அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

என்ன சொல்கிறது, வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டம்?

வாடகைத்தாய்
பிரீமியம் ஸ்டோரி
News
வாடகைத்தாய்

குழந்தை வேண்டும் தம்பதிகள், அந்த வாடகைத்தாய்க்குத் தகுதிச் சான்றிதழ் பெற்று, அதை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு வழங்குவது அவசியம்.

நடிகை நயன்தாரா வாடகைத்தாய் சட்டத்தை மீறியிருப்பதாக எழுந்திருக்கும் சர்ச்சை குறித்து விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட்டிருக்கிறது, மருத்துவத்துறை. இந்தப் பின்னணியில் வாடகைத்தாய் சட்டம் சொல்வது என்ன என்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ரமேஷிடம் பேசினோம்.

வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டம்

இந்தியாவில் வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டம் 25.1.2022-ல் நடைமுறைக்கு வந்தாலும், இந்த சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் 21.6.2022-ல்தான் வெளியிட்டது. அதன்படி, 90 நாள்களுக்குள் தேசிய அளவில் National Surrogacy Board என்ற அமைப்பும், மாநில அளவில் State Surrogacy Board என்ற அமைப்பும் உருவாக்கப்பட வேண்டும். வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுத்தரும் வசதிகளைக்கொண்ட கருத்தரிப்பு மையங்கள் இதில் பதிவுசெய்துகொள்ள வேண்டும். வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதை இந்த அமைப்பு கண்காணித்து முறைப்படுத்தும். சட்ட மீறல்கள் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்.

என்ன சொல்கிறது, வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டம்?

சட்டம் என்ன சொல்கிறது?

வணிக நோக்கில் ஒரு பெண், பணத்துக்காக வாடகைத்தாயாக ஈடுபடுவது இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஒரு பெண், தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் வாடகைத்தாயாக இருக்க முடியும். வாடகைத் தாயாகும் பெண்ணுக்கு வயது 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

அவருக்குக் கர்ப்பத்துக்கு முன், பின் என 16 மாத காலம் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும். குழந்தை வேண்டும் தம்பதிகள், அந்த வாடகைத்தாய்க்குத் தகுதிச் சான்றிதழ் பெற்று, அதை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு வழங்குவது அவசியம். அந்தத் தம்பதியில் ஆணுக்கு 26 முதல் 55 வயதுக்குள்ளும், பெண்ணுக்கு 23 முதல் 50 வயதுக்குள்ளும் இருக்கவேண்டியதும் கட்டாயம். வாடகைத்தாய் மூலம் குழந்தை வேண்டும் தம்பதிகள் அல்லது இருவரில் ஒருவர் குழந்தைப்பேற்றுக்குத் தகுதியான உடல்நிலை இல்லாதவராக இருக்க வேண்டும்.

அந்தத் தம்பதிக்கு ஏற்கெனவே குழந்தைகள் இருக்கக் கூடாது. ஒருவேளை அந்தத் தம்பதிக்கு இயற்கையான முறையில் குழந்தை பிறந்திருந்து, அந்தக் குழந்தைக்கு குணப்படுத்த முடியாத மனநலம் மற்றும் உடல்நலக் குறைபாடு இருந்தாலோ, மாவட்ட மருத்துவக் குழுமத்திடம் அதற்கான சான்றிதழ் பெற்று, சமர்ப்பிக்க வேண்டும். திருமணமாகாமல் சேர்ந்து வசிப்பவர்கள், பிரிந்து வாழும் பெற்றோர், தன்பாலின உறவாளர்கள், கணவன் அல்லது மனைவி இல்லாமல் தனித்து வாழ்பவர்கள், ஏற்கெனவே குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதிகள் ஆகியோர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதியில்லை.

வழக்கறிஞர் ரமேஷ்
வழக்கறிஞர் ரமேஷ்

இந்தச் சட்டத்தின் பிரிவு 53 ஒரு சலுகையை வழங்கியிருக்கிறது. அதாவது, இந்தச் சட்டம் அமலாகும் காலத்திலிருந்து 10 மாதங்களுக்கு Gestation Period என்ற விதிவிலக்கு தந்திருக்கிறார்கள். சட்டம் வருவதற்கு முன்போ, அந்த நேரத்திலோ வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்குப் பதிவு செய்திருந்தவர்கள் எந்த சட்டச் சிக்கலும் இல்லாமல் உரிமையுடன் தங்கள் குழந்தையைப் பெற்று வளர்ப்பதற்கான சலுகைக் காலம் இது. இதன்படி, அக்டோபர் 25 வரை குழந்தை பெற்றுக்கொள்பவர்களை இந்தச் சட்டம் கட்டுப்படுத்தாது!