Election bannerElection banner
Published:Updated:

ஆண்கள் டெஸ்ட் போட்டியின் முதல் பெண் நடுவர்... யார் இந்த க்ளயர் போலசாக்?

Claire Polosak
Claire Polosak ( Rick Rycroft )

144 ஆண்டுக்கால டெஸ்ட் மேட்ச் கிரிக்கெட்டில் இது பெண்கள் கொண்டாட வேண்டிய பொன்னான தருணம்.

ஆஸ்திரேலியா - இந்தியா தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நடுவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டதன் மூலம், ஆண்கள் டெஸ்ட் போட்டியின் முதல் பெண் நடுவராகி சரித்திரம் படைத்திருக்கிறார் 32 வயதான க்ளயர் போலசாக்.

பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் ஆண் நடுவர்கள் இருப்பது வழக்கம் என்றாலும், ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளில் பெண் நடுவர் என்பது, குறிப்பாக சர்வதேச ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளில் வழக்கம் இல்லை. இந்த இடத்துக்கு வர க்ளயர் போலசாக் பல போட்டிகளைக் கடந்துவந்துள்ளார்.

க்ளயர் போலசாக் 2017-ம் ஆண்டு நியூ சவுத் வேல்ஸ் மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா XI அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடுவராக இருந்ததன் மூலம், உள்ளூர் ஆண்கள் கிரிக்கெட் போட்டியின் முதல் பெண் நடுவரானார்.

2018-ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா XI அணிகளுக்கு இடையிலான ஒருநாள் பயிற்சி ஆட்டத்தின் நடுவராக இருந்ததன் மூலம், இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி சம்பந்தப்பட்ட ஆட்டத்தின் முதல் பெண் நடுவரானார்.

2019-ம் ஆண்டு ஓமனுக்கும் நமீபியாவுக்கும் இடையில் நடைபெற்ற உலக கிரிக்கெட் லீக் பிரிவு 2-ன் இறுதிப் போட்டியின் நடுவரானதன் மூலம், சர்வதேச ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதல் பெண் நடுவரானார். மேலும், க்ளயர் போலசாக் பல்வேறு சர்வதேச பெண்கள் கிரிக்கெட் போட்டியின் நடுவராகவும் இருந்திருக்கிறார்.

2020-ம் ஆண்டு பெண்கள் பிக் பேஷ் லீக்-ன் இறுதிப்போட்டியில் நடுவர்களாக இருந்ததன் மூலம் க்ளயர் போலசாக் மற்றும் எலோய்ஸ் ஷெரிடன், முதன்முதலாக ஒரு தேசிய கிரிக்கெட் இறுதி போட்டியினை துவங்கிய இரண்டு பெண் நடுவர்கள் என்ற பெருமையை பெற்றனர்.

ஐசிசி விதிகளின்படி, டெஸ்ட் போட்டிகளில் நான்காவது நடுவரை, போட்டியை நடத்தும் நாடு, ஐ.சி.சி சர்வதேச நடுவர்களின் குழுவிலிருந்து தங்களது நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும்.

Claire Polosak
Claire Polosak
Rick Rycroft

இதன் பின்னணியில்தான் தற்போது க்ளயர் போலசாக் ஆஸ்திரேலியா - இந்தியா தொடரில் நான்காவது நடுவராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நான்காவது நடுவரின் முக்கியப் பணி, மைதானத்தில் இருக்கும் நடுவர்களுக்கான உதவிகளைச் செய்வது. குறிப்பாக, போட்டிக்கு இடையே புதிய பந்தை எடுத்து வருவது மற்றும் மைதானத்தில் எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது ஆகியவையாக இருக்கும். யாரேனும் ஒரு நடுவரால் காயத்தின் காரணமாகவோ, வேறு தவிர்க்க முடியாத சூழ்நிலையிலோ போட்டியைத் தொடர முடியவில்லை என்றால், மூன்றாவது நடுவர் மைதானத்தில் இருக்கும் நடுவருக்கு பதிலாகவும், நான்காவது நடுவர் மூன்றாவது நடுவராகவும் மாற்றப்படுவார்.

போட்டி தொடங்கும் முன் பிட்ச்சில் எந்த அணி வீரரும் விளையாடக் கூடாது என்பது விதி. இன்று போட்டி தொடங்கும் முன்பு ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இந்த விதியை மீறி செயல்பட, நடுவர் க்ளயர் அவரை கடிந்துகொண்டு, பிட்ச்சில் இருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தார். டேவிட் வார்னர் இதன் பின்னர், அந்த இடத்தைவிட்டு நகர்ந்திருக்கிறார்.

David Warner
David Warner
Rick Rycroft

2017-ம் ஆண்டு தனியார் கிரிக்கெட் செய்தி வலைதளத்தில் க்ளயர் அளித்த பேட்டி ஒன்றில், ``நான் கிரிக்கெட் விளையாடியதே இல்லை. ஆனால், நான் எப்போதும் கிரிக்கெட்டை தொடர்ந்திருக்கிறேன். என் பெற்றோர்தான் என்னை இதில் (நடுவர்) சேரும்படி செய்தனர். என்னுடைய தந்தைதான் நடுவருக்கான படிப்பை கற்க என்னை அழைத்து வருவார். தேர்ச்சி பெற சில முறை முயற்சி செய்ய வேண்டியிருந்தாலும், நான் இதை செய்தே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். சிட்னி போட்டியில் என்னுடைய மதிப்பெண்கள் உயரும்படி வேலை செய்தேன். நான் ஆண்களைவிட அதிகமாக உழைக்க வேண்டி இருந்திருக்கலாம். ஆனால், அது இந்த வேலையின் ஒரு பகுதி. இன்னும் சிறப்பாக வேலைசெய்வது இதை இன்னும் மெருகேற்றும். அது (நமக்கான) வழியைக் காட்டும். எனவே, தற்போது வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன" என்றிருக்கிறார்.

144 ஆண்டுக்கால டெஸ்ட் மேட்ச் கிரிக்கெட்டில் இது பெண்கள் கொண்டாட வேண்டிய பொன்னான தருணம். தகர்க்கப்படும் தடைதான் வரலாறு ஆகிறது!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு