Published:Updated:

"தைரியமாக இருந்தால் கொரோனாவை வெல்லலாம்!"

நம்பிக்கை மனுஷிகள்

பிரீமியம் ஸ்டோரி
உலகின் அனைத்துத் திசைகளிலும் கொரோனா குறித்தச் செய்திகளே முதன்மையாக ஒலிக்கின்றன.

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளும் போராட்டத்துடன், வாழ்வாதாரப் போராட்டத்தையும் அனைவருமே எதிர்கொண்டிருக்கும் சூழலில், கொரோனா குறித்த அச்சமூட்டும் செய்திகள்தாம் அதிகமாக அலையடிக்கின்றன. இதற்கு நடுவே, `நாங்கள் இருக்கிறோம்' என்று நம்பிக்கையூட்டுகிறார்கள், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டிருப்பவர்கள். கொரோனாவை வென்ற சென்னையைச் சேர்ந்தப் பெண்கள் சிலரின் நம்பிக்கைப் பாடம் இதோ...

குணா தனியார் கட்டுமான நிறுவன ஊழியர்

சிகிச்சைக்கு முன்பு: “லாக்டெளன் தளர்வுகளுக்குப் பிறகு போன மாசம் வேலைக்குப் போனேன். ஆபீஸ்ல இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுச்சு. பிறகு, எனக்கும் வந்துடுச்சி. அந்த நேரத்துல எனக்கு வாசனை, சுவை உணர்வு இரண்டும் இல்லை. இதனால, சமையல்ல நிறைய உப்பைக்கொட்டி வெச்சுட்டேன். ஆபீஸ்ல எல்லோரையும் வீட்டில் இருந்தே வேலை செய்யச் சொல்லிட்டாங்க. பிறகு மூச்சுத்திணறல், சாப்பாடு செரிமானம் ஆகாமல் அடிக்கடி வாந்தி வருவது, தொண்டை வலி, சளி, உடல் வலின்னு விசித்திரமான உணர்வால் முடங்கிப்போனேன். வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக்கிட்டேன்.

 குடும்பத்தினருடன் குணா...
குடும்பத்தினருடன் குணா...

ஒருநாள் இரவில் எனக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படவே, தண்ணீரில் உப்பு கலந்துக் கொப்பளிச்சேன். அடுத்த ரெண்டு மணி நேரம் இடைவிடாம வாந்தி வரவே, கடைசியில் ரத்தமும் வந்துச்சு. அதிகாலை 2 மணிக்கு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்குப் போனோம். டெஸ்ட் எடுத்துட்டு, மாத்திரை மட்டும் கொடுத்தாங்க. அன்னிக்கு மதியமே கொரோனா பரிசோதனை டெஸ்ட் எடுத்துகிட்டேன்.

‘பாசிட்டிவ்’னு ரிசல்ட் வர மொத்தக் குடும்பமும் பயந்துட்டோம். ஆம்புலன்ஸ்ல மொத்தக் குடும்பமும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்குப் போனோம். எனக்கு எக்ஸ்ரே எடுத்துட்டு, கொரோனா வார்டுல எனக்குத் தனி ரூம் ஒதுக்கிட்டாங்க. கணவர், அம்மா, குழந்தைக்கு டெஸ்ட் எடுத்துட்டு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. அவங்க மூவருக்கும் 'நெகட்டிவ்'னு ரிசல்ட் வந்துச்சு.

சிகிச்சையின்போது: தினமும் டாக்டர் வந்து என்னைப் பரிசோதனை செய்தார். நர்ஸ் வந்து மூணு வேளைக்கான மாத்திரைகள் கொடுத்துட்டு, உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவைப் பரிசோதனை செய்தார். மூணு வேளையும் தரமான உணவு, ஒரு முட்டை, ஏதாவதொரு பழம், கபசுரக் குடிநீர், சோயா பால், டீ, பிஸ்கட்னு நல்லா கவனிச்சுக்கிட்டாங்க. தினமும் ஒரு மாஸ்க் கொடுத்தாங்க. ஏதாவது தேவைனு போன்ல கேட்டா, உடனே உதவி செய்தாங்க.

‘கொரோனா பாசிட்டிவ்’ உறுதியானால், நம்ம வசிப்பிட கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு ஆஸ்பத்திரி, போலீஸ் ஸ்டேஷன் உட்பட முக்கிய அரசு சேவை மையங்கள் பலவற்றுக்கும் பாதிக்கப்பட்டவரின் செல் நம்பரை அனுப்படுறாங்க. அங்கிருந்தெல்லாம் எனக்கு போன் பண்ணி, நான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக்கிறதை உறுதிசெய்தாங்க. நான் இருந்த ரூம்லயே பாத்ரூம் வசதி இருந்துச்சு. அதுலயே துணியைத் துவைச்சுக்கிட்டு, ரூம்லயே காயப்போட்டுக்கிட்டேன். வராண்டாவுல தினமும் நடைப்பயிற்சி செய்தேன். யோகா சொல்லிக்கொடுத்து ரூம்ல தினமும் செய்யச் சொன்னாங்க. போன்ல குடும்பத்தினர்கிட்ட அடிக்கடி பேசிட்டே இருந்ததால, நேரம் போனதே தெரியலை.

