என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

கால்நடை வளர்ப்பில் கலக்கும் பட்டதாரி விவசாயி ஷர்மிளா!

ஷர்மிளா
பிரீமியம் ஸ்டோரி
News
ஷர்மிளா

#Utility

டிப்பு வராதவர்களை ஆடு, மாடு மேய்க்கச் சொன்ன அந்தக் கால வாதத்தைப் பொய்யாக்கியிருக்கிறார் பட்ட தாரி விவசாயியான ஷர்மிளா.

வீட்டில் இருந்தபடியே மாமியாருடன் இணைந்து ஆடு, மாடு, கோழி, வாத்து, நாய் உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் அசத்திக்கொண்டிருக்கிறார்; மாதம்தோறும் நிறைவாகச் சம்பாதிக்கிறார். ஈரோடு மாவட்டம் வாய்க்கால்புதூரில் உள்ள இல்லத்தில் ஷர்மிளாவைச் சந்தித்தோம்.

கால்நடை வளர்ப்பில் கலக்கும் பட்டதாரி விவசாயி ஷர்மிளா!

“விவசாயக் குடும்பம். எம்.காம் முடிச்சிருக் கேன். அஞ்சு ஏக்கர்ல கரும்பு, மஞ்சள், வாழைப் பயிர்களைச் சுழற்சி முறையில் பயிரிடுறோம். அந்த வேலைகளைக் கணவர் நடராஜன்தான் கவனிச்சுக்கிறார். அவர் அடிக்கடி பயணத்துல இருப்பதால, கால்நடை வளர்ப்புக்கான பொறுப்பை நான் ஏத்துக்கிட்டேன். தோட்டக்கலைத்துறை, கோபிசெட்டிப்பாளையம் ‘மைராடா’ கே.வி.கே மையம், வேளாண்துறை உள்ளிட்ட சில இடங்கள்ல இயற்கை விவசாயத்துக்கும் கால்நடை வளர்ப்புக்கும் பயிற்சி எடுத்துக் கிட்டேன். இடவசதியும் தண்ணீர் வசதியும் இருந்ததால படிப்படியா கால்நடை வளர்ப்பை அதிகப்படுத்தினோம்.

முட்டை மற்றும் கறிக்காக கிரிராஜா கோழிகளையும், குஞ்சு விற்பனைக்குச் சிறுவிடை மற்றும் பெருவிடை கோழிகளையும், கறி விற்பனைக்கு அசில் கோழிகளையும் வளர்க்கிறோம். 12 மாடுகள் இருக்கு. தினமும் 50 முட்டைகளுக்குக் குறையாம விற்பனை செய்யுறோம். ‘மைராடா’ கே.வி.கே மையத்துல, இன்குபேட்டரை மானியமா கொடுத்தாங்க. எங்க தேவைக்குப் போக, பிறருக்கும் முட்டைகளை குஞ்சு பொரிச்சுக் கொடுத்து வருமானம் பார்க்கிறோம். வாத்துகள், செம்மறியாடு, வெள்ளாடுகளும் வளர்க்கிறோம்.

கால்நடை வளர்ப்பில் கலக்கும் பட்டதாரி விவசாயி ஷர்மிளா!

டாபர்மேன், பொமரேனியன் உட்பட நாலு வகை நாய்கள் வளர்க்கிறோம். எல்லா வகையிலும் வருஷத்துக்குக் குறைந்தபட்சம் சராசரியா அஞ்சு குட்டிகள் கிடைக்கும். நாய் வளர்ப்பில் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் குறையாம லாபம் கிடைக்குது. நாய்களை இரவில் மேய்ச்சலில் விடறதால வனவிலங்குகள் ஊடுருவலைத் தடுத்து, வீட்டுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யுது. கே.வி.கே விற்பனை நிலையத்தினர் மற்றும் வாடிக்கையாளர்கள் வீட்டுக்கே வந்து கால்நடைகளை வாங்கிட்டுப் போறாங்க. வேளாண்துறை அதிகாரிகளே விற்பனை வாய்ப்புக்கும் உதவுறாங்க” என்பவர், கால்நடை வளர்ப்பில் மட்டும் மாதம் 60,000 ரூபாய்க்கு அதிகமாக லாபம் ஈட்டுகிறார்.

கால்நடை வளர்ப்பில் கலக்கும் பட்டதாரி விவசாயி ஷர்மிளா!

கோழிகளுக்குத் தீவனம் அளித்தவாறே தொடர்பவர், “நிழலுக் காகவும் மண் அரிப்பைத் தடுக்கவும் மூங்கில் வளர்க்க ஆரம்பிச்சோம். அவை, எங்க தோட்டத்துல வாழை மரங்களுக்கு முட்டுக் கொடுக்கவும் உதவுது. ஒரு குச்சி 25 ரூபாய் வீதம், மாதம்தோறும் 100 குச்சிகள் விற்பனை செய்யுறோம். நானும் மாமியாருமே எல்லா வேலைகளையும் செய்யுறதால, கால்நடை வளர்ப்புக்குப் பணியா ளர்கள் யாரையும் பயன் படுத்துறதில்லை. கால்நடைக் கழிவுகளைக் கொண்டு இயற்கை விவசாயமும் நடக்குது.

களைகள், பயிர்களின் இலைதழைகள் கால்நடை களுக்கு உணவு. அதுங்களோட கழிவு, புழுப் பூச்சிகளுக்கு உணவு. இவை கோழி, வாத்துக்கு உணவாகிடும். இப்படி சரியான திட்ட மிடலோடு விவசாயத் தொழில்களைச் செஞ்சா சிறப்பான பலன் ஈட்டலாம். முறையான அனுபவத்தோடு பெண்கள் கால்நடை வளர்ப்புல ஈடுபட்டா நல்ல வருமானம் ஈட்டலாம்” என்று உற்சாகமாகக் கூறும் ஷர்மிளா, வீட்டுத்தோட்டத்திலேயே காய்கறிகளையும் உற்பத்தி செய்கிறார்.