Published:Updated:

“ஆணென்ன, பெண்ணென்ன... எல்லோரும் ஓர் இனம்தான்!”

 சன்யா
பிரீமியம் ஸ்டோரி
சன்யா

தடயவியல் புகைப்படக்கலைஞர் சன்யா

“ஆணென்ன, பெண்ணென்ன... எல்லோரும் ஓர் இனம்தான்!”

தடயவியல் புகைப்படக்கலைஞர் சன்யா

Published:Updated:
 சன்யா
பிரீமியம் ஸ்டோரி
சன்யா

புகைப்படம் எடுப்பதென்பது பரவசமான கலை. ஆனால், விபத்துக்குப் பிந்தைய தடய சேகரிப்புக்கான புகைப்படம் எடுப்பது துயரமும் சவாலும் நிறைந்த பணி. உள்ளத்தைக் கலங்கடிக்கும் மரணங்களைப் புகைப்படம் எடுக்கும் வேலையைத் துணிச்சலாகச் செய்துவரும் சன்யா காலிங்கல், கேரளாவில் தடய வியல் புகைப்படக் கலைஞராகப் பணி யாற்றிவரும் இளம்பெண்.

“ஆணென்ன, பெண்ணென்ன... எல்லோரும் ஓர் இனம்தான்!”

தற்கொலை, சாலை விபத்து, கொலை, கொள்ளை, கலவரம் போன்ற அசாதாரண நிகழ்வுகளுக்குப் பின்னர், சம்பவ இடத்துக்கு விரையும் காவல்துறையினர், முதலில் அழைப்பது சன்யாவைத்தான். தனது பணியில் ஏராளமான வலி மிகுந்த சூழல்களைப் பார்த்துப் பழகியதாலோ என்னவோ, ஒரு விபத்து இவரை முடக்க நினைத்தாலும், சன்யாவின் கால்கள் ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருக்கின்றன. நாம் தொலைபேசியில் அழைத்தபோது ஒரு விபத்து நிகழ்விடத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். வேலை முடிந்ததும் சிறிது நேரத்தில் நம்மைத் தொடர்புகொண்ட சன்யாவின் பேச்சில், தெளிந்த நீரோடையைப் போன்ற பக்குவம்.

“திருச்சூர் மாவட்டம் பவராட்டிங்கிற கிரா மத்துல பிறந்து வளர்ந் தேன். எனக்கு ஓர் அண்ணன், ஓர் அக்கா. அப்பா பெயின்டர். கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிச்சேன். சின்ன வயசுல என் தோழி வீட்டுக்குப் போறப்பல் லாம், அவங்க அப்பா வோட கேமராவுல போட்டோஸ் எடுத்துப் பழகினேன். இதைத் தெரிஞ்சுகிட்ட ஆசிரியர் ஒருத்தர், ‘போட்டோ கிராபியில உன் திறமையை வளர்த்துக் கோ’ன்னு ஊக்கப்படுத்தினார். அதனாலேயே, பத்தாவது முடிச்சதும் ஒரு ஸ்டூடியோ ஓனரைச் சந்திச்சு, அவர்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். வழக்கமான வேலைகளுடன், தடயவியல் போட்டோக்களையும் என் குருநாதர் எடுத்துக் கொடுப்பார்.

வயசான பெண் ஒருத்தங்க பாத்ரூம்ல தீக்குளிச்சு இறந்துட்டதா ஒருமுறை அவருக்குத் தகவல் வந்துச்சு. ‘நீயும் என்கூட வா’ன்னு சம்பவ இடத்துக்கு என்னையும் கூட்டிட்டுப் போனார். அந்தச் சடலத்தை போட்டோஸ் எடுக்கச் சொன்னார். முதலாளி சொல் றாரேன்னு நானும் தயங்காம போட்டோஸ் எடுத்தேன். அப்போ எனக்கு 15 வயசுதான். ஸ்டூடியோவுக்கு வந்ததும், ‘அந்தச் சடலத்தைப் பார்த்தப்போ பயமா இல்லையா?’ன்னு கேட்டார். ‘இல்லை’னு சொன்னேன். சிரிச்சவர், ‘இது மாதிரியான கேஸ்ல இனி என் சார்பா நீயே போட்டோஸ் எடுக்கப் போ’ன்னார். அதுலேருந்து எல்லாவிதமான அசாதாரண சூழல்களையும் எதிர்கொள்ளப் பழகினேன்.

 பணிக்குச் செல்லும் சன்யா...
பணிக்குச் செல்லும் சன்யா...

பிரின்ட் எடுத்த போட்டோக்களை போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைக்கிறதும் என் வேலைதான். நான் போட்டோஸ் எடுத்த சில சடலங்களை அடையாளம் காட்ட, மார்ச்சு வரிக்கும் போலீஸார் என்னைக் கூப்பிடுவாங்க. எப்போ அழைப்பு வந் தாலும் நேரங்காலம் பார்க்காம கிளம்பிடு வேன்” - பயம் அறியாத இளங்கன்றாக, தடய வியல் புகைப்படத் துறையில் அனுபவத்தை வளர்த்துக்கொண்ட வருக்கு, வயது 29.

திருச்சூர் மாவட்டத் தில் பதிவாகும் பெரும்பாலான அசம்பா வித வழக்குகளுக்கும் சன்யாதான் புகைப்படம் எடுத்துக்கொடுக்கிறார். ஒவ்வொரு முறையும் இவருக்கு சில நூறு ரூபாய் சன்மானமாகக் கிடைக்கிறது. குடும்பத் தில் முழு ஆதரவு கிடைத் தாலும், தன் வேலையால் சுற்றத்தார் சிலரின் எதிர்ப்பை சன்யா இன்றுவரை எதிர் கொள்கிறார்.

“ ‘சிதைஞ்ச உடல்களையும், சிதறிக்கிடக்கும் உடல் பாகங்களையும் போட்டோஸ் எடுக்கிறப்போ உனக்கு பயம் இருக்காதா?’ன்னு நிறைய பேர் என்கிட்ட கேட்டிருக்காங்க. ‘இதே துறையிலுள்ள ஆண்கள்கிட்ட இந்தக் கேள்வியைக் கேட்பீங்களா?’னு கேட்பேன். ‘அவங்களுக்கு இயல்பாவே தைரியம் அதிகமா இருக்குமே’ன்னு சொல்லுவாங்க. ‘எந்த வேலையா இருந்தாலும், அதைச் செய்ய சம்பந்தப்பட்டவங்களோட மன வலிமைதான் முக்கியமே தவிர, பாலினம் அல்ல’ன்னு தீர்க்கமா சொல்லுவேன். கர்ப்பிணி ஒருவரைக் கொடூரமான முறையில பாலியல் வன்கொடுமை செஞ்சு சிலர் கொலை செஞ்சுட்டாங்க. அந்தப் பெண்ணின் உடலையும், விபத்துல உயிரிழந்த என் ஃபிரெண் டோட தம்பி உடலையும் போட்டோஸ் எடுத்தப்போ மட்டும்தான் என்னை அறியாம ரொம்பவே கலங்கினேன்.

நான் செய்யுற தொழில் பிடிக்காம, என் சொந்தக் காரங்க சிலர் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. அதனால, பண்ணிதடம் என்கிற ஊர்ல குடியேறினோம். ‘நேரங்கெட்ட நேரத்துல போலீஸ்காரங்ககூட போறே’ன்னு இந்த ஊர்க்காரங்க சிலரும் என் தொழிலையும் நடத்தையையும் தப்பா பேசி அசிங்கப்படுத்தினாங்க. அதனால போலீஸ்ல புகார் கொடுத்தேன். இப்போ ஓரளவுக்குப் பிரச்னைகள் சரியாகியிருக்கு. சக மனிதர்களின் உணர்வுகளைப் புடிஞ்சுக்காம, வார்த்தைகளால ஒருத்தரைப் பலவீனப்படுத்த நினைக்கிற சிலரின் கருணையற்ற குணம்தான் எனக்குச் சங்கடத்தைக் கொடுக்குது. மத்தபடி நான் போட்டோஸ் எடுக்கிற ஒவ்வொரு மரணமும் வருத்தமா இருந்தாலும், அதைப் பார்த்து பயந்ததில்லை. இந்த வேலையை ரொம்பவே நேசிச்சு செய்யுறேன்” என்று மென்சிரிப்புடன் கூறும் சன்யா, சைகை மொழி கற்றவர்.

காவல்துறையினரின் வழக்கு விசாரணையின் போது சைகை மொழி உதவி தேவைப்படும்போது நேரில் சென்று உதவுகிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, தன் குருநாதர் ஸ்டூடியோவை விற்க முன்வந்த போது, அதனை விலைக்கு வாங்கினார் சன்யா. தடயவியல் புகைப்பட பணியுடன், திருமணம், பிறந்தநாள் என வெளிநிகழ்ச்சிகளுக்கும் புகைப் படம் எடுக்கிறார்.

“ஆணென்ன, பெண்ணென்ன... எல்லோரும் ஓர் இனம்தான்!”

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு விபத்து, சன்யாவின் மன உறுதியைப் பெரிதும் சோதித்திருக்கிறது. அதுகுறித்து பகிர்ந்தவர், “வேலை விஷயமா ஆட்டோவுல போயிட்டிருந்தேன். பின்னாடி வந்த கார் மோதினதுல நான் பயணிச்ச ஆட்டோ தூக்கி வீசப்பட்டுச்சு. நிறைய ரத்த இழப்பு ஏற்பட்டதோடு, கால்கள்ல நரம்புகளின் இயக்கம் பாதிச்சு, மூளைக்குப் போகிற ரத்த ஓட்டமும் குறைஞ்சது. ஒரு காலையே நீக்கணும்னு ஆஸ்பத்திரி யில சொன்னாங்க. ஆனா, நான் அதை ஏற்காம, ஆயுர்வேத சிகிச்சைகள் எடுத்துக்கிறேன். இடுப்புக்குக் கீழ அடிக்கடி உணர்வுகள் மரத்துப்போறது, அவ்வப்போது மறதி ஏற்படுறதுனு அந்த விபத்தால எனக்கு நிறைய பாதிப்புகள்.

வீட்டுக்குள்ள முடங்க விருப்ப மில்லாம, வழக்கம்போல போட்டோ கிராபி வேலைகளுக்குப் போறேன். ஸ்டிக் பயன்படுத்திதான் நடக்க முடியும்னாலும், ரொம்ப நேரத்துக்கு என்னால நிற்க முடியாது. சேர்ல உட்கார்ந்தா, இன்னொருத்தர் உதவியோடுதான் எழுந்திரிக்க முடியும். ஸ்டிக் பிடிச்சுகிட்டே போட்டோஸ் எடுக்க ரொம்பவே சிரமப்படுவேன். ஆனாலும், இந்தச் சூழலுக்கும் என்னைத் தயார்படுத்திக்கிறேன்”- வலி மிகுந்த ரணத்தையும் சலனமின்றி கூறுபவர், ‘செண்டு மல்லி’ எனும் மியூசிக் ஆல்பத்தை இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சினிமா ஒளிப் பதிவாளராகும் ஆசையும் சன்யாவுக்கு இருக்கிறதாம்.

ஏராளமான இறப்புகளைப் பார்த்த அனுபவத்தில், சன்யா கூறும் மெசேஜ் எல்லோருக்குமானது. “பிறப்பு மாதிரியே இறப்பும் இயற்கையா நடக்கணும். எக்காரணம் கொண்டும், அதை நாம தீர்மானிக்கக் கூடாது. நம் பிறப்புக்கான காரணம் உணர்ந்து செயல்பட்டாலே, எல்லோரின் வாழ் நாளும் அர்த்தமுள்ளதா அமையும்!”``பிறப்பு மாதிரியே இறப்பும் இயற்கையா நடக்கணும். எக்காரணம் கொண்டும், அதை நாம தீர்மானிக்கக் கூடாது. நம் பிறப்புக்கான காரணம் உணர்ந்து செயல்பட்டாலே, எல்லோரின் வாழ்நாளும் அர்த்தமுள்ளதா அமையும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism