Published:Updated:

`கடிச்சது இந்தப் பாம்புதான் டாக்டர்' - பாம்பை உயிருடன் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற பெண்

ஜெனி ஃப்ரீடா

இரண்டடி நீளமே இருந்த அந்தப் பாம்பை தன் கையில் பிடித்துக்கொண்டு மகளையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த சிறிய கிளினிக்கிற்குச் சென்றிருக்கிறார் சுல்தானா.

பாம்பு
பாம்பு ( pixabay )

படையையே நடுங்க வைக்கும் பாம்பை ஒற்றைக் கையால் பிடித்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார் ஒரு தைரியசாலி பெண். மும்பை மாநகரத்தின் தாராவிப் பகுதியில் வசித்து வரும் 32 வயதுப்பெண் சுல்தானா கான். இவருக்கு 18 வயதில் தஹ்சீன் என்ற மகள் இருக்கிறார்.

பாம்பு
பாம்பு
pixabay

தாராவியில் சுல்தானா வீடு இருக்கும் பகுதியின் அருகில்தான் மகாராஷ்டிரா நேச்சர் பார்க் என்ற இயற்கைப் பூங்கா இருக்கிறது. அந்தப் பூங்காவில் வலசையாக வரும் பறவைகள், வண்ணத்துப்பூச்சிகளுடன் நல்ல பாம்பு, கண்ணாடி விரியன் போன்ற விஷத்தன்மையுள்ள பாம்புகளும் குடியிருக்கின்றன.

சமீப நாள்களாக மும்பைப் பகுதியில் கனத்த மழை பெய்து வருகிறது. அண்மையில் ஒருநாள் காலை தாயும் மகளும் உணவருந்திக் கொண்டிருந்தபோது, அவர்கள் வீட்டில் இருக்கும் சிறிய துவாரம் வழியாக ஒரு பாம்பு வீட்டினுள் நுழைந்திருக்கிறது.

மருத்துவமனை
மருத்துவமனை
pixabay

"வீட்டிற்குள் நுழைந்த பாம்பு என் மகள் தஹ்சீனின் இடது கையைக் கடித்துவிட்டது. முதலில் கடித்தது எலியாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் ஒரு பாம்பு அருகில் ஊர்ந்து சென்றதைப் பார்த்தோம். பாம்பைப் பார்த்ததும் அதிர்ச்சியாகிவிட்டது. பயமாகவும் இருந்தது. ஆனாலும் உடனடியாக அந்தப் பாம்பை என் கைகளாலேயே பிடித்துவிட்டேன்" என்கிறார் சுல்தானா.

பாம்பைப் பிடித்ததால் அது சுல்தானாவின் வலது கை விரலையும் கடித்துவிட்டது. இரண்டடி நீளமே இருந்த அந்தப் பாம்பை தன் கையில் பிடித்துக்கொண்டு மகளையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த சிறிய கிளினிக்கிற்குச் சென்றிருக்கிறார் சுல்தானா. அங்கிருந்த மருத்துவர் பெரிய மருத்துவமனைக்குச் செல்லுமாறு பரிந்துரைத்துவிட்டார். அப்போதும் பாம்பைப் பிடித்திருந்த பிடியை சுல்தானா விடவே இல்லை. ஒரு கையில் பாம்புடன் டாக்ஸியில் ஏறி வேறு மருத்துவமனைக்கு இருவரும் சென்றிருக்கின்றனர். மருத்துவமனைக்குச் சென்றதும் அங்கிருந்த மருத்துவரிடம் 'இது விஷமுள்ள பாம்பா?' என்று பார்க்கும்படி கொடுத்திருக்கிறார்.

விஷமுள்ள பாம்பு
விஷமுள்ள பாம்பு
pixabay

`பாம்பை ஏன் கையில் பிடித்துக்கொண்டு வந்தாய்' என்று அங்கிருந்தவர்கள் சுல்தானாவிடம் கேட்டதற்கு, அவர் கொடுத்த பதில் அல்டிமேட் ரகம். "என்ன பாம்பு கடித்தது என்று தெரிந்தால்தான் மருத்துவர் சரியான சிகிச்சை அளிக்க முடியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால்தான் அந்தப் பாம்பைத் தப்பிக்கவிடாமல் கையோடு பிடித்து வந்தேன்" என்றாராம் சுல்தானா. இருவரையும் கடித்த பாம்பு நிஜமாகவே விஷத்தன்மை வாய்ந்த கண்ணாடி விரியன் வகையைச் சேர்ந்தது. தற்போது தாய் மகள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.