Published:Updated:

வினு விமல் வித்யா: உயிரைக் காத்தது ஒரு பெண்ணின் மெடல்!

மரியா ஆன்ந்த்ரே செக்
பிரீமியம் ஸ்டோரி
மரியா ஆன்ந்த்ரே செக்

சஹானா

வினு விமல் வித்யா: உயிரைக் காத்தது ஒரு பெண்ணின் மெடல்!

சஹானா

Published:Updated:
மரியா ஆன்ந்த்ரே செக்
பிரீமியம் ஸ்டோரி
மரியா ஆன்ந்த்ரே செக்

வித்யாவும் விமலும் கேக் குடன் வினு வீட்டுக்குச் சென்றார்கள். சர்ப்ரை ஸாக வந்திருந்த இரு வரையும் பார்த்த வினு வுக்கு ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

“வாங்க, வாங்க. கொஞ்சம் லேட்டா வந்திருந்தா லைப்ரரிக்குக் கிளம்பியிருப்பேன்.”

“நல்லவேளை, பர்த்டே பேபியைப் பிடிச்சிட்டோம். வா... வினு. செலிபிரேட் பண்ணுவோம்” என்ற வித்யாவைப் பார்த்துச் சிரித்தாள் வினு.

கேக்கை வெட்டி வினுவுக்குப் பிறந்தநாள் பாட்டுப் பாடி, சாப்பிட ஆரம்பித்தார்கள்.

“இந்த கேக்ல ஒரு துண்டு, மரியா ஆன்ந்த்ரே செக்குக்கு கொடுக்கணும்” என்றாள் வினு.

“யாரது உன் புது ஃபிரெண்டா?”

“வித்யாக்கா, இவங்க போலந்து நாட்டு ஈட்டி எறியும் வீராங்கனை. டோக்கியோ ஒலிம்பிக்ல வெள்ளிப்பதக்கம் வாங்கினாங்க. அவங்க நாட்டுல எட்டு மாசக் குழந்தைக்கு உடனே ஹார்ட் சர்ஜரி செய்யணுமாம். அந்தக் குழந்தையோட பேரன்ட்ஸ்கிட்ட சர்ஜரிக்குத் தேவையான பணம் இல்ல. அதனால சோஷியல் மீடியாவுல ஃபண்ட் கலெக்ட் பண்ணினாங்க. ஆனா, சிகிச்சைக்குத் தேவையான பணத்துல பாதியளவுகூட அவங் களுக்குக் கிடைக்கல. அதைப் பார்த்த மரியா, தன்னோட வெள்ளிப் பதக்கத்தை குழந்தை யோட சர்ஜரிக்காக ஏலம் விட்டாங்க. இதை `ஸப்கா' என்ற நிறுவனம் இந்திய மதிப்புல சுமார் 93 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. ஏலத் துல கிடைச்ச தொகையில குழந்தையின் மருத்துவச் செலவுக்குப் போக, மீதிப் பணத்தை குழந்தைகள் அறக்கட்டளைகளுக்குக் கொடுத்துட்டாங்க மரியா.

“வாவ்... ஒலிம்பிக்ல மெடல் வாங்குறது எல்லாருக்கும் வாழ்நாள் கனவா இருக்கும். மெடல் வாங்கின கொஞ்ச நாள்லலேயே மத்தவங்களுக்காக ஏலம்விட எவ்வளவு பெரிய மனசு வேணும்... மெடல் வாங்கினதை விட, இப்போ உலகம் முழுக்க மரியாவின் புகழ் பரவிருச்சு!”

“ஆமாம் வித்யாக்கா. மரியா 2016-ம் வருஷம் நடந்த ரியோ ஒலிம்பிக்ல கலந்துகிட்டாங்க. மெடலை நூலிழையில தவறவிட்டாங்க. அதுக்குப் பிறகு, 2018-ம் வருஷம் எலும்புப் புற்றுநோயால பாதிக்கப்பட்டாங்க. ரெண்டு வருஷம் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு, புற்று நோய்லேருந்து வெளியே வந்தாங்க. இந்த வருஷம் நடந்த 2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ல நம்பிக்கையோடு கலந்துகிட்டு, மெடலையும் வாங்கிட்டாங்க!”

“கிரேட்! `மெடல்ங்கிறது ஒரு பொருள் மட்டும்தான். வீட்ல தூசி படிஞ்சு கிடக்கும். அது ஒரு குழந்தையோட உயிரைக் காப்பாத்தி யிருக்கு. ஒலிம்பிக் மெடல் மேல எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு. அது மட்டும் போதும்’னு சொல்றாங்க மரியா. ஆனா, ஏலம் எடுத்த நிறுவனம் மெடலை மரியாவுக்கே கொடுத்து அசத்திருச்சு!” என்றாள் விமல்.

``ஒலிம்பிக்ல பொதுவா விளையாட்டு வீரர்கள்தானே கலந்துப்பாங்க. இந்த ஒலிம்பிக்ல சயின்ஸ் ஃபீல்டுல இருக்குற பெண்கள் கலந்துகிட்டு, சிலர் மெடல்களையும் வாங்கியிருக்காங்க. ஆஸ்திரியாவைச் சேர்ந்த அன்னா கீசன்ஹோஃபர் கணித ஆய்வாளர். தொழில்முறை பயிற்சி இல்லாமலே சைக்கிளிங்ல பதக்கம் வாங்கியிருக்காங்க. எகிப்தைச் சேர்ந்த ஹாடியா ஹோஸ்னி அழற்சி நோய் எதிர்ப்பு மருந்து ஆய்வாளரா இருக்காங்க. இவங்க ஒலிம்பிக் பேட்மின்டன்ல கலந்துகிட்டாங்க.

அமெரிக்காவைச் சேர்ந்த கேபி தாமஸ் தொற்றுநோயியல், சுகாதார மேலாண்மையில டாக்டரேட் வாங்கியிருக்காங்க. இவங்க ஒலிம்பிக் தடகளத்துல வெண்கலப் பதக்கம் வாங்கினாங்க. அயர்லாந்தைச் சேர்ந்த லூயிஸ் ஷானஹான், குவான்டம் பிசிக்ஸ்ல பட்டம் வாங்கினவங்க. கேன்சர் கண்டு பிடிக்கும் சாதனங்களை உருவாக்கும்

ஆய்வுல இருக்காங்க. தடகளத்துல கலந்து கிட்டாங்க. ஜெர்மனியைச் சேர்ந்த நாடின் அபெட்ஸ் நரம்பியல்ல பட்டம் வாங்கினவங்க. ஆராய்ச்சியாளரா இருக்காங்க. குத்துச் சண்டையில கலந்துகிட்டாங்க. இஸ்ரேலைச் சேர்ந்த ஆண்ட்ரியா முரேஸ் நீச்சல் வீராங்கனை. உயிரியலாளரா இருக்காங்க” என்றாள் வினு.

``ஒருபக்கம் பெண்கள் பல துறைகள்ல கலக்கிட்டிருக்காங்க... இன்னொரு பக்கம் வீட்டுக்குள்ள முடங்க வேண்டிய கட்டாயத் துக்குத் தள்ளப்படறாங்க. ஆப்கானிஸ்தான்ல மறுபடியும் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்துட் டாங்க. அவங்க மேல எவ்வளவு பயமிருந்தா இப்படி உயிரையும் பொருட்படுத்தாம ஃப்ளைட்ல தொங்கினபடி ஏறுவாங்க! டிவியில வேலை செய்த கதிஜா அமீனோட பேட்டியைப் பார்த்தப்ப நிலைமையின் தீவிரம் புரிஞ்சது.

vikatan
vikatan

வீல்சேர் பேஸ்கட் பால் கேப்டன் நிலோஃபர் பயட், ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறிட்டாங்க. பாராலிம்பிக்ல கலந்துக்க இருந்த ஸகியா குடாடடியால் இப்ப கலந்துக்க முடியல. எனக்கு யாராவது உதவுங்கனு கேட்கறாங்க.

36 வயசு சாரா கரிமி திரைப்பட இயக்குநரா இருக்காங்க. தாலிபன்கள் பெண்களை கலை, சினிமாவுக்குள்ள எல்லாம் அனுமதிக்க மாட்டாங்க. சாப்பிடறதும் தூங்கறதும்தான் வாழ்க்கையானு இவங்க கேட்கறாங்க. குடும்பத்தோட நாட்டை விட்டும் வெளி யேறிட்டாங்க. ஆப்கன் ரோபோடிக்ஸ் துறையில இருக்கும் பெண்கள் பத்திரமா மெக்சிகோவுக்கு போய் சேர்ந்துட்டாங்க” என்றாள் விமல்.

‘`ஆப்கானிஸ்தான்லயே இருக்கிறவங்க நிலைமைதான் பாவம். எட்டு ஆண்டுகளுக்கு முன்ன, தாலிபன் தீவிரவாதிகளால் சுடப் பட்ட பாகிஸ்தான் சிறுமி மலாலா, இன்றைய ஆப்கான் நிலவரத்தப் பார்த்து ‘பெண்களை ஒடுக்கக் கூடாது’னு தாலிபன்களுக்கு வேண்டுகோள் வச்சிருக்காங்க. சரி... ஒரு ஹேப்பி நியூஸ் சொல்றேன். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த 19 வயசு ஸாரா ரூதர் ஃபோர்டு, தனி ஆளா உலகத்தைச் சுத்தி வந்திருக்காங்க. ஸாரோவாட பேரன்ட்ஸ் ரெண்டு பேருமே பைலட்ஸா இருக்காங்க. அதனால சின்ன வயசுலயிருந்தே ஸாராவுக்கு ஃப்ளைட் மேல ஆர்வம் வந்திருச்சு. சின்ன விமானத்துல பறந்துகிட்டு இருந்தவங்களுக்கு 14 வயசுல பைலட் ஆகணும்னு ஆசை வந்திருச்சு. முறையா பயிற்சி எடுத்துகிட்டாங்க. இப்போ மைக்ரோ ஃப்ளைட்ல, தனியாளா உலகைச் சுத்தி வந்திருக்காங்க. இது புது

உலக சாதனை. விண்வெளி வீராங்கனையா ஆகணும்னு ஆசைப்படறாங்க. ஸாராவோட அப்பா, ‘மக்கள் தொகையில பாதியளவு இருக்கும் பெண்கள்ல வெறும் ஐந்து சதவிகிதப் பெண்களே பைலட்டா இருக்காங்க. இந்த நிலை மாறணும்’னு சொல்லிருக்கார்.

அப்புறம் ஏதாவது படம் பார்த்தீங்களா ரெண்டு பேரும்?'' என்றார் வித்யா.

“நாங்க ரெண்டுபேரும் செப்டம்பர் 3-ம் தேதிக்காக வெறித்தனமா வெயிட் பண்ணிக் கிட்டிருக்கோம். அன்னிக்குதான் மணி ஹெய்ஸ்ட் (Money heist) சீசன் 5 ரிலீஸ். புரொஃபசர், டோக்கியோ எல்லாரையும் பார்த்து ஒரு வருஷமாகப் போகுது!” என்று சிரித்தாள் விமல்.

‘`சரி நேரமாச்சு கிளம்பலாம். அதுக்கு முன்ன வாசகிகளுக்கு ஒரு சில வார்த்தை களைச் சொல்லிடுவோம். இனிமே இதழ் தோறும் உங்களுக்காக ஒரு கேள்வியை நாங்க எழுப்புவோம். சிறப்பா பதில் எழுதற வங்களுக்கு ரொக்கப் பரிசு... சிறப்புப் பரிசு உண்டு. விவரம் இந்தப் பக்கத்திலேயே இருக்கு. ஆல் த பெஸ்ட்’’ - இருவரும் கிளம்பினார்கள்.

- அரட்டை அடிப்போம்...

****

வினுவின் வித்தியாசமான தகவல்!

அமெரிக்காவில் 20% பெண்கள் தங்கள் கணவரைவிட ஓவ்வோர் ஆண்டும் குறைந்தது $5,000 அதிகமாகச் சம்பாதிக்கிறார்கள்!

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்!

பெண்கள் தங்கள் பாதுகாப்பு கருதி வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருக்க வேண்டும் என தாலிபன் எச்சரித்திருக்கிறது. நீங்கள் ஆப்கான் பெண்ணாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

வினு,விமல்,வித்யா மூவரும் இதழ் தோறும் உங்களுக்காக ஒரு கேள்வியை எழுப்பவிருக்கிறார்கள். பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில் களுக்கு ரொக்கப்பரிசு காத்திருக்கிறது. மிகச் சிறந்த பதிலுக்கு சிறப்புப் பரிசு.

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி:

avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 7.9.2021

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism