Published:Updated:

உழைப்பாலும் திறமையாலும் மட்டுமே உயரங்களைத் தொட வேண்டும்! - தமிழிசை செளந்தரராஜன்

தமிழிசை செளந்தரராஜன்
பிரீமியம் ஸ்டோரி
தமிழிசை செளந்தரராஜன்

அம்மா... அன்பு... ஆளுநர்

உழைப்பாலும் திறமையாலும் மட்டுமே உயரங்களைத் தொட வேண்டும்! - தமிழிசை செளந்தரராஜன்

அம்மா... அன்பு... ஆளுநர்

Published:Updated:
தமிழிசை செளந்தரராஜன்
பிரீமியம் ஸ்டோரி
தமிழிசை செளந்தரராஜன்

மிழக அரசியலில் முக்கியமான ஆளுமையாகத் திகழ்ந்தவர், தமிழிசை செளந்தரராஜன். பாரம்பர்யமிக்க காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர், எதிர்நிலையில் இருக்கும் பா.ஜ.க-வில் இணைந்தார். இதனால், குடும்ப எதிர்ப்பையும் தமிழிசை எதிர்கொள்ள நேரிட்டது.மீம்ஸ், ட்ரோல் எனப் பலமுனைத் தாக்குதல்களை துணிச்சலுடன் எதிர்கொண்டவர், மாற்றுக்கட்சித் தலைவர்களும் மதிக்கும் தலைவராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டது இவரின் 20 ஆண்டுக்கால அரசியல் திறனுக்குச் சான்று. அதற்குப் பலனாக, தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பு கிடைக்க, அதிலும் திறம்படவே செயலாற்றிவருகிறார். மகளிர் தினச் சிறப்பிதழுக்காக தமிழிசையிடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆளுநராகப் பொறுப்பேற்றதும் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பைப் படிக்கும்போது எனக்குத் திருமணமானது. அடுத்தாண்டு மகன் பிறந்தான். ‘சிரமமாக இருந்தால் படிப்பை விட்டுவிடு’ எனக் குடும்பத்தினர் சொன்னார்கள். ஆனால், குழந்தையைக் கவனித்துக்கொண்டே எம்.பி.பி.எஸ் முடித்தேன். பின்னர், ரேடியாலஜி துறையில் மேற்படிப்பு படிக்க ஆசைப்பட்டேன். குடும்பத்தினர் மகப்பேறு மருத்துவம் படிக்கச் சொன்னார்கள். அதை ஏற்றுக்கொண்டு, அதில் `ஸ்கேன் சர்ஜரி சூப்பர் ஸ்பெஷலிஸ்ட்' ஆனேன். மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டே அரசியலிலும் களமிறங்கினேன். என் விருப்பத்துக்குப் பல தடைகள் வந்தாலும், அவற்றையெல்லாம் சமாளித்துக்கொண்டு, என் இலக்கையும் எதிர்கொண்டேன். இதனால் குடும்பத்திலும் சமூகத்திலும் மதிப்பு கிடைத்தது. தடைகளைக் கண்டு துவளாமல், சவால்களையெல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெற்ற உணர்வு, ஆளுநராகப் பொறுப்பேற்றதும் எனக்குள் ஏற்பட்டது.

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

‘பெண் என்பதற்காகவே, எனக்குப் பதவி கொடுங்கள்; இட ஒதுக்கீடு முறையில் வாய்ப்பு கொடுங்கள்’ எனக் கேட்பதில் எனக்கு உடன்பாடில்லை. ‘என்னால் சிறப்பாக வேலை செய்ய முடியும். என் திறமைக்கு உரிய வாய்ப்பு கொடுங்கள்’ என்றுதான் கேட்பேன். எல்லாப் பெண்களும் உழைப்பாலும் திறமையாலும் மட்டுமே உயரங்களைத் தொட வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது?

நிர்வாக ரீதியான என் எல்லா வேலை களிலும் அதிகாரிகள் குழுவின் பெரிய திட்டமிடல் இருக்கிறது. இது பணி மாற்றம்.

