Published:Updated:

தென்கடலின் சூப்பர் வுமன்கள்!

சூப்பர் வுமன்கள்
பிரீமியம் ஸ்டோரி
சூப்பர் வுமன்கள்

தினமும் சூரியன் உதிப்பதற்கு முன்பே இந்தப் பெண்களின் அன்றாடம் தொடங்கிவிடுகிறது.

தென்கடலின் சூப்பர் வுமன்கள்!

தினமும் சூரியன் உதிப்பதற்கு முன்பே இந்தப் பெண்களின் அன்றாடம் தொடங்கிவிடுகிறது.

Published:Updated:
சூப்பர் வுமன்கள்
பிரீமியம் ஸ்டோரி
சூப்பர் வுமன்கள்

றைவிகளைச் சந்திப்பது அவ்வளவு எளிதில் கிடைக்கும் வரமல்ல. புயல் எச்சரிக்கை, காற்றழுத்தத் தாழ்வுநிலை என அத்தனை தடைகளையும் கடந்து தென்கடலின் சில சூப்பர்வுமன்களைச் சந்திக்கும் வாய்ப்பு வரம் போலதான் அமைந்தது. ராமநாதபுரத்தின் சேதுக்கரை, கீழக்கரை தொடங்கி குமரிக்கரை வரை விரிந்திருக்கிறது தமிழகத்தின் தென்கடல். அலைகள் பாதங்களைத் தொடுவதற்கு முன்பே எட்டிப்பார்க்கும் பாசிகள் படிந்த பாறைகள் அந்தப் பகுதியைச் சுற்றியிருக்கும் 21 தீவுகள் வரை நீண்டிருக்கின்றன. பட்டுப்போன இந்தப் பாறைகளில் பாசிகுளிப்பதுதான் இந்தப் பகுதியின் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்வாதாரம். நீச்சல் உடை ஆக்சிஜன் சிலிண்டர் என எவ்வித உபகரணமும் இல்லாமல் உடுத்திய புடவையுடன் அசாதாரணமாக ஆழ்கடல் வரை இறங்கிப் பாசி குளிக்கும் இந்தப் பெண்களில் சிலரை கடலோடும் கதைகளோடும் கீழக்கரையின் பாரதிநகர் கடற்கரைப்பகுதியில் சந்தித்தேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காயத்தின் தழும்புகள் எதுவுமில்லாத மிருதுவான வெண்சருமம், கையில் கேடயம், நட்சத்திரமிட்ட நெற்றிப்பட்டை, முதுகிலிருந்து முழங்கால்வரை நீண்டிருக்கும் ஹூட் என வொண்டர்வுமன் கதாபாத்திரங்களைப் பார்த்துப் பழகிவிட்ட நமக்கு ஐம்பத்து நான்கு வயதான ராக்கம்மாளை சூப்பர்வுமனாக ஏற்றுக்கொள்வது சிரமம்தான்.

தென்கடலின் சூப்பர் வுமன்கள்!

ஊதாநிறப் பூப்போட்ட புடவை, கடலின் உப்புக்காற்றுபட்டே பழுப்பேறிவிட்ட தலைமுடி, தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து உப்புநீரில் இறங்கிக் கொண்டிருப்பவளின் கறுத்த சருமத்தில் தேங்கிவிட்ட சுருக்கங்கள், கடலில் இறங்கும்போது பாறைகள் தனது சதைகளைக் கிழித்துவிடாமல் இருக்கவும் விஷமீன்கள் கடித்துவிடாமல் இருக்கவும் கைகளில் அணிந்திருந்த கிளவுஸுகள் கால்களில் அணிந்திருந்த சாக்ஸுகள், அதையும் மீறி உடலைப் பதம்பார்த்திருந்த காயங்களின் தழும்புகள், இடுப்பைச் சுற்றிக்கட்டியிருந்த வலைப்பையில் அரைப்பை வரை நிரப்பப்பட்டிருந்த பாசி, ஆழ்கடல் இருட்டில் கண்கள் தெளிவாகத் தெரிய அணிந்திருந்த கண்ணாடி, எம்பிக்கொடுத்து நீந்த ஏதுவாக சாக்ஸின் மேல் அணிந்திருந்த ரப்பர் செருப்பு இவற்றுடன் படகிலிருந்து கடலுக்குள் தாவிக் குதித்த ராக்கம்மாள் வொண்டர்வுமனை விஞ்சியிருந்தார். ராக்கம்மாள் மட்டுமல்ல, மீனாட்சி, முப்பூரி, லட்சுமியம்மா எனக் கடலோடு முக்கால்வாசி வாழ்நாளைக் கழித்துவிட்ட அந்தப் பகுதியின் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு வலிநிரம்பிய கதை இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாறையின் இடுக்குகளில் ஒட்டியிருந்த ஒருவகைப் பாசியைக் காண்பித்து, “இதுதான் நாம எடுக்குற மரிக்கொழுந்துப் பாசி” என்றபடியே தங்களது கதைகளைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்கள் அந்தப் பெண்கள். முதலில் ராக்கம்மாள்தான் பேசினார், “முதன்முதல்ல எங்க அப்பா கையைப் பிடிச்சுக்கிட்டு இந்தக் கடலுக்கு வரும்போது எனக்கு அவ்வளவு பயமிருந்துச்சு. இந்தக் கடல் நம்மை எதாவது செஞ்சிருமுன்னு பயந்தேன். காய்ஞ்சுபோன தேங்காய்மட்டையக் காலுல கட்டி அப்பா கடல்ல நீந்த என்னை இறக்கி விட்டாரு. பத்து மாசம் அம்மா வயித்துல நீந்திக்கிட்டு இருந்தவ பத்து வயசுல இந்தக் கடல்ல நீந்த ஆரம்பிச்ச பிறகு கடல்தாய்தான் என்னைப் பார்த்துக்குறா. புருஷன் சின்ன வயசுலயே புத்துநோய்ல போய்ச் சேர்ந்துட்டாரு. முட்டிக்கால் உயரத்துக்கு வளர்ந்த மூணு பிள்ளைங்களோட நான் நடுத்தெருவுல நின்னப்போ இந்தக் கடல்தாய் என்னைய காப்பாத்தலைன்னா இன்னிக்கு மூணு பேரையும் படிக்க வெச்சுக் கல்யாணம் கட்டிக் கொடுத்திருக்க முடியாது. கைநாட்டு வைச்சிகிட்டிருந்த என்னைத் தமிழ்ல ராக்காம்மாள்னு கையெழுத்துப்போட வெச்சது இந்தக் கடல் கொடுத்த நம்பிக்கைதான்” என்கிறார்.

தென்கடலின் சூப்பர் வுமன்கள்!

அந்தப் பெண்கள் குழுவின் தலைவரான மீனாட்சிக்கு வயது 68. பதிமூன்று வயதிலிருந்து கடலில் நீந்தத் தொடங்கியவர், ``அவளுக்குப் புருஷன் இறந்துட்டாரு. இதோ இங்க நிக்கற முப்பூரியோட புருஷன் இடுப்புல குழந்தையோட இருந்தவள விட்டுட்டு ஓடிப்போயிட்டாரு. அவளை மாதிரி தனியா குடும்பத்தைக் காப்பாத்துற பொம்பளைங்க இங்க அதிகம். என் புருஷன் தினமும் குடி. மீன் பிடிச்சுட்டுவர்ற காசுல நூறு ரூபாய்க்குக் குடிச்சுட்டு அம்பது ரூபாயக் குடும்பத்துக்குக் கொடுத்தா பெத்துப்போட்ட ஆறு பிள்ளைங்கள எப்படிக் கரைசேர்க்க முடியும்.குடும்பத்துக்கு வாங்குன கடனை எப்படி அடைக்க முடியும்? அப்பனுக்குத் தப்பாம எம்மவனும் குடிக்கறான். ஆனா என் முதல் பொண்ணு பி.எட் வரைக்கும் படிச்சிருக்கா” என்பவரின் கரங்களில் பல தையல் போடப்பட்ட கிழிசல் கிளவுஸுகள்.

பாசி
பாசி

தினமும் சூரியன் உதிப்பதற்கு முன்பே இந்தப் பெண்களின் அன்றாடம் தொடங்கிவிடுகிறது. வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு சோறாக்கி வைத்துவிட்டு உப்பு பருப்பு தேவைமுதல் கடன்பாக்கிகள் வரை குடும்ப நிர்வாகத்தைக் கவனித்துவிட்டு, பாசி எடுக்கப் படகேறிச் செல்கிறார்கள்.

“அம்பா போட்டா துன்பமில்ல

அவளத்தொட்டா பாவமில்ல

ஓடுற ஓட்டத்துல ஓலப்பட்டி கக்கத்துல

ஓலப்பட்டி கிழிஞ்சாலுமே நா உன்னவிடப் போறதில்ல”

எனப் பாடும் குரல்கள் பாசி எடுப்பதற்கு இடையிடையே கேட்கின்றன. சூரியன் மறையும்போதுதான் மீண்டும் கரைக்குத் திரும்புகிறார்கள். மீன் பிடிக்கச் செல்லுபவர்கள் பகலிலேயே கரைக்குத் திரும்பிவிடுவார்கள். ஆனால், பாசியெடுப்பது பொழுது சாயும்வரை பொறுமையாகச் செய்யவேண்டிய வேலை என்பதால் இதில் பெண்கள் மட்டுமே அதிகம் ஈடுபடுகிறார்கள். பாசி எடுக்கும் ஆண்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். புயல், மழை, பேறுகாலம் என எதுவும் இவர்கள் பாசிகுளிப்பதற்குத் தடையாக இருப்பதில்லை. ``ஓகி புயல்ல எங்க ஆளுக நிறைய இறந்ததுக்குக் கூட அரசாங்கத்தோட அலட்சியம்தான் காரணம். சுனாமி அப்போதான் பாதிப்பு இருந்துச்சு. அதுவும் பொங்கி வரலை. சிறுசா அலையா வந்துட்டுப் போச்சு. தென்கடல் பெண்கடலாம். அழிக்கமாட்டாளாம். அமந்துதான் வருவாளாம். பாட்டன் காலத்துல சொல்லியிருக்காக. இந்தக் கடல் முழுக்க மொத்தம் 21 தீவுக இருக்கு, காலையில படகேறினா சில தீவுகளுக்குப் போக ரெண்டு மணி நேரம்கூட ஆகும். ஊருல கேதம்(இறப்பு), கல்யாணம் வந்தா சனங்க யாரும் கடலுக்குப் போக மாட்டோம். மத்தபடி வருஷத்துல ரெண்டு மாசம் தவிர்த்து எல்லா நாளும் கடலுலதான் இருப்போம். அந்த ரெண்டு மாசம் பாசி வளரவிடுவோம். புயல்காத்து அடிச்சாக்கூடக் கடலுக்குப் போக விருப்பப்படறவங்க போவோம். 40 நாள் கரு தொடங்கி நெறமாசக் கருவ சுமக்குறவங்க வரைக்கும் கடலுக்குப் போயிருக்கோம்.

