தங்கம் விலை குறைந்திருக்கும் இந்நேரத்தில் கடை கடையாக ஏறித் தங்க நகைகள் வாங்கிக் கொண்டிருக்கும் தங்க மகள்களே... அட்டென்ஷன் ப்ளீஸ்.
`நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!’ என்ற தலைப்பில் அவள் விகடன் மற்றும் நாணயம் விகடன் இணைந்து வழங்கிய ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய ஜெம் & ஜுவல்லரி டெக்னாலஜி டிரெய்னிங் சென்டரின் இயக்குநர் கே.சுவாமிநாதன், தங்கம் பற்றி பகிர்ந்துகொண்ட பொன்னான தகவல்கள் இதோ உங்களுக்காக...

* 'தங்கம்' ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்ட உலோகம். இதன் நிறம் மாறா தன்மையே அனைவரும் இதனை விரும்பி அணிவதற்கான முக்கிய காரணம். இது சேமிப்பு, அழகு இரண்டுக்குமான பொருளாகவும் உள்ளது.
* பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் தூய்மையான 24 கேரட் தங்கத்தில் ஆபரணங்கள் செய்ய முடியாது வெள்ளி, செம்பு போன்ற பிற உலோகங்கள் சேர்க்கப்பட்ட 22 கேரட் தங்கத்தில்தான் நகைகள் செய்ய முடியும்.
* நாம் பெரும்பாலும் விரும்பி வாங்குவது `916 ஹால்மார்க் தங்க நகைகளே. இதில் 91.6 சதவிகிதம் தங்கமும், 08.4 சதவிகிதம் செம்பு அல்லது வெள்ளிபோன்ற உலோகங்களும் சேர்க்கப்பட்டிருக்கும்.

* சிலருக்கு KDM நகைகள் பற்றிய சந்தேகம் இருக்கும். ஆபரணத்தின் இரு பாகங்களைப் பற்றவைத்து இணைப்பதற்கு கேட்மியம் (Cadmium or KDM) என்ற வெள்ளை நிறத்தினாலான உலோகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. KDM வைத்து நகைகளை இணைத்துப் பற்றவைக்கும்போது, கேட்மியம் ஆவியாகிவிடும். இவ்வாறு உருவாக்கப்படும் ஆபரணத்தில் தங்கத்தைத் தவிர வேறெந்த உலோகமும் இருக்காது. தங்கத்தின் தரமும் அப்படியே இருக்கும். ஆனால் இந்த KDM நகைகளைச் செய்ய WHO இந்தியா முழுவதிலும் தடைவிதித்துள்ளது. ஏனெனில் KDM நகை செய்யும் பொற்கொல்லர், ஆவியாகும் கேட்மியத்தை சுவாசிக்கும்போது அவருக்குப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மக்கள் இந்த வகையான நகைகளை விரும்புகிற காரணத்தால் KDM அல்லாத நகைகளில் KDM என்று பொய்யாக அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதனால் KDM என்று சொல்லி விற்பனை செய்யப்படும் நகைகளை வாங்குவதைத் தவிர்க்கவும்
* தங்கத்தின் விலையை அரசு நிர்ணயிப்பதில்லை. இங்கிலாந்தில் தான் இதற்கான தினசரி விலை நிர்ணயம் செய்கிறார்கள். HSBC வங்கி உறுப்பினர் ஒருவர் மற்றும் சுரங்க தொழிலாளிகள் நால்வர் இணைந்து இந்த விலையை நிர்ணயம் செய்கின்றனர். தங்கத்தின் பற்றாக்குறை, கச்சா எண்ணெயின் பற்றாக்குறை மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டே இந்த விலை தினந்தினம் மாறுபடுகிறது.
* பணத்தைத் தங்க நகையில் முதலீடு செய்ய விரும்புவோர் கல் வைத்த நகைகளை வாங்காமல் தவிர்ப்பது நல்லது. கல் நகையைக் கடையில் வாங்கும்போது அதற்கான விலை மற்றும் சேதாரம், செய்கூலி அனைத்தையும் கொடுக்க வேண்டும். அதையே நீங்கள் விற்கும்போது நகையில் உள்ள கல்லின் எடைக்குப் பணம் கிடைக்காது. கல்லை எல்லாம் நீக்கிவிட்டு மீதமிருக்கும் தங்கத்தின் எடைக்கு மட்டுமே பணம் தருவார்கள். அதனால் கல் நகையில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். கல் வைத்த நகை அணிய விரும்புவோர் மட்டும் அதை வாங்கலாம்.
* எந்தக் கடையில் தங்க நகை வாங்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதைவிட எந்த மாதிரியான நகை வாங்குகிறோம் என்பதில் கவனம் தேவை. முடிந்தவரையில் ஹால்மார்க் நகைகளாக வாங்குவது சிறந்தது. நகை வாங்கும்போது மறக்காமல் அதற்கான பில்லையும் வாங்க வேண்டும்.
* தற்போது குறைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டை தொடர்ந்து அதிகரிக்கலாம். இவை உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகள் என்பதால் அதிகமானோர் தங்க நகைகள் வாங்குவார்கள். எனவே, தங்க விலை குறைந்திருக்கும் இன்றைய சூழலில் தங்கம் வாங்குவதுதான் சிறந்தது.
* நீங்கள் வாங்கும் நகைகளில் அங்கீகரிக்கப்பட்ட முத்திரைகள் எல்லாம் இருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
நாணயம் விகடன் மற்றும் அவள் விகடன் நடத்திய ‘தங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்’ நிகழ்ச்சியை முழுமையாகக் காண...