Published:Updated:

அழுத்தம் தரும் ஆதிக்க சாதியினர்; மகன் மீது பொய் புகார்; பெண் ஊராட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

கலெக்டரிடம் மனு கொடுத்த பெண் ஊராட்சித் தலைவர்
கலெக்டரிடம் மனு கொடுத்த பெண் ஊராட்சித் தலைவர்

``ஊராட்சிப் பணிகளை சுதந்திரமாகச் செயல்படுத்துவதற்கு உதவி செய்ய வேண்டும். ஆதிக்க சாதியினரால் எனக்கும் என் குடும்பத்துக்கும் உயிருக்கு ஆபத்து இருக்கிறது'' என்று தலித் பெண் ஊராட்சித் தலைவர் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சாவூர் அருகே தலித் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர், ஆதிக்க சாதியினர் தன்னை மக்கள் பணி செய்யவிடாமல் தொல்லை கொடுப்பதுடன், போலீஸார் உதவியுடன் தன் மகனை ரவுடி பட்டியலில் இணைந்துள்ளதாகவும், தான் சுதந்திரமாக ஊராட்சிப் பணிகளைச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டரிடம் மனு கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் மேல செம்மங்குடி ஊராட்சியின் பெண் ஊராட்சித் மன்றத் தலைவர், தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்திராணி பக்கிரிசாமி. அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாத ஆதிக்க சாதியினர், இந்திராணிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த இந்திராணி பக்கிரிசாமி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு கொடுத்துள்ளார்.

மனு கொடுத்த பெண் ஊராட்சி மன்றத் தலைவர்
மனு கொடுத்த பெண் ஊராட்சி மன்றத் தலைவர்
திருவள்ளூர்: `ஆட்சியர், எஸ்.பி முன்னிலை!’ - தேசியக் கொடியேற்றினார் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம்

இது குறித்து இந்திராணியிடம் பேசினோம். ``தலித் பெண் ஊராட்சித் தலைவராக நான் வெற்றி பெற்றுள்ளேன். இதை ஏற்க முடியாத ஆதிக்க சாதியினர் சிலர், தொடர்ச்சியாக என்னை செயல்பட விடாமல் தொல்லை கொடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் என்னையும், என் மகன் இளையராஜாவையும் ஆதிக்க சாதியினர் தாக்கினர்.

இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸாருக்கு அழுத்தம் கொடுத்து, பட்டதாரியான என் மகன் இளையராஜா மீது பொய் வழக்கு பதிய வைத்து ரவுடி பட்டியலில் இணைத்துள்ளனர். இதனால் என் மகனின் திருமணம் தடைபட்டுள்ளதுடன் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், எங்களது ஊராட்சிக்கு உட்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரின் பேரில், நானும் ஊராட்சிமன்றத் துணைத் தலைவரும் நேரில் விசாரிக்கச் சென்றபோது அங்கிருந்த ஆதிக்க சாதியினர் எங்களை வழிமறித்து விசாரிக்கக் கூடாது என மிரட்டினார்கள்.

ஊராட்சியின் வருமானத்தைப் பெருக்குவதற்காக ஊராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நோக்கில் நடவடிக்கை எடுத்தபோது, ஊராட்சிக்குச் சொந்தமான குளத்தை அறநிலையத் துறை ஆக்கிரமித்து தொடர்ந்து குத்தகைக்கு விட்டு வந்தது தெரியவந்தது.

கலெக்டரிடம் மனு கொடுத்த பெண் ஊராட்சித் தலைவர்
கலெக்டரிடம் மனு கொடுத்த பெண் ஊராட்சித் தலைவர்

இது தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் மனு அனுப்பி குளத்தை ஊராட்சி வசம் எடுப்பதற்கான நடவடிக்கை எடுத்த நிலையில், 26-ம் தேதி அறநிலையத்துறை குளத்தை ஏலம் விடப் போவதாக அறிவித்தனர். இதன் பின்னணியில் ஆதிக்க சாதியினர் உள்ளனர்.

ஊராட்சிப் பணிகளை சுதந்திரமாகச் செயல்படுத்துவதற்கு உதவி செய்ய வேண்டும். ஆதிக்க சாதியினரால் எனக்கும் என் குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து இருப்பதால் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும், இதுபோன்று தொடர்ச்சியாக ஊராட்சியில் எந்தவிதப் பணிகளும் நடைபெறாமல் தடுத்துத் தொல்லை கொடுத்து வருகிறார்கள். இதனால் எவ்வித மக்கள் நலப் பணியையும் என்னால் செய்ய முடியவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என்னை பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கி வருகின்றனர்'' எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு