நகரங்களில் கால்நடை வளர்ப்பெல்லாம் சாத்தியமாகுமா? ஆனால், சென்னை மாநகரத்தின் பரபரப்பான திருவான்மியூரில் 48 வயதாகும் கௌசல்யா, 40 ஆடுகளுக்கு மேல் வளர்த்துக்கொண்டிருக்கிறார். இது வியாபாரத்துக்காக அல்ல... ஆடுகளின் மீதான அன்பினால்!

திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு அருகில் இருக்கிறது ஒரு சிறிய சந்து. வீதி முழுக்க ஆடுகளின் வாசம். பல ஆடுகள் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருக்கின்றன. சில ஆடுகள் மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் காட்சிகளைக் கடந்து நுழைந்தால் ஓர் ஆட்டுத் தொழுவம். அதைச் சுத்தம் செய்துகொண்டே நம்மை வரவேற்கிறார் கௌசல்யா.

``நான் குழந்தையா இருந்தப்பவே வீட்டுல ஆடு வளர்த்தாங்க. சின்ன வயசுல இருந்தே பிள்ளைங்க (ஆடுகளைத்தான் அப்படி குறிப்பிடுகிறார்) மேல ஓர் ஈர்ப்பு. எங்கம்மா இறந்ததுக்கு அப்புறம் வீட்ல இருந்த பிள்ளைங்களை நான்தான் வளர்த்தேன். இந்தப் பிள்ளைங்கதான் பின்னாளில் எனக்கு வாழ்க்கையாவே அமையும்னு அப்போ எனக்குத் தெரியலை.

சென்னையில் இது சாதாரண விஷயம் இல்லை. ஆடு வளர்க்கக்கூடாதுன்னு பக்கத்து வீடுகள்ல இருக்கறவங்க பிரச்னை கொடுப்பாங்க... இப்பவும் கொடுக்கறாங்க.

பிள்ளைங்களுக்காக சந்தையில வீணாபோன காய்கறிகளை வாங்கிட்டு வருவேன். அந்தக் கடைக்காரர்னாலதான் நான் ஆடு வளர்க்கறேன்னு பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு ஒரு நெனைப்பு. அவர்கிட்ட சொல்லி எனக்குக் காய்கறி தர விடாம பண்ணிட்டாங்க. இப்போ தெருத் தெருவா, குப்பைத் தொட்டியா பார்த்து பிள்ளைங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்து கொடுக்கறேன். பிள்ளைங்க விஷயத்துல எந்த கெளரவமும் பார்க்க மாட்டேன். அவங்க எல்லாரும் நல்லா சாப்பிடணும் அவ்ளோதான்’’ என்கிறபடி ஆடுகளுக்கு கீரைக்கட்டுகளை நீட்டுகிறார். ஆடுகளோடு மாடும் வளர்க்கிறார் கௌசல்யா.

``எட்டு வருஷத்துக்கு முன்னாடி ஊர்ல ஒரு பசு மாட்டுக்கு கோமாரி நோய் வந்துருச்சு. அது தொற்றுநோய்னு சொல்லி, சுடுகாட்டுல கொண்டுபோய் விட்டுட்டு வந்துட்டாங்க. அப்ப அந்தப் பசு கர்ப்பமா இருந்துச்சு. வயித்துல கன்னுக்குட்டிய வெச்சிட்டு அதுபட்ட கஷ்டத்தை இப்போ நெனச்சாலும் எனக்கு அழுகை வந்துரும். சுடுகாட்டுல கொண்டுவிட்ட கொஞ்ச நாளுல ஆண் கன்னுக்குட்டியைப் பெத்து போட்ருச்சு. நோய் தாக்கம் அதிகமா இருந்ததால தாய் பசு ஒடம்புல இருந்து கெட்ட நாத்தம் அடிக்க ஆரம்பிச்சிச்சு. அதனாலேயே கன்னுக்குட்டி அம்மா பக்கத்துலயே போகல. தாய்ப்பாலும் குடிக்கல. தாய்ப்பசு, பால் கொடுக்க எவ்வளவோ முயற்சி பண்ணுச்சு. ஆனா, குட்டி குடிக்கவே இல்ல. இதைப் பார்த்துட்டு கன்னுக்குட்டிக்கு புட்டியில பால் கொடுக்க ஆரம்பிச்சோம். நாளாக நாளாக பசுவோட உடம்பு ரொம்ப மோசமாச்சு. மாட்டு டாக்டருக்கும், ப்ளூ கிராஸ் அமைப்புக்கும் தகவல் சொன்னோம். யாரும் வரலை. குட்டிக்குப் பால் கொடுக்க முடியலையேன்னு அந்த மாடு தவிச்ச தவிப்ப எல்லாம் பார்த்தப்ப எனக்கு மனசு விட்டுப்போச்சு. நாலு நாள் கழிச்சு, தாய்ப்பசு கன்னுக்குட்டிய கட்டிப் புடிச்ச மாதிரியே படுத்துக் கெடந்துச்சு. பக்கத்துல போய் பார்த்ததுக்கு அப்புறம்தான் அது செத்துப்போனது தெரிஞ்சது. சட்டுன்னு கன்னுக்குட்டியைத் தூக்கிட்டு விறுவிறுன்னு வீட்டுக்கு வந்துட்டேன். அதுக்கு `நந்தா'ன்னு பேர் வெச்சோம்.

ரோட்டுல மாடு கட்டி பராமரிக்கிறது பெரிய பிரச்னையா இருந்தது. பிள்ளைங்களும் ரோட்லயே இருந்ததுனால இடநெருக்கடி வேற. எந்தக் காரணத்துக்காகவும் என் பிள்ளைங்கள நான் இழந்துடக்கூடாதுன்னு முடிவு பண்ணினேன். மாடு வெளியே இருந்தால்தானே தெனமும் பிரச்னை வருது, பேசாம மாட்டை வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போய்டலாம்னு முடிவு பண்ணினேன். எங்க வீடு தீப்பெட்டி அளவுதான் இருக்கும். மாட்டை வீட்டுக்குள்ள கட்டிவெச்சுட்டு, ரெண்டு வருசமா நானும் எங்க அக்காவும் தெனமும் வெளியிலதான் படுக்கறோம். இப்போ பெருசா எந்தப் பிரச்னையும் இல்ல. ஆனா, எவ்வளவு கவனமா இருந்தாலும் பிள்ளைங்களைத் திருடிட்டுப் போயிடுறாங்க. இப்ப வரைக்கும் ஏழு பிள்ளைங்களை இப்படித் தொலைச்சிருக்கோம்.

எந்த நேரமும் பிள்ளைங்களுக்கான சாப்பாடு, சுத்தம் பண்ற நினைப்புலேயே இருந்ததால கல்யாணத்தைப் பத்தியோ, வயசு கடந்து போனதை பத்தியோ யோசிக்கவே இல்ல. கல்யாணம் ஆகலைன்னு இப்போ வரைக்கும் கவலைப்பட்டதும் இல்ல. எனக்கு என்னுடைய பிள்ளைங்க இருக்காங்க, அவங்களுக்கு நான் இருக்கேன், கடைசி வரைக்கும் இருப்பேன்’’ என்கிறார் கெளசல்யா. விவரிக்க முடியாத அந்த பேரன்பு நம்மை அதிரவைக்கிறது.

பல ஆண்டுகளாக ஆடுகள் வளர்ப்பதால் கால்நடை மருத்துவர்களின் அறிமுகம் கெளசல்யாவுக்கு உண்டு. அவசர கால முதலுதவி கொடுக்க கெளசல்யாவுக்கு மருத்துவர்கள் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். ஆடுகளின் திடீர் உடல்நலப் பிரச்னைகளை அவரே சரி செய்துகொள்கிறார். இதற் கிடையில், கெளசல்யா வீட்டுக்குப் பல்வேறு இடங்களிலிருந்து மூன்று நாய்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. அவை மூன்றும்தாம் இப்போது ஆடுகளைப் பாதுகாக்கின்றன. ஆடுகள் அந்தத் தெருவின் எல்லையைக் கடந்து வேறு எங்கும் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் நாய்கள் தடுத்து மீண்டும் தொழுவத்துக்கே திருப்பி விடுகின்றன!

கௌசல்யாவுக்கு ஆதரவாக இருப்பது அவர் அக்கா அனுஷியா. இவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இருவரும் தையல் வேலை பார்ப்பது, ஒருவேளை மட்டுமே சாப்பிடுவது என வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.

``பிள்ளைகள் வயிறு நெறைஞ்சாலே எங்க வயிறு நிறைஞ்ச மாதிரிதான்’’ என்று சிரிக்கிறார் கௌசல்யா. சிரிப்பில் அவ்வளவு அன்பும் கருணையும்!