Published:Updated:

கிரேட்டா முதல் அமரியன்னா வரை... பாய்ஸை விட கேர்ள்ஸுக்கு அக்கறை அதிகமா?!

கிரேட்டா தன்பெர்க் போலப் பெருங்குரலெடுக்கும் பல சிறு குரல்களை குறிப்பாகப் பெண் பிள்ளைகளின் குரல்களை இருபதாம் நூற்றாண்டு கண்டுவிட்டது,அவற்றில் சில...

கிரேட்டா தன்பெர்க்

காலநிலை மாற்றம் தொடர்பான நியூயார்க் மாநாட்டில் 16 வயதுச் சிறுமி கிரேட்டா தன்பர்க் #HowDareYou? எனப் பேசியது பரபரப்பாக வைரலாகி வருகிறது.

'என் கனவுகளைக் களவாடிவிட்டீர்கள். இத்தனையும் செய்துவிட்டு நீங்கள் பேசிக்கொண்டிருப்பதெல்லாம் பணமும் பகுத்தறிவற்ற கதைகளும்தான். அதனால்தான் பெருங்கடலைக்கடந்து வந்து நான் இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன்' என அவர் பேசியிருப்பது எல்லோரையும் காலநிலை தொடர்பாகத் தீவிரமாகச் சிந்திக்க வைத்திருக்கிறது.

Greta Thunberg
Greta Thunberg

நம்புங்கள்! இருபதாம் நூற்றாண்டிலும் இந்தப் பூமியில் துள்ளியோடும் வயதுடைய சிறுமிகளுக்குத் திருமணம் செய்துவைக்கும் அவலம் நடந்துகொண்டிருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்கள் சர்வதேச அளவில் இன்னமும் மீட்கப்படும் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன. பாலியல் வன்முறை, குழந்தைகளைக்கூட விட்டுவைக்காத அளவிற்கு டிஜிட்டல் யுகம் வளர்ந்திருக்கிறது. இந்த உலகம் சிறுவர் சிறுமிகளுக்குக் காண்பித்துக் கொண்டிருப்பதெல்லாம் வன்முறையின் பல்வேறு வடிவங்களை மட்டுமே. வன்முறையை மட்டுமே காண்பித்திருக்கும் சமூகத்திடம் இனிமேலும் எங்களிடம் வன்முறையைத் திணிக்காதீர்கள் எனக் கோபத்துடன் குரலெடுத்துப் பேசியிருக்கிறார் கிரேட்டா. அது சிறு குரல் அல்ல 'இனி, உங்களிடமிருந்து எங்களை நாங்கள்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்' என்னும் எதிர்காலத்தின் பெருங்குரல். கிரேட்டா போல இப்படிப் பெருங்குரலெடுக்கும் பல சிறு குரல்களை இருபதாம் நூற்றாண்டு கண்டுவிட்டது.

மலாலா யூசுப்ஸை

பார்பி டால் குறித்து டைரி எழுதும் பிள்ளைகளுக்கு நடுவே தன்னைப் போன்ற பெண் பிள்ளைகளுக்குக் கல்வி ஏன் மறுக்கப்படுகிறது என, தனது 11 வயதில் டைரி எழுதத் தொடங்கினார் பாகிஸ்தானின் மலாலா. எழுதத் தொடங்கியது அதற்கடுத்த மூன்று வருடங்களில் அவரின் தலையெழுத்தையே மாற்றி இருந்தது. பள்ளிக்குச்செல்லும் பேருந்தில் அமர்ந்துகொண்டிருந்தவரை தலிபான் தீவிரவாதிகளின் துப்பாக்கித் குண்டுகள் துளைத்தன. உயிர்பிழைத்து மீண்டு எழுந்தவரை உலக நாடுகள் அத்தனையும் கவனிக்கத் தொடங்கின. 2014 உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவின் கைலாஷ் சத்தியார்த்தி, பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

Malala Yousafzai
Malala Yousafzai

தான் நோபல் பரிசு பெற்றுக்கொண்ட நிகழ்வில் பேசிய மலாலா, 'இந்த நோபல் எனக்கான தல்ல. கல்வி மறந்துவிட்ட அத்தனை பிள்ளைகளுக்குமானது. அவர்கள்மீது கருணையும் இரக்கமும் வேண்டாம், கல்விதான் வேண்டும். மாற்றத்தைத் தீரா ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருந்தாலும் அவர்களால் அதற்காகக் குரலெழுப்ப முடியவில்லை. அமைதியை விரும்பினாலும் அதைக் கேட்பதற்கு அச்சப்படுகிறார்கள். அவர்களுக்காக நான் இங்கே பேசுகிறேன். அவர்களுக்காக நான் இங்கே குரலெழுப்புகிறேன்' என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எம்மா கோன்ஸாலேஸ்

வல்லரசு அமெரிக்காவே சாதிக்க முடியாததைத் தனியொரு மனிதியாகச் சாதித்தார் 18 வயதான எம்மா கோன்ஸாலேஸ். பிப்ரவரி 2018 ஆம் ஆண்டில், ப்ளோரிடா மாகாணப் பள்ளி ஒன்றில் துப்பாக்கி ஏந்திய நபர் கண்மூடித்தனமாகச் சுட்டதில் 17 பேர் உயிரிழந்தார்கள். அதற்கும் முன்பு அதுபோன்ற எத்தனையோ துப்பாக்கி வன்முறைகளை அந்த நாடு கண்டிருந்தது. இருந்தும் அதுபோல இதைக் கடக்க விடவில்லை பள்ளியின் சிறுவர்கள். துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக #NeverAgainMSD என்கிற கூட்டமைப்பை, தன் பள்ளியைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகளுடன் சேர்ந்து ஒருங்கிணைத்தார் எம்மா. எம்மாவின் பின்னால் பெருங்கூட்டம் திரண்டது.

Emma Gonzalez
Emma Gonzalez

மார்ச் 2018-ல் வாஷிங்டனில் மேடையேறிப் பேசிய எம்மா, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த, தன் நண்பர்கள் அனைவரின் பெயர்களையும் வாசித்துவிட்டு நான்கு நிமிடங்கள் அமைதியாக நின்றார். அதிகாரத்தின் மனசாட்சியை உலுக்க அந்த நான்கு நிமிடங்கள் போதுமானதாக இருந்தது. அதற்கடுத்த சில தினங்களிலேயே ப்ளோரிடா மாகாண சபை துப்பாக்கி உரிமத்துக்கான வயது வரம்பை 21 என அதிகரித்துச் சட்டம் இயற்றியது.

அமரியன்னா கோப்பெனி

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளின் நிலத்தடி நீரைக் காப்பாற்ற ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடியவர்களை அரசு ஒடுக்குதலுக்கு ஆளாக்கிக் கொண்டிருந்த அதே வேளையில்தான், தனது நாட்டின் அதிபர் பராக் ஒபாமாவுக்குக் கடிதம் எழுதினார் மிச்சிகன் மாகாணத்தின் 12 வயதுச் சிறுமி அமரியன்னா கோப்பெனி. மிச்சிகன் மாகாணத்தின் ஃபிளிண்ட் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் அமரியன்னா. ஃபிளிண்ட் பகுதியின் நிலத்தடி நீர் முழுவதும் லெட் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தது. ஒபாமா அமரியன்னாவை நேரடியாகச் சந்தித்தது மட்டுமல்லாமல் நிலைமையைச் சரிசெய்ய 2016 -ல் 100 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கினார். ஆனால், நிலைமை சரியாக இன்னும் நான்கு வருட காலமாகும் எனக் கூறப்பட்டது.

Amariyanna Copeny
Amariyanna Copeny

இடைப்பட்ட காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சமயத்தில் நிச்சயம் நிலைமையைச் சரிசெய்து தருவதாக வாக்குறுதி அளித்தார் அதிபராகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப். ஆனால், கொடுத்த வாக்கை அவர் நிறைவேற்றவில்லை. அடுத்த ஆண்டில் அமெரிக்கா அதிபர் தேர்தலைச் சந்திக்க இருக்கும் நிலையில் ட்ரம்புக்கு எதிராகத் தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியிருக்கிறார் இந்த 12 வயதுச் சிறுமி. டொனால்டு ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியுடைய சின்னம் யானை. யானையில் காதில் நுழைந்த எறும்பின் கதையாக இந்தத் தேர்தலில் அமரியன்னாவை எதிர்கொண்டுவருகிறது குடியரசுக் கட்சி.

சொல்வது அனைத்துக்கும் சரியென்றே தலையசைத்துப் பழகிவிட்ட தலைமுறையிலிருந்து ஒவ்வொன்றாய் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. பதில்களை மறுப்பவர்களுக்கு எதிர்காலம் இல்லை என்பதே நிதர்சனம்.

`உங்களை நம்பமாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்!’ -  ஐ.நா-வில் கர்ஜித்த சிறுமி கிரேட்டா தன்பெர்க்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு