ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

டௌன் சிண்ட்ரோம் பாதிப்பு டு விளம்பர மாடல்...

ரீஸா ரெஜி
பிரீமியம் ஸ்டோரி
News
ரீஸா ரெஜி

ரீஸாவுக்கு அஞ்சு வயசிருந்தபோது நாங்க குடும்பத்தோடு ஆப்பிரிக்காவுல டான்ஸானியாவுக்கு இடம்பெயர வேண்டிய நிர்பந்தம் வந்தது.

சைஸ் ஜீரோவும் சிவந்த நிறமும்தான் மாடலிங் உலகில் மிளிர நினைக்கும் பெண்களுக்கான முதல் தகுதிகளாக இன்று வரை தொடர்கின்றன. எழுதப்படாத இந்த விதிகளைத் தகர்ப்பதென்பது அவ்வளவு எளிதானதல்ல. சாமானியர்களுக்கே சவாலான இந்த விஷயத்தை, சிறப்புக் குழந்தை ஒருவர் சாதித்திருக்கிறார். யெஸ்... பெங்களூரைச் சேர்ந்த 24 வயது ரீஸா ரெஜி, டௌன் சிண்ட்ரோம் பாதிப்புக்குள்ளானவர். சமீபத்தில் வெளியான தனிஷ்க் மியா கலெக்‌ஷன்ஸ் விளம்பரத்தில் மாடலாக பங்கெடுத்ததன் மூலம், இந்த உலகம் எல்லோருக்குமானது என்பதை நிரூபித்திருக்கிறார்.

பிரசவித்த நொடி முதல் நிகழ்கணம் வரை மகள் ரீஸாவை கொண்டாடுகிறார் அவரின் அம்மா அனிதா ரெஜி. சிறப்புக் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு முன்னுதாரண தாயாக கவனம் ஈர்க்கிறார் அவர்.

‘`ரீஸா எங்களுக்கு ரெண்டாவது மகள். ரீஸா பிறந்த உடனேயே அவளுக்கு டௌன் சிண்ட் ரோம் பாதிப்பு இருக்கலாம்னு சந்தேகப் பட்டாங்க டாக்டர்ஸ். டெஸ்ட்டுல அது உறுதியாச்சு. நாம எல்லோரும் 23 எக்ஸ், 23 ஒய்னு 46 இணை குரோமோசோம் களோட பிறக்கிறோம். 21-வது இணை யில மூன்று குரோமோசோம்கள் இருந்தா டௌன் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்படும். 24 வருஷங்களுக்கு முன்னாடி டௌன் சிண்ட்ரோம் பத்தி எங்களுக்குப் பெரிய விழிப்புணர்வெல்லாம் இல்லை.

விளம்பர மாடலாக...
விளம்பர மாடலாக...

தன்னுடைய குழந்தை ஸ்பெஷல் சைல்டுனு தெரிஞ்சதும் எல்லாப் பெற்றோர்களுக்கும் அந்தக் குழந்தையை எப்படி வளர்க்கப் போறோம், அந்தக் குழந்தையோட வாழ்க்கை எப்படியிருக்கப்போகுதுனு மனசுக்குள்ள ஏகப்பட்ட குழப்பங்கள் அலைமோதும். இன்னொரு பக்கம் சமுதாயத்தோட பரிதாப பார்வையும் சேர்ந்துடும். ஆனா, என் விஷயத்துல அப்படி எந்தப் பரிதாப பார்வையும் சுய இரக்கமும் என்னை பாதிக்காமப் பார்த்துக்கிட்டேன். ரீஸாவோட நிலைமையை முதல்ல ஏத்துக்கிட்டேன். அவளையும் மூத்த மகளை வளர்த்தது போலவே சாதாரண குழந்தையா நினைச்சு தான் வளர்த்தோம். ‘ஆமாம்... எங்க மகள் ஸ்பெஷல் சைல்டுதான். ஆனா, நாங்க அவளை சராசரி குழந்தையாதான் வளர்க்கறோம்’னு வெளி உலகத்துக்குக் காட்ட நினைச்சோம்...’’ சுய இரக்கத்தில் சிக்கிக்கொள்ளாதவராகப் பேசும் அனிதா, ரீஸாவை தன் விருப்பப்படியே வளர்த்து ஆளாக்கியிருக்கிறார்.

‘`ரீஸாவுக்கு அஞ்சு வயசிருந்தபோது நாங்க குடும்பத்தோடு ஆப்பிரிக்காவுல டான்ஸானி யாவுக்கு இடம்பெயர வேண்டிய நிர்பந்தம் வந்தது. அங்கேதான் ரீஸாவுக்கு அந்த விபத்து நடந்தது. விளையாடும்போது தவறி கீழே விழுந்ததுல அவளுக்கு பலத்த அடிபட்டது. டௌன் சிண்ட்ரோம் பாதிப்புள்ள குழந்தை களோட தசைகளும் எலும்புகளும் ரொம்ப மென்மையா இருக்கும்ங்கிறதால அவங்களை பத்திரமா பார்த்துக்கணும். விழுந்ததுல ரீஸா, கிட்டத்தட்ட முடங்கியே போயிட்டாள்னு சொல்லலாம். அப்ப ரீஸாவோட சிகிச்சைக் காக இந்தியா வந்தோம். பெங்களூருல ஒரு டாக்டர்தான், ரீஸாவுக்கு ‘அட்லான்ட்டோ டிஸ்லொகேஷன்’ (Atlanto-occipital dislocation) பிரச்னைன்னும், டௌன் சிண்ட்ரோம் பாதிப்புள்ளவங்களுக்கு அது ரொம்ப சகஜம் னும் கண்டுபிடிச்சு சொன்னார். டௌன் சிண்ட்ரோம் பாதிப்புள்ள குழந்தைங்களுக்கு பிறந்ததுலேருந்தே பிசியோதெரபி சிகிச்சை களைக் கொடுக்கிறது மூலமா இதைத் தவிர்க்க முடியுமாம். ஆனா, எங்களுக்கு அது பத்தின விழிப்புணர்வு அப்போ இல்லை. உடனடியா ரீஸாவுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. அவளுடைய தன்னம்பிக்கையாலயோ என்னவோ அதுலேருந்து சீக்கிரமே மீண்டு வந்துட்டா. மறுபடி நாங்க டான்ஸானியா வுக்கே போயிட்டோம்.

குடும்பத்தினருடன்...
குடும்பத்தினருடன்...

ஆப்பிரிக்காவுல இருந்தபோது ரீஸாவை எல்லாக் குழந்தைகளும் படிக்கிற பள்ளிக்கூடத் துலதான் சேர்த்தோம். எந்த வகையிலும் தான் தனிமைப்படுத்தப்படறதா நினைச்சிடக் கூடாதுனு பார்த்துப் பார்த்து வளர்த்தோம். ஆனா, இந்தியாவுல பெரும்பாலான மக்களோட பார்வை இன்னும் மாறலை. சிறப்புக் குழந்தைகளை பரிதாபத்தோட பார்க் கிறதும், அவங்களைப் பார்த்தா விலகிப் போறதும் இன்னிக்கும் தொடருது. குடும்பத் தோட ரெஸ்டாரன்ட் போகும்போது இந்தக் குழந்தைங்களைக் கூட்டிட்டுப் போற பெற்றோர் படற அவஸ்தைகளை வார்த்தை கள்ல சொல்ல முடியாது. டௌன் சிண்ட் ரோமோ, ஆட்டிசமோ பாதிச்ச குழந்தைங்க, சராசரி குழந்தைங்களைவிட உரக்கப் பேசு வாங்க. சுத்தி இருக்குற மனிதர்களால அதைப் புரிஞ்சுக்க முடியறதில்லை. சிறப்புக் குழந்தை களோட பெற்றோருக்கும் வெளி உலகத்துக்கும் எப்போதும் ஓர் உரசல் தொடர்ந்துட்டே இருக் கிறதுதான் நிதர்சனம். சமுதாயத்துக்கு இதைப் புரியவைக்க யாராவது முயற்சி எடுத்துதானே ஆகணும்...’’ சக பெற்றோரின் மனக்குரலை உரக்கப் பதிவு செய்கிறார் அனிதா.

``2015-ல மறுபடி இந்தியா வந்து பெங்களூருல செட்டிலானோம். சின்ன வயசுலேருந்தே ரீஸாவுக்கு டான்ஸ் ரொம்ப பிடிக்கும். பாட்டு கேட்பாள். படிப்புல பெரியளவுல சாதிக்க முடியலைனாலும் அவளுக்கு ஆர்வம் இருக் குற விஷயங்கள்ல ஊக்கப்படுத்த நினைச்சோம். டீன் ஏஜ்ல இருந்தப்போ அவளை ஸ்பெஷல் நீட்ஸ் எஜுகேஷன் சென்டர்ல சேர்த்தோம். அவளுக்கு அங்கே வேறோர் உலகத்துக்கான கதவு திறந்தது. சக குழந்தைகளோட பேசிப் பழகறது, அந்த சென்டரோட ஊழியர்களோட சேர்ந்து வேலை செய்யறதுன்னு ரொம்ப ஆக்டிவ்வா இருந்தா. ரீஸா நல்லா பேசுவா... அதைவிட பிரமாதமா எக்ஸ்பிரஷன்ஸ் கொடுப்பா. பெங்களூருல ஷியாமக் தவார் டான்ஸ் ஸ்கூல்ல சேர்த்தோம். அடுத்தகட்டமா அவளுக்கு நடிப்புல ஆர்வம் இருக்கிறதும் தெரிஞ்சது. தியேட்டர் பயிற்சிலயும் சேர்த்து விட்டோம்.

அமெரிக்காவுல உள்ள ‘குளோபல் டௌன் சிண்ட்ரோம் ஃபவுண்டேஷன்’ அமைப்பு டௌன் சிண்ட்ரோமால பாதிக்கப்பட்டவங் களுக்கான ராம்ப் வாக் ஷோ நடத்துது. அதுல இந்தியாவுலேருந்து ரீஸா செலக்ட் ஆகி யிருக்கா. இந்த மாசம் கொலராடோவுல நடக்கப் போற அந்த மெயின் ஈவென்ட்டுக்காக நாங்க வெயிட்டிங். இந்த ஷோவுல ரீஸா செலக்ட் ஆனது மீடியா மூலமா வெளியே தெரிஞ்சது. நிறைய பேர் ரீஸாவை பத்தி விசாரிக்க ஆரம்பிச்சாங்க. அப்படித்தான் டைட்டன் - தனிஷ்க் மியா விளம்பர வாய்ப்பும் வந்தது.

ரீஸா ரெஜி
ரீஸா ரெஜி

எல்லாருக்கும் சம வாய்ப்புங்கிறதுதான் இந்த விளம்பரத்தோட நோக்கமே. இந்த விளம்பரத்துல மாடல்களா இருந்தவங்கள்ல ரீஸா மட்டும்தான் சிறப்புக் குழந்தை. அழகுங்கிறது தோற்றத்துல இல்லை, அது தன்னம்பிக்கையோட தொடர்புள்ளதுனு சொன்ன விளம்பரம் இது. டான்ஸ் நிகழ்ச்சிகள் உட்பட ரீஸாவுக்கு கேமரா எக்ஸ்போஷர் இருந்தாலும் முதல்முறையா விளம்பரத்துல நடிச்ச அனுபவத்துல சிலிர்த்துப் போயிட்டா. விளம்பர தயாரிப்புக் குழுவும் மற்ற மாடல் களை போலவே ரீஸாவையும் சராசரியா நடத்தினாங்க. ஒவ்வொரு இன்ஸ்ட்ரக்‌ஷனை யும் அவ்வளவு அழகா ஃபாலோ பண்ணினா. விளம்பரம் ரிலீசானதும் ரீஸா ரொம்ப பிரபலமாயிட்டா. யார், யாரெல்லாமோ போன் பண்ணிப் பேசி, பாராட்டறாங்க. ரீஸாவுக்கு இந்தத் துறை பிடிச்சிருக்குனு தெரியுது. மாடலிங், ஃபேஷன் துறையில அவளுக்குனு ஓர் இடம் இருக்குங்கிற நம்பிக்கை வந்திருக்கு. அடுத்து ரீஸா சினிமாவுக்கும் ரெடி ஆயிட்டிருக்கா...’’ பூரிக்கிறார் அனிதா.

‘`இது மூலமா சிறப்புக் குழந்தைகள் உள்ள எல்லா பெற்றோர்களுக்கும் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்பறேன். உங்க குழந்தைகிட்ட ஏதோ ஒரு தனித்திறமை இருக்கும். அதைக் கண்டுபிடிச்சு, அதை வெளிப்படுத்தற வாய்ப்பை உருவாக்குங்க. நம்ம குழந்தையால என்ன செய்துட முடியும்னு நெகட்டிவ்வா யோசிக்காதீங்க. சமூகத்தைப் பத்திக் கவலைப் படாதீங்க. என் மகளுக்கு சாத்தியமானது, உங்க குழந்தைகளுக்கும் சாத்தியமாகும்...’’

- ஈன்ற பொழுதின் பெரிதுவக்கிறார் அனிதா.