Published:Updated:

"குடும்ப கஷ்டம், பள்ளிக்கூடத்தை நிறுத்திட்டு பிசினஸ் ஆரம்பிச்சேன்!" சுகன்யாவின் சணல்பை வெற்றிக்கதை!

சுகன்யா
சுகன்யா

மூன்றாண்டுகளாக சணல் பைகள் தயாரிப்பை தன்னுடைய பிசினஸாக கொண்டுள்ள சுகன்யாவின் வெற்றிக்குப் பின்னால் சோகம் நிறைந்திருக்கிறது.

"காலத்துக்கு ஏற்ற மாதிரி மக்களுடைய தேவைகளும், விருப்பங்களும் மாறிட்டேதான் இருக்கும். மக்களுடைய தேவை என்ன என்பதை தெரிந்து அதுக்குத் தகுந்த மாதிரி நம்ளோட பிசினஸை அப்டேட் பண்ணிக்கிட்டா வெற்றி நமக்குத்தான். அதுதான் என்னுடைய வெற்றிக்கான காரணமும் கூட" என்று பேச ஆரம்பித்தார் சுகன்யா. மூன்று ஆண்டுகளாகச் சணல் பைகள் தயாரிப்பை தன்னுடைய பிசினஸாகக் கொண்டுள்ள சுகன்யா அவற்றை எப்படித் தயாரிப்பது என்பது பற்றியும், அதில் உள்ள சாதக பாதகங்கள் பற்றியும் நம்மிடம் பகிர்கிறார்.

சணல் பை
சணல் பை

"எனக்குச் சொந்த ஊர் தஞ்சாவூர். எங்க வீட்டில் நான், அக்கா, தங்கச்சி என மூன்று பெண்கள். அப்பா எங்களோட சின்ன வயசிலேயே இறந்துட்டாங்க. எங்க அம்மாதான் அப்பாவாக இருந்து எங்க மூணு பேரையும் வளர்த்தாங்க. ஆனால், எங்களோட துரதிருஷ்டம் எங்க அம்மாவும் என்னோட 15 வயசில் இறந்துட்டாங்க. மூணு பொம்பளைப் புள்ளைங்களும் தனியா எப்படி வாழ்க்கையை எதிர் கொள்ளப்போறோம்னு தவிச்சப்போ, கடவுள் மாதிரி எங்க மாமாதான் துணை நின்னாங்க. எங்க மூணு பேரையும் மதுரையில் இருக்க அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயி பார்த்துக்கிட்டாங்க.

எங்க மாமாவுக்கு ரெண்டு பசங்க. அவங்களும் படிச்சுட்டு இருந்தாங்க. அவங்களோடு சேர்த்து எங்க மூணு பேரையும் படிக்க வைக்க மாமா ரொம்பவே சிரமப்பட்டாங்க. மாமா கஷ்டப்படுறதை பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியலை. அதனால் பத்தாம் வகுப்போடு என்னுடைய படிப்பை நிறுத்திட்டேன். படிப்பு இல்லைங்கிற காரணத்துக்காக வாழ்க்கையே இல்லைனு ஒதுங்கி உட்காரமுடியுமா சொல்லுங்க. வாழ்க்கையில் அடுத்து என்னனு பொறுமையா யோசிச்சேன். எனக்கு டெய்லரிங் தெரியும் என்பதால் தையல் கடை ஆரம்பிச்சு அக்கா, தங்கச்சி படிப்பை நான் பார்த்துக்கிறேனு சொன்னேன். ஆரம்பத்தில் எல்லோருமே "வேண்டாம் நீயும் படி"னு சொன்னாங்க. நான் என் முடிவில் உறுதியா இருந்தேன். மாமாகிட்ட காசு வாங்கி ஒரு புது தையல் மிஷின் வாங்கினேன். ப்ளவுஸ், சுடிதார்களை வீட்டிலேயே வெச்சு தைச்சுக் கொடுக்க ஆரம்பிச்சேன்.

ஒரு மீட்டர் சாக்கு வாங்கினால் 3 பைகள் வரை தயார் செய்ய முடியும். ஒரு பை குறைந்தது 70 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யுறோம்.
சுகன்யா

தையல் கடை ஆரம்பிச்ச புதிதில் ஆர்டர்களே வராமல்தான் இருந்துச்சு. மாசத்துக்கு ரெண்டு ப்ளவுஸ் ஆர்டர் கிடைச்சாலே பெரிய விஷயம். அதனால் எங்க ஏரியாவில் இருக்க பைகள் தைக்கும் நிறுவனத்துக்கு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். ஒரு துணிப்பை தைச்சா நான்கு ரூபாய் கொடுப்பாங்க. ஒரு நாளைக்கு 10 மணி நேரம் தைப்பேன். 50 பைகள் வரை தைக்க முடியும். ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளம் கிடைக்கும். வீட்டுக்கு வந்து வேலைகளை முடிச்சுட்டு மீதம் இருக்கும் நேரத்தில் ப்ளவுஸ் தைச்சுக் கொடுத்துட்டு இருந்தேன்.

படிக்கலைனாலும், என் தொழில் தொடர்பான அப்டேட்டுகள் பத்தின அறிவை வளர்த்துக்காம இல்லை. அப்பப்போ, என்ன புது டிசைன் வந்திருக்குனு ஆன்லைன்ல பார்த்துட்டே இருப்பேன். அதனால் என்கிட்ட தைச்சுக் கொடுக்கச் சொல்லி துணி கொடுக்கிறவங்களுக்கு ஆன்லைன் பார்த்து விதவிதமான டிசைன்களில் தைச்சுக் கொடுப்பேன். டிசைன் பிடிச்சுப்போன என்னுடைய கஸ்டமர்களே எனக்கு விளம்பரம் பண்ண ஆரம்பிச்சாங்க. அடுத்தடுத்து நிறைய ஆர்டர்களும் வர ஆரம்பிச்சுது. என்னோட எல்லா வருமானத்தையும் சேர்த்து வெச்சு அக்காவையும், தங்கச்சியையும் பி.காம் வரை படிக்க வெச்சுட்டேன். எட்டு வருஷம் நேரம், காலம் பார்க்காமல் உழைச்சதாலதான் இது சாத்தியம் ஆச்சு. இப்போ அக்காவும் தங்கச்சியும் வேலைக்குப் போறாங்க" என்று பெருமையுடன் சொல்லும் சுகன்யா, பைகளுக்கு அளவு எடுத்துக்கொண்டே பேச ஆரம்பிச்சார்.

சுகன்யா பணியில்...
சுகன்யா பணியில்...

"நேர்மையாக எந்த வேலை செய்தாலும் அது நிச்சயமாக நம்மோட வாழ்க்கையை உயர்த்தும் என்பதை நான் அனுபவிச்சு கத்துக்கிட்டேன். படிப்பு முடிச்சிட்டு, அக்காவும் தங்கச்சியும் வேலைக்குப் போக ஆரம்பிச்ச பிறகு என்னை படிக்கச் சொல்லி எவ்வளவோ கட்டாயப்படுத்தினாங்க. ஆனால், எனக்கு பிசினஸ் பண்ற ஆசைதான் இருந்துச்சு. நான் படிச்சாலும் இப்போ எனக்கு கிடைக்கும் லாபத்திற்கு இணையாக இன்னொரு நிறுவனம் எனக்கு சம்பளம் தருவாங்களா? சொல்லுங்க. அதனால் சுயதொழில்தான் என்னோட கனவாக இருந்துச்சு" என்ற சுகன்யா சணல் பை பிசினஸ் தொடங்கியதைப் பற்றிப் பகிர்கிறார்.

"பாலிதீன் பைகள் பயன்பாட்டை அரசு தடை செய்த நேரத்தில், எல்லோருமே அதுக்கு மாற்றாக ஒன்றைத் தேட ஆரம்பிச்சாங்க. துணிப்பைகளை விட கொஞ்சம் ஸ்டைலாக, சின்னச் சின்ன சமுதாய வசனங்களுடன் களமிறங்கிய ஜுட் பேக்குகள் எனப்படும் சணல் பைகள்தான் பெரும்பாலானவர்களின் தேர்வாக இருந்தது. பெரிய பெரிய விற்பனை மையங்கள் கூட, தங்களின் வாடிக்கையாளர்களுக்குச் சணல் பைகளைத்தான் வழங்க ஆரம்பித்தனர். சணல் பைகளுக்கு மவுசு அதிகரித்தால் அதை பிஸினஸாகப் பண்ணலாம்னு முடிவெடுத்தேன். ஏற்கெனவே துணிப்பைகள் தைச்சதால் அந்த அனுபவத்தில் சணல் பைகள் தைப்பது எனக்கு இன்னும் ஈஸியாக இருந்துச்சு.

துணி, கூலி எல்லாம் போக ஒரு பைக்கு 60 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். மாசம் 40,000 வரை லாபம் இருக்கும்.
சுகன்யா

சணல் பை பிஸினஸ் ஆரம்பிக்கணும்னு முடிவெடுத்த உடன், மதுரையில் சாக்குகள் மொத்த விலைக்கு எங்க கிடைக்கும், நாம தைக்கிற பைகளை யாருக்கெல்லாம் விற்பனை செய்யலாம்னு நிறைய கடைகள் ஏறி இறங்கி தெரிஞ்சுக்கிட்டேன். மதுரையில் உள்ள சில பெரிய கடைகளில் ஆர்டர்களும் கிடைச்சுது. என்னுடைய சணல் பையில் `அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை காப்போம்' என்பதைதான் முதலில் அச்சிட்டேன். நிறைய இயற்கை ஆர்வலர்கள் வரவேற்பு கொடுக்க ஆரம்பிச்சாங்க. பிறந்த நாள், திருமண ரிட்டன் கிஃப்ட்கள் என அடுத்தடுத்து ஆர்டர்கள் வர ஆரம்பிச்சுது. முகநூல் நண்பர்கள் மூலமாகத்தான் நிறைய ஆர்டர்கள் கிடைச்சுது. நானும் பைகளில் பெயர்கள் அச்சிடுவது, புது டிசைன்கள் அச்சிடுவது, நிறுவனங்களின் பெயர்களை அச்சிடுவது என என்னை அப்டேட் பண்ணிக்கிட்டேன்.

ஒரு மீட்டர் சாக்கு வாங்கினால் 3 பைகள் வரை தயார் செய்ய முடியும். ஒரு பை குறைந்தது 70 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யுறோம். படங்கள் அச்சிட்ட பைகள், இரண்டு வண்ண பைகள் எனில் கூடுதல் விலைக்கு விற்க முடியும். மொத்தமான ஆர்டர்கள் வரும் நேரத்தில் மத்தவங்ககிட்ட கொடுத்தும் தைச்சு வாங்குவேன். எனக்கு பைகள் தைச்சு கொடுக்குறவங்களுக்கு ஒரு பைக்கு 10 ரூபாய் கொடுக்கிறேன். துணி, கூலி எல்லாம் போக ஒரு பைக்கு 60 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். மாசம் 40,000 வரை லாபம் இருக்கும். ஆர்டர்கள் அதிகம் கிடைக்கும் நேரங்களில் லாபம் இன்னும் அதிகமாக இருக்கும்.

சுகன்யா
சுகன்யா

நான் தைக்கும் பைகள் மதுரை, கரூர், திருச்சி, சென்னை, திருவண்ணாமலை போன்ற இடங்களுக்கு மொத்த விலைக்கு அனுப்பிட்டு இருக்கேன். பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு இலவச தையல் பயிற்சியும் கொடுத்துட்டு இருக்கேன். இதனுடனே ப்ளவுஸ், சுடிதார், குழந்தைகள் துணியும் தைச்சு கொடுக்கும் பணியும் தொடருது. ஆர்டர் எடுக்கிறது, கடைகளில் மெட்டீரியல் வாங்குவது, புதுசாக என்ன பண்ணலாம் என்பது போன்ற விஷயங்களில் என் மாமா பையன்தான் எனக்கு உறுதுணையாக இருக்கார்.

தொழிலோட அடுத்தகட்ட வளர்ச்சியாக 'சிறகுகள்' என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தகத்தையும் ஆரம்பிச்சுருக்கேன். சணல் பைகள் தொடர்பாக பெண்களுக்கான பயிற்சிகளும் எடுத்துட்டு இருக்கேன்.

சணல் பை
சணல் பை
pixabay

உண்மையைச் சொல்லணும்னா நான் படிக்கலை. அதனாலேயே மத்தவங்க வாழற மாதிரியான கெளரவமான வாழ்க்கையை வாழமுடியாதோனு ஒரு நிமிஷம் கூட கவலைப்பட்டதில்லை. மதிப்பு என்பது படிப்பில் மட்டும் இல்ல. எத்தனையோ பேர் படிச்சுட்டு வேலை கிடைக்காமல் கிடைச்ச வேலையை குறைவான வருமானத்துக்கு செய்துட்டு இருக்காங்க. அந்த வகையில் நான் என்னுடைய தொழிலை பெருமையாகத்தான் நினைக்கிறேன். இதுதான் எனக்கான அடையாளம் என்றும் நினைக்கிறேன். படிப்பு முக்கியம்தான். ஆனா, அதுவே எல்லாத்தையும் நமக்குத் தரும்னு நான் நம்பலை" எனத் தன்னம்பிக்கையுடன் முடித்தார் சுகன்யா.

அடுத்த கட்டுரைக்கு