Published:Updated:

``புரொட்டீன் சத்துக்கு எங்க போவேன்?!”

சங்கீதா
பிரீமியம் ஸ்டோரி
சங்கீதா

சாதித்தாலும் வேதனையில் வாழும் சாம்பியன் சங்கீதா

``புரொட்டீன் சத்துக்கு எங்க போவேன்?!”

சாதித்தாலும் வேதனையில் வாழும் சாம்பியன் சங்கீதா

Published:Updated:
சங்கீதா
பிரீமியம் ஸ்டோரி
சங்கீதா

‘`அடுத்து ஆசிய அளவுப் போட்டி வருது. அதுல இந்தியா சார்பா கலந்துக்கிட்டு ஜெயிக்கணும். இப்போ அதுதான் என் லட்சியம் ஆகியிருக்கு. அதுக்கு புரொட்டீன் அதிகமா சாப்பிடணும்னு பயிற்சியாளர் சொல்றாங்க. நாம இருக்குற வறுமையில அதுக்கு எங்க போறதுனுதான் தெரியல’’ - அதையும் சிரித்துக்கொண்டே சொல்கிறார் சங்கீதா. பாடி பில்டிங்கில் சமீபத்தில் தென்னிந்திய அளவிலான போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும் இவருக்கு, வயது 35. இரண்டு பிள்ளைகளுக்கு அம்மா மட்டுமல்ல, அப்பாவும் இவர்தான்.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையத்தில் வசித்து வரும் சங்கீதாவை சந்தித்தோம்.

ஒரு குடிசை வீட்டில், தோளுக்கு மேல் வளர்ந்த தன் பிள்ளைகளுடன் வரவேற்றார். ‘`பத்தாவது முடிச்ச உடனே கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். குடும்ப நிலைமை அப்படி. எனக்கு 18 வயசுல கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. அவரு பேரு பாண்டியன். அவரு வந்த பிறகாவது என் வாழ்க்கையில நல்லது நடக்கும்னு நினைச் சேன். ஆனா, ரெண்டு பிள்ளைங்க பிறந்த பிறகு கருத்து வேறுபாடு காரணமா எங்களுக்கு விவாகரத்து ஆயிடுச்சு. அப்புறம் அவருக்கு மூளைக்காய்ச்சல் வந்து கோமாவுக்கு போய், அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாரு. நான்தான் ஒற்றை மனுஷியா என் பிள்ளைகளை வளர்க்குறேன்.

மகள், மகனுடன் சங்கீதா
மகள், மகனுடன் சங்கீதா

மூத்தவன் தினேஷ்குமார், ப்ளஸ் டூ படிக்கிறான். பொண்ணு நந்தினி பத்தாவது படிக்குது. எனக்கு சின்ன வயசுல இருந்தே பல தரப்பட்ட வேலைகளும் செஞ்சு பழகிடுச்சு. இப்பக்கூட தினமும் என்ன வேலை கிடைக் குதோ அதை செஞ்சிட்டு இருக்கேன். தோல் ஃபேக்டரிக்கு போவேன், மேஸ்திரி வேலைக்குப் போவேன், வீட்டு வேலைக்குப் போவேன், பாத்ரூம் கழுவுவேன். எனக்கு அன்னிக்கு கூலி கிடைச்சா போதும். ஆனா, மனசுல இன்னொரு பக்கம், என் வீட்டுக்காரரை பிரிஞ்சதுலயிருந்து, ஏதாச்சும் சாதிக்கணும்னு ஒரு நெனப்பு, வெறி ஓடிட்டே இருக்கும். நான் வாழ்க்கை முழுக்க செஞ்சு வந்த கரடுமுரடான வேலைகளால, எனக்கு தசையெல்லாம் கின்னுனு இருக்கும். அதனால, நாம ஏன் பாடிபில்டிங்ல சாதிக்கக் கூடாதுனு தோணுச்சு...’’ தன் திருப்புமுனை பற்றி பகிர ஆரம்பித்தார் சங்கீதா.

‘`எனக்கு நடிகர் சரத்குமார் சார்தான் ரோல் மாடல். ‘மிஸ்டர் மெட்ராஸ் யுனிவர்சிட்டி’ பட்டம் வென்ற அவரு மாதிரியே நாமளும் இதுல ஜெயிக்கணும்னு நினைச்சுக்கிட்டு, வாணியம்பாடி வாரச்சந்தைகிட்ட இருக்குற ஜிம்ல சேர்ந்தேன். பொம்பளைகளுக்கு சாதாரண ஆசை வந்தாலே அது நிராசையா போயிடும். அப்படியிருக்கும்போது, பொதுவா ஆண்கள் நடமாட்டமே இருக்குற பாடிபில்டிங் துறையில சாதிக்கணும்னு நினைப்பு வந்தா என்னென்ன எதிர்வினைகளை எல்லாம் சந்திக்கணுமோ அதையெல்லாம் சந்திச்சேன்.

ஆரம்பத்துல ஜிம் டிரஸ் போட்டதுக்கே வீட்டுல எதிர்ப்பு. ‘இதெல்லாம் எதுக்கு? ஒழுங்கா பிள்ளைகளப் பாரு’னு அம்மா திட்டு வாங்க. ‘இவ என்ன அரைகுறையா துணி போட்டு திரியுறா’னு ஊருல பேசுவாங்க. நான் நாயா, பேயா கஷ்டப்படும்போது, இருந்த எல்லாத்தையும் அடமானம் வைக்கும்போது, கடன் வாங்கும்போது உதவி பண்ணவெல்லாம் ஒரு நாதியும் இல்ல. ஆனா, என் லட்சியத்துக்காக நான் நேர்மையா ஓடுனா என்னை விமர்சனம் பண்ண மட்டுமே ஊரே வருதே அழுகையா வரும்’’ என்ற சங்கீதாவுக்கு, அந்தக் கண்ணீரின் மிச்சம் இப்போதும் பொத்துக்கொண்டு வர, சில நொடிகள் அமைதிக்குப் பின் தொடர்ந்தார்.

``புரொட்டீன் சத்துக்கு எங்க போவேன்?!”

“ஊருப்பேச்சு ஒரு பக்கம்னா, என் வறுமை இன்னொரு பக்கம். ஒரு கட்டத்துல என்னால ஜிம்முக்கு ஃபீஸ் கட்ட முடியாம, அங்க போறதை நிறுத்திட்டேன். அப்புறம் ஜிம் ட்ரெயினர் குமாரவேல் என்னைக் கூப்பிட்டு, ‘பீஸ் எல்லாம் வேண்டாம், என்னால முடிஞ்ச உதவியை உங்களுக்கு செய்றேன், பயிற்சியை தொடருங்க’னு சொன்னார். சார் அப்படி சொல்ற அளவுக்கு அப்போ நமக்குத் திறமையும் தகுதியும் இருக்குனு என் தன்னம்பிக்கை அதிகமாச்சு. என் வறுமை, வாழ்க்கை மேல இருந்த கோவம், சாதிக்குற வெறினு எல்லாத்தையும் வொர்க்அவுட்ல வெளிப்படுத்தினேன். பீரியட்ஸ் டைம்னு எல்லாம் எந்த சலுகையும் இல்லாம, வலியோடவே வெயிட் லிஃப்டிங் பண்ணுவேன்’’ என்றவர், போட்டிகளில் கலந்துகொண்டது பற்றி தொடர்ந்தார்.

‘`மாவட்ட, மாநில அளவுல நிறைய போட்டிகள்ல கலந்துக்கிட்டேன். வெற்றிகள் கிடைச்சாலும் சரியான அடையாளம், அங்கீகாரம் கிடைக்கல. அப்போதான், சமீபத்துல தென்காசியில தென்னிந்திய அளவுல பெண்களுக்கான பாடிபில்டர் போட்டி நடக்குதுனு கேள்விப்பட்டு வெறித்தனமா பிராக்டீஸ் பண்ணினேன். அதுல கேரளா, பெங்களூரு, ஆந்திரானு பல மாநிலங்கள்ல இருந்தும் போட்டி யாளர்கள் கலந்துக்கிட்டாங்க. எல்லாரையும் பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சார்பா ‘சவுத் இந்தியா சாம்பியன்' (South India Champion) பட்டத்தை ஜெயிச்சப்போ, உலகத்தையே ஜெயிச்ச மாதிரி இருந்தது. திடீர்னு என்னைச் சுத்தியிருக்குறவங்க, தூரமா இருக்குற முகம் தெரியாதவங்கனு பலரும் என்னைப் பாராட்டுறாங்க. ஒரே நாள்ல வாழ்க்கை மாறும்னு சொல்வாங்களே... அதுதான் இதுவான்னு நினைச்சு சந்தோஷப்படுறதுக்குள்ள, நிதர்சனம் முகத்தில் அறையுது’’ என்று சட்டென குரல் குறைபவர், தன் வறுமை பற்றி சொல்லும்போது வாடிப்போகிறார்.

``புரொட்டீன் சத்துக்கு எங்க போவேன்?!”
``புரொட்டீன் சத்துக்கு எங்க போவேன்?!”
``புரொட்டீன் சத்துக்கு எங்க போவேன்?!”

‘`அடுத்து ஆசிய அளவுப் போட்டி வருது. அதுல இந்தியா சார்பா நான் பங்கேற்று நம் நாட்டுக்கு வெற்றிபெற்றுக் கொடுக்கணும். இதுவரைக்கும் முட்டை, சிக்கன், கிழங்கு, காய்கறினு சாப்பிட்டுத்தான் இந்தளவுக்கு என் உடம்பை உருவேத்தி ஜெயிச்சேன். ஆசிய அளவுல ஜெயிக்கணும்னா புரொட்டீன் சப்ளிமென்ட் சாப்பிடணும்னு ட்ரெயினர் சொல்றாரு. குடும்பத்துக்காகக் கிடைக்குற வேலைக்கு எல்லாம் போய், பிள்ளைகளை ஆளாக்கினு என் பாடுகளுக்கு நடுவுல நான் புரொட்டீனுக்கு எங்க போவேன்? உடல்வலிமையும் மனவலிமையும் நிறைய இருக்கு. தமிழக அரசு கைக்கொடுத்து உதவி பண்ணினா நிச்சயம் வெற்றியைக் கொண்டுட்டு வருவேன்!’’

தன் சாகச முகத்தை கழற்றிவைத்துவிட்டு, குடிசை வீட்டை பூட்டிவிட்டு, கட்டட வேலைக்குக் கிளம்பு கிறார் சங்கீதா.

****

உறுதியளித்த அமைச்சர்!

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனிடம், சங்கீதாவின் வேண்டுகோளை எடுத்துச் சென்றோம். அமைச்சர் நேரடியாக சங்கீதாவிடம் தொலைபேசியில் பேசி, அவரது சூழலையும், இலக்கையும், தேவைப்படும் உதவியையும் கேட்டுக்கொண்டார். ‘தேர்தல் நேரம் என்பதால் உங்களை உடனடியாக சந்திக்க இயலவில்லை. தேர்தல் முடிந்ததும் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தருகிறேன்’ என்று உறுதியளித்தார். ‘`அமைச்சரே என்கிட்ட பேசினார் சார். அடுத்து அமைச்சரோட பி.ஏவும் பேசி என் விவரங்களை எல்லாம் வாங்கிக்கிட்டார். இப்போ புது நம்பிக்கை வந்திருக்கு’’ என்று நம்மிடம் தெரிவித்த சங்கீதாவின் குரலில் கூடுதல் பலம்.

``இன்னும் உயரத்துக்குப் போவாங்க!”

சங்கீதாவுக்கு பயிற்சி அளித்து வரும் ‘ஸ்ரீபரத் ஃபிட்னஸ் சென்டர்’ குமாரவேல், “நான் தமிழ்நாடு அளவுல கோல்டு அடிச்சிருக்கேன். சங்கீதா சவுத் இந்தியா அளவுல கோல்டு வாங்கி, என் ஸ்டூடன்ட் என்னைத் தாண்டி போயிருக்குறது அவ்ளோ பெருமையா இருக்கு. அடுத்து ஆசிய அளவிலான போட்டிக்குத் தயாராக உணவு, மற்றும் அவங்க பசங்க படிப்புனு உதவி கிடைச்சா, சங்கீதா இன்னும் நாம அண்ணாந்து பார்க்குற உயரத்துக்குப் போவாங்க’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism