Published:Updated:

`பெண் பயணியிடம் இப்படித்தான் நடந்துகொள்வதா?!'- டிக்கெட் பரிசோதகரை எச்சரித்த ரயில்வே போலீஸ்

குருபிரசாத்

கோவை ரயில் நிலையத்தில், பெண் பயணியை டிக்கெட் பரிசோதகர் ஒருவர் தகாத வார்த்தையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீஸ்
டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீஸ்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். வியாபார நிமித்தமாக கோவை வந்த இவர், பணியை முடித்துவிட்டு நேற்று மதியம் தான் கொண்டு வந்த பாத்திரங்களுடன், கோவை ரயில் நிலையத்திலிருந்து சேலம் செல்ல ரயிலில் ஏறியுள்ளார். அப்போது அங்குவந்த டிக்கெட் பரிசோதகர் மாரியம்மாளிடம் டிக்கெட்டைக் கேட்டுள்ளார்.

பயணம் செய்வதற்காக மாரியம்மாள் எடுத்த டிக்கெட்
பயணம் செய்வதற்காக மாரியம்மாள் எடுத்த டிக்கெட்

`டிக்கெட் என் கணவரிடம் உள்ளது. அவர் முன்புறம் உள்ள பெட்டியில் இருக்கிறார்’ என்று மாரியம்மாள் கூறியுள்ளார். இதையடுத்து, டிக்கெட் பரிசோதகர்கள் மாரியம்மாளை ரயிலை விட்டு இறங்கும்படி வற்புறுத்தியுள்ளனர்.

மேலும் டிக்கெட் பரிசோதகர் பத்மகுமார், மாரியம்மாளை தகாத வார்த்தையில் திட்டியதுடன், அவர் கொண்டுவந்த பாத்திரங்களையும் எட்டி உதைத்துள்ளார். இதைக்கண்ட ரயில்வே தலைமைக் காவலர் வீரமுத்து, `பயணிகளிடம் இப்படி நடந்துகொள்ளக் கூடாது. இது தவறான செயல்’ என்று அறிவுறுத்தியுள்ளார். ஆத்திரமடைந்த பத்மகுமார், `எனக்கு நீ அறிவுரை சொல்கிறாயா?’ என்று காவலரிடம் பொது இடத்தில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து மாரியம்மாள், `நான் முட்டை வியாபாரம் செய்துவருகிறேன். அதற்காக சேலத்திலிருந்து கோவை வருவேன். பணிகளை முடித்துவிட்டு சேலம் செல்வதற்காக நானும் என் கணவரும் வேறு வேறு ரயில் பெட்டிகளில் ஏறினோம். செக்கிங்கிடம், `என் கணவரிடம் டிக்கெட் இருக்கிறது’ என்றேன்.

பாதிக்கப்பட்ட மாரியம்மாள்
பாதிக்கப்பட்ட மாரியம்மாள்

அதையெல்லாம் கேட்காத டிக்கெட் பரிசோதகர், தகாத வார்த்தையில் திட்டி, என்னுடைய பாத்திரங்களை உதைத்துவிட்டார். டிக்கெட் பரிசோதகர் என்றால் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாமா? இதைத்தட்டி கேட்ட போலீஸையும் அவர் மிரட்டுகிறார். இது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.