Published:Updated:

`ஊர்க்காரங்களிட்ட நியாயம் கேட்டேன்; கொள்ளிபோடச் சொன்னாங்க!’- தாய்க்கு இறுதிச் சடங்கு செய்த மைக்கண்ணி

சமூகத்தில் சடங்கு, சம்பிரதாயம் என வரும்போது பெண்கள் ஓரங்கட்டப் பட்டுவிடுகிறார்கள். ஆனால், அதையும் துணிவோடு எதிர்கொண்டிருக்கிறார்.

வேலூரில் தாய்க்கு ஈமச் சடங்கு செய்த மகள்
வேலூரில் தாய்க்கு ஈமச் சடங்கு செய்த மகள்

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகேயுள்ள ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாகன் - அஞ்சனாதேவி தம்பதி. இவர்களுக்கு மைக்கண்ணி, பாப்பத்தி, காந்தா என்ற மூன்று பெண்குழந்தைகள். குடும்பத் தலைவர் நாகன் பல வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட, ஒற்றைப் பெண்மணியாக மூன்று மகள்களை வளர்த்து கரையேற்றினார். முதுமை காரணமாக கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, அஞ்சனாதேவி இறந்துவிட்டார். ஆண்வாரிசு இல்லாததால் அவருக்கு இறுதிச் சடங்கு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தன் தாய்க்குத்தானே இறுதிச் சடங்கு செய்வேன் என்று முடிவெடுத்து, அதைச் செய்தும் காட்டியுள்ளார் மூத்த மகள் மைக்கண்ணி.

`ஊர்க்காரங்களிட்ட நியாயம் கேட்டேன்; கொள்ளிபோடச் சொன்னாங்க!’- தாய்க்கு இறுதிச் சடங்கு செய்த மைக்கண்ணி

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. மைக்கண்ணியுடன் பேசினேன். "ஆண்வாரிசு இல்லாத குடும்பம் என்பதால் உங்களுக்கு கொள்ளிபோடக் கூட ஆள் இல்லைனு சில பேர் சொல்லி வருத்தப்படச் செய்வாங்க. எங்க அப்பா இறந்தப்ப கொள்ளிபோட பங்காளிங்க சண்டை போட்டாங்க. வேண்டா வெறுப்பாத்தான் இறுதிச் சடங்கைச் செஞ்சாங்க. நம்ம வீட்டுல ஆண் பிள்ளை இல்லையேனு நாங்களும் அமைதியா இருந்துட்டோம். அம்மா இறந்ததுமே, நான்தான் கொள்ளிபோடறதுன்னு முடிவு பண்ணிட்டேன். என் தங்கச்சிகளும் இதுதான் சரின்னு சொன்னாங்க. ஆனா, பங்காளிங்க, சொந்தபந்தத்துல உள்ள ஆம்பளைங்க எல்லாம் இதை ஏத்துக்கல.

பங்காளிப் பசங்க மீண்டும் சண்டைக்கு வந்தாங்க. நான் ஊர்க்காரங்களிட்ட நியாயம் கேட்டேன். எல்லாத்தையும் கேட்டுட்டு, என்னையே கொள்ளிபோடச் சொன்னாங்க. அதனால், பங்காளிப் பசங்க சுடுகாட்டுக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. இதையெல்லாம் பார்த்தா முடியுமான்னு நானே அம்மாவுக்கான இறுதிச் சடங்கைச் செஞ்சேன். பாசமா வளர்த்த அம்மாவுக்கு நான் கொள்ளி வெச்சா என்னா குத்தம்?" என்கிறார் மைக்கண்ணி.