கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே மண்ணடி பகுதியை சேர்ந்தவர் சந்திரமதி அம்மா (77). இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார். தனியாக இருந்த அவருக்கு, வருமானம் தேவைப்பட்டதால் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டார். எர்ணாகுளத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ஜோசப், மாதம் 500 ரூபாய்க்கு வாடகைக்கு அந்த வீட்டில் குடிவந்தார். ஜோசப், தன் மனைவி சரஸ்வதி, மகள் பொன்னுவுடன் அந்த வீட்டில் வசித்து வந்தார்.

வாடகைக்கு இருந்தாலும் ஜோசப் குடும்பம், சந்திரமதியுடன் உறவினர் போன்று மிகவும் நெருக்கமாகப் பழகியது. இதற்கிடையே ஜோசப்புக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், வாடகை கொடுக்க மிகவும் சிரமப்பட்டார். அவரது நிலைமையை உணர்ந்த சந்திரமதி அம்மா, தனக்கு வாடகை பணம் வேண்டாம் எனச் சொல்லியுள்ளார். வாடகை கொடுக்காமல் ஜோசப் குடும்பத்தினர் அங்கேயே வசித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு, ஜோசப் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதன் பிறகு மகள் பொன்னுவுடன் சரஸ்வதி அந்த வீட்டில் வாடகை கொடுக்காமல் வசித்து வந்தார். சந்திரமதி அம்மாவும், சரஸ்வதியும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே சந்திரமதியின் சொத்துக்காக உறவினர்கள் சிலர் அவரை நெருங்கி வந்துள்ளனர்.

இதை உணர்ந்த சந்திரமதி அம்மா, தனது வீடு மற்றும் வீட்டுடன் சேர்ந்த 7 சென்ட் நிலத்தையும், ஜோசப்பின் மகள் பொன்னுவுக்கு இஷ்ட தானமாக எழுதிக் கொடுத்தார். சந்திரமதியின் இந்தச் செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஜோசப்பின் மகள் பொன்னு, தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார். பொன்னுவை ஐ.ஏ.எஸ் ஆக்க விரும்புவதாக சந்திரமதி அம்மா தெரிவித்தார். இதுகுறித்து சந்திரமதி அம்மா கூறும்போது, ``ஜோசப் இங்கு குடிவந்தபோது பொன்னுவுக்கு மூன்றரை வயது இருக்கும். ஜோசப் சில மாதங்கள் வாடகை தந்தார். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரின் மனைவி சரஸ்வதி வீட்டு வேலைகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. அப்போது குழந்தையாக இருந்த பொன்னுவை நான் மடியில் போட்டு வளர்த்தேன்.

பொன்னுவை கவனித்துக்கொள்வதற்காக நான் வேலைக்குச் செல்வதை நிறுத்தினேன். அதன் பிறகு, எனக்கு உடல்நிலை மோசமானது. அப்போது, வாடகை கொடுக்காமல் இருக்கும் இவர்களை வெளியே போகச் சொல்லுங்கள் எனச் சிலர் என்னிடம் கூறினார்கள். `குழந்தையுடன் இந்த அம்மாவை ரோட்டில் இறக்கி விட என்னால் முடியாது. நான் இறந்தாலும் அதைச் செய்ய மாட்டேன்’ எனச் சொன்னேன். அதனால் என்னுடன் பலருக்கும் கோபம் ஏற்பட்டது. இப்போது குழந்தை 12-ம் வகுப்பு படிக்கிறார். பொன்னுவின் அம்மாவுக்கும் வேலை செய்ய முடியாத நிலை உள்ளது.
அவர்கள் என்னிடம் இந்த வீட்டைப் பற்றி இதுவரை கேட்டது இல்லை. இப்போது எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால், பொன்னு என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார். எல்லாரும் என்னை வந்து பார்த்தாலும், எனக்கு ராத்திரி நேரத்திலும் உதவுவதற்கு பொன்னு மட்டுமே இருக்கிறார். அவர் நான் வளர்த்த குழந்தை. எனவே, அவருக்கு என் வீட்டை எழுதி வைக்க முடிவு செய்து வார்டு உறுப்பினரிடம் உதவி கேட்டேன். அவரின் வழிகாட்டுதல்படி வீட்டை பொன்னு பெயருக்கு எழுதி வைத்துள்ளேன்" என நெகிழ்ந்தார்.

இதுபற்றி சரஸ்வதி கூறும்போது, ``நாங்கள் வாடகை கொடுக்காமல் இத்தனை ஆண்டுகளாக இங்கு வசித்தோம். அம்மும்மாவை நாங்கள் நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வீட்டை எழுதிக் கொடுப்பது பற்றி எங்களிடம் அம்மும்மா எதுவும் சொல்லவில்லை. திடீரென வீட்டை மகளுக்கு எழுதிக்கொடுத்துள்ளார். அதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை" எனக் கண்கலங்கினார்.