22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

தங்கம் வாங்குவது முதலீடாகாது!

ரேணு மகேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
News
ரேணு மகேஸ்வரி

பெண்Money

``2013-ம் ஆண்டு `முதலீட்டில் பெண்களின் பங்கு' பற்றிய ஓர் ஆய்வை நீல்சன் நிறுவனம் நடத்தியிருக்கு. அதன்படி 83 சதவிகிதப் பெண்கள் எந்த முதலீட்டையும் செய்யலைன்னு தெரியவந்திருக்கு. சமூகம் மற்றும் பர்சனல்னு இதுக்கு ரெண்டு காரணங்கள் உண்டு. கடந்த ரெண்டு தலைமுறைகளா பெண்கள் வீட்டைவிட்டு வெளியே போய் சம்பாதிக்கத் தொடங்கியிருக்காங்க. ஆனாலும், நிதி நிர்வாகம் இன்னும் அவங்க குடும்பத்து ஆண்கள் கைகளில்தான் இருக்கு, நாட்டின் நிதியமைச்சரே ஒரு பெண்தான். ஆனாலும், பொம்பிளைங்க சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு குடும்பங்கள் சிதைய ஆரம்பிச்சிட்டதா வரும் விமர்சனங்கள் இன்னும் இருக்கு, அந்தப் பார்வை மாறணும்'' - அதிரவைக்கும் புள்ளிவிவரத்துடன் அவசியம் வேண்டும் மாற்றத்தையும் முன்வைத்துப் பேசுகிறார் ரேணு மகேஸ்வரி. சென்னையின் முன்னணி நிதி ஆலோசகர்களில் கவனம் ஈர்க்கும் பெண்.

நிதி நிர்வாகத் துறையில் 25 ஆண்டு அனுபவங்கள்கொண்ட ரேணு, தனது ‘ஃபின்ஸ்காலர்’ நிறுவனத்தின் மூலம் நிதி நிர்வாக வொர்க்‌ஷாப்புகளை நடத்துகிறார். அவற்றில் பலவும் பெண்களுக்கும் நிதி முதலீட்டுத் துறைக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புபவை. ரேணு, SEBI அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரும்கூட.

‘`பொருளாதாரத்தைப் பற்றித் தெரிஞ்சுக்கிறது ஒண்ணும் ராக்கெட் சயின்ஸ் இல்லை. கஷ்டம்னு நினைச்சா அது ஆண்களுக்கும் கஷ்டம்தான். பெண்கள் அதுலேருந்து விலகி நிற்கறாங்க. அதனால அவங்களுக்குப் பொருளா தாரம் புரியறதில்லை. ஆண்கள் அதைப் பற்றித் தெரிஞ்சுக்கிறாங்க, அதனால புரிஞ்சுக்கிறாங்க. ஒரு விஷயத்துலேருந்து விலகி நின்னா அது ராக்கெட் சயின்ஸாதான் தெரியும். ‘சமையலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்’னு சொல்ற ஆண்களும் இந்த ரகம்தான். சந்தை முதலீடு பற்றித் தெரிஞ்சுக்கணும்னா அதுக்கு உலகப் பொருளாதாரம் பற்றிய அறிவு தேவை. ஆனா, உங்களுடைய சொந்த சேமிப்பு, முதலீடு பற்றித் தெரிஞ்சுக்கிறது ரொம்ப ஈஸி’’ - ஆர்வம்கூட்டுகிற ரேணு, இந்தத் துறைக்குள் வந்த கதையும் வென்ற கதையும் சுவாரஸ்யமானவை.

‘`எண்களின் மேல் எனக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு உண்டு. எம்.பி.ஏ படிக்கிறதுன்னு முடிவானபோது அதில் ஃபைனான்ஸ், ஹெச்.ஆர் மற்றும் மார்க்கெட்டிங்னு மூணு ஆப்ஷன்ஸ் இருந்தது. எண்களின் காதலியான நான் ஃபைனான்ஸைத் தேர்ந்தெடுத்தேன், என்னுடைய அந்த நம்பர் காதல், முதலீட்டாளர் தரப்பிலிருந்து நிதி நிர்வாகத்தை அணுகக் கற்றுத்தந்தது. அது, இந்தத் துறையில் என்னை நான் மேம்படுத்திக்க பெரிய ஊக்கமா இருந்தது. கார்ப்பரேட் ஃபைனான்ஸ் துறையில் சில வருஷ அனுபவங்களுக்குப் பிறகு குடும்பப் பொறுப்புகளுக்காக ஒரு பிரேக் எடுத்துக்கிட்டேன்.

எல்லாப் பெண்களும் எதிர்கொள்ளும் `வீடா... வேலையா...' என்ற கேள்வி என் முன்னாலும் நின்னது.வேலை தொடர்பான என் கனவுகளைக் கைவிட்டுட்டு முழுநேர அம்மாவா மாறுவது அல்லது வேலையாட்கள் பொறுப்பில் குழந்தையை விட்டுட்டு என் கனவைத் தொடர்வதுன்னு எனக்கு ரெண்டு சாய்ஸ் இருந்தன. எனக்கு எதையும் விட்டுக்கொடுக்க முடியலை. அம்மாங்கிற பொறுப்பு மிகப் பெரியது, திருப்தியானது, என் கனவுகளுக்காக என் குழந்தை தண்டிக்கப்படக்கூடாதுங்கிறதுலயும் உறுதியா இருந்தேன். எனக்கு விருப்பமான பொருளாதாரத்துறை தொடர்பான சின்னச் சின்ன வேலைகளை எடுத்து செய்ய ஆரம்பிச்சேன். எந்த வேலையும் என் மகனுக்கான நேரத்தை பாதிக்காதபடி பார்த்துக்கிட்டேன். பர்சனல் ஃபைனான்ஸ் துறையில் என்னை அப்டேட் பண்ணிக்கிட்டேன். `சி.எஃப்.பி'ன்னு சொல்லப்படும் சர்ட்டிஃபைடு ஃபினான்ஷியல் பிளானர் கோர்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதுல சேர்ந்து இன்னும் நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். தமிழ்நாட்டின் முதல் ‘ரெஜிஸ்டர்டு இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்’ நான்'' - மகனை வளர்த்துக் கொண்டே தன் திறமைகளையும் அனுபவங்களையும் செதுக்கிக் கொண்டிருக்கிறார் ரேணு. கடமைகளை முடித்துவிட்ட நிலையில்தான் சொந்த நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனம் சார்பாக ஒருநாள் வொர்க்‌ஷாப் நடத்துகிறார். பட்ஜெட், செலவுக்கட்டுப்பாடு, இலக்குகளைத் திட்டமிடுதல், காப்பீட்டுக்கான அவசியம், கடன்களைச் சமாளித்தல். வரிவிதிப்பு என நிதி நிர்வாகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள இது ஒரு முன்னோட்டமாக அமையும். பர்சனல் ஃபைனான்ஸைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் தவறான முதலீட்டுப் பொறிகளுக்குள் சிக்காமலிருக்கவும் உதவும்.

தங்கம் வாங்குவது முதலீடாகாது!

``ரிஸ்க் நிறைந்த முதலீடுன்னு எதுவுமே இல்லை. முதலீட்டாளர்கள்தான் ரிஸ்க்கானவங்க. தன்னுடைய வாடிக்கை யாளர் அல்லது முதலீட்டாளர் பணத்தைப் பற்றி என்ன புரிஞ்சுவெச்சிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கணும். சேமிப்பு, முதலீடு மற்றும் செலவழிக்கும் விதங்களில் அவங்களுடைய குணாதிசயங்கள் எப்படிப்பட்டவைனு பார்க்கணும், வாடிக்கையாளர்களின் நிதி உளவியலைப் புரிஞ்சுக்க நாங்க சில டூல்ஸ் வெச்சிருக்கோம், அதை ‘மணி பிஹேவியரல் அனாலிசிஸ்’னு சொல்றோம். நிறைய படிச்சு, பெரிய பதவிகள்ல இருப்பாங்க. பணம், சேமிப்புன்னு வரும்போது அந்த விஷயங்களை வேற யாராவது பார்த்துப்பாங்கன்னு அலட்சியமா இருந்துடறாங்க. அப்படிப்பட்டவங்களுக்கானதுதான் இந்த வொர்க்‌ஷாப். இதில் அவங்களுடைய மனத்தடையை நீக்குவோம். இந்த வொர்க் ஷாப் அவங்களை நிதி நிர்வாகத்துல நிபுணர்களா மாத்திடும்னு அர்த்தமில்லை. ஆனாலும், பணத்தைப் பத்தி யோசிக்க வைக்கும்’’ - பணத்தைப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் உணர்த்துபவரிடம் பெண்களுக்கேற்ற சிறந்த முதலீட்டு ஆப்ஷன்ஸ் பற்றியும் கேட்டோம்.

``பெண்களுக்கேற்ற முதலீடுங்கிற கேள்வியே இங்கே தேவையில்லை. அது ஆண் பெண் ரெண்டு பேருக்கும் பொதுவானது. முதலீடு செய்யணும்னு விரும்பும் பெண்கள் ஏன், எதில், எவ்வளவு, எங்கே முதலீடு செய்யணும் என்கிற நான்கு கேள்விகளை மட்டும் தமக்குத் தாமே கேட்டுக்கணும். எப்போது பணம் தேவை, எவ்வளவு தேவை, எவ்வளவு அவசரம், இப்போதைய வருமானத்தின் நிலைத்தன்மை, சந்தை நிலவரம்னு பல விஷயங்களைப் பொறுத்து முடிவு செய்யப்பட வேண்டியது அது. உங்க போர்ட்ஃபோலியோவில் தங்கம் 5 சத விகிதத்துக்கு மேல் இருக்கக் கூடாது. தங்கம் வாங்கறது முதலீடாகாது. தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பினா, அது கோல்டு பாண்டாக இருப்பது சிறந்தது. ஈக்விட்டியும் உங்க போர்ட்ஃபோலியோவில் இடம் பெறணும், ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் நீண்ட காலத்துக்கு உங்க பணத்தைப் போட்டுவைக்காதீங்க. ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யறதுக்காக கடன் வாங்காதீங்க. பெண்களுக்கு என் அட்வைஸ் ஒண்ணுதான்... நிதி ஆலோசகரின் உதவியை நாடுங்க. உங்களுடைய தேவைகள் அறிந்து உங்க லட்சியங்களுக்கேற்றபடியான முதலீட்டுத் திட்டங்களுக்கு அவங்க வழிகாட்டுவாங்க, நிதி நிர்வாகம் என்பது எல்லா வயதினருக்கும் அவசியம். இன்னும் சொல்லப்போனா, சம்பாதிக்கிறதுக்கு முன்னாடியே இதைப் பத்தித் தெரிஞ்சுக்கிறது இன்னும் புத்திசாலித்தனம். சம்பாதிக்க ஆரம்பிச்சதும் நடக்கக்கூடிய தவறுகளைத் தவிர்க்க இது உதவும்!’’ - நிகழ்காலத்துக்கு அவசியமான, அவசரமான அட்வைஸுடன் முடிக்கிறார் ரேணு.