Published:Updated:

சிறைவாசிகளுக்கு டான்ஸ் தெரபி... நடனக் கலைஞர் கிருத்திகாவின் அக்கறை!

கிருத்திகா ரவிச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
கிருத்திகா ரவிச்சந்திரன்

நடனக் கலைஞர் கிருத்திகாவின் அக்கறை!

சிறைவாசிகளுக்கு டான்ஸ் தெரபி... நடனக் கலைஞர் கிருத்திகாவின் அக்கறை!

நடனக் கலைஞர் கிருத்திகாவின் அக்கறை!

Published:Updated:
கிருத்திகா ரவிச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
கிருத்திகா ரவிச்சந்திரன்

புதுச்சேரி, காலாப்பட்டில் அமைந்திருக்கும் மத்திய சிறைச்சாலையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் இருக்கின்றனர். அவர்களில் 83 பேர் கொலை உள்ளிட்ட வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள். சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் அவர்களின் மன இறுக்கங்களை போக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரு கிறது சிறைத்துறை. அவற்றில் ஒன்றுதான், ஆயுள் தண்டனை சிறைவாசிகளுக்கான ‘டான்ஸ் தெரபி’.

‘ஸ்ரீஅரபிந்தோ சொசைட்டி’ என்ற தன்னார்வ அமைப்பு மற்றும் சிறைத்துறையுடன் இணைந்து இந்தப் பயிற்சியை கொடுத்து வருகிறார் கிருத்திகா ரவிச்சந்திரன். புதுச் சேரியைச் சேர்ந்த தேர்ந்த பரதநாட்டிய கலைஞரான இவர், கதிர்காமம் இந்திராகாந்தி அரசு பெண்கள் கலையியல் கல்லூரியில் கணினித்துறை துணைப் பேராசிரியை.

‘`புதுச்சேரி மத்திய சிறைச்சாலையை இந்திய அளவில் ஒரு முன்மாதிரி சிறையாக மாற்ற செயல்பட்டுவரும் சிறைத்துறை ஐ.ஜி-யாக இருக்கும் ரவிதீப் சிங் சாகர், ஆயுள் தண்டனை கைதிகளின் மன அழுத்தங்களை போக்க அவர்களுக்கு டான்ஸ் தெரபி கொடுக்க என்னை அணுகினார். சமூகத்தை விட்டு பல வருடங்களாக ஒதுங்கியிருக்கும், ஒதுக்கப்பட்டிருக்கும் கைதிகள் நடனத்தை எப்படி அணுகுவார்கள் என்ற ஆர்வத்துடன் தான் சிறைக்குள் சென்றேன். டான்ஸின் எந்த விதிகளையும் சாராமல் சிறைவாசிகளுக்கென்று தனியாக ஒரு டான்ஸ் அமைப்பை உருவாக்கி னேன்’’ என்று கூறும் கிருத்திகாவின் நடன வகுப்பைக் காண, சிறைத்துறையின் சிறப்பு அனுமதி பெற்று மத்திய சிறை வளாகத்துக்குள் இருக்கும் நடனக்கூடத்துக்குச் சென்றோம்.

கிருத்திகா சிறைவாசிகளுடன் நடனமாடி பயிற்சி கொடுக்க, அவர்கள் பள்ளி மாணவர் களைப் போல கேட்டுக் கொண்டிருந்தனர். ‘`இவர்களில் பலர் 10 முதல் 20 வருடங்களாக சிறைக்குள் இருக்கும் ஆயுள் தண்டனை சிறை வாசிகள்’’ என்று அறிமுகப்படுத்திய கிருத்திகா, வெளிநாடுகளில் நடன நிகழ்ச்சிகளை நடத்தி யிருக்கிறார். தனது `நாட்டிய சக்ரா’ நடனப் பள்ளி மூலம் பொருளாதார வசதியற்ற குழந்தைகளுக்கு அரங்கேற்றம் வரை இலவசப் பயிற்சி வழங்குகிறார்.

சிறைவாசிகளுக்கு டான்ஸ் தெரபி... நடனக் கலைஞர் கிருத்திகாவின் அக்கறை!

‘`முதல் நாள் வகுப்பின்போது, `மாமா… இவங்க நமக்கு பரதநாட்டியம் கத்துக்குடுக்கப் போறாங்களாம்' என்று சிரித்தவர்கள் மத்தி யில் ஐந்து பேர் மட்டுமே ஆர்வத்துடன் கைதூக்கினார்கள். ஆனால், அடுத்தடுத்த நாள்களில் இன்னும் பலர் ஆர்வத்துடன் வந்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். பொதுவாக மனம் தன் கட்டுப்பாட்டை இழக்கும் நொடியில் செய்யப்படும் குற்றங்கள் பல. நடனம் மூலம் மனமும் உடலும் ஆற்றுப் படுத்தப்படும், கட்டுப்படுத்தலுக்குப் பழக்கப்படும். வகுப்புகள் செல்லச் செல்ல அந்த மாற்றத்தை அவர்களிடம் என்னால் உணர முடிந்தது’’ என்றவர், சிறைவாசிகளின் ஆர்வம் இதில் எந்தளவுக்கு அதிகரித்தது என்று பகிர்ந்தார்.

‘`தினமும் காலையில் 7.15 மணி முதல் 8.45 வரை ஒன்றரை மணி நேரம் அவர்களுக்கு டான்ஸ் பயிற்சி நடக்கும். இன்னொரு பக்கம், 7 மணி முதல் 7.30 மணி காலை உணவு நேரம் என்பதால், உணவை வாங்கி வைத்துவிட்டு வந்து, பயிற்சியை முடித்துவிட்டு, பிறகு போய் சாப்பிடுவார்கள். இந்த மாற்றம்தான் கலை யின் வெற்றி. சூழ்நிலை காரணமாக குற்றம் செய்தவர்களாக இருந்தாலும், தங்கள் குடும் பத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் பாசமும், பொறுப்புணர்வும்தான் அவர்கள் திருந்தி வாழ்வதற்கும், குற்றங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும் உதவி செய்கிறது. அதில் சிலர், தங்களின் பெண் குழந்தைகளுக்கு நடனம் சொல்லித்தர முடியுமா என்று தயங்கித் தயங்கி கேட்டார்கள். அவர்களின் குழந்தை களுக்கு என் நடனப் பள்ளியில் இப்போது இலவசப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக் கிறேன். இங்கிருக்கும் பெரும்பாலானவர்கள் பரோலில் வரும்போது, குடும்பத்துடன் என் நாட்டியக்கூடத்துக்கு வந்து செல்கிறார்கள். அவர்களின் குழந்தைகளுடன் ஒன்றாக டான்ஸ் ஆடுகிறார்கள். கலைக்கு கிடைத்த கௌரவமாகவே இதைப் பார்க்கிறேன்” என்றார் புன்னகையுடன்.

சிறைவாசிகளிடம் பேசினோம். ‘`ரொம்ப வருஷமா ஜெயில்லயே இருக்கிறதால எங்க மனசுக்குள்ள நிறைய கஷ்டங்களும், வலிகளும் இருக்கு. அந்த இறுக்கத்தை எல்லாம் இந்த டான்ஸ் தளர்த்தியிருக்கு. எப்போ விடியும், எப்போ டான்ஸ் கிளாஸுக்கு போகலாம்னு நினைச்சிக்கிட்டேதான் தூங்குறோம். ஒவ் வொரு நாளும் டான்ஸ் ஆடிட்டுப் போகும் போது மனசு அவ்வளவு அமைதியாகுது, லேசாகுது. எங்க சொந்தக்காரங்ககூட எங்க கிட்ட பேச தயங்கும்போது, கிருத்திகா மேடம் எங்களுக்கு இவ்ளோ செய்யுறது நெகிழ்ச்சியா இருக்கு'’ என்றனர் நன்றியுடன்.

மாற்றங்கள் மலரட்டும் மனிதநேயத்துடன்!

*****

சிறைவாசிகளுக்கு டான்ஸ் தெரபி... நடனக் கலைஞர் கிருத்திகாவின் அக்கறை!

இந்தியாவில் முதல்முறை!

சிறைத்துறை ஐ.ஜி ரவிதீப் சிங் சாகரிடம் பேசினோம். “சிறைவாசி களின் உடல் மற்றும் மனநல முன்னேற்றத்துக்கான பல்வேறு பயிற்சிகளைக் கொடுத்து வருகி றோம். அந்தப் பயிற்சிகள் அவர் களது தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், விடுதலையாகும்போது அவர்களின் மறுவாழ்வுக்கும் பயன்படுகின்றன. டான்ஸ் தெரபியை பொறுத்தவரை சிறைவாசி களுக்கு நல்ல உடற்பயிற்சியாக இருப்பதுடன், அவர்களின் மன அழுத்தங்களையும் போக்கு கிறது. மேலும் அவர்களின் தனிமையை விரட்டு வதற்கும், அனைவரிடமும் இயல்பாக பழகு வதற்கும் உதவுகிறது. ஆரம்பத்தில் தயக்கம் காட்டியவர்கள், கிருத்திகாவின் முயற்சியால் இப்போது மகிழ்ச்சியுடன் கலந்துகொள்கின்றனர். சிறைவாசிகள் சிறையில் வளர்த்துக்கொண்ட திறமைகளை ‘ஜெயில் மஹோத்சவ்’ என்ற பெயரில் அவர்களின் குடும்பத்தினர் முன்னிலையில் வெளிப் படுத்தும் நிகழ்ச்சியை நடத்தினோம். இந்தியாவில் இங்குதான் அது முதல்முறை!” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism