Published:Updated:

இந்த `நம்பிக்கை' தான் நான் கற்றுக்கொண்டது! - இந்திய விமானப்படையின் முதல் பெண் கமாண்டர் ஷாலிஸா தாமி

செ.க.மெளரீஷ்

``முதன்முறையாக தன் முழுக் கட்டுப்பாட்டில் ஒரு விமானம் இயக்கப்படுவதை உணர்ந்ததாகவும், அதை வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஒரு பொன்னான தருணம்” என்கிறார் தாமி.

S Dhami
S Dhami

இந்திய விமானப்படையில் விங் கமாண்டராகப் பணிபுரிந்து வரும் ஷாலிஸா தாமி, தற்போது பணி உயர்வு பெற்று இந்தியாவின் முதல் ஃப்ளைட் (flight) கமாண்டர் என்னும் வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்திய ராணுவத்தின் நிரந்தர கமிஷனைப் பெறப்போகும் முதல் பெண்மணி என்ற மற்றொரு பெருமையும் இவரையே சேரும். 1994ம் ஆண்டில் முதன்முதலில் பெண்கள் நாட்டின் முப்படைகளில் (Indian Armed forces) சேர்க்கப்பட்டனர். அதிலிருந்து, ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளில் பெண்கள் பல்வேறு முக்கிய பதவிகளை அலங்கரித்து வருகின்றனர்.

S Dhami
S Dhami

நீண்ட நாள் போராட்டத்திற்குப் பிறகு டெல்லி உயர்நீதிமன்றம் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை விமானியாக மட்டும் இந்திய வானில் பறந்துவந்த தாமி இனி புதிய தேர்ந்த விமானிகளை உருவாக்கி வானில் பறக்கவிடும் கூடுதல் பொறுப்பையும் பெறுவார். ஏழு வயது பிள்ளைக்குத் தாயான பஞ்சாபின் லூதியானா பகுதியைச் சேர்ந்த தாமி, தன் ஒன்பதாம் வகுப்பில், ஸ்லாம் புக்கில் (Slam book) விமானப் படையில் சேர வேண்டும் என்று எழுதியதை நினைவு கூர்ந்து மகிழ்கிறார்.

அந்தப் புள்ளியில் விரியத் தொடங்கிய தாமியின் கனவுச் சிறகுகள், இன்று சுமார் 13 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் பணியாற்றி 2,300 மணி நேரத்திற்கு மேல் வானில் பறந்துசாதித்து உள்ளார். சீட்டக் (Cheetak) மற்றும் சீட்டா(cheetah) வகை ஹெலிகாப்டர்களை இயக்குவதில் மிகவும் தேர்ந்தவரான இவர், விமானத்தை முதன்முதலில் தனியாக இயக்கிய அனுபவத்தை நெகிழ்வாகப் பகிர்கிறார். ``கடந்த 2003ஆம் ஆண்டு ஹைதராபாத் அகாடமியில் HPT-32 Deepak என்னும் சிறிய வகை பயிற்சி விமானத்தில் பறந்துகொண்டிருந்தேன். அப்போது காற்றின் திசைபற்றி என் பயிற்றுவிப்பாளரிடம் கேட்ட அந்தத் தருணத்தில்தான், முதன்முறையாக என் முழுக் கட்டுப்பாட்டில் ஒரு விமானம் இயக்கப்படுவதை உணர்ந்தேன். அது வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஒரு பொன்னான தருணம்” என்கிறார் தாமி.

S Dhami
S Dhami

``பொதுவாகவே பிறரை அவ்வளவு எளிதில் நம்பிவிடமுடியாத இன்றைய உலகில், நான் ஒவ்வொரு முறை விமானம் ஏறும் போதும் தரையிலிருந்து அதிகாரிகள் தரும் அனைத்து சிக்னல்கள் மற்றும் உத்தரவுகளை முழுமையாக நம்பித்தான் பறக்கிறேன். நான் விமானப்படையில் சேர்ந்து கற்றுக்கொண்ட மிகப்பெரிய ஒன்றாகக் கருதுவது இந்த `நம்பிக்கையை’ தான்” என்கிறார் இந்த சிங்கப் பெண்மணி. மேன்மேலும் உயரே பறக்க வாழ்த்துகள் தாமி!