Published:Updated:

"நோயுற்ற ஆண்களே, உங்களை நான் வெறுக்கிறேன்!" - நடிகை அன்னா பென்னுக்கு நடந்த பாலியல் சீண்டல்!

Anna ben
Anna ben

"அவர்கள் எந்தவிதமான குற்றவுணர்ச்சியோ, பிரச்னையோ இல்லாமல் அங்கிருந்து நடந்து சென்றுவிட்டார்கள்; அவர்கள் இதனை மீண்டும் செய்வார்கள் என்பதை நினைக்கும்போது எனக்கு அதீத கோபம் வருகிறது."

'கும்பளங்கி நைட்ஸ்' படத்தில் பேபிமோல் காதாப்பாத்திரத்தில் நடித்து அறிமுகப்படத்திலேயே மக்கள் அபிமானத்தை பெற்ற அன்னா பென் இன்ஸ்டாகிராமில் 17-ம் தேதி பகிர்ந்த சம்பவம் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆம்... இது இன்னொரு #Metoo சம்பவம்தான். இன்னொரு பெண் தனக்கு நடந்த பாலியல் வன்முறை சம்பவத்தை பகிர்ந்த கதை. அதன் மொழிப்பெயர்ப்பு இங்கே!

“நான் சமூக வலைதளங்களில் அடிக்கடி கோபமான பதிவுகளை பகிர்வது கிடையாது. ஆனால், இன்றைக்கு நடந்த சம்பவத்தை என்னால் அவ்வளவு எளிதாக கடந்துவர முடியவில்லை. பெரிதாக கூட்டமில்லாத லூலூ ஹைப்பர் மார்க்கெட்டில் தாராளமாக இடமிருக்கும் இடைகழியில் (aisle) இரண்டு ஆண்கள் என்னைக்கடந்து சென்றபோது, ஒருவன் மட்டும் வேண்டுமென்றே கையை வைத்து பின்னால் உரசிவிட்டுச் சென்றான். இதனைச் சற்றும் எதிர்பாராததால் என்னால் உடனடியாக எந்த எதிர்வினையும் செய்யமுடியவில்லை. எதோ தவறுதலாக அவர் அப்படி செய்துவிட்டார் என்று நான் நினைக்கத்தொடங்கினேன். ஆனால், உங்களது உள்ளுணர்வு எதாவது தவறாக இருக்கிறது என்று உங்களுக்குச் சொன்னால், அது தவறாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். என்னிடம் இருந்து சிறிது தூரத்தில் நின்றுகொண்டிருந்த என் சகோதரியும் இதனை பார்த்திருக்கிறார். அவர் என்னிடம் உடனடியாக வந்து ‘நீ ஒகேயா’ என்று கேட்டார். நிச்சயமாக நான் ‘ஓகே’வாக இல்லை. என் சகோதரியும் நடந்த சம்பவம் வேண்டுமென்றே நடந்ததுதான் என்பதை பார்த்திருக்கிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நடந்த சம்பவத்தை எனக்குள்ளேயே ஓட்டிப்பார்த்தேன். நான் அந்த ஆண்கள் இருந்த இடத்தை நோக்கி நடந்தேன். ஆனால், அவர்கள் என்னை சுத்தமாக கண்டுகொள்ளவில்லை. உடனடியாக அவர்கள் இருவருமே அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்கள்.

என்னால் எதுவும் சொல்லமுடியவில்லையே என்று நான் கடுமையான கோபத்தில் இருந்தேன். என்னால் ஒரு சரியான பதிலை அந்த நேரத்தில் யோசிக்க முடியவில்லை. நானும் என் சகோதரியும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து என்னுடைய தாயும் சகோதரனும் இருந்த காய்கறி பகுதிக்குச் சென்றோம். அந்த இரண்டு ஆண்களும் எங்களை தொடர்ந்து வந்திருக்கிறார்கள். என் தாயும் சகோதரரும் காய்கறிகளை தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தபோது, நானும் சகோதரியும் எங்களுடைய கார்டை’பில் கவுன்ட்டரை நோக்கித் தள்ளத் தொடங்கினோம். அந்த இரண்டு ஆண்களும் மீண்டும் எங்களை நோக்கி வந்தார்கள். ஆனால், இந்தமுறை என்னிடம் பேசுமளவுக்கு தைரியம் அவர்களுக்கு வந்திருந்தது.

பேசும்போது எங்களுக்கு அருகில் வர முயற்சி செய்தார்கள். அதிலொருவன் நான் எந்த எந்த படங்களில் நடித்திருக்கிறேன் என்று தெரிந்துகொள்ள விரும்பினான். நாங்கள் கோபமாக அவர்களை அவர்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போகச்சொன்னோம்.

நான் இதனை எழுதும்போது என்னால் அவர்களிடம் சொல்லியிருக்கக்கூடிய, செய்திருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான விஷயங்களை நினைக்கமுடிகிறது. ஆனால், என்னால் அப்போது அதனை செய்யமுடியவில்லை. இதனை இங்கு எழுதுவதன் மூலமாக சிறிதாவது என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நினைத்தேன். ஆனால், அவர்கள் எந்தவிதமான குற்றவுணர்ச்சியோ, பிரச்னையோ இல்லாமல் அங்கிருந்து நடந்து சென்றுவிட்டார்கள்; அவர்களை இதனை மீண்டும் செய்வார்கள் என்பதை நினைக்கும்போது எனக்கு அதீத கோபம் வருகிறது. இது போன்றதொரு சம்பவம் எனக்கு நடந்தது இது முதல்முறை கிடையாது.

ஆனால், ஒவ்வொருமுறையும் இது வேறாகவும் கடினமாகவும் இருக்கிறது. பெண்ணாக இருப்பது சோர்வைக் கொடுக்கிறது. வீட்டினை விட்டு வெளியே காலை எடுத்து வைக்கும்போதே ஒவ்வொரு நிமிடமும் கவசத்தோடு காத்திருக்க; நான் குனியும் போதும் திரும்பும் போதும் என்னுடைய உடையினை கவனித்துக்கொள்ள; கூட்டமான பகுதிகளில் என்னுடைய மார்பு பகுதியை கைகளால் மூட என்று இந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. நான் வீட்டிலிருக்கும் நாள்களில், அதே பட்டியலை செய்யவேண்டிய என்னுடைய தாயையும், சகோதரியையும் என் நண்பர்களையும் பற்றி கவலைகொள்கிறேன். இவையெல்லாமே இது போன்ற சில நோயுற்ற ஆண்களால்தான். நீங்கள் எங்களுடைய பாதுகாப்பினை பறித்துக்கொள்கிறீர்கள். எங்களுடைய நிம்மதியினை, பெண்மையின் மகிழ்வை எடுத்துக்கொள்கிறீர்கள். நான் உங்களை வெறுக்கிறேன்.

இதனை படிக்கும் ஆண்களுக்கு, இது போன்ற சிறிதும் கேவலமான செயலை நீங்கள் செய்திருந்தால், நீங்கள் தான் இருப்பதிலேயே மிகக்கேவலமான வாழ்க்கையினை வாழ்கிறீர்கள்; நரகத்தைத் தவிர நீங்கள் வேறெதையும் அடைய உங்களுக்கு தகுதியில்லை. அந்த இரண்டு ஆண்களைப் போல நீங்கள் இதுபோன்றவற்றிலிருந்து எப்போதும் தப்பிக்கமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்; பிரார்த்தனை செய்கிறேன்.

இதனை படிக்கும் அனைத்து பெண்களுக்கும், அப்படியான ஆண்களின் முகத்தில் அறையும் அளவுக்கு இன்றைக்கு எனக்கு வராத தைரியம் உங்களுக்கு வரும் என்று நம்புகிறேன்'' என எழுதியிருக்கிறார் அன்னா பென்.

இது வேண்டுமென்றே செய்ததுதானா என்று அன்னா பென்னுக்கு வந்த சந்தேகம் அந்த சூழ்நிலையிலிருந்த பல பெண்களுக்கும் வந்திருக்கும். அந்த ஆண் வேண்டுமென்றே செய்ததுதான் என்று நம்புவதற்கு எல்லா பெண்களுக்கும் ஒரு உறுதியான சாட்சி தேவைப்படுகிறது. இவ்வளவு கேள்விகளுக்கு பிறகு சுய சந்தேகங்களுக்குப் பிறகு, நடந்த சம்பவத்தை மீண்டும் மீண்டும் மனதில் நடத்திப் பார்த்தப் பிறகு, வெகுசில பெண்கள் இதைப் பற்றி வெளியே பேசத்தொடங்கினாலும் #NotAllMen என்ற ஹேஷ்டேக்குகளுடன் 'எல்லா ஆண்களும் அப்படியில்லை' என்ற விவாதத்தைத்தான் பார்க்கமுடிகிறது. இந்த #NotAllMen-களுக்கு ஒவ்வொரு நாளும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவது #AllWomen என்பதை நினைவுபடுத்தவேண்டியதாகியிருக்கிறது. அன்னா பென் அவரது ஸ்டோரியில் தன்னை எதுவும் செய்ய தைரியம் இல்லாதவராக குறிப்பிடுகிறார்.

உண்மையில் அன்னா பென்னைப் போன்று ஒவ்வொரு பெண்ணும் உடைத்துப் பேசுவது, பாலியல் வன்முறை பற்றியான கதைகளில் சுற்றியிருக்கும் அவமானம் என்ற வெட்டி இறுக்கத்தை தளர்த்துகிறது. அதனை தைரியமாக வெளியே பேசிய அன்னா பென்னுக்கு வாழ்த்துகள்!
அடுத்த கட்டுரைக்கு