Published:Updated:

பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்துங்கள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்துங்கள்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஐந்து டிரில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 375 லட்சம் கோடி), அடுத்த 15 ஆண்டுகளில் 10 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக நம் இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்த நமது மத்திய அரசாங்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த வளர்ச்சியை அடையத் தேவையான அடிப்படையான விஷயத்தில் இன்னும்கூட கவனம் செலுத்தாமலே இருக்கிறது என்பது வருத்தம் தரும் செய்தி.

இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE), சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்படி, கொரோனாவுக்குப்பின் வேலை இழந்த பெண்களில் பெரும்பகுதியினர் மீண்டும் வேலைத் தேடிப் பெருவதில் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் எனத் தெரிய வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் வேலைவாய்ப்பில் 18.3% சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்களிப்பு, கடந்த 2021 மூன்றாம் காலாண்டில் 9.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இது, 2019-ம் மூன்றாம் காலாண்டில்கூட 10.9 சதவிகிதமாக இருந்தது.

கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் உள்ள பெண்கள்தான் வேலை வாய்ப்பில் பங்கெடுத்துக்கொள்ள முடியாத நிலை அதிகம் இருக்கிறது. 2019-20 மூன்றாம் காலாண்டில் நகர்ப்புற பெண்கள் வேலைவாய்ப்பில் பங்கெடுப்பு 9.5 சதவிகிதமாக இருந்தது, 2021-ல் இதே காலத்தில் 7.2 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்களைப் பார்த்தபின்பும், மத்திய அரசாங்கம் சும்மா இருந்துவிடக் கூடாது. வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக இறங்குவதுடன், பெண்களுக்கு அதிகளவில் வேலை கிடைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இதற்கு முதலில் தேசிய அளவில் பெண்களிடம் ஒரு சர்வே செய்து, வேலைவாய்ப்பில் பங்கெடுக்க அவர்களுக்குத் தடையாக இருப்பது என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். அத்துடன் தொழில் நிறுவனங்கள் இன்னும் அதிகமான பெண்களுக்கு வேலை தருவதில் உள்ள பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டுபிடிக்க வேண்டும். இதற்கென சில சலுகைகளை அளித்தாலும் அது சரியான நடவடிக்கையாகவே இருக்கும்.

நம் நாட்டில் வேலைவாய்ப்பில் ஆண்களின் பங்களிப்பு 67 சதவிகிதத்துக்குமேல் இருக்கும்போது, பெண்களின் பங்களிப்பு 10 சதவிகிதத்துக்கு உள்ளாக இருப்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பு 40 சதவிகிதத்துக்குமேல் இருக்கும்போது, நாம் 9.4 சதவிகிதமாக இருப்பது நிச்சயம் நமக்கு பெருமையான விஷயமாக இருக்காது.

கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்பு என எந்தத் துறையாக இருந்தாலும் பெண் களின் பங்கேற்பு கணிசமான அளவில் இருந்தால்தான் உண்மையான வளர்ச்சி ஏற்படும். இதைப் புரிந்துகொண்டு, வேலைவாய்ப்பில் பெண்கள் அதிகளவில் பங்கேற்கத் தேவையான நடவடிக்கைகளை நமது மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், 5 டிரில்லியன் டாலர், 10 டிரில்லியன் டாலர் என்ப தெல்லாம் வாய்ஜம்ப வார்த்தைகளாக இருக்குமே அன்றி, உண்மையான வளர்ச்சியைக் கொண்டுவருவதாக இருக்காது!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism