``குடி குடியைக் கெடுக்கும்" என்று மக்கள் மத்தியில் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இன்னும் நம் நாட்டில் மதுப்பழக்கம் குறையவில்லை. சமீபத்தில் மத்திய இணை அமைச்சர், குடிகாரர்களுக்கு உங்களின் மகள்களையோ அல்லது சகோதிரிகளையோ திருமணம் செய்து வைக்க வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லம்புவா சட்டமன்ற தொகுதியில் போதை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் கவுஷல் கிஷோர் கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, ``என் மகன் அதிக குடிப்பழக்கம் கொண்டிருந்ததால், அவனை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். தனது குடிப்பழக்கத்தை கைவிட்டுவிடுவான் என்று எண்ணி, அதற்கடுத்த 6 மாதங்களில் அவனுக்குத் திருமணம் செய்து வைத்தோம். அதன்பின்பும் அவன் குடிப்பழக்கத்தை விடவில்லை. அதனால் அவன் கிட்னி மற்றும் நுரையீரல் செயலிழந்து இறந்துவிட்டான். அவன் இறக்கும்போது அவனின் மகனுக்கு இரண்டு வயது தான்.

நான் எம்.பியாகவும், என் மனைவி எம்.எல்.ஏ-வாகவும் இருந்தும் எங்கள் மகனை எங்களால் காப்பற்ற முடியவில்லை. பொதுமக்களுக்கும் இதே நிலைதான். எங்கள் மகனை எங்களால் காப்பாற்ற முடியாததால், அவன் மனைவி கைம்பெண் ஆகிவிட்டாள்.
நீங்கள் உங்கள் மகள்களுக்கோ அல்லது சகோதரிகளுக்கோ குடிகாரர்களைத் திருமணம் செய்து வைக்காதீர்கள்" என்று கூறியுள்ளார்.