Published:Updated:

மண் கலவை முதல் பூச்சிவிரட்டிவரை... மாடித் தோட்டத்துக்கு இதையெல்லாம் செய்யலாம்! - காயத்ரி

காயத்ரி
பிரீமியம் ஸ்டோரி
News
காயத்ரி

பசுமை இல்லம்

காய்கறிகள், மூலிகைச் செடிகள், பூக்கள் எனப் பசுமை போர்வை போர்த்தியதுபோன்று இருக்கிறது இல்லத்தரசி காயத்ரியின் வீடு. சென்னை, அரும்பாக்கத்தில் வசித்து வரும் இவர் கடந்து நான்காண்டுகளாக மாடித் தோட்டம் வைத்து பராமரித்து வருகிறார்.

‘`நாலு வருஷங்களுக்கு முன்னாடி எங்க அப்பா தவறிட்டாங்க, ரொம்ப மன அழுத்தத்தில் இருந்தேன். என் கவனத்தை வேறு எதிலாவது திருப்பலாம்னு நினைச்சப்போதான், இயற்கை முறையில் மாடித்தோட்டம் பராமரித்து வரும்

ஒரு வாட்ஸ்அப் குழு எனக்கு அறிமுகம் ஆனது. அவங்ககிட்டயிருந்து இயற்கை வழி விவசாயத்தைக் கத்துக்கிட்டு பழைய குடம், உடைஞ்ச வாளி, வாட்டர் கேன்களில் செடி வளர்க்க ஆரம்பிச்சேன். அதில் மனசுக்கு ஒரு நிம்மதி கிடைச்சதும், இன்னும் நிறைய செடிகள் வளர்க்க ஆரம்பிச்சேன்’’ என்று சொல்லும் காயத்ரியின் தோட்டத்தில் இப்போது கத்திரி, பீர்க்கன், சுரைக்காய், பாகல், புடலை, வெண்டை உள்ளிட்ட நாட்டுக்காய்கறிகள் மற்றும் மூலிகைகள், கீரைகள், பூக்கள் என 150 தொட்டிகள் உள்ளன.

‘`தினமும் ஒரு மணிநேரம் செடிகளோடு செலவிடுறேன். வீட்டுக்குத் தேவையான பெரும்பாலான காய்கறிகளை வீட்டிலிருந்தே அறுவடை செய்துக்க முடியுது. முழுக்க முழுக்க இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால காய்கறிகள் தனிச்சுவையுடன் இருக்கு. முதலீடு பெருசா இல்லை. ஆனா நிம்மதி, ஆரோக்கியம்னு தோட்டம் தரக்கூடிய பலன்கள் அதிகம்’’ - செடிகளுக்கு உரமிட்டுக்கொண்டே மாடித்தோட்டத்துக்கான ஆலோசனைகளைப் பகிர்ந்துகொண்டார் காயத்ரி.

மண் கலவை தயாரிப்பு

``செம்மண், மட்கிய காய்கறிக்கழிவு, மண்புழு உரம், காய்ந்த மாட்டுச்சாணம் இவற்றை

2:1:1:1 என்ற விகிதத்தில் ஒன்றாகக் கலந்து, அத்துடன் வேப்பம் பிண்ணாக்கு அரை கைப்பிடி அளவு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, 15 நாள்கள் வைத்திருந்தால், மண்ணில் நுண்ணுயிரிகள் பெருகியிருக்கும். இதைத் தொடர்ந்து, விதைகளை விதைக்கலாம்.

விதை முளைப்புத்திறன்

எந்த வகை விதையாக இருந்தாலும் ஒரு லிட்டர் தண்ணிரீல் 30 மில்லி பஞ்சகவ்யா கலந்து அதில் ஊறவைத்து, மறுநாள் விதைத்தால் விதையின் முளைப்புத்திறன் நன்றாக இருக்கும். 

மண் கலவை முதல் பூச்சிவிரட்டிவரை... மாடித் தோட்டத்துக்கு இதையெல்லாம் செய்யலாம்! - காயத்ரி

காராமணி (தட்டைப்பயறு) வளர்ப்பு

நுண்ணுயிர் பெருகிய மண்ணில் ஒரு தொட்டிக்கு இரண்டு விதை என்ற கணக்கில் நட்டு, 10-ம் நாள் இயற்கை உரங்கள் இடவும்.

ஒரு தொட்டிக்கு 50 கிராம் உரம் போதுமானது. 30-ம் நாள் காராமணி செடி பூ பூக்கத் தொடங்கும். அப்பருவத்தில் செடிகளுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் 30 மில்லி பஞ்சகவ்யாவை 15 நாள்களுக்கு ஒரு முறையும், 15 நாள்களுக்குப் பிறகு ஒரு லிட்டர் தண்ணீரில் 100 மில்லி தேமோர்க் கரைசலைக் கலந்து ஸ்பிரே செய்ய வேண்டும். 60-ம் நாள் காராமணி செழித்து வளர்ந்து அறுவடைக்குத் தயாராகிவிடும். தொடர்ந்து உரமிட்டு பராமரித்து வர, அடுத்த மூன்று மாதங்களுக்கு அறுவடை செய்து கொள்ளலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

குறைந்த இடம், அதிக பயன்

குறைவான இடம்தான் இருக்கிறது என்பவர்கள் கீரை வகைகள், மூலிகைச் செடிகளை வளர்க்கலாம். மண்கலவை கலந்து வைத்துள்ள ஒரு சிறிய தொட்டியில், ஒரு கைப்பிடி அளவு அரைக்கீரை விதைகளை விதைக்கவும். கீரை செழித்து வளர்ந்ததும் இலைகளை மட்டும் கிள்ளியெடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருமுறை விதைத்த கீரை விதைகள் அடுத்த ஆறு

மாதங்களுக்குப் பயன்தரும். தொட்டியில் இலையின் வரத்து குறையத் தொடங்கும் போது, கீரைகளை அறுத்து அதிலேயே புதைத்துவிடவும். மூன்று மாதங்கள் கழித்து இந்த மண்ணை வேறு செடிகளின் விதைப்புக்குப் பயன்படுத்தலாம்.

ஜன்னலில் மூலிகை

வீட்டு ஜன்னல்கள் வெயில்படும் வகையிலிருந்தால், பழைய வாட்டர் பாட்டில்களை பாதியாக வெட்டி, மண் நிரப்பி, சில இடங்களில் துளைகள் இட்டு, கற்பூரவள்ளி தண்டுகளை அதில் நட்டுவைக்கவும். சில வாரங்களிலேயே நன்கு வளர்ந்துவிடும். அவ்விலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் சளித்தொல்லையிலிருந்து எளிதில் விடுபடலாம்.

காய்கறி உரம்

வீட்டிலேயே இயற்கை உரம் எளிமை

யாகத் தயாரிக்கலாம். மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் வாளி ஒன்றை எடுத்துக் கொள்ளவும். காற்று உள்நுழையும் வகையில் ஆங்காங்கே சில துளைகளை இட்டுக்கொள்ளவும். முதலில் ஒரு லேயர் காய்கறிக் கழிவுகளால் நிரப்பி, அடுத்த லேயர் இலைகள் அல்லது தென்னங்கழிவை நிரப்பவும். இப்படி வாளி முழுவதும் மாற்றி மாற்றி நிரப்பி சிறிதளவு மோர் ஊற்றி மூடிவைக்க, மூன்று மாதங்களில் இயற்கை உரம் தயாராகிவிடும்.

பூச்சிக்கு பை பை

வேப்ப எண்ணெய் - 5 மில்லி, புங்கை எண்ணெய் - 5 மில்லி, சோப்புத் தண்ணீர் - ஒரு டீஸ்பூன். இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து ஒரு லிட்டர் தண்ணீருடன் சேர்த்து ஸ்பிரே செய்தால் பூச்சித் தாக்குதல் குறையும்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை சம அளவில் எடுத்து, ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி என்ற கணக்கில் கலந்து வாரம் ஒரு முறை செடியில் தெளித்தாலும் பூச்சி வெட்டுகளைத் தவிர்க்கலாம்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மண் கலவை முதல் பூச்சிவிரட்டிவரை... மாடித் தோட்டத்துக்கு இதையெல்லாம் செய்யலாம்! - காயத்ரி

டிப்ஸ்

காய்கறிக் கழிவில் உரம் தயாரிக்க நேரம் இல்லை என்பவர்கள் காய்கறிக் கழிவுகளை அரைத்து தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றலாம். வீணாகக் கீழே ஊற்றும் அரிசி, பருப்பு கழுவிய தண்ணீர், காய்கறிகள் கழுவிய தண்ணீர், நீச்சத்தண்ணீர் போன்றவற்றை ஒரு வாளியில் சேகரித்து வரவும். இரண்டு நாள்களில் வாளி நிரம்பியதும் அதை மூடி, ஒன்பது நாள்கள் நிழலில் வைக்கவும். இத்துடன்

சம அளவு தண்ணீர் கலந்து செடிகளுக்கு ஸ்பிரே செய்தால் செழித்து வளரும்.

முட்டை ஓடுகளை அப்படியே உடைத்து தொட்டிகளில் உரமாக இடாமல் அரைத்து தூளாக்கிப் பயன்படுத்தினால் மண்ணுக்கு எளிதில் வளம் கிடைக்கும்.

மண் கலவை முதல் பூச்சிவிரட்டிவரை... மாடித் தோட்டத்துக்கு இதையெல்லாம் செய்யலாம்! - காயத்ரி

பசுமை செழிக்க

மீன்கழிவு (மீன் சுத்தம் செய்யும்போது கிடைக்கும் கழிவு), வெல்லம் இரண்டையும் சம அளவு எடுத்து, ஒன்றாகக் கலந்து காற்றுப்புகாத டப்பாவில் இட்டு மூடி வைத்துவிடவும்.

40 நாள்கள் கழித்து டப்பாவை திறந்தால், நொதித்தல் ஏற்பட்டு தேன் போன்ற திரவம் கிடைத்திருக்கும். அதை ஒரு லிட்டருக்கு 5 மில்லி என்ற விகிதத்தில் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஸ்பிரே செய்தால் செடிகள் செழித்து வளரும்.

பஞ்சகவ்யா

மாட்டுச்சாணம் - ஐந்து கிலோ

கோமியம் - நான்கு லிட்டர்

பால் - மூன்று லிட்டர்

புளித்த தயிர் - மூன்று லிட்டர்

இளநீர் - இரண்டு லிட்டர்

வாழைப்பழம் - பன்னிரண்டு

நெய் - அரை லிட்டர்

நாட்டுச்சர்க்கரை - ஒரு கிலோ

அகலமான பாத்திரத்தில் மாட்டுச்சாணம், நெய் இரண்டையும் ஒன்றாகக் கலந்து மூன்று நாள்கள் நிழலில் வைக்கவும். நான்காம் நாள் மற்ற பொருள்களையும் அதனுடன் சேர்த்துக் கலந்து, பாத்திரத்தின் மீது லேசான துணியைக் காற்று புகும்படி தளர்வாகக் கட்டி 21 நாள்கள் நிழலில் வைக்கவும். தினமும் காலை 10 நிமிடங்கள், மாலை 10 நிமிடங்கள் துணியை நீக்கி கைகளாலோ, குச்சியாலோ கலவையை நன்கு கலக்க வேண்டும். மீண்டும் துணியால் மூடிவிடவும். 21 நாள்கள் இவ்வாறு செய்துவந்தால் சாணம் வாசனை நீங்கி கலவை மூலிகை மணத்துடன் இருக்கும். இதை ஒரு பாத்திரத்தில் சேமித்து மூடிவைத்து, தேவையின்போது பயன்படுத்தலாம்.