Published:Updated:

வினு விமல் வித்யா: என் சமையல் எனக்கே போர் அடிச்சிருச்சு!

 ஏஞ்சலா டேவிஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஏஞ்சலா டேவிஸ்

சஹானா

வினு விமல் வித்யா: என் சமையல் எனக்கே போர் அடிச்சிருச்சு!

சஹானா

Published:Updated:
 ஏஞ்சலா டேவிஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஏஞ்சலா டேவிஸ்
கார்டன் ரெஸ்டாரன்ட்டில் வினுவும் விமலும் வித்யாவுக்காகக் காத்திருந்தார்கள். 10 நிமிடங்களுக்குப் பிறகு, வித்யா வந்து சேர்ந்தார்.“சாரிப்பா. இந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க நேரமாயிருச்சு. கொரோனா காலத்தில் ரெஸ்டாரன்ட்டில் மீட் பண்ணணுமான்னு பயமா இருந்துச்சு. நல்லவேளை, இது ஓப்பன் ரெஸ்டாரன்ட்டா இருக்கு. எனக்கு ஒரு ப்ளம் கேக் ஆர்டர் பண்ணு வினு!”
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“நல்ல பசியா வித்யாக்கா... இதோ சொல்லிட றேன்...”

“பசியில்லை வினு. ஆறு மாசமா நான் வெளியில் சாப்பிடவே இல்லை. என் சமையல் எனக்கே போர் அடிச்சிருச்சு. அதான்... ரொம்பப் பாய்ஞ்சிட்டேனோ...” என்று சிரித்தார் வித்யா.

“நீங்க மட்டுமல்ல வித்யாக்கா, நாங் களும் மெனுவைப் பார்த்ததும் களத்தில் குதிச்சிட்டோம். இந்த கேக்கை எல்லோரும் டேஸ்ட் பண்ணுங்க. இது நம்ம பில்கிஸ் பாட்டி யின் சாதனைக்கு...” என்று சொல்லிவிட்டு கேக்கைச் சுவைத்தாள் விமல்.

“என்ன விமல்... யார் இந்தப் பாட்டி?”

“போன வருஷம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்ததே நினைவிருக்கா... டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தில் கலந்துகிட்டு, எல்லாரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர் 82 வயது பில்கிஸ் பாட்டி. யாராலும் மறக்க முடியாத முகம். மூன்று மாத காலமும் போராடும் பெண்களுடன் இருந்து, அவங்களுக்கு உத்வேகம் கொடுத்தார். இப்போ உலகப் புகழ்பெற்ற டைம்ஸ் இதழ், இந்த ஆண்டுக்கான 100 ஆளுமைகளின் பட்டியலை வெளியிட்டிருக்கு. அதில் சுந்தர் பிச்சை உட்பட இந்தியாவில் பல்வேறு பிரபலங்கள் இடம்பிடிச்சிருக்காங்க. அவங்களில் பில்கிஸ் பாட்டியும் ஒருவர்” என்று முகம் முழுவதும் புன்னகையோடு சொல்லி முடித்தாள் விமல்.

“அப்படின்னா எனக்கு இன்னொரு ஸ்வீட் சொல்லிடு, பில்கிஸ் பாட்டியைக் கொண்டாடு வோம்!” என்றார் வித்யா.

“இந்த லிஸ்ட்ல ஏஞ்சலா டேவிஸ், நவோமி ஒசாகா எல்லாம் இருக்காங்க.”

“ஏஞ்சலா டேவிஸா... வித்தியாசமான தலையலங்காரத்தோட இருப்பாங்களே, அவங்களா?”

“ஆமா வித்யாக்கா. அவங்க அடையாளம் வித்தியாசமான தலையலங்காரம் இல்ல. அவங்க புகழ்பெற்ற அமெரிக்கப் பொதுவுடைமைவாதி, பெண்ணியவாதி, பேராசிரியர், போராட்டக் காரர் என்று ஏராளமான அடையாளங்களுக்குச் சொந்தக்காரர். 1971-ம் ஆண்டிலேயே டைம் இதழின் அட்டையில் இடம்பிடிச்சவங்க” என்று சொல்லிவிட்டு, லஸ்ஸியைக் குடித்தாள் விமல்.

“அடுத்து என்ன வினு?”

“ஆரதி சாஹாவுக்கு 80-வது பிறந்தநாள் செப்டம்பர் 24 அன்னிக்கு வந்தது. ஆங்கிலக் கால்வாயை முதலில் கடந்த ஆசியப் பெண் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரான ஆரதிக்கு கூகுள் டூடில் வெளியிட்டு சிறப்பிச்சிருக்கு” என்ற வினு, சமோசாவை எடுத்துக் கடித்தாள்.

“நான் கேட்டது, அடுத்து என்ன ஆர்டர் பண்ணலாம்னு?” என்று வித்யா சிரித்தார்.

“ஓ... நான் நியூஸ்னு நினைச்சிட்டேன். எனக்கு சாண்ட்விச். 1960-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வாங்கியவர் இந்த ஆரதி. ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு வழங்கப்பட்ட முதல் பத்மஸ்ரீ விருது இதுதான் தெரியுமா... சின்ன வயசிலேயே தாயை இழந்து பாட்டி வீட்டில் வளர்ந்தவங்க. கொல்கத்தாவிலுள்ள ஹூக்ளி ஆற்றில் நீச்சல் கத்துக்கிட்டாங்க. பிறகு சாதனையும் படைச்சிட்டாங்க. ஆனால், 53 வயதிலேயே உடல்நலக் குறைவால் இறந்துட்டாங்க” என்ற வினுவின் குரல் சன்னமானது.

 கின்ஸ்பெர்க் -  சிட்சி
கின்ஸ்பெர்க் - சிட்சி

“ஐயோ பாவம். 87 வயதில் மறைந்த ரூத் பேடர் கின்ஸ்பெர்க் பற்றி ஒரு வாரத்துக்குச் செய்தி வந்துட்டே இருந்தது. மிகப் பெரிய ஆளுமையாக இருந்திருக்காங்க. சட்டம் படிச்சவங்க. கணவர் மார்டின் கின்ஸ்பெர்க்கும் வழக்கறிஞர். அவர் கொடுத்த ஊக்கத்தால் சட்டத்துறையில் பல பதவிகளை வகித்து, உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தவங்க. பல்வேறு புரட்சிகரமான தீர்ப்புகளை வழங்கியவங்க. இன்னிக்கு ரூத் பேடரைக் கொண்டாடும் அமெரிக்கா, ஆரம்பத்தில் அவங்களுக்கு வாய்ப்பு வழங்கல. ஒரு யூதர், பெண், தாய் என்ற மூன்று காரணங்களால் அவங்க நிராகரிக்கப்பட்டதாக ரூத் பேடரே சொன்னாங்க. பெண்ணுரிமை இயக்கங்களிலும் தீவிரமாகக் கலந்துகிட்டாங்க. ஆண் நீதிபதிகளுக்குப் பெண்ணுரிமை குறித்து பாடம் எடுக்க வேண்டியிருந்ததுன்னும் சொல்லியிருக்காங்க. 56 வருடத் திருமண வாழ்க்கை. 2010-ம் ஆண்டு கணவர் இறந்த அடுத்த நாளே நீதிமன்றப் பணிகளுக்குத் திரும்பிட்டாங்க. இதுதான் தன் கணவரின் விருப்பம்னும் சொன்னாங்க.”

“அப்புறம் கம்போடியாவில் பெண்கள் உடைக் கட்டுப்பாடு சட்டம் கொண்டு வரப் போறாங்க. இந்தச் சட்டம் நிறைவேறினால் பெண்கள் இன்னும் பல ஆண்டுகள் பின்னோக்கிப் போயிடுவாங்க. கம்போடிய பெண்கள் இந்தச் சட்டத்துக்கு எதிரா போராட்டங்களை நடத்திட்டு வர்றாங்க. ஏன் இந்த உலகம் பெண்களோட உடையையே குற்றமா சொல்லிட்டு இருக்கு?” என்று வருத்தப்பட்டார் வித்யா.

“அடிப்படைவாதிகள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருப்பாங்க வித்யாக்கா. இந்தியாவிலும் இப்படி எத்தனை பேரைப் பார்த் திருக்கோம்... இன்னும் எவ்வளவு காலத்துக்குதான் உடைக்காகவே போராடிட்டு இருக்கப் போறோமோ...” என்று எரிச்சலடைந்தாள் வினு.

“எத்தனை ஏஞ்சலா டேவிஸும் ரூத் பேடரும் வந்தாலும் பெண்கள் பிரச்னைகள் தீராது போல. மற்ற பெண்களைவிட ஆப்பிரிக்கப் பெண்கள் அனுபவிக்கும் பிரச்னைகளைச் சொல்லி மாளாது. ஜிம்பாப்வேயின் ஜிம்பாக்வா சுரங்கத்தில் முழுக்க முழுக்கப் பெண்களே வேலை செய்றாங்க. பாறைகளை உடைக்கும் கடினமான பணியிலிருந்து எல்லா வேலைகளையும் உற்சாகத்தோடு பாடிக்கிட்டே செய்றாங்க. ஆப்பிரிக்காவின் சுரங்கப் பணிகளில் 40 சதவிகிதம் பெண்கள் வேலை செய்து வந்தாலும்

ஒரு சுரங்கத்தில் அனைவரும் பெண்களாக வேலை செய்வது ஜிம்பாக்வா சுரங்கத்தில்தான். வறுமையையும் கணவனின் கொடுமையையும்விட இந்தச் சுரங்கப்பணி கடினமாக இல்லை என்கிறாங்க அந்தப் பெண்கள்.”

“ஆண்களால்தான் செய்ய முடியும்னு சொல்லக்கூடிய வேலைகளையும் பெண்களால் செய்ய முடியும்னு காட்டி டாங்க” என்று ஆமோதித்தார் வித்யா.

“ஆனா, இதுபோன்ற வேலைகள் பெண்களுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டம் வித்யாக்கா. இதைக் கொண்டாடுறதா, வருத்தப்படுறதான்னே தெரியலை” என்றாள் விமல்.

 ஏஞ்சலா டேவிஸ்
ஏஞ்சலா டேவிஸ்

“நீ சொல்றதும் சரிதான் விமல். ஜிம்பாப்வேனு சொன்னதும் சிட்சி டாங்கரெம்பா நினைவு வந்துருச்சு. எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், நாடக ஆசிரியர்னு பல்வேறு திறமைகளைக்கொண்ட சிட்சிதான் ஆங்கில நாவல் எழுதிய முதல் ஜிம்பாப்வே பெண்மணி. இவங்க எழுதிய `நெர்வஸ் கண்டிஷன்ஸ்’ நாவல் உலகின் மிக முக்கியமான 100 நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுது. இப்போ இவங்க எழுதியிருக்கும் `திஸ் மோர்னபிள் பாடி’ நாவல் புக்கர் பரிசுக்கான முதல்கட்டப் பட்டியலில் இடம்பிடிச்சிருக்கு.”

“இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவ்னி தோஷியின் `பர்ன்ட் சுகர்’ நாவலும் புக்கர் ஷார்ட் லிஸ்ட்ல இருக்கு. சரி, படம் ஏதாவது பார்த்தீங்களா?”

“பார்க்கிற மாதிரி படம் ஒண்ணும் இப்ப ரிலீஸ் ஆகலையே வித்யாக்கா. தமிழ்லே அம்பேத்கர் பற்றிய தொடர் ஒண்ணு `ஜீ தமிழ்’லே செப்டம்பர் 24-ம் தேதி முதல் ஆரம்பிச்சிருக்கு. குழந்தைகளையும் அவசியம் பார்க்கச் சொல்லுங்க. நீ ஏதாவது பார்த்தியா வினு?”

“நான் ஒண்ணும் பார்க்கல விமல். சரி, நேரமாயிருச்சு. நான் கிளம்பட்டுமா?”

“எல்லோரும் கிளம்பலாம். பை” என்று விமல் சொன்னதும் மூவரும் அவரவர் வண்டிகளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

(அரட்டை அடிப்போம்!)