Published:Updated:

பா.ஜ.க மூலம் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவேன்! - சந்தன வீரப்பன் மகள்

இளம் புயல்

பிரீமியம் ஸ்டோரி

ந்தனக் கடத்தல் வீரப்பன் தமிழகம், கர்நாடகம், கேரளம் என மூன்று மாநில காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். அவர் மறைந்து 16 வருடங்கள் ஆகியும் இன்னும் அவரைப் பற்றிய தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. வீரப்பனின் மூத்த மகள் வித்யா வீரப்பன் கடந்த பிப்ரவரி மாதம் பா.ஜ.க-வில் இணைந்தார். தற்போது அவருக்கு பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இத்தருணத்தில் கிருஷ்ணகிரியில் உள்ள அவரைச் சந்தித்து பேசினோம்...

வீரப்பன்
வீரப்பன்

வீரப்பனின் மகளாக நீங்களும், உங்கள் குடும்பமும் கடந்து வந்த பாதை எத்தகையது?

அம்மா முத்துலட்சுமி போலீஸ், கோர்ட், கேஸுன்னு அலைந்துகொண்டிருந்தார். என்னையும், என் தங்கை பிரபா விஜயலட்சுமியும் குழந்தைகளாக இருக்கும்போதே வெவ்வேறு ஹாஸ்டலில் சேர்த்துட்டாங்க. அம்மா, அப்பா, பிள்ளைகள் என குடும்பமாக ஒரு நாள்கூட இருந்ததில்லை. எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது அம்மாவைப் பார்த்தேன். 14 வயதில்தான் எனக்கு ஒரு தங்கை இருப்பது தெரியும். கஷ்டமென்றால் என்னவென்று தெரியாத குழந்தைப் பருவத்திலேயே பல கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறோம்.

ஆனால், நான் வளர்ந்த இடத்தில் அன்பாகவும், வீரப்பன் மகள் என்ற அக்கறையோடும் என்னைப் பார்த்துக்கொண்டார்கள். எங்க கிராமத்தில் அப்பாவுக்குக் கொடுக்கும் ராஜ மரியாதை எனக்கும் கொடுப்பார்கள். நான் யார் வீட்டுக்குள் புகுந்து எதை எடுத்து சாப்பிட்டாலும் கேட்க மாட்டார்கள். அன்பாக அரவணைப்பார்கள்.

வித்யா வீரப்பன்
வித்யா வீரப்பன்

முதன்முதலில் உங்கள் அப்பா வீரப்பன் மூன்று மாநில காவல்துறையால் தேடப்படுபவர் என்பதை எந்த வயதில் தெரியவந்தது. அப்போது உங்களுக்கு என்ன மாதிரியான உணர்வு ஏற்பட்டது?

அப்பாவைக் காவல்துறை தேடுகிறது என்பதெல்லாம் தெரியாது. என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் அப்பா நல்லவர் என்று உணர்த்தினார்கள். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அம்மா காவல் துறையால்படும் துன்பங்களைப் பார்த்து தெரிந்துகொண்டேன். அப்பா சூழ்நிலைக் காரணமாக தவறு செய்திருப்பதும், அவருக்குப் பிரச்னைகள் இருப்பதையும் உணர்ந்து கொண்டேன். எல்லோரையும் போல பெற்றோர் என்னுடன் இல்லையே என்கின்ற ஏக்கம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது.

உங்க அப்பாவை நேரில் பார்த்திருக்கிறீர்களா? அவரிடம் ஏதாவது பேச ஆசைப்பட்டிருக்கிறீர்களா?

நான் கோபிநத்தம் கிராமத்தில் தாத்தா பாட்டியோடு இருந்தபோது ஒரு நாள் அந்தி சாய்ந்த மாலைபொழுதில் அப்பாவைக் காட்டுக்குள் பார்த்தேன். அப்போது விவரம் தெரியாத வயசு. அப்பா என்னைப் பார்த்து கண் கலங்கியதோடு என்னை வாரி அணைத்துக் கொஞ்சினார். ‘நீ நன்றாகப் படித்து டாக்டர் ஆக வேண்டும். கஷ்டப்படும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்’ என்று கூறினார். அது இன்றளவும் பசு மரத்து ஆணியைப் போல மனத்தில் பதிந்திருக்கு. எல்லா பெண்களுக்கும் அப்பாதான் உயிர், உலகம். எனக்கும் எங்க அப்பாவென்றால் ரொம்ப பிரியம். ஒரு மகளாக அவரிடம் நிறையா பேச ஆசைப்பட்டேன். ஆனால் அது நிறைவேறவில்லை.

வித்யா வீரப்பன்
வித்யா வீரப்பன்

அம்மா தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தங்கை வி.சி.க., நீங்கள் பா.ஜ.க-வில் இருக்கிறீர்களே?

தங்கை வி.சி.க-வில் இல்லை. அந்தக் கட்சியின் தலைவரை என் தங்கை சந்தித்ததால் அந்தக் கட்சியில் சேர்ந்ததாகத் தவறாகப் பதிவு செய்துவிட்டனர். அம்மாவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியிலிருந்து அழைப்பு வந்ததால் அந்தக் கட்சிக்குச் சென்றார். பொன்.ராதாகிருஷ்ணன் அய்யாவும், என் உறவினர் சாய் சுரேஷும் அழைத்ததால் நான் பா.ஜ.க-வில் இணைந்தேன்.

வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் பல அப்பாவி குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இன்றளவும் பெரும் துன்பத்துக்கிடையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க மூலம் அவர்களுக்கு நல்லது செய்து என் அப்பாவின் ஆசையும் நிறைவேற்ற முடியும்.

அம்மாவுக்கும் பிள்ளைகளான உங்களுக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்னை?

சராசரி குடும்பத்தைப் போல எங்க குடும்பத்திலும் காதல் திருமணம் நடந்ததால் அம்மாவுக்கும் எங்களுக்கும் ஆரம்பத்தில் பிரச்னை இருந்தது உண்மை. தற்போது நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை.

உங்கள் தந்தை வன்னிய சமுதாயத்தை நேசித்தவர். அதிக வன்னியர்கள் இருக்கும் பா.ம.க-வில் சேராமல் பா.ஜ.க-வில் சேர்ந்திருக்கிறீர்களே...

எங்கப்பா வன்னியர்களை மட்டுமல்ல அனைத்து சமுதாயத்தினரையும் நேசித்தவர். பா.ம.க-வில் வன்னியர்கள் மட்டுமல்ல அனைத்து சமுதாயத்தினரும் இருக்கிறார்கள். பா.ம.க, பா.ஜ.க-வோடு கூட்டணியில் இணைந்து நல்ல பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் பா.ம.க-வில் சேர்ந்திருந்தால் வெறும் பதவி மட்டுமே கிடைத்திருக்கும். ஆனால், நாடு முழுவதும் பவர்ஃபுல் கட்சியாகத் திகழும் பா.ஜ.க-வில் இணைந்தால் என் சமுதாயத்துக்கு ஏதாவது நல்லது செய்ய முடியும் என்பதால் பா.ஜ.க-வில் இணைந்தேன்.

வன்னியர் சங்க தலைவர் குரு மரணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எங்கப்பாவைப் போன்று ஜெ.குருவும் பெரிய வீரர் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். வன்னிய சமுதாய மக்களுக்காகப் பாடுபட்டவர். அவருடைய மரணம் பெரிய இழப்பு. குருவின் வாரிசுதாரர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் நன்றாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

தமிழ்ச் தேசிய சிந்தனையாளரான உங்கள் தந்தை உயிரோடு இருந்திருந்தால் நீங்கள் பா.ஜ.க-வில் இருப்பதை ஏற்றுக்கொண்டிருப்பாரா?

அப்பா தமிழர்கள்மீது மிகுந்த பற்று வைத்திருந்தார். அதேநேரத்தில் சாதி, மொழி, மதம் கடந்து அனைத்து மக்களையும் நேசித்தார். பா.ஜ.க-வும் இனம், மொழி கடந்து மக்களுக்கு சேவை செய்கிறது. நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து தரப்பு மக்களையும் நேசிக்கிறார். ஒரு தேசிய கட்சியில் இணைந்து தேச மக்களுக்காக சேவை செய்வதை அப்பா நிச்சயம் வரவேற்று இருப்பார்.

பா.ஜ.க-வில் உங்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுத்திருப்பதாக நினைக்கிறீர்களா?

முதலில் பா.ஜ.க சேவகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பா.ஜ.க-வில் பல வருடங்களாகப் பலரும் சேவை செய்து வருகிறார்கள். அவர்களுடைய தியாகத்தை நான் அறிவேன். அவர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கட்சியில் சேர்ந்த கொஞ்ச காலத்திலேயே மாநில இளைஞரணி துணைத் தலைவி பதவி கொடுத்திருக்கிறார்கள். கட்சி தலைமையின் நம்பிக்கைக்கேற்ப தமிழகத்தில் பா.ஜ.க-வை வளர்க்க அயராது பாடுபடுவேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு