Published:Updated:

லாக்டௌனில் டியூ டேட்... கர்ப்பிணிகள் கவனத்துக்கு 10 விஷயங்கள்!

due date @lock down
due date @lock down

''பொய் வலியைப் பிரசவ வலி என்று நினைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்று வருவதை இந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது.''

கொரோனா பீதி, லாக்டெளனில் முடங்கிப்போன இயல்பு வாழ்க்கை, இந்த இரண்டும் பிரசவ தேதி நெருங்கும் கர்ப்பிணிகளுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுப்பதற்கில்லை. பயத்தையும் பதற்றத்தையும் விலக்கி, பிரசவத்துக்கு காத்திருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு ஆலோசனைகள் சொல்கிறார், மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ கஜராஜ்.

1. தற்போது நாம் சந்தித்துக்கொண்டிருக்கிற கொரோனா பாதிப்பும் மாறிப்போன இயல்பு வாழ்க்கையும், நம் எல்லோருக்குமே மிகப் புதியவை என்பதால் பதற்றம் வருவது இயல்புதான். அதிலும் இந்த நேரத்தில் பிரசவ தேதி கொடுக்கப்பட்டிருக்கிற பெண்கள், இன்னும் அதிகமாகவே பதற்றப்படுவார்கள். இதுவும் இயல்பான விஷயம்தான். ஆனால், பதற்றப் படுவதைவிட பாதுகாப்பாக இருப்பதுதான் புத்திசாலித்தனம். தனித்திருத்தலில் கவனமாக இருந்தீர்கள் என்றால் பயப்படுவதற்கு அவசியமே ஏற்படாது.

due date @lock down
due date @lock down

2. உங்களுக்கு 38 வாரங்கள் முடிந்துவிட்டன என்றால், பிரசவ வலி வந்த பிறகு மருத்துவமனைக்குச் சென்றால் போதும். ஒருவேளை இன்னும் மூன்று நான்கு வாரங்கள் இருக்கின்றன என்றால், உங்கள் மகப்பேறு மருத்துவர், 'நீங்கள் மருத்துவமனைக்கு வரவேண்டும்; ஸ்கேன் செய்ய வேண்டும்' என்று அழைத்தால் உரிய பாதுகாப்புடன் மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

3. பொய் வலியைப் பிரசவ வலி என்று நினைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுவருவதை இந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது. உண்மையான பிரசவ வலி எப்படி இருக்கும் என்று தெரியாதவர்களுக்காகச் சொல்கிறேன். 30 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, 15 நிமிடங்களுக்கு ஒருமுறை என வலி வருகிற இடைவெளி குறையும். அதே நேரம் வலியின் தீவிரம் அதிகரித்துக்கொண்டேபோகும். வலி வந்த பிறகு, முடிந்தால் அதை உங்கள் மருத்துவரிடம் தொலைபேசியில் உறுதி செய்துகொண்டு மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

due date @lock down
due date @lock down

4. கிளினிக்குடன் மருத்துவமனை இணைந்திருந்தால், அங்கேயே பிரசவம் பார்க்கப்படும். அப்படியில்லை என்றால், இரண்டு அல்லது மூன்று மருத்துவமனைகளைப் பரிந்துரைப்போம். தற்போது, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரேயொரு மருத்துவமனையைத்தான் பரிந்துரைக்கிறோம். உங்களுக்கும் இப்படி நிகழ்கிறது என்றால், இரவோ அல்லது பகலோ பிரசவ வலி வந்தவுடன், உங்கள் மெடிக்கல் ஃபைலை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுங்கள்.

5. பிரசவத்துக்காக மருத்துவமனைக்குச் சென்றால், கொரோனா வந்துவிடுமோ என்று பயப்படத் தேவையில்லை. மகப்பேறு மருத்துவமனைகள் பாதுகாப்பு அம்சங்களுடன்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ கஜராஜ்
மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ கஜராஜ்

6. பிரசவவலி வந்து மருத்துவமனைக்குச் செல்கிற கர்ப்பிணிகளுக்கு, ICMR சொல்லியிருக்கிறபடி கொரோனா டெஸ்ட் கட்டாயம் செய்யப்படும் என்பதால், ' நமக்கு கொரோனா இருக்குமோ... நம்மிடமிருந்து பிள்ளைக்கும் பரவிவிடுமோ என்று அச்சப்பட தேவையில்லை.

7. சிசேரியன்தான் செய்ய வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களையும், கொடுக்கப்பட்ட டெலிடரி தேதிக்கு இரண்டு நாள்களுக்கு முன்புவரை வலி வரவில்லையென்றாலும், மருத்துவமனைக்கு வரவழைத்து, கொரோனா பரிசோதனை செய்வோம்.

due date @lock down
due date @lock down

8. ஒருவேளை வலி வந்த பிறகு கர்ப்பப்பை வாய் திறக்கவில்லை, குழந்தையின் இதயத் துடிப்பில் பிரச்னை போன்ற காரணங்களால் சிசேரியன் செய்யவேண்டிவந்தால், அரை மணி நேரத்திற்குள் ஆபரேஷன் தியேட்டர் ரெடி செய்துவிடுவோம். தற்போது கொரோனா தொற்றுக்கு எதிரான பாதுகாப்புகளையும் சேர்த்துச் செய்வதற்கு இன்னும் அதிக நேரம் தேவைப்படும். அதனால், முன்புபோல கடைசி நிமிடம் வரை சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்வது கடினம் என்பதையும் நீங்கள் நினைவில்கொள்ள வேண்டும்.

கொரோனா: எச்சரிக்கை உணர்வு அச்சமாக மாறினால் சமாளிப்பது எப்படி? - மனநல மருத்துவர் ஆலோசனை #FightCovid19

9. மருத்துவமனையில் உங்களுடன் ஒருவர் இருப்பது அவசியம்தான். ஆனால் தற்போதைய நிலையில், உங்கள் கணவரும் குடும்பத்தினரும் லாக்டெளனில் வேறு ஊரில், நாட்டில் இருந்தால் பதற்றமடையாதீர்கள். மருத்துவர்களும் செவிலியர்களும் உங்களுக்குத் துணை நிற்போம்.

``லாக்டெளனால் மனஉளைச்சலா? மீம்ஸ், ஜோக்ஸ் பாருங்கள்!'' - மனநல மருத்துவர் #GoodReadAtVikatan

10. ஒருவேளை இருமல், சளி போன்ற பிரச்னைகள் இருந்தால், உங்கள் மருத்துவரிடம் போன் வழி தகவல் தெரிவித்து, பரிசோதனை செய்துகொள்ளுங்கள். பயத்துடன் நாள்களை நகர்த்தாதீர்கள்.

அடுத்த கட்டுரைக்கு