Published:Updated:

வேலைப்பகிர்வு... ஆண்கள் செய்வதில்லையா, பெண்கள் கேட்பதில்லையா?

வேலைப்பகிர்வு.
பிரீமியம் ஸ்டோரி
வேலைப்பகிர்வு.

ஆண்களே முன்வந்து, ‘இதை நான் செய்கிறேன்’ என்று சொன்னாலும் அதை அனுமதிக்காத பல பெண்கள் இங்கு உள்ளார்கள்.

வேலைப்பகிர்வு... ஆண்கள் செய்வதில்லையா, பெண்கள் கேட்பதில்லையா?

ஆண்களே முன்வந்து, ‘இதை நான் செய்கிறேன்’ என்று சொன்னாலும் அதை அனுமதிக்காத பல பெண்கள் இங்கு உள்ளார்கள்.

Published:Updated:
வேலைப்பகிர்வு.
பிரீமியம் ஸ்டோரி
வேலைப்பகிர்வு.

எங்கள் அடுக்ககத்தில் நடந்த ஒரு பிறந்தநாள் பார்ட்டி. கேக் வெட்டி முடித்தவுடன் குழந்தைகள் ஒருபுறமும், குழந்தைகளின் அம்மாக்கள் மறுபுறமுமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நேரம், ஒரு குழந்தையின் தட்டிலிருந்த சிப்ஸ் மற்றும் சாஸ் கீழே சிந்தி விட்டது. பிறந்தநாள் குழந்தையின் அப்பா அதைச் சுத்தம் செய்வதற்காக ஒரு துணியை எடுத்து வந்தார். அதைப் பார்த்த பார்ட்டிக்கு வந்திருந்த பிற குழந்தைகளின் அம்மாக்கள் அத்தனை பேருக்கும் அதிர்ச்சி.

பதறியபடியே, ‘நீங்க ஏன் துடைக்கிறீங்க, நாங்கயெல்லாம் இருக்கோம்ல?’ என்றபடி அவரிடமிருந்து அந்தத் துணியை வாங்கப் போனார் ஒரு பெண். குழந்தையின் அப்பாவோ, ‘நீங்க என் வீட்டுக்கு வந்த கெஸ்ட். இது என் வீடு. கீழே சிந்தி இருக்குறதை நான் துடைக்கிறதுல என்ன தப்பு...’ என்றார். அடுத்த ஒரு வாரத்துக்கு எங்கள் அப்பார்ட்மென்ட்டில் பேசு பொருள் அவர்தான்.

‘அவர் ஏன் இதையெல்லாம் செய்யுறார்?’ என்பதில் தொடங்கி, ‘ஆனா, அப்போ அவ (குழந்தையின் அம்மா) ஏன் எழுந்துபோய் அதைச் செய்யல?’ என்பதுவரை பார்க், ஸ்விம்மிங் பூல் என எங்கு கூடினாலும் பெண்கள் இதைப் பற்றித்தான் பேசினர். தன் வீட்டைச் சுத்தம் செய்ய கையில் அவர் துணியுடன் வந்ததைப் பாராட்டியவர்கள் மிகக் குறைவு. அவரின் மனைவி ஏன் அதைச் செய்யவில்லை எனப் பழித்தவர்களே அதிகம்.

இது என்ன மாதிரியான உளவியல்? தன் வீட்டில் இருக்கும் ஆண்/கணவர் இதுபோல தனக்கு உதவுவதில்லையே என்ற ஆற்றாமையின் வெளிப்பாடா அல்லது தன் கணவரை தான் தாங்குவதுபோல அவரின் மனைவி அவரை தாங்குவதில்லையே என்ற ஆதங்கமா? என்னைக் கேட்டால், `இரண்டுமே' என்பேன். அத்துடன், ‘இவை எல்லாம் பெண்கள் மட்டும் செய்ய வேண்டியவை, எக்காலத்திலும் ஆண்கள் செய்யவே கூடாது’ என்று காலம் காலமாக நம்பப்படும் பழமைவாதமும்கூட. அதுதான், ‘இது என் வீடு… இதை நான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்’ என்ற பொறுப்பைத் தாண்டி, மற்றவர்களின் வீட்டிலும் ஓர் ஆண் வீட்டு வேலைகளைச் செய்ய முற்படும்போது, அது இவர்களை பதறச் செய்கிறது.

வீட்டு வேலைகளில் ஆண்கள் பங்கேற்பதில்லை, தங்களுக்கு உதவுவதில்லை போன்ற குறைகளும் குற்றச்சாட்டுகளும் ஒருபுறமிருக்க, ஆண்களே முன்வந்து, ‘இதை நான் செய்கிறேன்’ என்று சொன்னாலும் அதை அனுமதிக்காத பல பெண்கள் இங்கு உள்ளார்கள்.

வேலைப்பகிர்வு... ஆண்கள் செய்வதில்லையா, பெண்கள் கேட்பதில்லையா?

‘ஆண்களே திருந்துங்கப்பா’ என்று ஆண்களைப் பார்த்துச் சொல்லும் நாம், ‘என்னம்மா இப்படி பண்றீங்க ளேம்மா?’ என்று சில பெண்களைப் பார்த்தும் சொல்ல வேண்டும். ஏனெனில், ‘எங்களுக்கு உதவி தேவை’ என்று மனதுக்குள் மருகும் இவர்கள்தாம், சூழலைப் புரிந்து கொண்டு உதவ முன்வரும் ஆண்களை, ‘பரவாயில்ல நானே பார்த்துக்குறேன், நீங்க இதெல்லாம் செய்ய வேண்டாம்...’ என்று சொல்லி, அவசியமே இல்லாமல் தங்களைத் தாங்களே வருத்திக்கொள்கிறார்கள். ஆதலால் திருந்த வேண்டியது ஆண்கள் மட்டுமல்ல; தோழிகளே... நாமும்தான்.

எட்டாம் வகுப்புப் படித்தபோது, ஒருநாள் புஷ்பலதா டீச்சர் வீட்டுக்குச் சில மாணவிகள் சென்றோம். டீச்சர் குளித்துக் கொண்டிருந்தார். டீச்சரின் கணவர் (அவரும் ஆசிரியர்தான்), உள்ளே சென்று எங்களுக்கு ரஸ்னா கொண்டு வந்து கொடுத்தார். ஆண்கள் அடுப்படிக்குள் நுழைவதைப் பார்த்தேயிராத எங்களுக்கு, அது பேரதிர்ச்சியாக இருந்தது. சிறிது நேரத்தில் வந்த டீச்சர், ‘குழந்தைகளுக்குச் சாப்பிடுறதுக்கு பஜ்ஜி போடுறீங்களா?’ எனக் கேட்டதோ அடுத்த அதிர்ச்சி. ‘ஓர் ஆண் பஜ்ஜி எல்லாம் போடலாமா?’ என்ற அளவில்தான் எங்களின் மனநிலை அப்போது இருந்தது. சில நிமிடங்களில் எங்களுக்கு பஜ்ஜி செய்து கொடுத்து, எங்களுடன் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிவிட்டுப்போன சீனு சாரை இன்று நினைத்துப் பார்க்கிறேன்.

சீனு சாரிடமும், தன் வீட்டை சுத்தம் செய்ய முனைந்த பிறந்தநாள் குழந்தையின் அப்பாவிடமும் இருந்து ஆண்கள் கற்றுக்கொள்ள வேண்டியது, ‘இது என் வீடு, இந்த வேலைகள் என் பொறுப்பும்தான்’ என்ற பண்பை. அதேபோல பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டியது, ‘வீட்டு வேலைகளில் ஆண்டுகள் பங்கெடுத்துக்கொள்வதில் நான் பதற்றம்கொள்ளவோ, குற்ற உணர்வு கொள்ளவோ எதுவுமில்லை’ என்று உணர்ந்திருந்த பிறந்தநாள் குழந்தை யின் அம்மா, மற்றும் புஷ்பலதா டீச்சரின் தெளிவை.

ஏனெனில், ‘இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்’ என்று அவர்களை நோக்கி நமது ஒரு விரலை நீட்டும் நாம், நம்மை நோக்கித் திரும்பியிருக்கும் மூன்று விரல்களையும் கவனித்தாக வேண்டும்.

‘குடும்பம் ஒரு கதம்பம்’ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. சுகாசினி தன் கணவராக நடிக்கும் எஸ்.வி.சேகரிடம் ஜாக்கெட் தையலைப் பிரித்துக் கொடுக்க முடியுமா எனக் கேட்கத் தயங்குவார். அவரின் தம்பியோ, ‘அத்தான்கிட்ட கொடுத்து தான் பாரேன்’ என்று தூண்ட, ஏராளமான பயத்துடனும் கலக்கத்துடன், ‘இதைப் பிரிச்சுக் கொடுக்குறீங்களா?’ என்று கேட்பார் சுகாசினி. உடனே எஸ்.வி.சேகர், ‘அறிவுகெட்ட முண்டம்... ஊக்கு யாரு உங்க அப்பனா தருவான்?’ என்பார்.

இந்தக் காட்சி சொல்லாமல் சொல்லும் விஷயங்கள் ஏராளம். பல நேரங்களில், ‘கேட்டாலும் இவர் இந்த வேலையைச் செய்ய மாட்டார்’ போன்ற அனுமானங்களை நாமாகவே நமக்குள் விதைத்து நம்பத் தொடங்குகிறோம். அதுவே, ‘எல்லாத்தையும் நான்தான் செய்றேன்’ என்ற ஒரு சலிப்பான மனநிலையை உண்டாக்குகிறது. தேவையானபோது உடனேயே உதவி கோராமல், ‘அப்படிக் கேட்டால் நம்மை என்ன நினைப்பார்களோ?’ என்ற தயக்கத்துடன் வாழ்ந்து வருகிறோம்.

கேட்டாலும் உதவி கிடைக்காது என்பது ஒரு ரகம். உதவி வேண்டும் எனக் கேட்காமலேயே இருப்பது இன்னொரு ரகம். முன்னது நம் தவறல்ல. ஆனால் பின்னது… நம் தவறுதான் தோழிகளே.

மௌனம் நமக்கு உதவாது... தேவைப்படும் உதவியைக் கேட்டுப் பெறுங்கள்!