவருடைய எளிமையே, அவருக்கான யுஎஸ்பி!

`நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும் வானம் வசப்படும்' என்கிற நம்பிக்கையை விதைப்பவர்களில் பிரியாவுக்கு முக்கிய இடமுண்டு. செய்தி வாசிப்பாளராக கரியரை தொடங்கியவரை சீரியல், சினிமா என அடுத்தடுத்த தளங்களுக்கு நகர்த்தியவை, அவருடைய அழகான, அறிவு பூர்வமான முயற்சிகளே! ‘என் படிப்புச்செலவை நானே பார்த்துக்கணும்னுதான் மீடியாவுக்குள்ள வந்தேன்’ என்று தொடங்கி, ‘துபாயே என்னோடதுதான்’ என்பது வரை இவருடைய க்யூட் பதில்கள், ரசிகர்களிடையே செம வைரல்!

நடிகைகள், வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு இடம்பெயரும் டிரெண்டை மாற்றி, சின்னத்திரையிலிருந்தும் வெள்ளித்திரையில் வெற்றிக்கொடி நாட்டலாம் என்பதை நிகழ்த்திக்காட்டியிருக்கும் நிகழ்கால உதாரணம். `கடைக் குட்டி சிங்கம்', `மான்ஸ்டர்', `ஓ மணப்பெண்ணே', `யானை' என அடுத்தடுத்த படங்களில் எதார்த்த நடிப்பால் கவனம் ஈர்க்கும் பிரியா, சமூக வலைதளங்களிலும் செம அதிரடிதான். ட்ரோல், நெகட்டிவ் கமென்ட்களை எதார்த்தமான, தைரிய மான அணுகுமுறையால் திணறடிக்கும் பிரியா, இளம் தலைமுறைக்கு எனர்ஜி எக்ஸாம்பிள்.

சின்னத்திரையில் தோன்றி, பெரிய திரையில் பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது வரை கிராஃப் தொண்ணூறு டிகிரியில்தான். நம்ம வீட்டுப்பெண் பிரியாவை, ‘வாடி ஏ ராஜகுமாரி’ என வாரியணைத்து, `அவள் ஐகான்' விருது வழங்குவதில் பெருமை கொள்கிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்! - தொடர்ச்சி

பெஸ்ட் மாம் எம்.நாகமணி

ஒவ்வோர் அம்மாவும் தன் குழந்தைகளுக்கு பெஸ்ட். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பெஸ்ட்... அம்மா நாகமணி.

தெலுங்குப் பட நடிகரான அப்பா ராஜேஷ், திரைத்துறை சறுக்கல்கள், பொருளாதாரப் பின்னடைவு, உடல்நலக் கோளாறு என பாதிக்கப்பட்டு, ஐஸ்வர்யா ஆறு வயது குழந்தையாக இருக்கும்போதே மறைந்துவிட்டார். மூன்று மகன்கள், ஒரு மகள் என குடும்பத்தைத் தனிமனுஷியாகத் தாங்கும் பொறுப்பை ஏற்ற நாகமணி... புடவை பிசினஸ், ரியல் எஸ்டேட், இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் என ஓடிஓடி உழைத்தார். கணவரை இழந்த துக்கம் மறைவதற்குள்ளாகவே அடுத்தடுத்து இரண்டு மகன்களையும் பறிகொடுக்க வேண்டிய கொடுமை. துவண்டுவிடாமல் மிச்சமிருக்கும் மூன்று ஜீவன்களுக்காக ஓடினார்... உழைத்தார் நாகமணி.

ஆரம்பத்திலிருந்தே... மகளை நடிகையாக்கிப் பார்க்கும் பெருங்கனவு அவருக்குள். ஆனால், ‘நீயெல்லாம் சினிமா வுக்கு லாயக்கே இல்லை’ என பால்யத்திலேயே பலரும் ஐஸ்வர்யாவை சிறுமைப்படுத்தினாலும், ‘இந்த ஊர் சொல்றதையெல்லாம் பெருசா எடுத்துக்காத’ என்று தினம் தினம் நம்பிக்கை நீருற்றிக் கொண்டே இருந்தார்.

