Published:Updated:

``அம்மாவுடன் முதன்முதலாக வீடியோ காலில் பேசிய அந்த கணம்...” - டென்மார்க் டேவிட் #VikatanFollowUp

"நீங்கள் எல்லோரும் இல்லையென்றால், நான் என் அம்மாவைக் கண்டுபிடித்திருக்க வாய்ப்பே இல்லை!" - தாயின் முகத்தை வீடியோ காலில் பார்த்த சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார் டென்மார்க் இளைஞர் டேவிட் சாந்தகுமார்.

David Santhakumar with mother Dhanalakshmi
David Santhakumar with mother Dhanalakshmi

39 வருடங்களுக்கு முன்பு...

டேவிட் சாந்தகுமார் வளர்ந்தது டென்மார்க் நாட்டில்; பிறந்தது தமிழகத்தில்... தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை, சின்னக்கடைத் தெருதான் இவரின் பூர்வீகம். தந்தை கலியமூர்த்தி. தாய் தனலட்சுமி. 40 வருடங்களுக்கு முன்பு, வறுமை காரணமாக இவரின் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது.

அம்மாவின் புகைப்படத்துடன்  சாந்தகுமார்
அம்மாவின் புகைப்படத்துடன் சாந்தகுமார்

வறுமை காரணமாக தாய் தனலட்சுமி, வீட்டுவேலைகள் செய்து தன் குழந்தைகளான சாந்தகுமார் மற்றும் ராஜன் ஆகியோரை காப்பாற்றி வந்தார். வேலைக்குச் செல்வதால் குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்த இயலாத நிலையில் அவர்களை, சென்னை, பல்லாவரத்தில் இருந்த ஒரு தொண்டு நிறுவன விடுதியில் சேர்த்துவிட்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு பிள்ளைகளைப் பார்க்கப்போனபோதுதான், தனலட்சுமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரின் இரண்டு மகன்களை தந்தை கலியமூர்த்தி சம்மதத்துடன் டென்மார்க் நாட்டுக்கு தத்துக் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. அதன்பிறகு, குழந்தைகள் ஏக்கத்தில் வாழ்ந்த அவர், குடியிருந்த வீட்டை காலிசெய்தார்.

தாயைத் தேடிய மகன்…

அப்போது சாந்தகுமாருக்கு 1½ வயது. டென்மார்க் நாட்டில் தத்துக்கொடுக்கப்பட்ட அவர், அங்கு டானிஸ் தம்பதியால் டேவிட் கில்டென்டல் நெல்சன் என்கிற பெயரில் வளர்க்கப்பட்டார். படித்து ஆளான டேவிட் சாந்தகுமார், தற்போது டென்மார்க் நாட்டில் உள்ள வங்கியில் பணியாற்றுகிறார். அவரின் மனைவி அந்நாட்டு அரசுப்பள்ளி ஆசிரியை. இரட்டைக் குழந்தைகள். நல்ல வேலை. கை நிறைய சம்பளம்.

ஆனாலும் தான் பிரிந்த ஏக்கம் தாளமுடியவில்லை. அதன் விளைவாக, கடந்த 2013-ம் ஆண்டு முதல் தனக்கு விடுமுறை கிடைக்கும்போதெல்லாம், தமிழகம் வந்து தாயை தேடி அலைந்தார். அந்த வகையில் கடந்த மாதம் 24-ம் தேதி தமிழகம் வந்த அவர், தஞ்சாவூரில் அவரது தாயைத் தேடினார்.

சாந்தகுமார் மனைவி மற்றும் குழந்தைகள்
சாந்தகுமார் மனைவி மற்றும் குழந்தைகள்

நீண்ட போராட்டத்தின் விளைவாக, டேவிட் சாந்தகுமாரின் தாய் தனலட்சுமி சென்னை மணலி அருகே தன் மூன்றாவது மகன் சரவணனுடன் வாழ்வது தெரியவந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தாய் தனலட்சுமியுடன் சாந்தகுமார், வீடியோ கால் மூலம் பேசியுள்ளார்.

தாயின் முகத்தைப் பார்த்த சந்தோஷத்தை டென்மார்க்கிலிருக்கும் சாந்தகுமார் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

தாயைக் கண்டுபிடித்தார் டேவிட் சாந்தகுமார்! - முடிவுக்கு வந்தது 39 வருடப் போராட்டம்
david sandhakumar with mother dhanalakshmi
david sandhakumar with mother dhanalakshmi

"அம்மா கிடைத்த சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அம்மாவுக்காக ஏங்கித் தவித்திருக்கிறேன். கடந்த 6 வருடங்களில், வாய்ப்பு கிடைக்கும்போதேல்லாம் இந்தியா வந்து அம்மாவைத் தேடி அலைந்தேன். அம்மாவை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று மட்டுமே நினைத்திருக்கிறேன். இந்தத் தேடுதலில், மும்பையைச் சேர்ந்த அருண் டோஹ்லி மற்றும் வழக்கறிஞர் அஞ்சலி பவர் ஆகியோர் நிறைய உதவி செய்தார்கள். அவர்கள் மூலம் கிடைத்த புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் பெரிய பலமாக இருந்தன.

கடந்த செப்டம்பர் 24-ம் தேதி தமிழகம் வந்தேன். அம்மாவைப் பார்க்க வேண்டிய எனது ஆவலையும், வலிகளை முதன் முதலில் விகடனுடன் பகிர்ந்துகொண்டேன். அதுகுறித்து விரிவான கட்டுரை மற்றும் வீடியோ வெளியிட்டார்கள். அதில் என் அம்மாவை இம்முறை நிச்சயம் பார்த்துவிடுவேன் என்கிற நம்பிக்கை உள்ளது எனக் கூறியிருந்தேன்.

தாயைத் தேடி டென்மார்க் டு தஞ்சாவூர்...  சினிமாவை மிஞ்சும் 39 வருட பாசப்போராட்டம்!

"நீங்கள் எல்லோரும் இல்லையென்றால், நான் என் அம்மாவைக் கண்டுபிடித்திருக்க வாய்ப்பே இல்லை!" - தாயின் முகத்தை வீடியோ காலில்...

Posted by Vikatan EMagazine on Wednesday, October 23, 2019

ஒரு வாரம் தேடியும் அம்மா கிடைக்கவில்லை. வலிகளுடன்தான் டென்மார்க் திரும்பி வந்தேன். ஆனால், அடுத்த சில நாள்களில் நல்ல சேதி வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நான் அம்மாவிடம் பேசினேன். அம்மா தம்பியின் குடும்பத்துடன் இருப்பதாகச் சொன்னார்கள். அம்மாவைப் பார்த்துப் பேசிவிட்டேன். விரைவில் அம்மாவை நேரில் பார்க்கவும், என் குழந்தைகளான காஜ் மற்றும் சோபஸ் ஆகியோருக்கு அவர்களின் பாட்டியை காண்பிக்கவும் தமிழகம் வருகிறேன். அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன். என் அம்மா கிடைக்க உதவிய விகடனுக்கு மீண்டும் எனது நன்றிகள்" என்றார் மகிழ்ச்சியுடன்!