Published:Updated:

நீங்களும் அழகுக்கலை நிபுணர் ஆகலாம்!

ஷாலினி, சூர்னி அசோக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷாலினி, சூர்னி அசோக்

அவள் பட்டறை

ஓய்வு நேரத்திலும் ஏதாவதொரு க்ரியேட்டிவ் வேலை செய்தபடி இருப்பது பெண்களின் இயல்பு.

இந்த லாக் டௌன் நேரத்தில் அவர்களின் ஆர்வத்துக்குத் தீனி போடும் வகையில், பெண்களை அழகுக்கலையில் சுய தொழில்முனைவோராக்கும் விருப்பத்தில், ‘ஹேர்கட் முதல் ஐப்ரோ த்ரெடிங்வரை’ என்ற ஆன்லைன் கட்டண பியூட்டி வொர்க்‌ஷாப்பை விஸுபல் டிஃபரென்ஸுடன் இணைந்து நடத்தியது அவள் விகடன்.

ஜூன் 20, 21, 27, 28 ஆகிய நான்கு தினங்களில் தினமும் இரண்டு மணி நேரம் நடந்த இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில், உற்சாகத்துடன் கலந்துகொண்டனர் நம் வாசகிகள். அவர்களுக்குப் பயிற்சி அளித்தவர், பிரபல அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

நீங்களும் அழகுக்கலை நிபுணர்  ஆகலாம்!

முதல் நாள் பயிற்சியில் சரும வகை முதல் அழகு சிகிச்சை செய்துகொள்ள வருபவர்களின் சருமத்தைக் கண்டறிந்து சர்வீஸ் வழங்குவது வரை கற்றுக்கொடுக்கப்பட்டன. ‘காலையில் எழுந்தவுடன் சருமம் எப்படியிருக்கிறதோ அதுவே ஒருவரின் சரும வகை’ என்று பல நுணுக்கங்களை விளக்கியதோடு, வீட்டிலிருக்கிற பொருள்களை வைத்தே சரும அழகை மேம்படுத்த என்னவெல்லாம் செய்யலாம் என்று டிப்ஸ் தந்தார் வசுந்தரா.

ஷாலினி, சூர்னி அசோக்
ஷாலினி, சூர்னி அசோக்

‘சரும ஆரோக்கியத்தையும் அழகையும் பராமரிக்க க்ளென்ஸிங், டோனிங், மாயிஸ்சரைசிங் என்ற மூன்று படிநிலைகள் அவசியம். செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயும் காய்ச்சாத பாலும் சிறந்த க்ளென்ஸராகப் பயன்படும். ஆறிய கிரீன் டீயைச் சிறந்த டோனராகப் பயன்படுத்தலாம். இது சருமத்தில் இருக்கும் நச்சுப் பொருள்களை வெளியேற்றும். கெமிக்கல்ஸ் இல்லாத இயற்கையான பிளீச்சுக்கு, தக்காளிச்சாற்றுடன் பால் கலந்து உபயோகிக்கலாம் அல்லது தயிரில் ஓட்ஸ், தேன் ஆகியவற்றைக் கலந்தும் உபயோகிக்கலாம். முகத்துக்கான இயற்கை பேக்குக்கு முல்தானிமிட்டியுடன் ஆரஞ்சு ஜூஸ், ரோஸ் வாட்டர் கலந்த கலவை சிறந்தது’ என்று பல அடிப்படை ஆலோசனைகளை வழங்கிய வசுந்தரா, கெமிக்கல் ஃபேஷியல் டெமோவையும் வழங்கினார்.

நீங்களும் அழகுக்கலை நிபுணர்  ஆகலாம்!

இரண்டாம் நாள், கூந்தல் பராமரிப்பு பற்றிய வகுப்பு எடுக்கப்பட்டது. முடியில் உள்ள வெடிப்புகளை நீக்குவது, பொடுகுக்கான சிகிச்சை, ஹெர்பல் ஹேர் கலரிங் பற்றிய வகுப்பு எடுக்கப்பட்டதோடு, செய்முறை விளக்கமும் காண்பிக்கப்பட்டது.

மூன்றாம் நாள் வகுப்பில் ஹேர்கட்டில் `ஸ்ட்ரெயிட் கட்’ மற்றும் `யூ கட்’டின் செயல் முறையை, ஸ்டெப் பை ஸ்டெப்பாக செய்து காட்டினார் வசுந்தரா. ஐப்ரோ த்ரெடிங், வேக்ஸிங், மெனிக்யூர், ஐ மசாஜ் ஆகியவை செய்முறை விளக்கங்களுடன் கற்றுத்தரப்பட்டன.

பயிற்சியின் கடைசி நாளில் பகல் நேரத்துக்கான சிம்பிள் மேக்கப், இரவு நேரத்துக்கான கிராண்டு மேக்கப், இரண்டு வகை ஹேர் ஸ்டைல்ஸ் ஆகியவை கற்றுத்தரப்பட்டன. வாடிக்கையாளர்களின் சரும நிறத்துக்கேற்ப எவ்வாறு காஸ்மெட்டிக்ஸ் தேர்வு செய்ய வேண்டும், மேக்கப் போட வேண்டும் என்ற பயிற்சிகளுடன், கருவளையத்தை நீக்கி கண்களை அழகுபடுத்துவது, வடிவத்துக்கு ஏற்ப உதட்டை அழகுபடுத்துவது போன்ற வற்றுக்கான பயிற்சிகளும் மாடல்களை வைத்து அளிக்கப்பட்டன. மாடல்களாக சூர்னி அசோக், ஷாலினி ஆகியோர் பங்களித்தனர். ஒவ்வொரு செஷனின் இறுதியிலும் வாசகிகளின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் வசுந்தரா. ‘500 ரூபாய் கட்டணத்தில் ஒரு பேஸிக் பியூட்டி கோர்ஸ் முடிச்ச திருப்தி... தேங்க்ஸ்ப்பா...’ என்று ஃபீட்பேக் அனுப்பினர் நம் வாசகிகள்.

பயிற்சி பெற்ற பெண்கள் அனைவரும் அழகுக்கலையில் சுயதொழில்முனைவோராக உருவெடுக்கவும், வெற்றிபெறவும் அவள் விகடனின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!