Published:Updated:

சமூக வலைதளத்தில் இயங்கும் பெண்களும், நரகமும், கண்டனங்களும்!

Avaludan
பிரீமியம் ஸ்டோரி
News
Avaludan

#Avaludan

‘சமூக வலைதளத்தில் இயங்கும் பெண்கள் நரகத்துக்குப் போவார்கள், நல்ல குடும்பப் பெண்ணுக்கு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் தேவை யில்லை, அப்படிச் செய்தால் அவள் விபசாரம் செய்பவள்’ என்று, அதே சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார் சம்சுதீன் காசிமி என்பவர். பெண்கள் பொதுவெளிக்கு வருவதைத் தடித்த ஆணாதிக்கத்துடன் பேசும் இதுபோன்றவர்களுக்கு உங்கள் பதில் என்ன என்று அவள் விகடன் சமூக வலைதளப் பக்கங்களில் கேட்டிருந்தோம். #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...

Haripriya Selvaraj

சீதையையே தீக்குளிக்கச் சொன்னாங்கதானே? இவங்களுக்கு எல்லாம் பெண்கள் தங்களை நிரூபிக்க அவசியமில்ல.

பொ.பாலாஜிகணேஷ் எழுத்தாளர்

தனித்திறன் முதல் தொழில் வரை சமூக வலைதளத்தை ஒரு முக்கியமான கருவியாக, ஏணியாகப் பயன்படுத்தி சாதித்து வரும் எத்தனையோ பெண்களைப் பார்க்கிறோம். இதுபோன்ற ஆணாதிக்கப் பேச்சுகள் அவர்களை அவமதிப்பவை, அவதூறு சொல்பவை. என்னைப் பொறுத்தவரை பெண்கள் இதுபோன்ற பிற்போக்கு உளறல்களை சவாலாக எடுத்துக்கொண்டு அதே சமூக வலைதளத்தில் சாதித்துக் காட்ட வேண்டும்.

Vijai Sachin

எல்லா துறைகளிலும் ஆண்களின் ஆதிக்கம் அன்று. எல்லா துறைகளிலும் பெண்களின் பேராற்றல் இன்று. பெண்கள் ஒவ்வொரு தளத்துக்கு வர ஆரம்பிக்கும்போதும் அப்படித்தான் கதறுவார்கள். காதுகொடுக்காமல் முன் செல்ல வேண்டும்.

Shree Ashwini Thangaraj

ஆணாதிக்கம் பேசும் ஆண் பூமியைக் காணச் செய்தவள் தாய் எனும் பெண்தான். பொதுவெளிக்கு வரும் பெண்ணை மதிக்காத சமுதாயத்தில் முன்னேற்றம் சாத்தியமில்லை.

Kha Min

சமூக வலைதளத்தில் பெண்கள் பங்கேற்பதால் ஏன் பதறுகிறீர்கள்? ஆணுக்குச் சமமாகப் பெண்ணுக்கு இங்கே எல்லா உரிமைகளும் உண்டு. இனி ஒவ்வொரு தளத்திலும் இணைந்தே பயணிப்பார்கள்.

Amutha Ananth

முதலில் பெண் படிப்பதைத் தவறாகப் பேசினார்கள்.

பின் வேலைக்குப் போகும் பெண்களைத் தவறாகப் பேசினார்கள். இப்போது இப்படி பேசும் ஆண்களைப் பார்த்து கோபம் வருவதைவிட பரிதாபமாகவே இருக்கிறது.

Janavi Jaanu

ஆண்கள் காலம் காலமாகப் பெண்களை அடக்கி அடிமைப்படுத்தி வைக்கவும், மிரட்டவும் இதுபோல பேசி வருகிறார்கள். ‘விபசாரி’ என்று சொல்லிவிட்டால் பயந்து ஒதுங்கிவிடுவாள் என்று நினைக்கிறார்கள். ‘இவள்தான் குடும்பப் பெண்’ என்று பட்டம் கொடுத்து பெண்ணடிமை அரசியல் செய்ததும், அவர்களைச் சுரண்டியதும் இனி நடக்காது. பெண்களுக்குச் சுயமாகச் சிந்திக்கவும், முடிவுகள் எடுக்கவும் தெரியும். இப்படிப் பொது வெளியில் பெண்களைக் கீழ்மையான வார்த்தைகளால் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், முகநூலில் தவறு செய்யும், ஏமாற்றும் ஆண்களுக்கும் இது போன்ற அட்வைஸ்களை தருவார்களா?

Avaludan
Avaludan

Shastri Prasad

திறமையற்ற, அறிவற்ற, பண்பற்ற, அறமற்ற ஆண்கள் பெண்களின் வளர்ச்சியோடு சமமாகப் போட்டிபோட இயலாதபோது இதுபோன்ற இகழ்ச்சியான வார்த்தைகளால் அவர்களை ஒடுக்கி பொதுவெளிக்கு வரவிடாமல் பார்த்துக் கொள்வார்கள்.

Saranya Shanmugavel

இந்த உலகமே ஒற்றைச் சமூகமாகி, அந்தச் சமூகமும் வலைத்தளத்துக்குள் அடங்கி ஆண்டுகள் பல ஆகின்றன. இருப்பினும், இன்னும் இப்படி தற்குறியான மனிதர்கள் இருப்பது வேதனையான விந்தை.

Abdul Kathar S

கிராமப்புறங்களில் 10 சதவிகிதப் பெண்கள் இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்து கிறார்கள். நகர்ப்புற பெண்களில் மூன்றில் ஒரு பெண் இணைய சேவையைப் பயன்படுத்து கிறார்கள். அவர்களுக்கு சமூக வலைதளத்தில் தடை போட யாருக்கும் உரிமையில்லை.

Ko Rajasekar

தற்போது பெண்கள் சமூக ஊடகங்கள் மூலமாகப் பல விஷயங்களில் விழிப்புணர்வும், உலகுடன் ஒரு விர்சுவல் தொடர்பும் பெற்று தங்களை மேம்படுத்தி வருகிறார்கள். பெண்ணுக்கு ‘கற்பு’ ஒன்றுதான் உயர்ந்தது என்ற சொல்லி இத்தனை காலம் வீட்டிலேயே அடைத்து வைத்தது போதும். இனியும் ‘நல்ல குடும்பத்துப் பெண்ணாக இருந்தால்’, ‘நீ கண்ணகியாக இருந்தால்’ என்றெல்லாம் ஆரம்பிக்க வேண்டாம். அனைத்துத் துறைகளிலும் சாதிக்கும் பெண்களுக்கும், ‘நீ தைரியமா முன்ன போ’ என்று அவர்களுக்குச் சொல்லி வரும் அவள் விகடனுக்கும் வாழ்த்துகள்!

Pushpa Sakthi Vikki

துரியோதனும், தர்மரும் நகர்வலம் போனப்போ அவங்களுக்கு எப்படி அவங்க எண்ணப்படி மத்தவங்க தெரிஞ்சாங்களோ அப்படித்தான் இதுவும்.

Hemalatha Srinivasan

வேலைக்குப் போய் சம்பாதித்துக் கொடுக்கும் பெண் வீட்டிலும் மாடு போல் உழைக்க வேண்டும். ஆனால், சோஷியல் மீடியா என்ற பொதுவெளிக்கு வந்தால் ‘விபசாரி’ பட்டம். ‘வீ டோன்ட் கேர்.’ சொல்வோம் பெண்களே!