சிகிச்சையில் இருந்த அஞ்சாவது நாள் மறுபடியும் டெஸ்ட் எடுக்க, அதிலும் ‘பாசிட்டிவ்’னுதான் வந்துச்சு. பிறகு கூடுதலா நாலு நாள்களுக்கு ஆஸ்பத்திரியிலதான் இருந்தேன். முறையான கவனிப்பால் சீக்கிரமே குணமானேன். ஆஸ்பத்திரிக்குத் தினமும் சிகிச்சைக்காக நிறைய பேர் வந்துகிட்டே இருக்கிறதால, ஓரளவுக்குக் குணமானவங்களை வீட்டுக்கு அனுப்பிடுறாங்க. ஒன்பதாவது நாள் எனக்கு டெஸ்ட் எடுத்துட்டு, ‘வீட்டில் கொஞ்சநாள் தனிமைப்படுத்திக்கிட்டு இருங்க’ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. அந்த ரிசலட்.. ‘நெகட்டிவ்’.

சிகிச்சைக்குப் பிறகு: வீட்டு மொட்டை மாடியில் இருந்த தனி ரூம்ல என்னைத் தனிமைப்படுத்திக்கிட்டேன். தினமும் சாப்பாடு கொண்டுவந்து கதவுக்கு வெளியே கணவர் வெச்சுட்டுப் போயிடுவார். தினமும் சின்னப் பொண்ணை கணவர் மொட்டைமாடிக்குக் கூட்டிட்டுவருவார். அவளுக்கு மூன்றரை வயசுதான். நான் இருப்பது தெரிஞ்சா என்கிட்ட வர அடம்பிடிப்பா. எனவே, ஜன்னல் வழியே மறைஞ்சு இருந்து மகளைப் பார்த்து சந்தோஷப்படுவேன். கணவரைக் கட்டிப்பிடிச்சு அழணும்னு தோணும். ஆனா, அதைக்கூடச் செய்ய முடியலை. அப்போ, அக்கா வீட்டில் இருந்த என் பெரிய பொண்ணு வீடியோ கால்ல தினமும் பேசுவா.

எட்டு நாள்கள் வீட்டுத் தனிமைக்குப் பிறகு, இரவுல வீட்டுக்கு வந்தேன். குழந்தையைத் தூக்கி முத்தமிட்டுக் கொஞ்சி அழுதேன். ஜூலை தொடக்கத்துல இருந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட்டோம். அரசு வேலையிலிருக்கும் கணவரும் வேலைக்குப் போறார். நான் வீட்டில் இருந்து வேலை செய்றேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் இது. கொரோனா பாதிப்பு வந்தா, முதலில் மனதைரியத்துடன் இருக்கணும். முறையான சிகிச்சை, உணவு முறையைக் கடைப்பிடிச்சா நிச்சயம் கொரோனாவிலிருந்து மீண்டு விடலாம்.”

ஜெசிந்த் பிரமிளா தனியார் பள்ளியின் நிர்வாகப் பணியாளர்

சிகிச்சைக்கு முன்பு: “போன மாசம் வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். திடீர்னு ஒரு நாள் லேசா காய்ச்சல் அடிச்சுது. மாத்திரை சாப்பிட்டதும் சரியாகிடுச்சு. ஆனா, தொண்டை வலி, லேசான சளி, உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்னைகள் நீடிச்சுது. திடீர்னு சுவை உணர்வும் வாசனை உணர்வும் தடைபடவே, அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா டெஸ்ட் எடுத்துக்கிட்டேன். ரெண்டு நாள் கழிச்சு மாநகராட்சி ஊழியர்கள் போன் பண்ணி, ‘கொரோனா பாசிட்டிவ்’னு சொன்னாங்க.

வாசலுக்கு நான் போனால், சிலர் பயத்துல விலகிப்போறாங்க. கஷ்டமா இருக்கு. கொரோனா பாதிப்பிலிருந்து நம்பிக்கையோடு மீண்டு வந்தாலும், இதுபோன்ற புறக்கணிப்புகள்தாம் வருத்தத்தை ஏற்படுத்துது.

எனக்குப் பெற்றோர் கிடையாது. கணவரின் குடும்பத்துடனும் எங்களுக்குப் பேச்சு வார்த்தை இல்லை. எனக்கு பாதிப்பு ஏற்பட்டதைவிட கணவர், குழந்தையை யார் பார்த்துப்பாங்கன்னு கவலையில் ரொம்ப நேரம் அழுதேன். கணவர் தோள்மீது சாய்ந்துட்டுப் போகணும்னு ஆசைப்பட்டாலும், என்னால அவருக்குப் பாதிப்பு வந்திடக்கூடாதுன்னு தூரத்துல இருந்து அவர்கிட்டயும் மகன்கிட்டயும் பத்திரமா இருந்துக்கச் சொன்னேன். கொடியில காஞ்சுட்டு இருந்த சில துணிகளை மட்டும் எடுத்துக்கிட்டு, அண்ணாநகர்ல இருந்த தனியார் கல்லூரியில் செயல்படும் அரசுப் பரிசோதனை மையத்துக்குப் போனேன். என் உடலில் வேறு ஏதேனும் பாதிப்புகள் இருக்கான்னு சோதனை செய்துதாங்க. லேசான அறிகுறிகளுடன் கூடிய கொரோனா பாதிப்புங்கறதால நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திலுள்ள கொரோனா சென்டருக்குக் கூட்டிட்டுப் போனாங்க.

சிகிச்சையின்போது: அந்த மையத்தில் தடுப்புடன் கூடிய தனி பெட் ஒதுக்கினாங்க. தினமும் ஒலிபெருக்கியில் எங்களை அழைப்பாங்க. நர்ஸ்கிட்ட எங்க உடல்நிலை விவரங்களைச் சொல்ல, மாத்திரைகள் கொடுப்பாங்க. அவசியத் தேவை இருந்தா மட்டும்தான் டாக்டர் பரிசோதனை செய்வார். தினமும் காலையில் முதல்ல கபசுரக் குடிநீர் கொடுப்பாங்க. காலை உணவுடன் ரெண்டு முட்டை, பிறகு ஒருமணிநேர இடைவெளியில் ஒரு பழம், ஹெர்பல் ஜூஸ், மதிய உணவுடன் ஒரு வாழைப்பழம், சாயந்திரம் டீயுடன் வேகவெச்ச ஏதாவதொரு தானியம் கொடுத்தாங்க. இரவு டிபனுக்குப் பிறகு, மஞ்சள், மிளகு கலந்த பால் தந்தாங்க.

பல நூறு பெண்களுக்குச் சில பாத்ரூம்கள்தான். அதனால அவ்வப்போது சலசலப்பு வரும். மத்தபடி நல்ல முறையில் கவனிச்சுகிட்டாங்க. என் உடல்நிலையும் குணமானது. இதுக்கிடையே, கணவரும் மகனும் பரிசோதனை செய்துகிட்டதில், கணவருக்கு மட்டும் லேசான அறிகுறியுடன் கொரோனா பாதிப்பு இருந்துச்சு. அவர் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக்கிட்டார்.

சிகிச்சைக்குப் பிறகு: நந்தம்பாக்கம் மையத்தில் பத்து நாள்கள் இருந்த நிலையில், வீடு திரும்பினேன். மகன் ஆசையா ஓடிவந்தாலும், என்னால அவனுக்கு பாதிப்பு வரக்கூடாதுன்னு கட்டிப்பிடிக்க முடியாம அழுதேன். கணவர், தனி ரூம்ல பாதுகாப்பா இருந்தார். பிறகு, கணவரும் குணமாக இப்போ மூவரும் இயல்பாக இருக்கோம். வீட்டுக்குள்ளேயும் மாஸ்க் பயன்படுத்தறோம். நான் வீடு திரும்பி ரெண்டு வாரம் ஆனாலும், மூவரும் முடிந்தவரையில் உடலளவில் விலகித்தான் இருக்கோம்.

இதுவரை வீட்டுக்குப் புதிய நபர்கள் யாரும் வரலை. வாசல்ல காய்கறிகள் விக்கிறவங்க வரும்போது நான் போனால், சிலர் பயத்துல விலகிப்போறாங்க. கஷ்டமா இருக்கு. கடைசியா போய்தான் காய்கறிகள் வாங்கறேன். கொரோனா பாதிப்பிலிருந்து நம்பிக்கையோடு மீண்டு வந்தாலும், இதுபோன்ற புறக்கணிப்புகள்தாம் வருத்தத்தை ஏற்படுத்துது. பாதிக்கப்பட்டவங்களுக்கு ஆறுதலா இல்லாவிட்டாலும், யாரையும் ஒதுக்க வேண்டாம்னு வேண்டுகோள் விடுக்கிறேன்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு