Published:Updated:

பெண்களுக்கான அரசுத் திட்டங்கள் - 3: முதலமைச்சரின் ‘பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்!’

அரசுத் திட்டங்கள்
பிரீமியம் ஸ்டோரி
அரசுத் திட்டங்கள்

#Utility

பெண்களுக்கான அரசுத் திட்டங்கள் - 3: முதலமைச்சரின் ‘பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்!’

#Utility

Published:Updated:
அரசுத் திட்டங்கள்
பிரீமியம் ஸ்டோரி
அரசுத் திட்டங்கள்

பெண்களைப் பல வகை களில் பின்னுக்குத் தள்ளும் இந்த ஆண் ஆதிக்கச் சமூகத்தில் பெண் கல்வியை மேம்படுத்துதல், பெண் சிசுக் கொலையை ஒழித்தல், ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்கை மட்டுப்படுத்துதல், சிறு குடும்ப முறையை ஊக்கப்படுத்துதல், ஏழைக் குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளித்தல் மற்றும் பெண் குழந்தைகளின் மதிப்பை உயர்த்தும் நோக்குடன் உருவாக் கப்பட்டதுதான் முதலமைச்சரின் `பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்.’

யார் பயனடையலாம்?

ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் பயனடைய முடியும். முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து இரண்டாவது பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால், முதல் பிரசவத்திலேயே இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்து அடுத்த பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் அவர்கள் இந்தத் திட்டத்தில் பயனடைய முடியாது.

பெற்றோர்களுக்கு ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையைத் தத்தெடுக்கவும் கூடாது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். பெற்றோர்களில் ஒருவர் 35 வயதுக்குள் கருத்தடை அறுவைசிகிச்சை செய்திருக்க வேண்டும். குறிப்பாக, தாய்க்கு 35 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

எவ்வளவு உதவித் தொகை?

இதில் திட்டம்-1, திட்டம்-2 என மொத்தம் இரண்டு திட்டங்கள் உள்ளன. ஒரு பெண் குழந்தை மட்டுமே இருந்தால், திட்டம் 1-ன்படி 1.8.2011-க்கு முன்பு பிறந்திருந்தால் 22,200 ரூபாய் வழங்கப்படும். 1.8.2011-க்குப் பின்பு பிறந்த குழந்தை எனில் 50,000 ரூபாய் வழங்கப்படும்.

பெண்களுக்கான அரசுத் திட்டங்கள் - 3: முதலமைச்சரின் ‘பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்!’

இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் திட்டம்-2ன்படி இரண்டாவது குழந்தை 1.8.2011-க்கு முன்பு பிறந்திருந்தால் இரு பெண் குழந்தைகளுக்கும் தலா 15,200 ரூபாயும் இரண்டாவது குழந்தை 1.8.2011-க்குப் பின்பு பிறந்திருந்தால் தலா 25,000 ரூபாயும் வழங்கப்படும்.

இந்த உதவித் தொகையானது காலவரை வைப்புத் தொகையாகக் குழந்தையின் பெயரில் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் சேரும் குழந்தைக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டித் தொகை, வைப்புத் தொகை வழங்கப்பட்ட ஆறாம் ஆண்டில் இருந்து பதினெட்டாம் ஆண்டு வரை கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். நிலை வைப்புத் தொகையின் 18-வது ஆண்டின் முடிவில் மீதமுள்ள வட்டியுடன் சேர்த்து முதிர்வுத் தொகை வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகள் முதிர்வு தொகை பெற 10-ம் வகுப்பு அரசுத் தேர்வு எழுதியிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவில்லை எனில் முதிர்வு தொகை பெற இயலாது.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள், வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, பெற்றோர் கருத்தடை அறுவைசிகிச்சை செய்து‌ கொண்டதற்கான சான்று, சாதிச் சான்று, பெற்றோரின் வயதுச் சான்று, ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று, குடும்ப அட்டையின் நகல், குடும்ப புகைப்படம்.

எங்கே விண்ணப்பிக்க வேண்டும்?

நீங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதியான நபர் எனில், தேவையான ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்துக்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். நீங்கள் நகரத்தில் வசித்தால் மாவட்ட சமூக நல அலுவலகத்தையும் கிராமத்தில் வசித்தால் வட்டார வளர்ச்சி அலுவல கத்தையும் அணுக வேண்டும். அங்கு உங்கள் ஆவணங்களின் நகல்களை இ-சேவை மையத் தில் பதிவுசெய்த பதிவு எண்ணுடன் சமர்ப்பிக்க வேண்டும்.