வயித்துல புள்ள தள்ள மூச்சடைக்கற சூழல்லேயும் கடலுல இறங்கிப் பாசி எடுத்திருக்கோம். கடல் காப்பாத்துங்கற நம்பிக்கை. எங்க நம்பிக்கை இதுவரைக்கும் பொய்யானதுமில்ல. என்னோட மூணாவது பிள்ளையச் சுமந்துகிட்டிருந்தப்போ நெறமாசம். நல்லதண்ணித்தீவுவரை படகுல போயி பாசி எடுத்தோம். கரைக்குத் திரும்பினதுமே வலியெடுத்துப் பிள்ளையப் பெத்துருக்கேன். அதுவரைக்கும் ரெண்டு உசுருக்கும் ஒண்ணுமாகாம கடல்தான் பாத்துக்கிட்டா” என்கிறார் லட்சுமியம்மா.

பாசி
பாசி

ஒரு கோப்பைத் தேநீரை நீட்டியபடியே ராக்கம்மாள் மீண்டும் தொடங்குகிறார், ``இந்தக் கடல்ல கத்தாங்கொரை, மரிக்கொழுந்து, பக்கோடா பாசி இப்படிப் பலவகைப் பாசி இருக்கு. நாங்க மரிக்கொழுந்து மட்டும்தான் எடுப்போம். பத்துகிலோ பாசி எடுத்து அதைக் கம்பெனிக்காரங்ககிட்ட கொடுத்தா நூத்தம்பது ரூவா கிடைக்கும். இதுவே தீவுக்குப் போய் ரெண்டு நாள் தங்கியிருந்து எடுத்தா பதினைஞ்சு இருபது கிலோ எடுக்கலாம். எங்களுக்கு வருமானமும் கிடைக்கும். ஆனா வனத்துறை அதிகாரிங்க தீவுக்குள்ள விடுறதில்லை. பவளப்பாறைக எங்களால பாதிக்குதாம். அதனால அரசாங்கம் ஐடி கார்டோடதான் வரணும்னு சொல்லிட்டாங்க. எனக்குத் தலைமசுரு கருகருன்னு இருந்தப்போ அரசாங்கத்துகிட்ட ஐடி கார்டு கேட்டுப் போராட ஆரம்பிச்சோம். இப்போ மசுரு வெளுத்துப்போச்சு, இன்னமும் போராடிக்கிட்டுதான் இருக்கோம். மீன்வளத்துறை அமைச்சர் மௌனமா இருக்காரு. எங்களுக்கு ஐடி கார்டும் கிடைச்சபாடில்ல. வனத்துறை எங்களத் தீவுல தங்கவிடுறதும் இல்ல. ஆனா வெளிநாட்டுக்காரவுகளாம் வந்தா எந்த அனுமதியும் இல்லாம தீவுக்கெல்லாம் போயிட்டு வராக. கடலுக்குப் போறவுக முன்னெலாம் வெடி வெச்சுதான் மீன் பிடிப்பாக. அதனால் பாறைகளும் உடைய ஆரம்பிச்சுது. பொம்பளைங்க நாங்கதான் ஒண்ணுசேர்ந்து அதைத் தடுத்து நிறுத்தினோம். அதுக்குப் பிறகுதான் பாசியும் செழிப்பா வளர ஆரம்பிச்சது. இன்னொரு பக்கம் சில கம்பெனிங்க கடலுல வயர் போட்டு அதுல செயற்கையா பெப்சி பாசி வளர்க்க ஆரம்பிச்சாங்க. அது சூரிய வெளிச்சத்துலதான் வளரும். அப்படி வளர்க்குற பாசியச் சுத்தி வேற எதுவுமே வளராது. பெப்ஸி பாசிய எங்க பகுதியில வளர்க்கவிடாம நிறுத்தினோம், கடலக் காப்பாத்தினோம். நாங்களா பவளப்பாறைய அழிக்கப்போறோம்?! கடல் எங்களுக்குப் பட்டா போடாத சொத்து” என்றபடி தேநீர்க் கோப்பையைக் கீழே வைத்தார். ராக்கம்மாள் சொன்னதை ஆமோதித்த குரல்களில் ஆயிரம் பெண்கடல்களின் பேரொலி கேட்டது. அது அரசின் காதுகளுக்கும் எட்டட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism