22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

பெண் வேடம், ஆண் வேடம்

புத்துயிர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
புத்துயிர்ப்பு

புத்துயிர்ப்பு

‘உங்கள் வீட்டிலுள்ள ஓர் ஆண் மகனை வெளியில் அனுப்புங்கள். அப்போதுதான் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்தும் எதிரிகளிடமிருந்தும் சீனாவைக் காப்பாற்ற முடியும். இது வேண்டுகோள் அல்ல, உத்தரவு!’ - ஒவ்வொரு வீட்டின் முன்பும் தண்டோரா அடிக்கப்பட்டது. வீட்டுக்குள் துணி நெய்துகொண்டிருந்தபடியே முலான் அசையாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். முகத்தில் சோகமும் ஆற்றாமையும் படர்ந்திருந்தது.

ஆற்றல்மிக்க ஒரு படைத்தலைவர் எனக்கருகில் படுத்துக்கிடக்கிறார். ஆனால், என்ன செய்வது? தளர்ந்துபோய் கிடக்கும் உடலை வைத்துக்கொண்டு அப்பாவால் என்ன செய்ய முடியும்? இந்த அறிவிப்புகூட அவர் காதுகளுக்குள் நுழைந்திருக்குமா, அதை அவர் உள்வாங்கியிருப்பாரா என்று தெரியவில்லை. அப்பாவை விட்டால் தம்பிதான். அவனோ குழந்தை. இதை அதிகாரிகளுக்கு விளக்கவேண்டிய அவசியம் இராது. அவர்களுக்கு எங்கள் குடும்பம் தெரியும்.

இருந்தாலும் என் நாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக்கிடக்கும்போது நான் வீட்டுக்குள் அமர்ந்து கதவை நன்றாகச் சாத்திக்கொண்டு வண்ண வண்ணத் துணிகளை முடிவின்றி நெய்து கொண்டிருக்க வேண்டும் என்பதும் ஒரு வகையான அநீதிதான், இல்லையா? நான் மட்டும் ஓர் ஆணாக இருந்திருந்தால் இந்நேரம் வாளோடு வெளியில் பாய்ந்து சென்றிருப்பேன் இல்லையா? `போர்த்தொழில் ஆண்களுக்கு மட்டுமே' என்றொரு விதியை ஏன் அப்பா நீங்களும் சீனாவும் உலகமும் கடைப்பிடிக்க வேண்டும்? இந்த விதிதானே நம் வீட்டிலிருந்து ஒரு வீரர் உருவாவதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது? இன்னும் எத்தனையெத்தனை வீடுகளில் என்னைப் போல பெண் பிள்ளைகள் செய்வதறியாமல் குமைந்துகொண்டு கிடக் கிறார்களோ? ஏதோ ஒரு மாயம் நிகழ்ந்து பெண்கள் எல்லோரும் ஆண்களாக மாறிவிட முடிந்தால் எப்படி இருக்கும்!

இந்த மாயக் கற்பனையில் சில நிமிடங்களில் தோய்ந்துகிடந்த முலான் பளிச்சென்று ஒரு யோசனையுடன் நிஜ உலகுக்கு வந்து சேர்ந்தார். நான் விரும்பிய மாயத்தை ஏற்படுத்த யாருமில்லை என்னும்போது அதை ஏன் நானே நிகழ்த்திப் பார்க்கக் கூடாது? நெசவு இயந்திரத்துக்கு ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு அப்பாவின் பழைய உடைகளை எடுத்து உதறி அணிந்துகொண்டார் முலான். தூசி படிந்துகிடந்த அப்பாவின் வாளைச் சுத்தம் செய்து பளபளப்பாக்கினார். சுவரின் மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த நீண்ட ஈட்டியை எடுத்துக் கொண்டார். ஆயுதம் தரித்து மிடுக்கோடு அரண்மனைக்குச் சென்ற அந்த வீரர், கேள்விகளின்றி இணைத்துக் கொள்ளப்பட்டார்.

முலானை உருவாக்கியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால், அவருடைய சாகசக் கதை நான்காம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில் சீனாவில் தோன்றியது என்பதை அறிய முடிகிறது. நாட்டுப்புறக் கதை வடிவில் முதலில் அறிமுகமான முலான் விரைவில் புகழ்பெற்று, சீன இலக்கிய வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு பாத்திரமாக மாறிப் போனார். பாடல், கவிதை, ஓவியம், சித்திரக் கதை, நாடகம், புதினம் என்று பல வடிவங்கள் எடுத்தார் முலான். சிறியதும் பெரியதுமாகப் பல்வேறு மாறுதல்களுடன் முலானின் கதை பலமுறை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. சீனாவுக்கு வெளியிலும் முலானின் கதை பயணம் செய்தது. 12-ம் நூற்றாண்டில் முலான் ஒரு சீன அமெரிக்கப் பெண்ணாக மாறியதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் அவரை மிகவும் பிடித்துப்போனது.

முலானின் குடும்பம் எப்படிப்பட்டது? அவர் வாழ்ந்த காலகட்டம் எப்படி யிருந்தது? முலான் எப்படித் தேச பக்தி மிக்கவராகத் திகழ்ந்தார்? முலானால் எப்படிப் போர்க்களத்தில் வில்லையும் வாளையும் ஈட்டியையும் அநாயசமாகக் கையாள முடிந்தது? முன்கூட்டியே போர்ப் பயிற்சி ஏதேனும் எடுத்துக்கொண் டிருந்தாரா? முலான் எப்படிப்பட்டவர்? அவர் இயல்பு என்ன? அவருக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது? அவர் காதலித்தாரா? கவிதை பாடுவாரா? அவர் எப்படிப்பட்ட உடைகள் அணிந்தார்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விடையளித்தார்கள். எங்கெல்லாம் இடைவெளிகள் தோன்றுகின்றனவோ அங்கெல்லாம் வளமான, உற்சாகமூட்டும் கற்பனையைக் கொண்டு அவர்கள் நிரப்பிக் கொண்டார்கள். ஒரு பெண்ணாகப் பிறந்தும் ஆண் வேடம் தரித்து எதிரிகளை அசாதாரண வீரத்துடன் அழித்தொழித்த முலான் மொழி கடந்து, நிலம் கடந்து, காலம் கடந்து இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்ல, முலானின் தாக்கத் துக்குப் பல பெண்கள் தெரிந்தும் தெரியாமலும் ஆளாக்கியிருக்கிறார்கள் என்பதை வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளமுடிகிறது என்கிறார் இலங்கையைச் சேர்ந்த ஆய்வாளரான குமாரி ஜெயவர்த்தனா.

வங்காள மாகாணத்தில் (இப்போதைய பங்களாதேஷ்) அமைந்திருந்த பிரிட்ட னுக்குச் சொந்தமான ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றுவதற்காக 1930-ம் ஆண்டு, நடைபெற்ற போராட்டம் சிட்டகாங் எழுச்சி என்று நினைவுகூரப்படுகிறது. ஒரு பெண்ணாக அதில் கலந்துகொள்ள இயலாது என்பது தெரிந்ததும் வங்காளப் புரட்சியாளரான கல்பனா தத் ஆண் வேடம்பூண்டு களத்துக்குச் சென்றார்.

இவர் முலானின் கதையைப் படித்திருந்தாரா? ஒரு சட்டையை எடுத்து அணிந்துகொள்ளும்போது அவர் முலானை நினைத்துப் பார்த்திருப்பாரா? தெரியவில்லை. ஆனால், முலான் ஆயுதம் சுமந்ததற்கும் கல்பனா ஆயுதம் சுமந்ததற்கும் காரணம் ஒன்றுதான்.

`என் தேசத்தை நான் விரும்புகிறேன். என் மக்களுக்கு ஆபத்து நேரும்போது என்னால் அமைதியாக வீட்டுக்குள் அமர்ந்திருக்க முடியவில்லை. என் மனம் கொந்தளிக்கிறது. என் இயலாமை என்னைச் சுடுகிறது. இந்த இயலாமை உண்மையில் என்னுடையதல்ல; என்மீது திணிக்கப்பட்டதுதான் என்பதை உணரும்போது சினம் அதிகரிக்கிறது. பாலினம் சார்ந்த வேலைப் பிரிவினை என் ஆற்றலையும் கனவையும் முறுக்கி, என் சிறகுகளைப் பிய்த்துப்போடுகிறது. ஓர் ஆணாக மாறுவதுதான் என் முன்னிருக்கும் ஒரே வழி. எனவே அதை நான் கையாள்கிறேன்.'

சீனாவைச் சேர்ந்த எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான ஜியு ஜின் மேல்படிப்புக்காக ஜப்பான் சென்றிருந்த போது அங்கிருந்த புரட்சிக் குழுக்களோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். சீனாவில் நிலவிய கொடுங்கோன் முடியாட்சியை வீழ்த்தும் நோக்கத்தோடு ஜப்பானில் பலர் ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்ததைக் கண்ட ஜியு ஜின் தன்னையும் ஆர்வத்தோடு அதில் ஈடுபடுத்திக்கொண்டார். சன் யாட் சென் தலைமை தாங்கிய படையில் இணைந்துகொண்ட ஜியு ஜின், பின்னர் கைது செய்யப்பட்டு மரண தண்டனைக்கு ஆளானார். சீனாவின் தேசிய கதாநாயகியாக இன்றும் கருதப்படும் ஜியு ஜின் ஜப்பானில் இருந்த வரை ஆண் உடைகளையே விரும்பி அணிந்துகொண்டார்.

முலானின் கதையால் ஈர்க்கப் பட்டவர் ஜியு ஜின் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அவர் தன்னை ஆணைப் போல காண்பித்துக்கொண்டார் என்றாலும் முலானைப் போல, கல்பனாவைப் போல அவர் அந்த உடைக்குள் தன்னை ஒளித்துக்கொள்ள முயற்சி செய்யவில்லை. ஒரு பெண்ணாகத் தோற்றமளிக்க விரும்பாததால் அவர் ஆண் வேடம் பூணவில்லை.

ஆண் வேடம் அதன் வெளித்தோற்றத்திலும் உள்ளடக்கத்திலும் எப்படி இருக்கிறது என்பதை அவர் தெரிந்துகொள்ள விரும்பினார் என்று சொல்லலாம். `நீ ஏன் இப்படி விசித்திரமாகத் தோன்றுகிறாய் ஜியு ஜின்' என்று மற்றவர்கள் முகம் சுளிக்கும்போது, `நான் ஏன் இப்படித் தோன்றக் கூடாது நண்பர்களே' என்று எதிர்க்கேள்வியொன்றை வீசுவதற்காகவே அவர் ஆண் வேடம் ஏற்றார்... தனது ஆண் வேடத்தையே ஓர் ஆயுதமாக ஜியு ஜின் பாவித்தார் என்று கருதுவதற்கும் இடமிருக்கிறது. அந்த ஆயுதத்தை அவர் சமூகத்தின் மனசாட்சிக்கு முன்பு உயர்த்தி சில கேள்விகளைக் கேட்டார்.

`உங்கள் கண்களுக்கு நான் என்னவாகத் தெரிகிறேன்? நான் அணிந்திருக்கும் வேடம் உண்மையில் எது? ஆண் வேடம் என்பீர்கள். இல்லை என்பேன் நான். நான் பிறந்த அடுத்த நொடியே எனக்குப் பெண் வேடம் அணிவித்துவிட்டனர். அந்த வேடத்துக்குள்தான் இத்தனைக் காலம் கைகளையும் கால்களையும் உடலையும் அடக்கிக்கொண்டு மர வட்டை போலச் சுருங்கிக்கிடந்தேன். அது வேடமல்ல, சிறை; வெளியில் வா என்று ஒவ்வொருமுறை என் கனவு உந்தித் தள்ளும்போதும் அச்சத்துடன் என்னை இன்னமும் உள்ளே இழுத்துக்கொள்வேன். இந்த அச்சம் மறைவதற்கு நீண்டகாலம் பிடித்தது. வேடத்தைக் கலைத்துக்கொள்ள அதைவிடவும் நீண்டகாலம் பிடித்தது.

ஆண்களின் புத்தகங்களைப் படித்தேன். ஆண்களின் போர்த்தொழில் பயின்றேன். ஆண்களின் அரசியலை, ஆண்களின் தத்துவத்தை, ஆண்களின் கோபத்தை, ஆண்களின் கனவுகளை வளர்த்துக்கொண்டேன். முலானைப் போலன்றி என்னை, என் அடையாளத்தை மறைத்துக் கொள்ளாமல் ஒரு பெண்ணாகவே இவையனைத்தையும் செய்தேன். செய்தபோது எனக்கொன்று புரிந்தது. ஆண்களின் கனவுகள், ஆண்களின் புத்தகங்கள், ஆண்களின் பணிகள், ஆண்களின் சிந்தனைகள் என்றொன்று இந்த உலகில் இல்லை. இவையெல்லாம் போலி வேடங்கள்.

பெண் வேடம், ஆண் வேடம்

ஆண்கள் தமக்கென்று உருவாக்கிக்கொண் டவை. தாம் மட்டும் அணிந்துகொண்டவை. இவையெல்லாம் உனக்குக் கிடையாது என்று சொல்லிவிட்டு பெண் வேடத்தை நமக்கு அளித்துவிட்டார்கள் அவர்கள். நாமும் அந்த வேடத்தை விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

நான் என்பது எனக்கு வலுக்கட்டாயமாக அணிவிக்கப்பட்டுள்ள வேடமல்ல. வாழ்க்கை என்பது நாடகமல்ல. நான் அதில் ஒரு கதாபாத்திரமும் அல்ல. நானொரு பெண். நான் ஓர் உயிர். எனக்கென்று ஓர் அகம் இருக்கிறது. அந்த அகத்தை என் ஆடையைக்கொண்டு முடிவு செய்யாதீர்கள்! அந்த அகத்தை எந்த வேடத்துக்குள்ளும் அடைக்காதீர்கள்!'

ஜான்சி ராணி, 1857-ம் ஆண்டு நடைபெற்ற முதல் விடுதலைப் போரில் தனது குதிரையின்மீது ஏறியமர்ந்து தன் படை வீரர்களை வழிநடத்திச் சென்றதைக்கண்ட கேனிங் பிரபு என்னும் ஆங்கிலேயர் இப்படி பதிவு செய்தார்... ‘அவள் ஓர் ஆணைப் போல (தலைப்பாகை) உடுத்தியிருந்தார். ஆணைப் போலவே சவாரியும் செய்தார்.’

பன்னிரண்டு ஆண்டுகள் பல்வேறு போர்க்களங்களைக் கண்ட பிறகு முலான் ஒரு நாள் வீடு திரும்பினார். அவர் குடும்பம் தீராத வியப்போடு அவரை வரவேற்றுக் கொண்டாடியது. முலான் விவரித்த சாகசங்களை அவர்களால் நம்பவே முடியவில்லை. பிறகு முலான் ஆண் வேடத்தைக் கலைத்து தன் உடையை அணிந்துகொண்டார். வாசலில் காத்திருந்த குதிரையில் தாவி ஏறிக்கொண்டார். `போர் முடிந்துவிட்டதே, பிறகெங்கே போகிறாய் முலான்' என்று கேட்ட அப்பாவிடம் புன்னகையோடு சொன்னார் முலான், ‘என்னை ஓர் ஆண் என்று இத்தனை ஆண்டுகளாக நம்பிக்கொண்டிருந்த வீரர்களிடம் நான் உண்மையில் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டாமா!'