Published:Updated:

வினு விமல் வித்யா : மீண்டும் கல்பனா சாவ்லா... மீண்டும் ஃபஹத் பாசில்!

மீண்டும் கல்பனா சாவ்லா... மீண்டும் ஃபஹத் பாசில்
பிரீமியம் ஸ்டோரி
News
மீண்டும் கல்பனா சாவ்லா... மீண்டும் ஃபஹத் பாசில்

சஹானா

வித்யா பார்க்கில் காத்திருந்தார். சற்று நேரத்தில் வினுவும் விமலும் ஆளுக்கு ஒரு வண்டியில் வந்து இறங்கினர்.

“ஹாய் வித்யாக்கா... சாரி கொஞ்சம் லேட் ஆயிருச்சு” என்று விமலும் வினுவும் ஒரே நேரத்தில் சொல்லிக்கொண்டே பெஞ்சில் அமர்ந்தனர்.

“நோ பிராப்ளம். பார்க்குக்கு வந்தே ஆறு மாசமாச்சு. அதான் உட்கார்ந்து ரசிச்சிட்டிருந்தேன்.”

“எங்கே போனாலும் கவனமா போகணும் வித்யாக்கா. அங்கே பாருங்க பலரும் மாஸ்க் போடாமல் சுத்திட்டு இருக்காங்க” என்று கவலைப்பட்டாள் விமல்.

கல்பனா சாவ்லா
கல்பனா சாவ்லா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“ஆமாம், விமல். அதுக்குதான் நான் வீட்டிலிருந்தே ஃப்ரூட் சாலட், தண்ணீர் எல்லாம் கொண்டு வந்திருக்கேன். வினு, உன்னோட ஒசாகா கலக்கறாங்க போல...” என்று பேச்சை ஆரம்பித்தார் வித்யா.

“ஆமாம் வித்யாக்கா. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் காவல்துறையால் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிச்சு, நியூயார்க்கில் நடந்த டென்னிஸ் போட்டியிலிருந்து விலகினாங்க. `ஒரு கறுப்புப் பெண்ணாக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போட்டியிலிருந்து விலகினேன். இதன் மூலம் இந்தப் பிரச்னை உலகத்தின் கவனத்தை ஈர்க்கும். பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வராவிட்டாலும் அமெரிக்கர்கள் மத்தியில் உரையாடலை ஏற்படுத்தினால் போதும்'னு சொல்லிருக்கார் ஒசாகா. சின்ன வயசுலேயே எவ்வளவு அக்கறையாக இருக்காங்க, இல்லையா?” என்று மகிழ்ச்சியாகச் சொன்னாள் வினு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“அதுமட்டுமல்ல, வித்யாக்கா. இப்போ நடந்துட்டிருக்கிற அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் காவல்துறையால் கொல்லப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் பெயர் பொறிச்ச முகக்கவசம் மாட்டிக்கிட்டு விளையாடிட்டு இருக்காங்க. சூப்பர் இல்ல, வினு” என்றாள் விமல்.

ஃபரிடா
ஃபரிடா

``ஆமாம் விமல். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டீங்களா... கலிஃபோர்னியா சட்டமன்ற உறுப்பினரா இருக்காங்க 42 வயது பஃபி விக்ஸ். ஜூலை மாசம் ரெண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தாங்க. ஆகஸ்ட் மாசம் மக்களுக்கான மசோதா ஒன்று நிறைவேற இருந்தது. அந்த வாக்கெடுப்பில் தனக்குப் பதிலாக வேறு ஒருவரை வாக்களிக்க அனுமதி கேட்டிருந்தாங்க. ஆனால், சட்டமன்றம், பிரசவத்தை ஒரு நோயா கருத முடியாது என்பதால், வாக்களிக்க சிறப்பு அனுமதி கிடையாதுன்னு சொல்லிடுச்சு. ஒரு மாசக் குழந்தையைத் தூக்கிகிட்டு, ஆக்லாந்திலிருந்து கலிஃபோர்னியாவுக்கு 595 கி.மீ தூரம் டிராவல் பண்ணி, வாக்களிக்க வந்தாங்க. தோளில் குழந்தையைச் சுமந்துகிட்டு மசோதாவை அவர் ஆதரிச்சுப் பேசினபோது, குழந்தை பசியால் அழ ஆரம்பிச்சிருச்சு. `என் குழந்தைக்குப் பால் கொடுக்கணும். இந்த மசோதாவை தயவுசெய்து நிறைவேத்துங்க ப்ளீஸ்... ப்ளீஸ்... ப்ளீஸ்'னு அவர் பேசிய வீடியோ வைரலாச்சு. பணியிடங்களில் பெண்களுக்கு இருக்கற உரிமைகள் குறித்த விவாதத்தை பஃபி விக்ஸ் வீடியோ கிளப்பிவிட்டிருக்குது...” என்ற வித்யா, ஃப்ரூட் சாலட்டை எடுத்துக் கொடுத்தார்.

“சாலட் மிக்ஸிங்கில் உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது வித்யாக்கா. செமயா இருக்கு. அமெரிக்காவிலேயே இன்னும் பெண்களுக்கான உரிமைகளுக்காகப் போராட வேண்டியிருக்கு. அதுவும் இந்த கொரோனா காலத்தில் இப்படித் தாயையும் குழந்தையையும் அலைய விட்டிருக்காங்களே... ரொம்ப அநியாயம்” என்று சொல்லிவிட்டு ஃப்ரூட்ஸை விழுங்க ஆரம்பித்தாள் விமல்.

“ஆமாம், வினு... நோபல் பரிசு அறிவிச்சுட்டாங்களா?”

“இன்னும் இல்ல வித்யாக்கா. ஆனா, அமைதிக்கான நோபல் பரிசு பற்றி இப்பவே சர்ச்சைகள் கிளம்பியிருச்சு. இந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்துல உலகின் பல நாடுகளுக்கும் போய் மருத்துவம் பார்க்கும் கியூபா நாட்டின் மருத்துவத்துறைக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கணும்னு பல்வேறு நாட்டு அறிஞர்களும் மக்களும் விரும்பறாங்க. ஆனா, திடீர்னு டொனால்டு ட்ரம்ப், அமைதி நோபல் பரிசுக்கான நாமினேஷன்ல வந்துட்டாரு!”

“என்னது, ட்ரம்ப்புக்கா” - வித்யாவும் விமலும் ஒரே நேரத்தில் அதிர்ச்சியடைந்தார்கள்.

“நீங்க மட்டுமல்ல, உலகமே அதிர்ச்சியில்தான் இருக்கு. அமெரிக்கத் தேர்தல் வரும் நேரத்துல நோபல் பரிசு தாக்கத்தை ஏற்படுத்தும்னு நினைக்கிறாங்களோ என்னவோ?”

“ம்... நம்ம கல்பனா சாவ்லாவை நினைவிருக்கா? இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை. விண்வெளிப் பயணத்தில் உயிரை இழந்தவங்க. அந்த கல்பனா சாவ்லாவின் பெயரை செப்டம்பர் 29 அன்று விண்ணில் செலுத்தப்பட இருக்கும் விண்கலத்துக்குச் சூட்டியிருக்கு நார்த்ரோப் க்ரமன் என்ற அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ஓ... நல்ல விஷயம் விமல். கல்பனா உயிரோடு இருந்திருந்தா இன்னும் பல உச்சங்களைத் தொட்டிருப்பாங்க. சரி... நம்ம ஃபஹத் பாசில் படம் ‘சீ யூ சூன்’ பார்த்தீங்களா ரெண்டு பேரும்?”

வினு விமல் வித்யா : மீண்டும் கல்பனா சாவ்லா... மீண்டும் ஃபஹத் பாசில்!

“நானும் வித்யாக்காவும் பார்த்துட்டோம். இந்த கொரோனா காலகட்டத்துல இருக்குற தொழில்நுட்பத்தை வெச்சு, விழிப்புணர்வு ஊட்டக்கூடிய வகையில் அழகா ஒரு படத்தைக் கொடுத்திருக்காங்க. ரொம்ப நல்ல முயற்சி. விறுவிறுப்பா இருந்தது. பெரிய ஸ்டாரா இருந்தாலும் சின்ன ரோலையும் அமர்க்களமா பண்றார் ஃபஹத் பாசில். நடிப்பு மட்டுமல்ல, இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். இயக்குநர் மகேஷ் நாராயணனையும் பாராட்டணும். தர்ஷனா ராஜேந்திரனும் நல்லா நடிச்சிருக்காங்க. உங்களுக்குப் பிடிச்சிருந்ததா வித்யாக்கா...”

“எனக்கு ஆரம்பத்துல கொஞ்சம் டெக்னிகல் விஷயம் போரடிச்ச மாதிரி இருந்துச்சு. அப்புறம் பிடிச்சிருச்சு. வினுவுக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததுன்னு ஸ்டேட்டஸ் போட்டிருந்தா. நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி சின்ன வயசிலேயே இறந்துட்டார், பாவம். எல்லா கேரக்டர்களையும் ரசிக்கிற மாதிரி பண்ணுவார்...”

“இந்தக் காலகட்டத்தில் சின்ன வயசு ஆட்கள் நிறைய பேருக்கு மாரடைப்பு வர்றது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. ஆமா வித்யாக்கா... நீங்க ஒரு நாவல் எழுதப் போறதா சொல்லிட்டு இருந்தீங்களே, அது எந்த அளவுல இருக்கு?”

“சொன்னேன்... எழுத ஆரம்பிச்சேன்... அப்புறம் நான் எழுதி யார் படிக்கிறதுன்னு விட்டுட்டேன் விமல்!”

“எழுதி முடிங்க வித்யாக்கா. அது பிரமாத மான நாவலாகூட வரலாம்.”

“கிண்டல் ஓவரா இருக்கு.”

“கிண்டல் இல்ல வித்யாக்கா. உங்க நாவலும் ஃபரிடா நாவல் போல பெரிய வியாபாரம் ஆகலாம்...”

“யார் அது?’’

“இங்கிலாந்துல வசிக்குற நைஜீரிய மாணவி ஃபரிடா அபைக். 21 வயசுதான் ஆகுது. இதுவரை ரெண்டு நாவல் எழுதிட்டாங்க. இவங்களோட ரெண்டாவது நாவலை அமெரிக்காவின் புகழ்பெற்ற மெக்மில்லன் பதிப்பகம் வாங்கியிருக்கு. அந்த நாவலுக்காக ஃபரிடா பெறப்போகும் பணம் எவ்வளவு தெரியுமா?’’

“5 லட்சம் ரூபாயா?”

“நம்ம ஊர்க்காரங்களால அந்தத் தொகையைக் கற்பனை செய்ய முடியாது. 10 லட்சம் டாலர்களைக் கொடுக்குறாங்க!”

``எனக்கு மயக்கமே வந்துரும் போலிருக்கே விமல். நம்ம ஊரு பணத்துக்கு ஏழு கோடி ரூபாய்க்கு மேல வருமே!''

“அப்படி என்ன ஸ்பெஷல் அந்த நாவலில்?”

``ஆப்பிரிக்கர்களை முக்கிய கதா பாத்திரங்களா வெச்சு எழுதப்பட்டிருக்கும் நாவல். ஆப்பிரிக்க மாணவ, மாணவிகள் கல்லூரிகளில் சந்திக்கும் இன வெறுப்பை மையமா வெச்சு எழுதப்பட்டிருப்பதாகச் சொல்றாங்க ஃபரிடா. ரெண்டு வருஷத்தில் இந்த நாவலை எழுதி முடிச்சிருக்காராம். ரொம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கு. ஃபரிடா மாதிரி அசத்தலா ஒரு நாவல் எழுதுங்க வித்யாக்கா. நானும் வினுவும் உங்க ஃபிரெண்டுன்னு பெருமையா சொல்லிக்குவோம்!” என்று கை கொடுத்தாள் விமல்.

“நாவலை முடிச்சிட்டு கை கொடுக்கிறேன். சரி, கிளம்புவோமா?”

“அடுத்த தடவை ஷாப்பிங் போவோமா விமல்?”

“இன்னும் ஆறு மாசத்துக்காவது ஜாக்கிரதையா இருந்தாகணும். தேவையில்லாம எங்கேயும் போகாம இருக்கிறதுதான் நல்லது. நேரமாச்சு, பை” என்று சொல்லிவிட்டு வண்டியை எடுத்தாள் விமல்.

“வித்யாக்கா, உங்களை வீட்ல இறக்கி விட்டுடறேன்” என்று கூப்பிட்டாள் வினு.

“நான் நடந்து போயிடறேன். நீ கிளம்பு” என்று வித்யா கை அசைக்கவும், வினுவின் வண்டி சீறிப் பாய்ந்தது.

(அரட்டை அடிப்போம்!)