Election bannerElection banner
Published:Updated:

பெண்களுக்கென பிரத்யேகமாக `பிங்க்' வாக்குச்சாவடி... தேர்தல் ஆணையத்தின் புது முயற்சி!

மகளிருக்கான பிரத்யேக பூத்
மகளிருக்கான பிரத்யேக பூத்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட சட்டமன்றத் தொகுதியான பூவிருந்தவல்லியில், வரும் தேர்தலில் பெண்கள் மட்டுமே வாக்களிக்கக்கூடிய பிரத்யேக 'பிங்க்' வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது.

ஜனநாயகத் திருவிழாவாம் தேர்தலைக் கொண்டாட ஒட்டுமொத்த தமிழகமும் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. தேர்தலுக்கு மிகக் குறைவான நாள்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் பிரசார வேலைகளில் முனைப்புக் காட்டி வருகின்றன. தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்டம்தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில், பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் தொகுதி தேர்தல் அலுவலர் ப்ரீத்தி பார்கவியின் முன்னெடுப்பால், பெண்களுக்கு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிரத்யேக 'பிங்க்' வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிக் கட்டடம் பிங்க் நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டு, பலூன்கள் தொங்கவிடப்பட்டு புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறது.

வாக்குசாவடியை திறந்து வைக்கும் தேர்தல் அலுவலர்
வாக்குசாவடியை திறந்து வைக்கும் தேர்தல் அலுவலர்

நேற்றைய தினம் தொகுதியின் பெண் தேர்தல் அலுவலர்கள் அனைவரும் 'பிங்க்' நிறத்தில் உடையணிந்து பணிக்கு வந்திருந்தனர். தொகுதி தலைமைத் தேர்தல் அலுவலர் ப்ரீத்தி பார்கவி, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான இந்த பிரத்யேக வாக்குச்சாவடியை திறந்து வைத்தார்.

வாக்குச்சாவடியில், எப்படி வாக்களிப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் பெண்களுக்கு அளிக்கப்பட்டது. வாக்குச்சாவடியில் நோட்டு புத்தகங்கள், பேனா, விழிப்புணர்வு பதாகைகள் என அனைத்துப் பொருள்களும் பிங்க் நிறத்திலிருந்தது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. பூவிருந்தவல்லி தொகுதிப் பெண்கள் பலர், வாக்குச்சாவடிக்கு ஆர்வத்துடன் வந்தனர். அங்கு அவர்களுக்குத் தேர்தல் அலுவலர் ப்ரீத்தி பார்கவி 100% வாக்களிப்பின் அவசியம் குறித்தும், தேர்தலில் பெண்களின் பங்களிப்பு குறித்தும் விளக்கிக் கூறினார்.

இது குறித்துத் தேர்தல் அலுவலர் ப்ரீத்தி பார்கவி கூறுகையில், "சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். அதற்காக வாக்காளர்களையும் தயார்படுத்தி வருகிறோம். 100% வாக்களிப்பின் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வருகிறோம். மகளிர் தினத்தை முன்னிட்டு பூவிருந்தவல்லியில், வரும் சட்டமன்றத் தேர்தலில் பெண்கள் மட்டுமே ஓட்டளிக்கவிருக்கிற பிரத்யேக வாக்குச்சாவடியை அமைத்திருக்கிறோம். பெண்களைப் போற்றும் வகையில் இந்த வாக்குச்சாவடியை பிங்க் பூத்தாக அறிவித்திருக்கிறோம்.

அலுவலர்களுடன் ப்ரீத்தி பார்கவி
அலுவலர்களுடன் ப்ரீத்தி பார்கவி

கடந்த முறை சட்டமன்றத் தேர்தலில் பூவிருந்தவல்லி தொகுதியில் பெண் வாக்காளர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருந்தது. அந்த நிலை இம்முறையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம். பெண்களுக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கிக் கூறி, 100% வாக்களிப்பைச் சாத்தியப்படுத்துமாறு வலியுறுத்தி யிருக்கிறோம். இந்த முறை அதிகளவில் பெண் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வரவைக்க வேண்டும் என்ற நோக்கத்துக் காகத்தான் இந்த 'பிங்க் பூத்' அமைத்திருக்கிறோம்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு