Published:Updated:

காக்கிக்குள் கருணை... சல்யூட் அல்லிராணி சபாஷ் மகாலட்சுமி!

 அல்லிராணி
பிரீமியம் ஸ்டோரி
அல்லிராணி

சேவையுள்ளம்

காக்கிக்குள் கருணை... சல்யூட் அல்லிராணி சபாஷ் மகாலட்சுமி!

சேவையுள்ளம்

Published:Updated:
 அல்லிராணி
பிரீமியம் ஸ்டோரி
அல்லிராணி
‘காவல்துறை உங்கள் நண்பன்’ - மக்களின் இந்த நம்பிக்கை சாத்தான்குளம் சம்பவங்கள் போன்றவற்றால் அவ்வப்போது தகர்வதுண்டு. அதற்காக ஒட்டுமொத்த காவல்துறையையும் களங்கப்படுத்த முடியாது. இதுபோன்ற சம்பவங்களால் காக்கியில் படிகிற கறையைத் துடைப்பதாக இருக்கின்றன சில காவலர்களின் மனிதநேயச் செயல்கள். சொல்லப்போனால், அதே சாத்தன்குளம் காவல்நிலைய தலைமைக்காவலர் ரேவதியே இதற்கு சிறந்த முன்மாதிரி. அந்தவகையில் கடந்த சில நாள்களில் கவனம்ஈர்த்த பெண் காவலர்கள் சிலரிடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரச்னைகளோடு வர்றவங்களை உறவுகளாகப் பார்க்கிறேன்!

மின்சாரம் தாக்கி உடல் கருகி உயிரிழந்து கிடந்தவரின் சடலத்தை, கொரோனா பயத்தின் காரணமாக உறவினர்களே தூக்குவதற்கு முன்வராத நிலையில், சடலத்தைத் தூக்கி மருத்துவமனைக்கு அனுப்பிய தெள்ளார் காவல் நிலையப் பெண் ஆய்வாளர் அல்லிராணிக்கு, சல்யூட் வைத்திருக்கிறார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்.

கடந்த சுதந்திர தினத்தன்று, மாவட்ட காவல்துறை ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, கொரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய 78 களப்பணியாளர்களுக்குப் பதக்கங்களையும் பாராட்டுகளையும் வழங்கினார். இன்ஸ்பெக்டர் அல்லிராணிக்குச் சான்றிதழ் மற்றும் கேடயத்தை வழங்கியபோது, மாவட்ட ஆட்சியர் நிற்கும் இடத்தில் அல்லிராணியை நிறுத்திய கந்தசாமி, யாரும் எதிர்பாராத விதமாகக் கீழே இறங்கி அவருக்கு சல்யூட் அடித்த காட்சி, சிறப்பு.

அல்லிராணியிடம் பேசினோம். “என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத, ஆனந்தக் கண்ணீரில் நனைந்த தருணம் அது’’ என்றவர், குறிப்பிட்ட சம்பவத்தைப் பற்றிப் பகிர்ந்தார். ‘`வந்தவாசிக்குப் பக்கத்துல இருக்கிற நாவல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி அமாவாசை. மே மாதம் 14-ம் தேதி, ஏரிப்பட்டுக் கிராமத்தைச் சேர்ந்த சுதாகரோட கரும்புத் தோட்டத்தின் வழியே போயிருக்கார். அப்போ எலிக்காக வைக்கப்பட்டிருந்த கரன்ட் கம்பியில சிக்கி இறந்துவிட்டார்.

 அல்லிராணி
அல்லிராணி

நைட் ரவுண்ட்ஸ் முடிச்சிட்டு நல்லா தூங்கிக்கிட்டிருந்தப்போ காலையில 6.15 மணிக்கு, `கரும்புக் காட்டுல ஒரு டெட்பாடி கெடக்குது’னு வி.ஏ.ஓ போன் பண்ணினார். டிரைவரை கூட்டிக்கிட்டு அங்க போயிட்டேன். கரும்புக் காட்டின் உரிமையாளர், ‘காட்டை சுத்திப்பாக்க வரும்போது டெட்பாடியைப் பார்த்தேன்’னு சொன்னார். வரப்பில் நடந்து போனவருக்கு, பல அடி தூரம் தள்ளி, கரும்புக் காட்டுக்குள்ள இறந்து கிடந்தவர் எப்படித் தெரிஞ்சார்னு சந்தேகம் வந்தது.

ஏதாவது தடயம் கிடைக்குமான்னு உடலை ஆய்வு செய்தேன். உடலின் பின்புறத்திலும், அவர் அணிந்திருந்த பேன்ட்டிலும் கருகின ஸ்மெல் வந்துச்சு. தரையில் இருந்த புல்லும் கருகிப் போயிருந்தது. சந்தேகத்துல இடத்து உரிமையாளரை விசாரிச்சப்போதான், எலிக்காக கரன்ட் கம்பி வெச்சதை ஒப்புக்கிட்டார். அமாவாசை செத்துப்போய் கிடந்ததைப் பார்த்ததும், கரன்ட் கம்பியை எடுத்து வீட்டுல மறைச்சு வெச்சுட்டு, எதுவும் தெரியாததுபோல தகவல் சொல்லியிருக்கார். அவரைக் கைது செய்தோம்.

அமாவாசையோட சொந்தக்காரங் களெல்லாம் ஸ்பாட்டுக்கு வந்துட்டாங்க. நிறைய இளைஞர்கள் சுத்தியிருந்தாங்க. ஆனா, உடலைத் தூக்க யாரும் முன்வரல. கொரோனா பயத்தால அவரின் அக்கா, அண்ணன், தம்பிகூட தூரத்துல நின்னுக்கிட்டு, என்னையும் ‘தொடாதீங்க’னு கத்தினாங்க. அப்புறம் நான் ஆட்டோ டிரைவர் உதவியோடு உடலைத் தூக்கி, மருத்துவமனைக்கு அனுப்பிவெச்சேன்.

என் வீட்டுக்காரர் ஆரணி ஸ்டேஷன்ல தலைமைக் காவலரா இருக்கார். ஆட்சியர் சல்யூட் அடிச்சதை டி.வி-யில பார்த்தவர், ஆனந்தக் கண்ணீரோடு என்கிட்ட பேசினார். அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, தங்கச்சினு கூட்டுக்குடும்பமா வளர்ந்தவ நான். அதனால பிரச்னைகளோடு என்கிட்ட வர்றவங்களை நான் உறவுகளாகப் பார்க்கிறேன். சடலத்தைத் தூக்கினது பெரிய விஷயம் இல்ல. மக்கள்தான் எனக்கு சம்பளம் கொடுக்கிறாங்க. அவங்களுக்கு வேலைசெய்யத்தான் நான் இருக்கேன்!”

- மனதிலிருந்து சொன்ன அல்லிராணிக்கு நாமும் வைப்போம் சல்யூட்.

மக்களுக்கு உதவுறதுதானே எங்க வேலையே!

சென்னையில் தனியாக வசித்துவந்த 80 வயதுப் பெண் வசந்தா. ஊரடங்குக் காலத்தில் தனியாக இருக்க முடியாமலும், ஹைதரா பாத்தில் உள்ள மகள் வீட்டுக்குச் செல்லமுடியாமலும் தத்தளித்துக் கொண்டிருந்தார். கொரோனா காலத்தில் யாரிடம் உதவி கேட்பதென்று மகளுக்கும் புரியவில்லை.

இந்த இக்கட்டான சூழலில், நம்பிக்கையுடன் மாம்பலம் காவல்நிலையத்தைத் தொடர்புகொண்டு உதவி கேட்டிருக்கிறார். இதையடுத்து, வசந்தாவின் வீட்டுக்கு நேரில் சென்ற காவலர் மகாலெட்சுமி, வசந்தா ஏர்போர்ட்டுக்குச் செல்வதற்குத் தன் சொந்தச் செலவில் கார் ஏற்பாடு செய்தது மட்டுமல்லாமல் ஏர்போர்ட்வரை சென்று ஹைதராபாத்துக்கு வழியனுப்பி வைத்தார். வசந்தாவின் மகள் சமூக வலைதளத்தில் இதைப் பகிர, அது வைரலாகி மகாலெட்சுமிக்குப் பாராட்டுகள் குவிந்தன. மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் மகாலெட்சுமியை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டியுள்ளார். வாழ்த்துச் சொல்லி மகாலெட்சுமியிடம் பேசினோம்,

 மகாலெட்சுமி
மகாலெட்சுமி

“அவங்க பொண்ணுக்கிட்ட இருந்து எங்க ஸ்டேஷனுக்கு கால் வந்த விஷயத்தைச் சொல்லி விசாரிக்கச் சொன்னாங்க. நேரில் போனப்ப அந்தம்மாவ பார்க்கவே பரிதாபமா இருந்துச்சு. வெளியூர்ல இருக்கிற அவங்களோட ரெண்டு பொண்ணுங்களும் மகனும் தங்களோட வரச்சொல்லி ரொம்பநாளா வற்புறுத்தியும், ‘என் வீட்டுக்காரர் வாழ்ந்த வீட்டைவிட்டு வர மாட்டேன்’னு தனியாவே இருந்திருக்காங்க. மூணுபேரும் அப்பப்போ

வந்து அம்மாவைப் பார்த்துட்டுப் போவாங் களாம். ஊரடங்கு போட்ட பிறகு யாராலயும் வர முடியலை. அதுல இவங்களுக்கு மன உளைச்சல் அதிகமாயிடுச்சு.

ஹைதராபாத்தில் உள்ள பொண்ணு ஃப்ளைட் டிக்கெட் போட்டும் ஏர் போர்ட்டுக்குப் போறதுக்கு வழியில்லை. நானே கார் ஏற்பாடு பண்ணி கொண்டுபோய் விட்டுட்டு வந்தேன். ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் `உனக்கு என்ன வேணும்மா'ன்னு கேட்டாங்க. ‘உங்க ஆசீர்வாதம் போதும்’னு சொன்னதும் நெகிழ்ந்துட்டாங்க. இனிமேல் ஏதாவது உதவின்னா உங்களைத்தான் கூப்பிடுவோம்னு அவங்க பொண்ணும் உரிமையோட சொன்னாங்க. மக்களுக்கு உதவுறதுதானே எங்களுடைய வேலையே” என்றார் பொறுப்பான போலீஸாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism