`கோவிட் உமன் வாரியர்ஸ் - ரியல் ஹீரோஸ்' - டெல்லியில் விருது வாங்கிய குன்னூர் அங்கன்வாடி ஆசிரியை!

கொரோனா காலத்தில் நாள்தோறும் 12 கி.மீ தொலைவு நடந்து சென்று ஊட்டச்சத்து உணவுகளை பழங்குடி மக்களுக்கு வழங்கிய குன்னுார் அங்கன்வாடி ஆசிரியைக்கு மத்திய அரசு விருது வழங்கி மரியாதை செய்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகில் உள்ள காட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் வெண்ணிலா. 40 வயதான இவர் கடந்த 3 ஆண்டுகளாகப் புதுக்காடு பழங்குடியின கிராமத்தின் அங்கன்வாடி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட கடுமையான முழு ஊரடங்குக் காலத்தில், வனத்தையொட்டிய பகுதிகளான புதுக்காடு, கீழ் சிங்காரா ஆகிய கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்களின் வீட்டுக்கே சென்று ஊட்டச்சத்து உணவுப் பொருள்களை வழங்கி வந்தவர். இதற்காக நாள்தோறும் 12 கி.மீ தொலைவை நடந்தே கடந்தவர்.
இது மட்டுமல்லாது ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருந்த இந்த மக்களின் கிராமத்திலேயே ஊட்ட உணவுகளைச் சமைத்து வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இந்தத் திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்திய அங்கன்வாடி ஊழியர்கள் குழுவில் வெண்ணிலாவும் இடம் பெற்றார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய பெண்களைக் கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு விருதுகளை வழங்கியது. சிறந்த சேவையாற்றிய வெண்ணிலாவைப் பாராட்டிய தேசிய மகளிர் ஆணையம் அவரை டெல்லிக்கு அழைத்து, `கோவிட் விமன் வாரியர்ஸ் - த ரியல் ஹீரோஸ் (Covid Women Warriors, the Real Heroes)' என்ற விருதை வழங்கியது. இந்த விருதை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா வழங்கினார். இப்போது வெண்ணிலாவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த விருது குறித்து நம்மிடம் பேசிய வெண்ணிலா, "கொரோனா காலத்தை மக்களுக்கு சேவை செய்ய கிடைச்ச ஒரு நல்ல வாய்ப்பா எடுத்துக்கிட்டேன். இந்த மக்களும் நம்ம மேல அவ்வளவு பாசமா இருப்பாங்க. எதையும் எதிர்பார்க்காம, எனக்குக் கொடுக்கப்பட்ட வேலைய உற்சாகமா செஞ்சேன்.

மக்களோட சந்தோஷம்தான் என்னோட சந்தோஷம். எனக்கு இப்போ இந்த விருது, பாராட்டு எல்லாம் கிடைச்சிருக்கிறது, இன்னும் என்னை சிறப்பா வேலை செய்ய வைக்கும்" என மகிழ்ச்சியான குரலில் தெரிவித்தார்.
வாழ்த்துகள்!