‘காக்கா முட்டை’ படத்தின் நடிப்புக்காகப் பாராட்டுகள் குவிந்தாலும், அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்துவிடவில்லை. அப்போதும் மகளுக்கு எனர்ஜி டானிக் அம்மாதான். ஒருகட்டத்தில் ஐஸ்வர்யாவின் பெயர் தமிழ்த்திரையில் தவிர்க்கமுடியாத பெயராக மாறியது. நாகமணி, இதற்காக கொடுத்திருக்கும் உழைப்பும் விலையும் மிகமிக அதிகம். கனவுகள் சுமக்கும் அம்மாக்களுக்கு உதாரணமாக நிற்கும் நாகமணிக்கு ‘பெஸ்ட் மாம்' விருதளிப்பதில் பேருவகை கொள்கிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்! - தொடர்ச்சி

யூத் ஸ்டார் ப்ரியங்கா மோகன்

வெள்ளித்திரையில் நட்சத்திரங்கள் தோன்றி மறைந்து கொண்டே இருக்கும். சில மட்டும் ஒற்றையாக தொடர்ந்து ஜொலிக்கும். அப்படி தமிழக மக்கள் மனதில் 5 ஸ்டார்ஸ் வாங்கிய யூத் ஸ்டார்... ப்ரியங்கா மோகன். பயோடெக்னாலஜி பொறியியல் பட்டதாரி. கன்னடத்தில் அறிமுகமாகி, தெலுங்கில் ‘கேங் லீடர்’ என ஹிட் கொடுத்து, ‘டாக்டர்’ மூலம் சிவகார்த்திகேயனுடன் தமிழுக்கு வணக்கம் வைத்தவர். தமிழ், கன்னடம், தெலுங்கு எனப் பல மொழிகளை சரளமாகப் பேசி, நடிப்பில் அசத்தும் இந்த இளம் எனர்ஜிக்கு... தனுஷ், ஜெயம் ரவி எனப் பட வாய்ப்புகள் வரிசை கட்டுகின்றன.

’எதற்கும் துணிந்தவன்’, ‘டான்’ படங்களில் இவர் காட்டிய துறுதுறு... ‘அட, நம்ம வீட்டுப் பொண்ணுப்பா’ என தமிழ்க் குடும்பங்கள் கொண்டாடும் நாயகியாக லைக்ஸ் அள்ளினார். கொஞ்சும் கண்களுடனும், கொள்ளை அழகுடனும் வெகுளி யாக ரகளை செய்வது ஒரு பக்கமென்றால், அழுத்தமான காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்து கதா பாத்திரத்தை மெருகேற்றுவது ப்ரியங்காவின் ப்ளஸ்.

பெண் உடல் சார்ந்த சென்சிட்டிவ் விஷயங்கள், பாலியல் குற்றங்கள் குறித்து `ஆதினி’யாக ப்ரியங்கா பேசிய அழுத்தமான வசனங்கள், நம் சமூகத்துக்கான அவசிய உரையாடல்கள். நல்லநல்ல கதைகளாகத் தேடிப்பிடித்து நடிப்பதுடன், தன் கதாபாத்திரத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதிப்பதிலும் ஸ்கோர் செய்வதிலும் தேர்ந்தவராக வெள்ளித்திரையில் மிளிரும் ப்ரியங்கா மோகனுக்கு ‘யூத் ஸ்டார்’ விருது சூடி கைகுலுக்குகிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்! - தொடர்ச்சி

வெற்றிப்படை மதுரை டிரான்ஸ் கிச்சன் டீம்

திருநங்கை, திருநம்பி என்றெல்லாம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு `திரு' என மரியாதை கொடுத்தாலும், அவையெல்லாம் நிஜத்தில் வெறும் வார்த்தைகளாகவேதான் இருக்கின்றன. அறிவுசார் உலகமாக தன்னைக் காட்டிக்கொண்டாலும், சகமனிதர்களைத் தள்ளி வைத்தேதான் பார்க்கிறது பெரும்பான்மைச் சமூகம் - இந்த டிஜிட்டல் யுகத்திலும். ஆனாலும், நம்பிக்கையை இழக்காத அவர்கள், ‘உழைத்து வாழ்வோம்‘ என்றபடி உயரத் துடித்துக்கொண்டேதான் உள்ளனர். அந்த வரிசையில், 15 திருநங்கைகள் ஒன்றிணைந்து ‘மதுரை டிரான்ஸ் கிச்சன்’ என்ற பெயரில் நடத்திவரும் உணவகம்... பெரும்சாதனை. மதுரை, ராஜாஜி அரசு மருத்துவமனை அருகி்லிருக்கும் தமது உணவகத்தில் பலருக்கும் அன்னமிட்டு வருகின்றனர்.

பத்து ஆண்டுகளாக இயங்கிய ‘நம்புநாயகி கேட்டரிங் சர்வீஸ்’, கொரோனா காலகட்டத்தில் பெரும் சரிவைக் கண்டது. `வேறு வழி தெரியாமல் தவித்த நிலையில், உங்களுக்குத்தான் கேட்டரிங் பிசினஸ் அனுபவம் இருக்கே. ஹோட்டல் வைக்கலாமே’ என்கிற ஆலோசனையை பெங்களூருவைச் சேர்ந்த ஸ்வஸ்தி நிறுவனம் கொடுத்ததோடு, சில தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து நிதி உள்ளிட்ட உதவிகளையும் செய்து கொடுக்க... உருவானது மதுரை டிரான்ஸ் கிச்சன்.

இதிலும் வழக்கம் போல பிரச்னைகள் இல்லாமல் இல்லை. ஆனால், இதில் நாம் நிலைத்துவிட்டால், நம் திருநர் சமூகத்திலிருக்கும் பலருக்கும் நம்பிக்கை பலமாகும் என்கிற உன்னத நோக்கத்துடனும், மதுரை யெங்கும் கிளைகளைத் திறக்கவேண்டும் என்கிற இலக்குடனும் தீயாக உழைத்துக் கொண்டிருக்கும் டிரான்ஸ் கிச்சன் டீமுக்கு ‘வெற்றிப்படை’ விருது வழங்குவதில் கௌரவம் கொள்கிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்! - தொடர்ச்சி

சேவை தேவதை ரேணுகா ராமகிருஷ்ணன்

கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் அனாதரவாகக் கிடந்த தொழுநோயாளி ஒருவரின் சடலத்தைக் கண்டு அனைவரும் முகம் சுளித்தபடி விலகிச்சென்று கொண்டிருந் தனர். அந்த வழியே சென்ற ரேணுகாவுக்கு மட்டும் மனித நேயம் மனதில் உந்தித் தள்ள, குளக்கரை தொடங்கி, இடுகாடு வரை சென்று அடக்கப்பணிகளை முடித்துத் திரும்பினார் ரேணுகா. அப்போது இவருக்கு வயது 16. மருத்துவம் படித்து, உலகத்தால் புறக்கணிக்கப்படும் தொழுநோயாளிகளுக்காகச் சேவை செய்ய வேண்டும் என்கிற லட்சியம் இவருக்குள் பிறந்ததும் அன்றுதான்.

காலம் இவரை சரும மருத்துவராக வார்த்தெடுத்தாலும், தொழுநோய் சிகிச்சைகளுக்கான சிறப்புப் படிப்பை முடித்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தனியாக நேரம் ஒதுக்கினார். சென்னை, சேத்துப்பட்டில் உள்ள செயின்ட் தாமஸ் தொழுநோய் மையத்தில் இணைந்தவர், உள்ளார்ந்த அக்கறையுடன் நோயாளிகளை அரவணைத்தார். ரேணுகாவின் சேவை சென்னை, ஷெனாய் நகரில் இயங்கிவரும் `ஜெர்மன் லெப்ரசி அண்ட் டிபி ரிலீஃப் அசோசியேஷன்’ மருத்துவமனையில் சில காலம் தொடர்ந்தது.

தற்போது மாநிலமெங்கும் தொழுநோயாளிகள் குடியிருப்புகளைத் தேடிச்சென்று, அவர்களுக்கு அன்பு மருத்துவம் செய்துவருகிறார், வாழும் இந்த அன்னை தெரசா. இவருக்கு மருத்துவச் சேவையில் இது 35-வது ஆண்டு. இந்த மீட்பருக்கு `சேவை தேவதை’ விருது வழங்குவதில் தனித்த நிறைவு கொள்கிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்! - தொடர்ச்சி

சாகச மங்கை சோனியா ஜெயின்

விமானத்தில் பயணிப்பது பலருக்கும் கனவு. விமா னத்தை இயக்குவது, பெருங்கனவு. அந்தக் கனவு நன வாகப் பெற்ற பெண்களின் எண்ணிக்கை வெகுகுறைவு. சென்னையைச் சேர்ந்த சோனியா, இளம்வயதிலேயே விமானத்தை இயக்கும் பைலட். அதுவும், பயணிகள் விமானத்தை இயக்கும் துணிச்சல் நாயகி. பயிற்சி விமானியாக 19 வயதிலேயே சிறகு விரித்தவர், ஆண் களே அதிகம் கோலோச்சும் இந்தத் துறையில் காட்டு வது அல்ட்ராசானிக் வேகம்.

எப்பேர்ப்பட்ட சிக்கல் வந்தாலும் சமயோஜிதமாகச் சமாளிப்பவரைத்தான் மிகச்சிறந்த கேப்டன் என்பார்கள். புயல் மற்றும் பெருமழை உள்ளிட்ட பல்வேறு சவாலான சூழல்களையும், ‘திக் திக்‘ நிமிடங்களையும் சாதுர்யமாக எதிர்கொண்டு, பயணிகளின் பாதுகாப்பை எப்போதும் உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறார் சோனியா. பொறுப்பு மற்றும் கனிவு ஆகிய குணங்களால், ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தில் ‘செக் பைலட்’ என்னும் உயர் பொறுப்பை, வெகுவிரைவாக எட்டியிருக்கிறார்.

கடந்த 16 ஆண்டுகளில் 8,500 மணி நேரத்துக்கும் அதிகமாகப் பறந்திருக்கும் சோனியாவுக்கு, 40,000 அடி உயரத்துக்கு மேல் விமானங்களை இயக்குவதென்பது கைவந்த கலை. கொரோனா ஊரடங்கு சமயத்தில், ‘வந்தே பாரத்’ சிறப்பு விமானங்களை இயக்கும் வாய்ப்புகள் வந்தபோது, கொஞ்சமும் பயப்படாமல், பல தடவை பறந்திருக்கும் சோனியா, இத்துறைக்குள் பறக்கத் துடிக்கும் இளம் சிறகுகளுக்கு ஊட்டுவது அபரிமிதமான நம்பிக்கை. இவருக்கு ‘சாகச மங்கை’ விருதை வழங்கு வதில் உவகை கொள்கிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்! - தொடர்ச்சி

கல்வித் தாரகை ஸ்ரீமதி கேசன்

பிறந்தது ராமநாதபுரத்தில். வளர்ந்ததும் படித்ததும் ஹைதராபாத்தில். தேசிய மாணவர் படையில் சீனியர் அண்டர் ஆபீசர் பொறுப்பை ஏற்று சிறப்பாகப் பணியாற்றியவர். அனைத்து மாநில என்.சி.சி குழுக்களையும் தலைமை தாங்கி வழி நடத்திய முதல் பெண்!

கல்லூரிப் படிப்பை முடிப்பதற்குள் திருமண பந்தத்தில் இணைய வைத்தது காலம். கைக்குழந்தையுடன் பட்டப் படிப்பைச் சாதித்தார். தோழியின் பரிந்துரையால் அமெரிக்க விண்வெளி மாநாடு ஒன்றில் பங்கேற்ற ஸ்ரீமதி, நாசா விண் வெளி ஆராய்ச்சி மையம், உலக அளவிலான இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்காகப் பயிற்சிகள் நடத்துவதையும், அதில் இந்தியக் குழந்தைகள் அவ்வளவாகப் பங்கேற்பதில்லை என்பதையும் தெரிந்துகொண்டார். ‘என் நாட்டுக் குழந்தை களுக்கு விண்வெளி அறிவை ஏற்படுத்துவேன்’ என அந்த நொடியில் உறுதியேற்றவர், 2011-ம் ஆண்டு ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ நிறுவனத்தை ஆரம்பித்து, இதுவரை நூற்றுக்கணக் கான மாணவர்களை விண்வெளி நிலையங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோளான ‘கலாம் சாட்’ தொடங்கி, சமீபத்தில் தயாரிக்கப்பட்ட ‘ஆஷாதி சாட்’ வரையிலும் 18 பலூன் சாட்டிலைட்கள், 2 சப்-ஆர்பிட்டல் மற்றும் 3 ஆர்பிட்டல் சாட்டிலைட்களை இவருடைய அமைப் பில் பயிலும் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தியா முழுவதிலுமுள்ள 750 அரசுப்பள்ளி மாணவிகளின் பங்களிப் பில் உருவானதுதான் ஆஷாதி சாட். ‘அப்துல் கலாம் விருது’, ‘ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்’, ‘ரீகல் பிரிட்டிஷ் விருது’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் மதிக்கு ‘கல்வித் தாரகை’ விருது வழங்குவதில் பெருமிதம் அடைகிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்! - தொடர்ச்சி

லிட்டில் சாம்பியன் - பூஜிதா

முதல் மேடைப்பேச்சைத் தொடங்கியபோது பூஜிதாவுக்கு வயது மூன்று. அடுத்த பத்தாண்டு காலத்தில் கிட்டத்தட்ட 600 மேடைகளை வசியப்படுத்தி விட்டார். தன்னுடைய கொஞ்சும் குரலாலும் தெளிவான உச்சரிப்பாலும் தொடர்ந்து மேடைகளைத் தன்பக்கமே ஈர்த்துக்கொண்டிருக்கும் பூஜிதா, இப்போது 13 வயது சிறுமி. பூஜிதா அமர்ந்திருக்கும் மேடையைப் புதிதாகப் பார்ப்பவர்கள், `சிறப்பு விருந்தினர் களின் குழந்தையை மேடையில் உட்கார வைத்திருக்கிறார்கள் போல’ என்றுதான் கடப்பார்கள். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் இவர் மைக் பிடித்துப் பேச ஆரம்பித்ததும், `அட இந்தக் குட்டீஸா...' என்று மெய்மறந்து போவார்கள். தமிழகமெங்கும் நடக்கும் கோயில் திருவிழாக்களில் பூஜிதாவின் பேச்சைக் கேட்பதற்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. தன் பிஞ்சுக்குரலில் ஆன்மிக மேடைகள் மட்டுமல்லாது... இலக்கியக் கூட்டங்கள், முற்போக்கு மேடைகள், பள்ளி, கல்லூரி விழாக்கள், சமூகசேவை சங்கங்களின் நிகழ்வுகள் எனப் பலதரப்பட்ட மேடைகளையும் கலக்கிவருகிறார் பூஜிதா.

`இலக்கியச்செல்வி’, `முத்தமிழ்ச்செல்வி’, `தமிழமுது’, `மக்கள் பேச்சாளர்’ எனப் பற்பல பட்டங்களும் வந்து சேர்ந் திருக்கின்றன. வீட்டில் 2000-க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் நூலகத்தைப் பராமரிக்கும் பூஜிதா ‘என் பார்வை’ எனும் நூலையும் எழுதி அனைவரையும் வியக்கவைக்கிறார். யோகா, தியானம், வாசிப்பு, பேச்சு, எழுத்து என வளரும் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் சிறுமி பூஜிதாவுக்கு `லிட்டில் சாம்பியன்' விருதளிப்பதில் பெருமை கொள்கிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்! - தொடர்ச்சி
FAZIL

இளம் நம்பிக்கை சாந்தலா ரமேஷ்

2019-ம் ஆண்டின் ஒரு நாள்... தன் அம்மா ஷோபனா வுடன் கோவை, ஆனைக்கட்டி மலைப்பகுதியில் பைக் கில் பயணித்தபோது ஏற்பட்ட கொடூர விபத்து, ஷோபனா வின் உயிரைப் பறித்தது. கடுமையான காயங்களுடன் உயிர் தப்பிய சாந்தலா, அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடுத்த மறுபிறவியை, சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் போராட்டத்துக்காக அர்ப்பணித்திருப்பதன் மூலம், பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறார். 17 வயதாகும் சாந்தலா, தடாகம் பள்ளத்தாக்கில் இயங்கி வரும் சட்டவிரோத செங்கல் சூளைகளுக்காக நடத்தப்படும் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக, சாந்தலாவின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு துணை நிற்கிறார் இவருடைய தந்தையான மருத்துவர் ரமேஷ்.

அங்குள்ள நீர்நிலை பாதிப்புகளை செயற்கைக்கோள் மூலம் ஆவணப்படுத்தி, Stuck in the Days of Abundance: The Strange Case of Streams at Thadagam Valley’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதற்காக ஆதாரங்களைத் திரட்டியபோது, செம்மண் கொள்ளைக்கார மாஃபியாக்கள் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதல், மீண்டுமொரு முறை சாந்தலாவின் உடலை ரத்த விளாறாக்கிப் போட்டது. அந்தக் காயங்களின் வடு மறைவ தற்குள்ளாகவே இன்னும் வீரியமாகவும், தைரியமாகவும் களத்தில் இறங்கினார். நீர்நிலைகளுக்காக மட்டுமல்ல, மலைகள், விலங்குகள், பறவைகள், பட்டாம்பூச்சிகள் என கானுயிர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளுக்கு எதிராகவும் நீதிகேட்டு நிற்கும் இந்த அக்கினிக் குஞ்சுக்கு, ‘இளம் நம்பிக்கை’ விருது வழங்கி உச்சி முகர்கிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்! - தொடர்ச்சி

சூப்பர் வுமன் இந்திரா காந்தி

சாதியைச் சொல்லித் திட்டுவது, பஸ்ஸில் ஏறாதே என்று கீழே தள்ளிவிடுவது என மனிதாபிமானமற்ற வர்கள் மத்தியில்தான், நாடோடிப் பழங்குடியின சமூகத் தின் வாழ்க்கை. இதில் படிப்பு என்பது பெரும் கேள்விக் குறியே. ஊசி, பாசிமணி விற்கும் தொழில் மட்டுமே இக்குழந்தைகளுக்கு விதிக்கப்படுகிறது. இந்தச் சுழலில் சிக்கிக்கொள்ளாமல் கல்வியால் கரை சேர்ந்த அத்திப்பூக்களில் ஒருவர், இந்திரா காந்தி.

திருவள்ளூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திரா காந்தி, தன் வயது குழந்தைகள் பள்ளிக்கூட பையுடன் செல்வதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவர், ஒருகட்டத்தில் பள்ளிக் கூடத்தில் சேர்ந்தது, வெற்றிப் போராட்டத்தின் முதல்படி. 82-ம் ஆண்டில் சமூகக்காடு வளர்ப்புத் திட்டத்தில் பகுதி நேரப் பணியாளரானவர், கூடவே தொலைதூரக் கல்வி முறையில் பட்டப்படிப்பையும் முடித்து, விடா முயற்சியால் அரசு வேலையையும் பெற்றது, சாதனையே. பட்டப்படிப்பு முடித்த, அரசுப் பணிக்குச் சென்ற முதல் நபர் என சமூகமே வெற்றிக்கொண்டாட்டம் போட்டது.

தற்போது, செங்கல்பட்டில் வனக்காப்பாளராகத் பணியாற்றி வரும் இவர், சமூக மக்களின் கல்வி மற்றும் உரிமைகளுக்காகத் துணிச்சலுடன் குரல் கொடுத்து வருகிறார். கூடவே, சுற்றுச்சூழல் அக்கறையுடனும் செயல்படுகிறார். மணல் கடத்தலுக்கு எதிரான போரில் மகனையும் பறிகொடுத்திருக்கும் வீரத்தாய். இந்த உன்னத மனுஷிக்கு `சூப்பர் வுமன்' விருது வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்! - தொடர்ச்சி

சூப்பர் வுமன் சுனிதா

சுனிதா, தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவிப் பொறி யாளர். இதை ஒரு சமூகமே கொண்டாடுகிறது. `இதில் என்ன பெருமை. நாட்டில் எத்தனையோ பேர் இந்தப் பணியில் இருக்கிறார்களே?' என்று அவ்வளவு சுலபத்தில் கடந்துவிட முடியாது. சுதந்திரம் அடைந்து 60, 70 ஆண்டுகளைக் கடந்துவிட்ட சூழலில், ஒரு சமூகத்திலிருந்து முதல் முறையாக அரசுப் பணிக்கு ஒரு பெண் வருகிறார் என்றால், கொண்டாட்டம்தானே!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் வசிக்கும் ஊசி, பாசிமணி விற்கும் நாடோடி குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் சுனிதா. இவருக்கும் அதுதான் தொழில், குழந்தை யிலிருந்தே. புத்தகப் பையுடன் தன்னைக் கடக்கும் குழந்தைகளைப்போல தானும் கல்வி கற்க நினைத்த சுனிதாவின் நியாயமான ஆசை, அவ்வளவு எளிதில் ஈடேறிவிடவில்லை. அதற்காக இவர் எதிர்கொண்ட இன்னல்கள், புறக்கணிப்புகள் கணக்கிட முடியாதவை.

சாதி, உடை, தோற்றம் தொடங்கி பலவிதங்களிலும் அவமானப்படுத்தப்பட்டாலும், அத்தனையையும் உடைத்து முன்னேறிய சுனிதா, பொறியியல் படிப்பில் சேர்ந்தது இமாலய சாதனை. இன்று, இவருடைய சமூகத்திலிருந்து அரசுப் பணிக்குச் சென்று கொண்டிருக் கும் இரண்டாவது நபர். கல்வியால் தான் பெற்ற முன் னேற்றம், வளர்ச்சி, மரியாதை அனைத்தும் தன் சமூக மக்களுக்கும் கிடைப்பதற்காக இந்திரா காந்தியுடன் இணைந்து, இடைவிடாமல் போராடிக் கொண்டிருக்கும் சுனிதாவுக்கு ‘சூப்பர் வுமன்’ விருதை வழங்குவதில் அளவற்ற மகிழ்ச்சி கொள்கிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்! - தொடர்ச்சி

சிங்கப்பெண் ரேவதி வீரமணி

மதுரை அருகேயுள்ள சக்கிமங்கம் கிராமத்தைச் சேர்ந்த ரேவதி, சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர். இவருக் கும் இவர் தங்கைக்கும் பாட்டியின் ஆதரவுதான் ஒரே பற்றுதல். பள்ளிக்கூட ஓட்டப்பந்தயத்தில் வெறும் காலுடன் ஓடி வென்ற இவரது புயல் வேகத்தை, ‘இது அசாதாரணமானது’ என்று கண்டு கொண்ட அக்கறை யுள்ளம் கொண்ட ஆசிரியர்கள், பயிற்சி கொடுத்து ஊக்கப்படுத்தினர். விடுதியில் தங்கி, கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்த ரேவதி... மாவட்ட, மாநில, தேசிய அளவில் என கலந்துகொண்ட போட்டிகளில் எல்லாம் முதலிடம் பெற்று அசத்தினார். தன்மீது அக்றைகொண்டு வளர்த்துவிட்டவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றி னாலும், ஏழ்மைச் சூழ்நிலையால் பயிற்சி உபகரணங்கள் கூட வாங்க முடியாத நிலை. கால்களை நம்பி பயிற்சி வேள்விக்குத் தன்னையே ஒப்புக்கொடுத்தார்.

பயிற்சியாளர் கண்ணன், தன்னம்பிக்கையை முழுமையாக நிரப்ப... ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அளவுக்குப் பாய்ந்தார் ரேவதி. கடந்த ஆண்டு ஜூலையில் ஜப்பானில் நடைபெற்ற 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின் கலப்புத் தொடர் ஓட்டத்தில் பங்குபெற்றவருக்கு பரிசு கிட்டவில்லை. ஆனால், ஒட்டுமொத்த இந்தியர்களின் மனதிலும் உறுதியான இடம் கிடைத்தது. மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையோடு ரேவதியின் விடாமுயற்சி தொடர்கிறது. தெற்கு ரயில்வே நிர்வாகம் பரிசாக வழங்கியுள்ள அலுவலர் பணியில் இருந்தபடியே, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் முனைப்போடு ஓடிக்கொண்டே இருக்கும் இந்த சுயம்புவுக்கு, ‘சிங்கப்பெண்’ விருது வழங்கி பூரிக்கிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2021 - சாதனைப் பெண்களின் சங்கமம்! - தொடர்ச்சி
DIXITH

சிங்கப்பெண் சுபா வெங்கடேசன்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகேயுள்ள பகவதி புரம் சுபாவின் சொந்த ஊர். அப்பா வெங்கடேசன், சென்ட் ரிங் தொழிலாளி. அம்மா பூங்கொடி, இல்லத்தரசி. அண்ணன், அக்கா, கடைக்குட்டி சுபா என எளிய குடும்பம். விலையுயர்ந்த ஷூக்கள், ஸ்போர்ட்ஸ் உடைகள் என்று வாங்கித் தரும் அளவுக்கு வசதியில்லாத குடும்பம். ஆனால், 10 வயதிலேயே தடகளம்தான் வாழ்க்கை என்று தயாராக ஆரம்பித்துவிட்டார் சுபா. அந்தக் குட்டிக் குழந்தைக்கு முதல் கைக்குலுக்கல் கொடுத்து, ஊக்கத்தை அள்ளி வழங்கியவர், இவருடைய தாத்தா சங்கிலி முத்து.

ஏழாம் வகுப்பு வரை திருச்சி, பாய்லர் தொழிற்சாலை அரசுப் பள்ளியில் படித்த சுபா, பின்னர் சென்னையிலுள்ள ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் தங்கிப் படித்தார். குடும்ப ஆதரவு, தாத்தா ஊட்டிய நம்பிக்கை, பயிற்சியாளர்கள் கொடுத்த உத்வேகம் என அனைத்தையும் மனதில் ஏந்திக் களமாடிய சுபா, வெற்றிகளைக் குவித்தார். இதுவரை சர்வதேச அளவிலான போட்டிகளில் 4 பதக்கங்களையும், தேசிய அளவில் 20-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் பெற்றிருக்கிறார்.

2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியின் கலப்பு தொடர் ஓட்டப்போட்டி, சுபாவின் 12 ஆண்டு உழைப்புக்கான உச்ச அங்கீகாரம். ரேவதியைப் போலவே ஒலிம்பிக்கில் ஓடியவருக்கு வெற்றி கிட்டாவிட்டாலும், அந்தப் பங்கேற்பு இவர் நம்பிக்கையை அணையாச் சுடராக்கியது. அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் ஏசியன் கேம்ஸ் மற்றும் 2024 ஒலிம்பிக் போட்டி என வில்லாக விரைந்து கொண்டிருக்கும் சுபாவுக்கு, ‘சிங்கப்பெண்’ விருது வழங்கி சிறப்பிக்கிறது அவள் விகடன்.