Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

இந்த உலகில் ஒவ்வோர் உயிருக்கும் வாழ உரிமையுள்ளது.

நமக்குள்ளே...

இந்த உலகில் ஒவ்வோர் உயிருக்கும் வாழ உரிமையுள்ளது.

Published:Updated:
நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

ல்வேறு பிரச்னைகளால் குழந்தைகளுடன் அம்மாக்கள் தற்கொலை செய்துகொண்ட ஐந்து சம்பவங்கள் சமீபத்தில் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்தது அதிர்ச்சிகரமானது, துயரமானது.

குழந்தைகளுடன் அம்மா, பெற்றோர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களில் பிழைக்க வழியற்றுப்போன வறுமையும், உயிர் சுண்ட அவமானம் தரும் கடன் பிரச்னையும் முதன்மை காரணங்களாக இருக்கின்றன.

இந்த உலகில் ஒவ்வோர் உயிருக்கும் வாழ உரிமையுள்ளது. வறுமையால், வாழ்வதற்கான எல்லா வழிகளும் அடைபட்டுவிட்டதாக நினைப்பவர்கள் அரசின் சமூக நலத்துறையிடம் உணவு, உறைவிடத் தஞ்சம் பெறலாம். கடன் தொல்லையால் அவமானம், அச்சுறுத்தல் என்று மருகுபவர்கள் அங்கு வழங்கப்படும் இலவச சட்ட உதவியை பயன் படுத்திக்கொள்ளலாம்.

அரசு தவிர, வறுமையில் வாடுபவர்களுக்கு உதவ முன்வரும் சேவையுள்ளங்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன. வாழும் தெருவில், ஊரில் யாரும் உதவுவதற்கு இல்லை என்பதால் மனம்விட்டுப் போகாமல், வெளிச்சம் இருக்கும் திசைநோக்கி நகர வேண்டும். அறமே இல்லாத பாவ வழிகளில் சம்பாதிப்பவர்கள் எல்லாம் அடாவடியாக வாழும்போது, விதி விதித்த வறுமைக்கு பேருயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் அண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதுவும் பிள்ளைகளுடன் தற்கொலை என்பதில், உண்மையில் பிள்ளைகள் கொலை அல்லவா செய்யப்படுகிறார்கள்? பெற்றுவிட்டதாலேயே அவர்களைக் கொல்லவும் உரிமை கிடைத்துவிடுமா? எந்தத் துயரமும் இங்கு நிரந்தரமல்ல. அந்தச் சின்னஞ்சிறு மனிதர்கள் வளர வளர, நட்பு, கல்வி, வேலை, வெற்றி, அன்பு என்று அவர்களுக்கு இந்த வாழ்வு எத்தனை பரிசுகளை வைத்திருக்கும்? அத்தனையிலிருந்தும் அவர்களைப் பிடுங்கிக்கொண்டு அம்மாவின் கையாலேயே அவர்கள் மூச்சு முடிக்கப்படவா அவர்கள் இந்த உலகுக்கு வந்தார்கள்?

மீளவே முடியாது என்ற கடும் துயர் அழுத்தும் சூழலில் உள்ளவர்கள், குடும்பத்தோடு தேட வேண்டியது தற்கொலைக்கான வழிகளை அல்ல, வாழ்வதற்கான திசைகளை. எப்படியும் பிழைக்க வைத்து, தழைக்க வைத்து அம்மாக்களையும் பிள்ளைகளையும் இந்த உலகம் நிச்சயம் வாழ வைக்கும். அதுவே இந்தப் பூமிப்பந்தின் இயல்பு.

கணவர் இறந்துபோக, பதின் வயதிலிருந்த பெண் பிள்ளைகளுடன் நிராதரவாக நின்றார் சரசு அக்கா. வறுமையும் அவரை விரட்ட, ‘பொம்பளப் புள்ளைங்கள இந்தப் பொல்லாத உலகத்துல விட்டுட்டு சாகமாட்டேன்’ என்று ஊரின் எல்லையிலிருந்த சர்க்கார் கேணியில் மகள்களுடன் விழுந்தார். அவ்வழி சென்றவர்களால் உடனடியாகக் கவனிக்கப்பட்டு மீட்கப்பட்டார். கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தில் அவருக்கு ஒரு தற்காலிக வேலை தரப்பட்டது. பக்கத்து ஊர்க்காரர், அவர் பிள்ளைகளை விடுதியொன்றில் சேர்த்துப் படிக்க வைத்தார். இன்று சரசு அக்காவின் ஒரு மகள் செவிலியர், மற்றொருவர் ஆசிரியர் என, தங்கள் அம்மாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

சரசு அக்கா, பிள்ளைகளை கையில் பிடித்தபடி சர்க்கார் கேணியின் முன் விரக்தியின் விளிம்பில் நின்றதுபோல, நம்மைச் சுற்றியும் சிலர் இருக்கலாம். மரணத்திலிருந்து மீட்கும் வார்த்தைகளோடும் உதவிகளோடும் அவர்களுக்குக் கரம் நீட்டுவோம். தற்கொலைத் தடுப்பு ஒவ்வொருவரின் கடமை.

நமக்குள்ளே...