Published:Updated:

சினிமா ரீவைண்டு முதல் ரீசைக்கிளிங் பிசினஸ் வரை - அசத்தும் `அவ்வை சண்முகி' ஆனி

#Motivation

பிரீமியம் ஸ்டோரி
‘அவ்வை சண்முகி’ படத்தில் கமல் - மீனாவின் சுட்டிக்குழந்தையாக கவனம் ஈர்த்த பேபி ஆனி, இன்று பிசினஸ்வுமன். நடிப்பிலிருந்து ஒதுங்கிய பிறகு, மீடியா வெளிச்சம் படாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார். ‘ஆடுகளம்’ படத்தில் டாப்ஸியின் கேரக்டரில் நடிக்க இவருக்குத்தான் முதலில் வாய்ப்பு வந்திருக்கிறது. படிப்பு முக்கியம் என பிரான்ஸ் போனவர், இப்போது சென்னைப்பொண்ணு. ‘வேஸ்ட்டடு 360 சொல்யூஷன்ஸ்’ என்ற நிறுவனத்தின் உரிமையாளராக ஆனி செய்யும் விஷயங்கள் பாராட்டப்பட வேண்டியவை.

‘‘கடந்த ஒன்பது வருஷங்களா அட்வர் டைசிங், சாஃப்ட்வேர்னு வேற வேற துறைகள்ல வேலை பார்த்திட்டிருந்தேன். ஆப், டெக்னாலஜி, சோஷியல் மீடியா புரொமோஷன் மாதிரி விஷயங்களுக்காக வொர்க் பண்ற கம்பெனி ஆம்டெக். தமிழ்நாடு போலீஸுக்கு அந்த கம்பெனி பண்ணின காவலன் ஆப் டெவலப்மென்ட்ல நான்தான் புராஜெக்ட் மேனேஜர். நிறைய கம்யூனிட்டி புராஜெக்ட்ஸும் பண்ணிட்டிருந்தேன்.

வேஸ்ட் பேப்பரை எடைக்கு வாங்கும் நபர்கிட்ட நான் கொடுத்த பொருள்களை ரெண்டு பைகள் வெச்சு அங்கேயே பிரிச்சிட்டி ருந்தார். அது பத்தி அவர்கிட்ட கேட்டதுக்கு, ‘இதெல்லாம் வித்தா எனக்கு காசு வரும். இதையெல்லாம் யாரும் வாங்க மாட்டாங்க, உங்களுக்கு சிரமம் வேணாமேன்னு நானே குப்பையில வீசிட்டுப் போயிடறேன்’னு சொன்னார். அந்தப் பொருள்கள் அவ்வளவு சீக்கிரம் மக்காதுங்கிற தகவலைக் கேட்டபோது அதிர்ச்சியா இருந்தது. என் கம்பெனி ஆரம்பிக்க அதுதான் விதை...’’ நிதானமாகப் பேசும் ஆனியின் தமிழ் அவ்வளவு அழகு.

‘‘உலகத்துலேயே மிகப்பெரிய பேக்கேஜிங் கம்பெனியான டெட்ரா பேக், மும்பையிலும் புனேயிலும் 15 வருஷங்களா ஒரு விஷயம் பண்ணிட்டிருக்காங்க. கூல் டிரிங்க்ஸ், உணவுப் பொருள்கள் வரும் காலி அட்டைப் பெட்டிகளை கலெக்ட் பண்ணி, ரீசைக்கிள் பண்ணி, சிப்போர்டு ஷீட்டுகளா மாத்துறாங்க. அதுல ஃபர்னிச்சர்ஸ் செய்து மும்பை, புனேயில உள்ள கார்ப்பரேஷன் ஸ்கூல்ஸுக்கு கொடுத்திட்டிருக்காங்க. சென்னை கார்ப்பரேஷன்கூடவும் பேசி, அவங்களுடைய தேவைகளுக்கேற்ப ஃபர்னிச்சர்ஸ் ரெடி பண்ணிக் கொடுக்குற ஐடியாவில் இருக்காங்க.

அவ்வை சண்முகி ஆனி
அவ்வை சண்முகி ஆனி

சர்ச் பார்க் ஸ்கூல் நடத்தும் அர்ப்பணம் டிரஸ்ட்டைச் சேர்ந்தவங்க, பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டு குடியிருப்புல உள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்புகளும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் கொடுக்குறாங்க. வீட்டுவேலை பார்த்துட்டிருந்த அந்தப் பெண்கள்ல பலரும் பேண்டெமிக் காலத்துல வேலைய இழந்திருக்காங்க. வேஸ்ட்டடு

360 சொல்யூஷன் என்ற என் கம்பெனி மூலமா அப்படிச் சில பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடிஞ்சிருக்கு...’’ நல்ல தகவல் சொல்பவர், தன்னுடைய பிசினஸ் கேம்பெயின் பற்றி இன்னும் விளக்கமாகப் பேசுகிறார்.

‘‘ஒரு நுகர்வோரா நீங்க டெட்ரா பேக்ல வரும் பாலோ, கூல் டிரிங்க்கோ வாங்குறீங்கனு வெச்சுப்போம். அதை உபயோகிச்சதும் அந்த அட்டைப் பெட்டிக்குள்ள கொஞ்சம் தண்ணீர்விட்டு சுத்தப்படுத்திட்டு, தட்டையாக்கிடணும். உங்க ஏரியாவுக்குப் பக்கத்துல உள்ள டிராப் அவுட் சென்டர்ஸ்ல ரீசைக்கிள் டஸ்ட்பின் இருக்கும். இப்படி நீங்க சேகரிக்கிற அட்டைப் பெட்டிகளை அந்த டஸ்ட்பின்னில் போடணும். அது நிரம்பினதும் அர்ப்பணம் டிரஸ்ட் மூலமா பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டு பெண்கள்கிட்ட போகும். சரியா சுத்தப்படுத்தப்படாத பெட்டிகளை மறுபடி சுத்தப்படுத்தி, பேக் பண்ணி ரீசைக்கிள் ஆக தயாராகும். அங்கேயிருந்து கோயம்புத்தூர் பேப்பர் பிளான்ட் டுக்கும், மகாராஷ்டிராவுல உள்ள யூனிட்டுக்கும் போகும். அங்கே இந்தப் பெட்டிகள்லேருந்து சிப் போர்டு ஷீட் தயாரிப்பாங்க. அதுலேருந்து, ஃபர்னிச்சர் செய்து கார்ப்பரேஷன் ஸ்கூல்ஸுக்கு இலவசமா கொடுக்கப்போறாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஈபிஆர், அதாவது `எக்ஸ்டெண்டடு புரொடியூசர்ஸ் ரெஸ்பான்சிப்ளிட்டி' திட்டம் மூலம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தயாரிப்பாளரும் அவங் களுடைய தயாரிப்புகளுக்குப் பொறுப்பானவங்களாகுறாங்க. உதாரணத்துக்கு, ஒரு பிரபல கம்பெனியோட சிப்ஸ் பாக்கெட்டை உபயோகிச்சிட்டு, ஒரு கன்ஸ்யூமர் காலி பாக்கெட்டை தூக்கிப் போடுறாங்கன்னா, அது ரீசைக்கிள் செய்யப்படுதா அல்லது திரும்பப் பெறப்படுதானு பார்க்கிறது தயாரிப்பாளரின் பொறுப்பு. தயாரிப் பாளர்கள், சென்ட்ரல் மற்றும் ஸ்டேட் பொல்யூஷன் கன்ட்ரோல் போர்டுல தங்களுடைய விற்பனை எண்ணிக்கையையும், ரீசைக்கிள் பண்ணப்போற எண்ணிக்கையையும் பதிவு பண்ணணும். இதுல புரொடி யூசர்ஸ் ரெஸ்பான்சிபிளிட்டி ஆர்கனைசேஷனா வேலை பார்க் கிறதுதான் எங்க வேலை. அதாவது, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் சார்பா, அந்த காலி பாக்கெட்டுகளை கலெக்ட் பண்றோம். அந்த வகையில டெட்ரா பேக் பயன்படுத்துற 20 பெரிய பிராண்டுகளுக்கு நாங்க இந்த வேலையைச் செய்யுறோம்.

அவ்வை சண்முகி' கமலுடன்...
அவ்வை சண்முகி' கமலுடன்...

கொரோனா காலத்தில் துப்புரவுத் தொழிலாளர்களைத் தெய்வமாகப் பார்க்கப் பழகியிருக்கிறோம். ஆனாலும், அது மட்டுமே போதாது'' என்கிறார் ஆனி.

‘‘பேண்டெமிக் காலத்துக்கு முன்னாடி துப்புரவுத் தொழிலாளர் களுக்கு கிளவுஸ் பத்தின விழிப் புணர்வுகூட இருந்ததில்லை. பட்ஜெட்டும் இருந்ததில்லை. வீட்டுல இருக்கக் கூடாதுனு நினைக்கிற குப்பைகளை நாம அலட்சியமா வெளியே வீசுறோம். உடைஞ்ச கண்ணாடியாகட்டும், உபயோகிச்ச நாப்கினாகட்டும், அதையெல்லாம் சுத்தப்படுத்தறவங்க சந்திக்கிற ஆரோக்கிய பிரச்னைகளை யோசிச்சிருப்போமா... அப்படி ஆபத்தான, ஆரோக்கியமில்லாத குப்பைகளை நல்லா பேக் பண்ணி, மேலே சிவப்பு நிறக் குறியீடு போட்டு அப்புறப்படுத்தினா அவங்க அலெர்ட் ஆவாங்க. அதே மாதிரி குப்பைகளைப் பிரிக்கிறதுலயும் நமக்கெல்லாம் விழிப்புணர்வு வேணும். டிரை அண்டு வெட்னு குப்பைகளை ரெண்டா பிரிக்கணும். அரிசி, பருப்பு, உலர்ந்த மாவு, பிஸ்கட், சிப்ஸ் மாதிரி உணவுப் பொருள்கள் வரும் பாக்கெட், உடைஞ்ச ஹெல்மெட்டெல்லாம் டிரை வகையறா. மீந்துபோகும் உணவு, திரவ உணவு, காய்கறிக் கழிவுகள் எல்லாம் வெட் வகையறா. இப்படிப் பிரிச்சு அப்புறப்படுத்தினாலே பாதி பிரச்னைகள் தீர்ந்துடும்.’’

- சீரியஸாகத் தொடர்ந்தவரை, சினிமா பக்கம் திருப்பினோம்.

‘‘நடிப்புலேருந்து ஒதுங்கி 20 வரு ஷங்களாச்சு. வயசும் ஆயிடுச்சு... ஆர்வமும் இல்லை. நடிக்கச் சொல்லிக் கேட்டுக் கேட்டு அலுத்துப் போய் இப்ப கேட்குறதையே நிறுத்திட்டாங்க. காலேஜ் முடிச்சதும் பிரான்ஸ்லயே இருந்திருக்கலாமோனு மட்டும்தான் வருத்தப்படுவேனே தவிர, வந்த சினிமா வாய்ப்புகளை வேண்டாம்னு சொன்னதுல துளிக் கூட வருத்தமில்லை. கமல் சாரை மீட் பண்ணி பல வருஷங்களாச்சு. ஆனா, அவர் மகள் அக்‌ஷராவும் நானும் ஃபிரெண்ட்ஸ். சத்தியமா சொல்றேன். சினிமாவை கொஞ்சமும் மிஸ் பண்ணலை’’

- பாசாங்கில்லாத பேச்சால் மனதில் நிறைகிறார் ஆனி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு