Published:Updated:

“அந்தக் கவிஞரைப் பற்றி எழுதியிருக்கிறீர்களா?” - ‘மீ டூ’ புத்தகமும் சாந்தகுமாரியின் போராட்டமும்!

சாந்தகுமாரி
பிரீமியம் ஸ்டோரி
சாந்தகுமாரி

பாதிக்கப்பட்ட பெண்களிடம் ‘ஆதாரம் எங்கே’ என்று இந்தச் சமூகம் கை நீட்டினால், அந்தப் பெண்களால் கையறு நிலையில் மட்டுமே நிற்க முடியும்.

“அந்தக் கவிஞரைப் பற்றி எழுதியிருக்கிறீர்களா?” - ‘மீ டூ’ புத்தகமும் சாந்தகுமாரியின் போராட்டமும்!

பாதிக்கப்பட்ட பெண்களிடம் ‘ஆதாரம் எங்கே’ என்று இந்தச் சமூகம் கை நீட்டினால், அந்தப் பெண்களால் கையறு நிலையில் மட்டுமே நிற்க முடியும்.

Published:Updated:
சாந்தகுமாரி
பிரீமியம் ஸ்டோரி
சாந்தகுமாரி

மீ டூ தொடர்பான இந்தியாவின் முதல் புத்தகம் தமிழில் வெளிவந்திருக்கிறது. பணியிடங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்தில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்ற வழக்கறிஞர் சாந்தகுமாரி, சமீபத்தில் சென்னையில் தன்னுடைய ‘மீ டூ’ புத்தகத்தை வெளியிட்டார். அவரிடம் பேசினோம்...

``கவிஞர் வைரமுத்து மீது, பாடகி சின்மயி முன்வைத்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றசாட்டுகள், மீ டூ இயக்கமாக மாறி காரசாரமான விவாதங்களைப் பொதுவெளியில் ஏற்படுத்திய நேரமது. புகார் அளித்த பெண்ணின் குற்றச்சாட்டையும் கருத்தையும் விமர்சிக் காமல், அவருடைய பிறப்பு, ஒழுக்கம், ஆடை அணியும் விதம் ஆகியவற்றை விமர்சனம் செய்தார்கள். அந்தச் சம்பவம்தான் இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு என்னைத் தூண்டியது.

“அந்தக் கவிஞரைப் பற்றி எழுதியிருக்கிறீர்களா?” - ‘மீ டூ’ புத்தகமும் சாந்தகுமாரியின் போராட்டமும்!

‘`பலரும், ‘மீ டூ இயக்கம், வேஸ்ட் இயக்கம். பொம்பளைங்க ஒண்ணா சேர்ந்துகிட்டு ஆம்பளைங் களுக்கு எதிரா பேசுறாங்க’ என்றே பேசுகிறார்கள். ஆனால், அது ஆண்களுக்கு எதிரான இயக்கம் அல்ல; அவர்களில் மோசமான நடத்தை உள்ளவர்களுக்கு எதிரான இயக்கம். என் புத்தகத்தை வாசித்தால் அந்த உண்மை புரியும்’’ என்றவர், ‘மீ டூ’ புத்தகம் வெளிவருவதில் தான் சந்தித்த போராட்டங்களைப் பகிர்ந்தார்.

‘`என்னுடைய இந்தப் புத்தகத்தில் உலக அளவில் நடந்த மீ டூ சம்பவங்களை மட்டுமல்லாமல், நம் நாட்டிலும் திரைத்துறை, இலக்கியம், இசைத்துறை, நாடகத்துறை, ஓவியம், ஊடகம், நிறுவனங்கள் எனப் பலதுறைகளிலும் எழுந்த மீ டூ குரல்களையும், அவற்றுடன் தொடர்புகொண்ட பல முக்கியஸ்தர்களின் பெயர்களை யும் விருப்பு, வெறுப்பின்றி பதிவு செய்திருக்கிறேன். ‘அந்தக் கவிஞரைப் பற்றி எழுதியிருக்கிறீர்களா; எங்களால் உங்கள் புத்தகத்தை வெளியிட முடியாது’ எனப் பல பதிப்பகங்கள் தவிர்த்துவிட்டன. பக்கங்கள் அச்சாகி, அட்டை தயாரான நிலையில் ஒரு பதிப்பகத்தில், ‘உங்க புத்தகத்துல அந்த முக்கியஸ்தர் பேரு இருக்காமே. எங்களால புத்தகத்தைப் போட முடியாது’ என்று கைவிரித்துவிட்டார்கள். மூன்று வருடங்கள் போராடி எப்படியோ புத்தகத்தைக் கொண்டு வந்துவிட்டேன்’’ என்கிற வழக்கறிஞர் சாந்தகுமாரி, சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் சங்கம், தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் சங்கம், அகில இந்தியப் பெண் வழக்கறிஞர் சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும், சர்வதேச பெண் வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘`பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக அரசும் சமூகமும் என்ன செய்ய வேண்டும், சட்டங்கள் அவர்களுக்கு எப்படியெல்லாம் நியாயம் பெற்றுத் தரும், மூத்த தலைமுறையின் ஆதரவு எப்படி இருக்க வேண்டும் என்று சகல கோணங்களிலும் தீர்வுகளை அணுகியிருக்கிறேன்’’ என்கிற சாந்தகுமாரி, தன்னுடைய புத்தகத்தில், ‘மீ டூ’ இயக்கம் அனைத்து ஆண்களுக்கும் எதிரானதல்ல என்பதையும், ஆண்களைப் பழிவாங்கும் நோக்கில் பெண்கள் அதைப் பயன்படுத்துவதில்லை என்பதையும் அழுத்தமான எழுத்துகளால் பதிவு செய்திருக்கிறார்.

‘`130 கோடி மக்கள்தொகை கொண்ட நமது நாட்டில், 2020-ல் மட்டும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 34,000. இந்தப் புள்ளி விவரத்தின்படி, அனைத்து ஆண்களும் தவறானவர்கள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. நிலைமை இப்படியிருக்க, ‘மீ டூ’ இயக்கம் ஒட்டுமொத்த ஆண்களுக் கெதிராகவும் செயல்பட முடியாதல்லவா’’ என்றவர், தொடர்ந்தார்...

‘`ஓர் ஆணை பழிவாங்குவதற்காக அவரை நோக்கி ‘மீ டூ’ என்று ஒரு பெண் விரல் நீட்டுகிறார் என்றால், அந்த ஆணை சிக்க வைப்பதற்கான ஆதாரங்களைச் சேகரித்து வைத்திருப்பார். ஆனால், இந்தியாவில் ‘நானும் பாதிக்கப்பட்டேன்’ என்று குரலெழுப்பிய பெண் களில் பலரும் பல வருடங்களுக்கு முன்பு தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளையே கொட்டித் தீர்த்தார்கள். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், நடிகை ‘தனு தத்தா’ பத்து வருடங்கள் கழித்தே நடிகர் நானா படேகரால் தான் சந்தித்த பாலியல் தொல்லையை, மிரட்டலைப் பொதுவெளியில் பகிர்ந்து கொண்டார்.

பாதிக்கப்பட்ட பெண்களிடம் ‘ஆதாரம் எங்கே’ என்று இந்தச் சமூகம் கை நீட்டினால், அந்தப் பெண்களால் கையறு நிலையில் மட்டுமே நிற்க முடியும். அதற்காக, அவர்கள் பாதிக்கப்பட்டது இல்லையென்றாகிவிடாது; அவர்கள் சொல்வது அத்தனையும் பொய் என்றும் ஆகிவிடாது. அப்படியே எங்கோ ஒரு பெண் ‘மீ டூ’-வில் தவறான குற்றச்சாட்டைப் பதிவு செய்தாலும், அதை வைத்துக்கொண்டு அத்தனை ‘மீ டூ’ குரல்களையும் சந்தேகப்படக் கூடாது.

“அந்தக் கவிஞரைப் பற்றி எழுதியிருக்கிறீர்களா?” - ‘மீ டூ’ புத்தகமும் சாந்தகுமாரியின் போராட்டமும்!

‘மீ டூ’ குற்றம் சாட்டப்பட்ட ஆண்கள் ‘ஆதாரம் இருக்கிறதா’; ‘இருந்தால் வழக்குப் போடு’ என்கிறார்கள். பாலியல் குற்றங்களுக்குச் சாட்சியங்களோ, ஆதாரங்களோ பெரும்பாலும் கிடைக்காது என்பதில் நீதிமன்றங்கள் தெளிவாக இருக்கின்றன. சாட்சியம் இருந்தால் பரிசீலிக்கும். இல்லாதபட்சத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் உள்ள உண்மைத் தன்மையைப் பொறுத்து தீர்ப்பு வழங்கப்படும்.

எனவே, பாலியல் துன்புறுத்தல்களை சகித்துக் கொள்ளாமல், அனைவரும் துணிந்து எதிர்த்து நிற்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள், பாதிக்கப்படும் சூழலில் இருக்கும் பெண்கள், மீடூ இயக்கத்தை பாதுகாப்புக் கேடயமாகப் பயன்படுத்துவோம்’’ என்று பேசி முடித்தார் வழக்கறிஞர் சாந்தகுமாரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism