Published:Updated:

உருவு கண்டு எள்ளாதிருப்போமா..? - பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 3

உருவு கண்டு எள்ளாதிருப்போமா..?
பிரீமியம் ஸ்டோரி
உருவு கண்டு எள்ளாதிருப்போமா..?

யாரையும் யார் வேண்டுமானாலும் உருவகேலி செய்வது என்பது இன்று சகஜமாக இருக்கிறது.

உருவு கண்டு எள்ளாதிருப்போமா..? - பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 3

யாரையும் யார் வேண்டுமானாலும் உருவகேலி செய்வது என்பது இன்று சகஜமாக இருக்கிறது.

Published:Updated:
உருவு கண்டு எள்ளாதிருப்போமா..?
பிரீமியம் ஸ்டோரி
உருவு கண்டு எள்ளாதிருப்போமா..?

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்’ என்றார் திருவள்ளுவர். யாரையும் அவர்களது உருவத்தைவைத்து இகழ்தல் கூடாது என்பது குறளின் அர்த்தம்.

ஆனால், இன்று உயர்பதவிகளில் இருப்பவர்கள் முதல் உங்கள் வீட்டுக் குழந்தைகள்வரை அத்தனை பேரும் சகட்டு மேனிக்கு உருவகேலிக்கு உள்ளாகிறார்கள். உருவகேலி செய்வதை நகைச்சுவை என்ற பெயரில் டிரெண்டாக்கும் மீடியா அத்து மீறல்களும் இன்று அதிகரித்திருக்கின்றன. ஒருவரது உடல் அமைப்பை, அளவை வைத்து மற்றவர்கள் அவரை அவமானப் படுத்தும்போது சம்பந்தப்பட்ட அந்த நபருக்குள் தாழ்வு மனப்பான்மையும் சுய இரக்கமும் வளரத் தொடங்குகிறது.

குழந்தைகளும் பதின்பருவத்தினரும் இத்தகைய அனுபவத்துக்கு உள்ளாகும்போது அவர்கள் தன்னம்பிக்கையை இழக்கிறார்கள். தம்மைத் தாமே வெறுக்கத் தொடங்கு கிறார்கள். அது அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் பிரதி பலித்து, வெற்றிக்குத் தடையாகிறது. எனவே உருவகேலியை ஒருபோதும் அனுமதிக்கா தீர்கள். அது உங்களுக்கு நிகழ்ந்தால் மட்டும் தான் தவறு என்று பார்க்காமல் உங்கள் கண்முன் யாருக்கு நேர்வதையும் அனுமதிக் காதீர்கள். மறைமுகமாகக்கூட உருவகேலிக்கு நீங்கள் துணை போய்விடாதீர்கள்.

டாக்டர் ஷர்மிளா...

யாரையும் யார் வேண்டுமானாலும் உருவகேலி செய்வது என்பது இன்று சகஜமாக இருக்கிறது. அதுவும் இன்றைய இணைய உலகில் அநாமதேயமாக யாரை வேண்டுமானாலும் உருவகேலி செய்துவிட்டு ஒளிந்துகொள்வது அதிகரித்திருக்கிறது. முகப்பருக்கள், பருமன், மெலிந்த தேகம், சரும நிறம் என எதைவைத்தும் உருவகேலி அரங்கேற்றப்படுகிறது. அறிமுகமற்ற மூன்றாம் நபர்கள் உருவகேலி செய்வதை அலட்சியப்படுத்திவிட்டுக் கடந்துவிடலாம். ஆனால் வீட்டுக்குள் நடக்கும்போது..?

உங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என தெரிந்த நபர் களே, உங்கள் பிள்ளைகளைப் பார்த்து, ‘கருவாச்சி’, ‘அரிசிமூட்டை’ என கிண்டலடிக் கலாம். அதுவே அவர்கள் ஒல்லியாக இருந்தால், ‘பிள்ளைக்கு ஒழுங்கா சோறு போடறியா, இல்லையா...’ எனக் கேட்கலாம்.

அடுத்தவர்களை விடுங்கள்... பல நேரங்களில் பெற்றோரே பிள்ளைகளை உருவகேலிக்கு உள்ளாக்குவதும் பல வீடு களில் நடக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ.... குழந்தையின் நிறத்தையோ, உடல்வாகையோ வைத்து ‘கருப்பி’, ‘குண்டச்சி', ‘ரோடு ரோலர்’, ‘பனைமரம்’... பெற்றவர்களே இப்படியெல்லாம் பட்டப்பெயர்கள் வைத்து அழைப்பது பெரும்பாலான வீடுகளில் காணக்கிடைக்கிற சகஜமான காட்சி. இது தவறு என்பதே தெரியாமல் பிள்ளைகள் வளர்ந்த பிறகும், திருமணமான பிறகும்கூட அப்படியே அழைத்துக்கொண்டி ருப்பார்கள்.

யாராவது சுட்டிக்காட்டினால், ‘பாசத்துல தானே கூப்பிடறோம்... பெத்த புள்ளையைக் கிண்டலடிக்க எங்களுக்கு உரிமை இல்லையா... அவனே/ அவளே அதை தப்பா எடுத்துக்கலை... உங்களுக்கென்ன....’ என்றெல்லாம் பதில்கள் வரக்கூடும். பாசம், நகைச்சுவை, உரிமை என்று எந்தப் பெயரில் நீங்கள் இதைச் செய்தாலும் காயப்படுபவர்கள் உங்கள் பிள்ளைகள்தான். உடல்வாகு என்பது நபருக்கு நபர் வேறுபடும். இதுதான் பர்ஃபெக்ட் உடல்வாகு என எதுவுமில்லை என்பதைப் பிள்ளைகளுக்குச் சிறுவயதிலிருந்தே புரியவைக்க வேண்டிய கடமை பெற்றோருடையது.

உருவு கண்டு எள்ளாதிருப்போமா..? - பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 3

உருவ அமைப்பு தொடர்பாக உங்கள் வீட்டில் பாசிட்டிவ்வான சூழலை ஏற்படுத்த...

1. உடல் பற்றி போதியுங்கள்!

குழந்தைகளின் இள வயதிலிருந்தே இதைத் தொடங்குவது சிறந்தது. முகப்பருவும் பூனை ரோமமும் சாதாரண விஷயங்களே என்று தெளிவுபடுத்துங்கள். ஒவ்வொரு குழந்தையும் வளரும் பருவத்தில் சந்திக்கிற இயல்பான மாற்றங்கள்தாம் இவை என்று புரியவையுங்கள்.

2. உடலின்மீது அக்கறை கொள்ள உதவுங்கள்!

சருமப் பராமரிப்புக்கான சரியான பொருள்களைத் தேர்வு செய்வதில் தொடங்கி, சத்தான சாப்பாட்டுத் தேர்வு வரை இந்தத் தேவை ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். இவற்றில் குழந்தைகளுக்குத் துணை நில்லுங்கள்.

3. குழந்தையின் தோற்றத்தை பாசிட்டிவ்வாக பாராட்டுங்கள்!

தன் தோற்றம் பற்றி பெற்றோர் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் குழந்தைகளுக்கு நிச்சயம் இருக்கும். எனவே அவர்களது தோற்றம் குறித்து பாசிட்டிவ்வான கமென்ட்ஸை பகிர்வதன் மூலம் பிள்ளைகளின் தன்னம்பிக்கை உயரும். குழந்தையின் தோற்றத்தில் நீங்கள் பார்க்கிற சாதாரண, சின்ன விஷயம் உங்களுக்குப் பிடித்திருந்தாலும் தயங்காமல் உடனே பாராட்டுங்கள்.

4. ஆரோக்கியமாக சாப்பிடவும் ஆக்டிவ் வாக இருக்கவும் ஊக்கப்படுத்துங்கள்!

பதின் பருவத்தில் ஆரோக்கியமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றியெல்லாம் பிள்ளைகளுக்குப் புரிய வாய்ப்பில்லை. ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிடுவார்கள். இன்னொரு பக்கம் ‘ஸ்கின் நல்லாவே இல்லை... முடி கொட்டுது’ என்றெல்லாம் புலம்புவார்கள். ஆரோக்கியமான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் இரண்டும் புறத் தோற்றத்துக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை பெற்றோர்தான் பிள்ளைகளுக்குப் புரியவைக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கவும், காய்கறி, பழங்கள் சாப்பிடவும், தினமும் உடற்பயிற்சிகள் செய்யவும் பிள்ளைகளை சிறு வயதிலிருந்தே பழக்க வேண்டும்.

5. உங்கள் குழந்தை உருவகேலியைச் சந்தித்தால்....

மீண்டுமொரு முறை குழந்தை அந்த அனுபவத்தை எதிர்கொள்ளாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுங்கள். குழந்தையிடம் நிறைய பேசி, பாசிட்டிவ்வான வார்த்தைகளைச் சொல்லி, அந்தக் காயத்திலிருந்து மீட்டெடுங்கள்.

ஆஷ்லி...

‘`நான் மட்டுமல்ல, டீன் ஏஜில் இருக்கும் பெரும்பாலான பிள்ளைகள் பாடி ஷேமிங் அனுபவத்துக்கு உள்ளாகிறார்கள். பளபளவென்று இருந்த என் சருமம், டீன் ஏஜ் வந்ததும் பருக்களால் மாறியது. எனக்கு என் முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை. பார்ப்பவர்கள் எல்லோரும் என் கன்னங்களையும் அவற்றிலிருந்த பருக்களையுமே கவனிப்பதுபோல உணர்வேன். சிலர் நேரடியாகவே அது குறித்துக் கிண்டல் செய்திருக் கிறார்கள். பொறுக்க முடியாமல் ஒருநாள் என் அம்மாவிடம் சொன்னேன். ‘இதெல்லாம் ஒரு விஷயமா.... என் கண்ணுக்கு நீ எப்பவும் அழகிதான்’ என சொல்லிச் சிரித்தபடி அதைக் கடந்துபோனார். நான் சொன்னதை வெறுமனே கேட்டுக்கொண்டாரே தவிர என் வலியை அவர் பொருட்படுத்தவில்லை என அம்மாமீது என் கோபம் இன்னும் அதிகமானது. ஒருநாள் தாங்க முடியாமல் அழுது, கத்தி, ஆர்ப்பாட்டமே செய்துவிட்டேன். அப்போதுதான் எனக்குள்ளிருந்த அந்த வலி அம்மாவுக்கு முழுமையாகப் புரிந்தது.

அன்றைய தினம் அம்மா எனக்கு சொன்ன அட்வைஸ், உருவகேலியின் காயத்திலிருந்து என்னை மீட்டது. உலகமே அழகி எனக் கொண்டாடிய ஐஸ்வர்யா ராய், அவரது பிரசவத்துக்குப் பிறகான உடல் பருமனால் உருவகேலி செய்யப்பட்டதையும், இன்னும் நடிகைகள் வித்யா பாலன், இலியானா, ப்ரியங்கா சோப்ரா, மிஷல் ஒபாமா என பிரபலங்கள் பலரும் உருவகேலிக்குட்படுத்தப்பட்டதையும் எனக்கு விளக்கினார்.

அதுநாள்வரை அம்மா எனக்கு பழங்களோ, ஜூஸோ, காய்கறி, கீரையோ கொடுத்தால் சாப்பிட மறுத்திருக்கிறேன். எப்போதும் ஜங்க் ஃபுட்ஸ் கேட்டு அடம்பிடித்திருக்கிறேன். சரும ஆரோக்கியத்தில் உணவின் பங்கு என்ன என அன்று அம்மா எனக்குப் பொறுமையாக பாடம் எடுத்தார். ஒரு மாதம் அவர் சொல்படி கேட்டு நடந்தால் மாற்றம் தெரியும் என நம்பிக்கை அளித்தார். அம்மாவே ஒரு மருத்துவர் என்பதால் மருத்துவரீதி யாகவும் அந்த விஷயங்களை எனக்குப் புரியவைத்தார். அம்மா சொன்ன படி நடந்துகொண்டேன். மெள்ள மெள்ள என் சருமத்தில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. என் தன்னம்பிக்கை திரும்ப வந்து சேர்ந்தது. உருவகேலியை உதாசீனப்படுத்த வேண்டும் என்பதையும் புரிந்துகொண்டேன்.

- ஹேப்பி பேரன்ட்டீனிங்....

உருவகேலி...ஆய்வு என்ன சொல்கிறது?

15 முதல் 65 வயதிலிருந்த 1,244 பெண்களை வைத்து ஃபோர்ட்டிஸ் ஹெல்த்கேர் ஒரு சர்வே எடுத்தது. டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், அம்ரிதசரஸ், லூதியானா, ஜலந்தர், மொஹாலி, சென்னை உள்ளிட்ட 20 நகரங்களைச் சேர்ந்த பெண்கள் இதில் பங்கேற்றனர். தங்கள் உடலமைப்பு குறித்தும், உருவகேலிக்குள்ளாகும்போது அவர்கள் சந்திக்கிற மன உளைச்சல் குறித்தும் நடத்தப் பட்ட அந்த ஆய்வில் கீழ்க்காணும் உண்மைகள் தெரியவந்துள்ளன.

* உருவகேலி என்பது பரவலாக, பொதுவாக நடைபெறுகிற இயல்பான செயல் என்றவர்கள் 90 சதவிகிதப் பெண்கள்.

* ஆண்களைவிட அதிக அளவிலான உருவ கேலிக்கு உள்ளாவதை ஒப்புக் கொண்டவர்கள் 84 சதவிகிதப் பெண்கள்.

* பள்ளிக்கூடங்களிலும் பணியிடங்களிலும் உருவகேலிக்கு ஆளானதை ஒப்புக் கொண்டவர்கள் 47.5 சதவிகிதம் பேர்.

* உடல் எடை, வடிவம், சரும நிறம், கூந்தல் ஆகியவற்றை வைத்து நண்பர்களாலேயே உருவகேலிக்குட்படுத்தப்படுவதைப் பதிவு செய்தவர்கள் 32.5 சதவிகிதத்தினர்.