பலருடன் உரையாடுவது உட்பட, முன்பு அரசியல்வாதியாக என் விருப்பம்போல செயல்பட்டேன். இப்போது பாதுகாப்புக் காரணங்களுக்காக அதிகாரிகளின் நியாயமான கட்டுப்பாட்டு வரையறைக்குள் என்னை உட்படுத்திக்கொண்டு பொறுப்புணர்வுடன் பயணிக்கிறேன். இது மனநிலை மாற்றம்.

முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலரிடமும் நினைத்த நேரத்தில் பேசி, மக்களின் நலனுக்காகப் பணியாற்ற முடிகிறது. இது அதிகார மாற்றம்.

இந்த மூன்று மாற்றங்களுடன் முன்புபோலவே இப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக் கிறேன்.

என் வாழ்நாளில் மறக்க முடியாத பெண்ணான ஜெயலலிதாவுடன் அரசியல் இடைவெளியைத் தாண்டி தனிப்பட்ட நட்புடன் பழகாத வருத்தம் எனக்குள் அதிகம் இருக்கிறது.

தற்கொலை செய்துகொள்ளப் போவதாகப் பார்வையற்ற சிறுவன் ஒருவன் சமீபத்தில் என் வாட்ஸ்அப் நம்பரில் தகவல் அனுப்பினான். உடனடியாக உதவுமாறு அந்தத் தொகுதி எம்.பி-யிடம் கூறி, சிறுவனின் தற்கொலை எண்ணத்தை மாற்றினோம். இப்படி என் அதிகாரத்தைப் பயன்படுத்தி மனநிறைவுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

உங்கள் ஒருநாள் செயல்பாடுகள்...

இரவில் எத்தனை மணிக்குத் தூங்கினாலும், அதிகாலை 5 மணிக்கு எழுந்துவிடுவேன். தொலைக்காட்சியில் பக்திப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே ஒரு மணிநேரம் யோகா செய்வேன். செடிகள், மரங்கள், புல்வெளிகளுடன் பரந்துவிரிந்திருக்கும் ஆளுநர் மாளிகைக்குள் அரை மணிநேரம் நடைப்பயிற்சி. ஏழு ஆங்கில செய்தித்தாள்கள் மற்றும் சில தமிழ்ச் செய்தித்தாள்களைப் படிப்பேன். பிறகு, சிறிதுநேரம் தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பேன். அன்றாடம் நான் கலந்துகொள்ளவிருக்கும் நிகழ்ச்சியில் பேசுவதற்கான தகவல்களை அதிகாரிகள் சேகரித்துக்கொடுப்பார்கள். அதனுடன் கூடுதலாகத் தகவல்களைத் திரட்ட அரை மணிநேரம் ஒதுக்குவேன். வெளிநிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பகல் 12 மணிக்குள் ஆளுநர் மாளிகைக்கு வந்து, அலுவலகத்தில் ஒரு மணி நேரம் பார்வையாளர்களைச் சந்திப்பேன். பிறகு ஒரு மணிநேரம் அன்றாட அலுவல்களைப் பார்ப் பேன். இரண்டு மணிக்கு வீடு. சாப்பிட்டுவிட்டு, சிறிது நேரம் ஓய்வு. பின்னர், பார்வையாளர் சந்திப்பு அல்லது வெளிநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வேன். மாலை 5 - 6 மணிவரை தனி ஆசிரியரிடம் தெலுங்கு மொழி கற்றுக்கொள்கிறேன். பிறகு மெயில்களுக்குப் பதிலளித்துவிட்டு, அடுத்த நாள் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் விவாதிப்பேன். வளாகத்தினுள் இருக்கும் நரசிம்மர் கோயிலில் இரவு வழிபாடு முடித்தபின், அரை மணிநேர நடைப்பயிற்சி. குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் உரையாடல் முடிந்ததும், 1 - 2 மணிநேர புத்தக வாசிப்புக்குப் பின் உறங்கச் செல்வேன்.

முன்புபோல இப்போதும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் பழக முடிகிறதா?

நிச்சயமாக இல்லை. ஆளுநர் மாளிகைக்குள் யார் வந்தாலும் அவர்கள் உள்ளே வந்த நேரம், திரும்பிச் சென்ற நேரம், உள்ளே இருக்கும் நேரம் ஆகியவற்றைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக அதிகாரிகள் பதிவு செய்வார்கள். எனவே, யார் என்னைச் சந்திக்க வந்தாலும் மரபுக்கு உட்பட்டு அரை மணிநேரத்தில் கிளம்பிவிடுவார்கள். மிக நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே நேரிலோ, தொலைபேசியிலோ நீண்டநேரம் என்னுடன் பேசுவார்கள். அது மிகவும் அரிதாகவே நடக்கும்.

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

சந்தித்த பெண்களில் மறக்க முடியாதவர்..?

நான் மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும்கூட, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா என்மேல் மிகுந்த அன்பு வைத்திருந்தார். பா.ஜ.க-வின் தமிழகத் தலைவராக நான் அறிவிக்கப்பட்டபோது, அவரது இயல்புக்கு மாறாக எனக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார். ஒருமுறை என் மகனின் திருமணத்துக்கு அழைப்பு விடுக்க குடும்பத்தினருடன் தலைமைச் செயலகம் சென்றேன். ‘அடுத்தடுத்து பல்வேறு கூட்டங்களில் மேடம் கலந்துகொள்ள விருப்பதால், அவரை விரைவாகச் சந்தித்துவிட்டு வந்துவிடுங்கள்’ என அப்போதைய தலைமைச் செயலாளர் எங்களிடம் கூறினார். ஆனால், எங்களை வாஞ்சையுடன் வரவேற்றுப் பேசிய ஜெயலலிதா மேடம், நாங்கள் கிளம்பத் தயாரானபோதும் எங்களை உட்கார வைத்து நீண்டநேரம் உரையாடினார். ‘உங்கள் அம்மா குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, அரசியல் பணியிலும் திறம்படச் செயல் படுகிறார்’ என என் மகனிடம் கூறினார். அவர் கடைசியாக கலந்துகொண்ட மெட்ரோ ரயில் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் நானும் கலந்துகொண்டேன். அரசுப் பணியில் இல்லாத நான், அரசு நிகழ்ச்சியின் மேடையில் அமரக்கூடாது. ஆனால், மேடைக்குக் கீழே உட்கார்ந்துகொண்டிருந்த என்னை மேடையில் உட்காரவைத்து அழகு பார்த்தார். என் வாழ்நாளில் மறக்க முடியாத பெண்ணான அவருடன் அரசியல் இடைவெளியைத் தாண்டி தனிப்பட்ட நட்புடன் பழகாத வருத்தம் எனக்குள் அதிகம் இருக்கிறது.

இப்போது உங்களைப் பற்றி மீம்ஸ் அதிகம் வருவதில்லையே...

(குலுங்கிச் சிரிக்கிறார்...) பெண், ஒரு கட்சியின் தலைவராகவும் ஆளுமையாகவும் உருவாவதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் தாம் என்னைப் பற்றித் தவறாக மீம்ஸ் பதிவிட்டார்கள். தன்னம்பிக்கையைக் குலைக்கும் வகையில், என் உயரம், நிறம், தலைமுடி குறித்தெல்லாம் மோசமாகப் பதிவிட்டார்கள். இதுகுறித்தெல்லாம் என் கணவர் சிலநேரம் வருத்தப்படுவார். அவரிடம், ‘என்னைச் சுருட்டைத் தலை என்றுதான் கிண்டல் செய்வார்கள். ஆனால், ஊரார் பணத்தைச் சுருட்டினேன் என யாராலும் கிண்டல் செய்ய முடியாது. நான் குள்ளமாக இருந்தாலும், என்னைப் பற்றி வசை பேசுபவர்களைவிடவும் தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக சமூகத்தில் உயரமான இடத்தில் இருக்கிறேன். எனவே, இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டாம்’ எனக் கூறி புன்னகையுடன் கடந்துபோவேன். விமர்சனங்கள் உட்பட தடைகள் பலவற்றையும் துணிச்சலுடன் கடந்தேன். இப்போது தெலங்கானா மக்கள் என்னைப் பெருமைப்படுத்தி மீம்ஸ் பதிவிடுகிறார்கள்!

ஆளுநர் ஆனதும் ஹேர் ஸ்டைலை மாற்றிவிட்டீர்களே...

அது சுவாரஸ்யமான கதை. ஒருநாள் திருவள்ளூர் மாவட்டத்தில் நடக்கவிருந்த கட்சி நிகழ்ச்சிக்காக கிளம்பத் தயாரானபோது கனமழை. வீட்டிலேயே இருந்தேன். அப்போது என் தோழி ஒருவர் யதேச்சையாக வீட்டுக்கு வந்தார். மருத்துவரான அவர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று, அவரின் நீண்டகால ஆசைப்படி என் முடியை ஸ்ட்ரெய்ட்னிங் செய்துவிட்டார். அதற்கு அடுத்த இரண்டாம் நாள் எனக்கு ஆளுநர் பொறுப்பு வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. எனவே, ஆளுநர் ஆனதுக்கும் என் ஹேர் ஸ்டைல் மாறியதுக்கும் சம்பந்தமில்லை. ஸ்ட்ரெய்ட்னிங் செய்த முடி மீண்டும் இயல்புநிலைக்கு மாறுவதற்கு ஓராண்டு ஆகும். சுருட்டை முடியைத்தான் நானும் விரும்புகிறேன். அதை இன்னும் சில மாதங்களில் மீண்டும் பார்க்கலாம்!

ஆளுநர் ஆனதால் உங்களால் இனி அரசியல் பயணத்தைத் தொடர முடியாது என்ற கருத்து எழுந்ததே...

சட்டமன்ற உறுப்பினராகி மக்கள் பிரதிநிதி யாக ஆசைப்பட்டேன். ஆனால், இப்போது சட்டமன்றத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தெருக்கோடியில் கொடி ஏற்றிக்கொண்டிருந்த நிலையில், கடந்த குடியரசு தினத்தில் ஒரு மாநிலத்தின் சார்பில் கொடி ஏற்றினேன். நாளைய தினம் குறித்து யோசித்து, இன்றைய தினத்தின் மகிழ்ச்சியை இழக்க நான் தயாரில்லை. என் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் இறைவன் வழிநடத்துகிறார். என் எதிர்காலத்தையும் அவரே முடிவு செய்வார். அது எதுவானாலும் ஏற்றுக்கொள்வேன்.

உங்கள் பதவியேற்பு விழாவில் அப்பா கலந்துகொண்டு வாழ்த்திய தருணம் குறித்து...

அப்பாவின் எதிர்ப்பை மீறி என் கொள்கைப்படி பா.ஜ.க-வில் இயங்கினாலும், அவரைக் காயப்படுத்திவிட்ட ரணம் என் மனத்தில் அதிகம் இருந்தது. எனவே, அவரின் காலத்துக்குள் அவரே பெருமைப்படும் வகையில் நான் பயணித்த கட்சியினால் நல்ல நிலைக்கு வர வேண்டும் என நினைத்தேன். அதன்படி நான் ஆளுநராகப் பதவியேற்றபோது அப்பா கலந்துகொண்டு என்னை மனதார வாழ்த்தினார். நானும் மனதார சந்தோஷப் பட்டேன். அதேநேரம் அவர் காங்கிரஸ்காரர். நான் பா.ஜ.க கட்சியிலிருந்து ஆளுநர் ஆனவள். இருவரும் எதிரெதிர் திரையில் பயணிப்பதால், இப்போதுவரை எங்களுக்குள் தனிப்பட்ட அன்பு இல்லை.

தமிழ்நாட்டுடனான தற்காலிகப் பிரிவு பற்றி...

தமிழக மக்களுடன் நேரடித் தொடர்பில் இல்லாத வருத்தம் அதிகம் இருக்கிறது. ஆனால், தமிழக மக்களின் பிரதிநிதியாகவே தெலங்கானாவில் பணியாற்றுகிறேன். அந்த வகையில் பெருமையாக இருக்கிறது. ஆளுநர் ஒருவர், மாதத்துக்கு ஆறு நாள்கள் மட்டுமே பணியாற்றும் மாநிலத்தைத் தாண்டி செல்ல வேண்டும். அந்த வரையறைக்கு உட்பட்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் தமிழகம் வந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism