Published:Updated:

“எனக்கு 113 குழந்தைங்க!” - அன்பே உருவான ஆசிரியை கிறிஸ்டினா

கிறிஸ்டினா
பிரீமியம் ஸ்டோரி
கிறிஸ்டினா

ஆசான்

“எனக்கு 113 குழந்தைங்க!” - அன்பே உருவான ஆசிரியை கிறிஸ்டினா

ஆசான்

Published:Updated:
கிறிஸ்டினா
பிரீமியம் ஸ்டோரி
கிறிஸ்டினா

“ஊசிமணி பாசிமணி விக்கிறவங்க பிள்ளைங்க இவங்க. நல்ல கல்வி கிடைச்சுட்டா, எல்லாம் மாறிடும்ல” என்று நம்பிக்கையுடன் பேச்சை ஆரம்பிக்கிறார் செல்வி கிறிஸ்டினா.

கரூர், சி.எஸ்.ஐ அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிறிஸ்டினா. கற்பித்தல் பணியுடன் பல சேவைகளையும் செய்துவருகிறார். குறிப்பாக, வேட்டைக்காரன்புதூர் அரசுக் காலனியில் வசிக்கும் 123 நாடோடி இனக் குடும்பங்களுக்கு ஆலமரமாக இருக்கிறார். தன் வாழ்வையே சேவையாக அமைத்துக்கொண்ட கிறிஸ்டினா, அதற்காகவே திருமணத்தையும் தவிர்த்துவிட்டார். கிறிஸ்டினாவிடம் பேசினோம்.

“அப்பா, அம்மா ரெண்டு பேரும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள். என்னையும் சேர்த்து வீட்டுல ஆறு பிள்ளைங்க. நான் பி.எஸ்ஸி, எம்.ஏ, பி.எட் முடிச்சேன். எம்.ஏ சோஷியாலஜி படிச்சதுக்குக் காரணமே, என்னோட சேவை நோக்கம்தான்.

கிறிஸ்டினா
கிறிஸ்டினா

1988-ம் ஆண்டு, கரூர் சி.எஸ்.ஐ பெண்கள் உயர்நிலைப்பள்ளியில தற்காலிக ஆசிரியையா சேர்ந்தேன். 1997-ம் ஆண்டு மணப்பாறை தூய அந்துரேய ஆரம்பப்பள்ளியில இடைநிலை ஆசிரியரா என்னை நிரந்தரப் பணியில அமர்த்து னாங்க. சில நிர்வாகக் காரணங்களால இடையில் எனக்கு சில வருஷங்கள் சம்பளம் வராமல் இருந்தப்போ, கரூர்லயிருந்து மணப்பாறைக்கு தினமும் போய்வரக்கூட காசிருக்காது. ஆனா, என் நிலைமையைப் பார்த்துட்டு, அரசு, தனியார் பஸ் நடத்துநர்களே, அவங்க காசுல எனக்கு டிக்கெட் தருவாங்க. எனக்குக் காசு கிடைக்கும்போது அதைத் திருப்பித் தருவேன்.

உதவி செய்றதோட ஆழமும் அழகும் அப்போதான் எனக்குப் புரிஞ்சது. ஆசிரியர் பணியில இருக்கிற நானும், என் மாணவர்களுக்கு எல்லாம் உதவுற ஏணியா இருக்கணும்னு நினைச்சேன். அதுக்காகவே திருமணமே பண்ணிக்க வேண்டாம்னு தீர்க்கமா முடிவெடுத்தேன்’’ என்பவர், 2015-ம் வருடம் கரூர் சி.எஸ்.ஐ அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராகியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ஜெயபால்,  ரெஜினா
ஜெயபால், ரெஜினா

‘`2004-ம் வருஷம் இந்தப் பள்ளிக்கு ஆசிரியரா வந்தப்போ, ஹெச்ஐவி பாசிட்டிவ் காரணமாக பாதிக்கப் பட்ட பெற்றோர்களின் பிள்ளைகளை, மத்த பள்ளிகளில் சேர்க்காமல் விரட்டியடிப்பதைக் கேள்விப்பட்டேன். உடனே, அவங்களை தேடிப்போய் 13 பிள்ளைகளை எங்க பள்ளியில சேர்த்துக்கிட்டேன். இதைக் கேள்விப்பட்ட அப்போதைய கலெக்டர் உமாமகேஸ்வரி மேடம், என்னை அழைத்துப் பாராட்டினாங்க’’ என்பவர் தொடர்ந்து, நடக்க முடியாத மற்றும் விழிச்சவால் மாற்றுத்திறனாளிகள், மூளைவளர்ச்சி குன்றிய குழந்தைகள் என

14 பிள்ளைகளை தன் பள்ளியில் சேர்த்திருக்கிறார். அவர்களுக்குப் பாடங்கள் நடத்த தன் நேரத்தை கூடுதலாக ஒதுக்கியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வேட்டைக்காரன்புதூரில் கிறிஸ்டினா செய்துவரும் முன்னெடுப்புகள் பற்றி, நாடோடி மக்கள் குழுவின் பிரதிநிதி ஜெயபால், ‘‘கிறிஸ்டினா மேடம் எங்க மக்கள்கிட்ட தொடர்ந்து பேசி, எங்க குழந்தைகளை அவங்க பள்ளியில சேர்த்துப் படிக்கவெச்சாங்க. அதேபோல, ராயனூர் இலங்கை அகதிகள் முகாம்ல உள்ள பிள்ளைகளையும் அவங்க பள்ளியில சேரவெச்சாங்க. சில பிள்ளைங்க பள்ளிக்கூடத்துக்கு தலையைக்கூட படிய வாராம போயிடுவாங்க. அவங்களுக்கு எல்லாம் கிறிஸ்டினா மேடமே எண்ணெய் வெச்சு தலைவாரிவிடுவதை எங்க பிள்ளைங்கள்லாம் எங்ககிட்ட வந்து சொல்லுங்க. அதேபோல, முடிவெட்டாம போகும் மாணவர்களுக்கு, பள்ளி முடிஞ்ச மாலை நேரத்துல மேடமே முடிவெட்டி விடுவாங்க. இதுக்காகவே சலூன் பொருள்களை எல்லாம் வாங்கி பள்ளிக்கூடத்துல வெச்சிருக்காங்க’’ என்றார் நன்றியுடன்.

“எனக்கு 113 குழந்தைங்க!” - அன்பே உருவான ஆசிரியை கிறிஸ்டினா

‘’இன்னும் நிறைய இருக்கு கிறிஸ்டினா மேடம் செய்ற நல்ல விஷயங்கள்’’ என்று ஆரம்பித்தார், பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ரெஜினா ஹெப்ஸிபாய்... ‘‘பள்ளிக்குக் காலையில சாப்பிடாம வந்த ஒரு பையன், ஒருநாள் வகுப்பறையில மயங்கி விழுந்துட்டான். அன்னியில இருந்து ‘காலை உணவுத் திட்டம்’ என்ற பெயர்ல, சாப்பிடாம வர்ற மாணவர்களுக்கு டிபன் வாங்கித் தந்துட்டு இருக்காங்க கிறிஸ்டினா மேடம்’’ என்கிறார் ரெஜினா.

மாணவர்களுக்குக் காய்ச்சல், தலைவலி என்றால் மருத்துவச் செலவு செய்வது, பள்ளியில் படிக்கும் 14 சிறப்புக் குழந்தைகளுக்கு, மாதாமாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை தருவது, அந்தக் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள மற்றும் பாடம் நடத்த ரூ.4,000 சம்பளத்தில் பிரியா என்ற ஆசிரியரை நியமித்திருப்பது இவற்றையெல்லாம் தன் சொந்த செலவில் செய்துவருகிறார் கிறிஸ்டினா. மேலும், பள்ளி வளாகத்தில் மாணவர்களை 64 மரக் கன்றுகளை நட வைத்திருப்பது, அவற்றுடன் மூலிகைச்செடிகளையும் நட்டுப் பராமரிக்க வைத்திருப்பது என, கிறிஸ்டினாவின் ஒவ்வொரு முயற்சியும் பாராட்டுக்குரியது. 2018-ம் வருடம், சிறந்த ஆசிரியருக்கான தமிழக அரசின் ராதாகிருஷ்ணன் விருதைப் பெற்றிருக்கிறார் கிறிஸ்டினா.

‘`கொரோனா லாக்டௌன்ல என் ஏப்ரல், மே மாத சம்பளமான 1,60,000 ரூபாயை, மக்களுக்கு உதவ கலெக்டர் சார்கிட்ட கொடுத்தேன். ‘நீங்களே நேரடியா உதவுங்களேன்’னு சொன்னார். அந்தப் பணத்துல நாடோடியின மக்களுக்கும் ராயனூர் இலங்கை அகதிகள் முகாம் மக்களுக்கும் என்னாலான உதவிகளைச் செய்ய நினைச்சேன். வேட்டைக்காரன் புதூர்லயிருந்து 22 நாடோடியின மாணவர்கள் எங்க பள்ளியில படிக்கிறாங்க. அங்கயிருக்கிற 75 குடும்பங்களுக்கு ரெண்டு மாசத்துக்குத் தேவையான அரிசி, மளிகை சாமான்களை வாங்கிக் கொடுத்தேன். ராயனூர் அகதிகள் முகாம்ல உள்ள 20 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கினேன்’’ என்று சொல்லும் கிறிஸ்டினாவுக்கு வயது 53.

‘`பணி ஓய்வுக்குப் பிறகும் இந்த மக்களை நான் பார்த்துக்குவேன். ‘கல்யாணம் பண்ணிக்காம வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிட்டியே’னு நிறைய பேரு என்கிட்ட வருத்தமா கேட்பாங்க. திருமணம் பண்ணியிருந்தா ஒண்ணு, ரெண்டு பிள்ளைகளுக்குத்தான் அம்மாவா இருந்திருப் பேன். இப்போ என் பள்ளியில் படிக்கிற 113 மாணவர்களுக்கும் நான் அம்மா. என் பிள்ளைங்களுக்காக வாழ்றதுல இந்த வாழ்க்கை முழுமையடைவதா உணர்றேன்’’

- உள்ளத்திலிருந்து சொன்னார் கிறிஸ்டினா.

“எனக்கு 113 குழந்தைங்க!” - அன்பே உருவான ஆசிரியை கிறிஸ்டினா

சொந்தப் பணத்தில் 12,000

ட்டோ டிரைவர் தமிழ், ‘`நாடோடியின மாணவர்களும், ராயனூர் இலங்கை அகதிகள் முகாம்ல உள்ள மாணவர்களும் பள்ளிக்கூடத்துக்கு வந்து போக சிரமப்பட்டாங்க. கிறிஸ்டினா மேடம் என்னை நியமிச்சு, தினமும் அவங்களையெல்லாம் ஆட்டோவுல பள்ளிக்குக் கூட்டிக்கிட்டு வரவும், பள்ளி முடிஞ்சதும் வீட்டுல கொண்டுபோய் விடவும் சொல்லியிருக்காங்க. இதுக்காக அவங்க சொந்தப் பணத்துல மாசம் எனக்கு 12,000 ரூபாய் தர்றாங்க’’ என்றார்.

உணவுக்கு வழி!

நாடோடியினப் பெண் சுமதி, ‘`வாரத்துல ரெண்டு நாள் எங்க மக்கள் 100 பேருக்கு உணவு வாங்கித் தர்றாங்க கிறிஸ்டினா மேடம். லாக்டௌன், காசு இல்லைனு முடிவெட்டாம திரிஞ்ச எங்க பசங்களை எல்லாம் உட்கார வெச்சு முடிவெட்டிவிட்டாங்க. இங்க இருக்குற 123 குடும்பங்களுக்கும் கத்திரி, புடலை, வெண்டை, வெங்காயம், அவரை, தக்காளினு 40 வகையான நாட்டுக்காய்கறி விதைகளைக் கொடுத்து, எங்க வீடுகள்ல காய்கறித் தோட்டம் போடவெச்சாங்க.

“எனக்கு 113 குழந்தைங்க!” - அன்பே உருவான ஆசிரியை கிறிஸ்டினா

10 நாளுக்கு ஒருதடவை வந்து, எங்க தோட்டத்தைப் பார்த்து, பராமரிப்பு டிப்ஸும், முதல்ல காய்கறி அறுவடை செய்றவங்களுக்குப் பரிசும் கொடுத்து ஊக்கப்படுத்துறாங்க. ரேஷன் அரிசி இருக்கு. காய்கறிங்க எல்லாம் விளைய ஆரம்பிச்சுட்டா, எங்க சாப்பாட்டுக் கவலை ஓரளவு தீரும்’’ என்றார்.

‘`இந்த வீட்டுத் தோட்ட முயற்சிக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு சாரும், அமெரிக்காவில் பணிபுரியும் நரேந்திரன் கந்தசாமி என்ற இளைஞரும் உதவி பண்ணினாங்க. நாடோடியின மக்களின் பிரதிநிதி ஜெயபால் ஒத்தாசையா இருந்தார்’’ என்று நன்றி தெரிவித்தார் கிறிஸ்டினா.