லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

மணவாழ்க்கை
பிரீமியம் ஸ்டோரி
News
மணவாழ்க்கை

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ்

ன்னுடைய கதைகளின் நீண்ட நாள் வாசகன் அரவிந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த நூற்றாண்டிலும், எதிரில் வயதில் பெரியவர்களைப் பார்த்தால் மடித்துக்கட்டிய லுங்கியை இறக்கிவிட்டுக்கொள்ளும் எளிய கிராமத்து இளைஞன்.

அவன் சென்னையில் வேலைக்குச் சேர்ந்தவுடன் அடிக்கடி என்னை வந்து பார்ப்பான். கறுப்பான, களையான முகம். சிரிக்கும்போது சூப்பர் அழகனாகவும், சிரிக்காத போது சுமார் அழகனாகவும் இருப்பான்.

ஒருநாள் மாலை அலுவலகத்துக்கு வந்த அரவிந்த், “வீட்டுல எனக்குப் பொண்ணு பார்க்கச் சொல்லிட்டேண்ணன்” என்றான். நான், “27 வயசுதானடா ஆவுது. அதுக்குள்ள என்ன அவசரம்? இன்னும் மூணு வருஷத்துக்கு பேச்சிலர் லைஃபை அனுபவிடா” என்றேன்.

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

“என்னத்த அனுபவிக்கறது… வாழ்க்கையே வெறுப்பா இருக்குண்ணன். பாக்குறதுக்கு ஒண்ணாம் நம்பர் பொறுக்கி மாதிரி இருக்கிறவ னெல்லாம் பீச்சுல நல்ல நல்ல ஃபிகரோடத் திரியறான். நமக்கு ஒண்ணும் செட்டாக மாட்டேங் குது. வெளியே சொன்னா வெட்கக்கேடு. 27 வயசு ஆவுது. இதுவரைக்கும் ஒரு பொண்ணோட சுண்டு விரலைக்கூடத் தொட்டதில்ல. பார்க்குறதெல்லாம் முதல்ல, `அண்ணான்னு' கூப்பிட்டுட்டுதான் பேச்சையே ஆரம்பிக்குது. எனக்கும் ஆசையிருக்காதாண்ணன்… பைக்குல யாராச்சும் நம்ப பின்னாடி உக்காந்து கட்டிப்பிடிச்சுக்கிட்டு வரணும். பீச்சுல நம்ப தலைமுடில” என்றவன், என் தலைமுடியில் கையை வைத்து அளைந்தபடி, “இப்படி கோதிவிட்டா என்னா மஜாவா இருக்கும் தெரியுமா” என்று சொல்லும்போதே அவன் முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை.

“அவ்ளோதான... நீ பைக்கை ஸ்டார்ட் பண்ணு. நான் பின்னாடி உக்காந்துகிட்டு பீச்சுக்கு வந்து தலைமுடிய கலைச்சுவிடுறேன்” என்ற என்னை முறைத்துவிட்டுச் சென்றான்.

அடுத்த மாதம் வந்தவன், “நல்ல நல்ல ஃபிகர் எல்லாம் ஜாதகம் சரியில்லைனு சொல்லியே கழற்றி விட்டுடறாங்க. இவனுங்க ஏதோ ஃபிராடு பண்றாங்கண்ணன். அதனால நானே ஜாதகப் பொருத்தம் பார்க்கக் கத்துக்கிட்டேன். அதுக்குன்னு ஒரு சாப்ட்வேர் இருக்கு” என்ற அரவிந்தை அதிர்ச்சியுடன் பார்த்தேன். பய ரொம்ப வேகமாத்தான் இருக்கான்

ஒரு மாதம் கழித்து ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டு வந்தவன், “போட்டோ அனுப்புறப்ப பொண்ணு சிவப்புன்னு முகத்துல லைட் அடிச்சி ஏமாத்திட்டாங்கண்ணன். பொண்ணுப் பார்க்கப் போறப்பவே என் ஃப்ரெண்டு, `மாப்ள… மூஞ்சில பவுடர் அடிச்சு ஏமாத்திடுவாங்கடா… அதனால பொண்ணோட கையப் பாரு'ன்னு சொல்லி அழைச்சுட்டுப்போனான். கையப் பார்த்தேன்… கறுப்பா இருந்துச்சு. இங்கே பாருங்களேன்'' என்று மொபைலில் அந்தப் பெண் போட்டோவை எடுத்து கை பகுதியை மட்டும் ஜும் செய்து காண்பித்தான். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இந்தியாவில் திருமண ஏற்பாடுகள் பெரும்பாலும் இப்படித் தான் நடக்கின்றன.

இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் போட்டோக்களைப் பார்த்துக்கொண்ட இரண்டாம் நாளே சாட்டில்...

`Hi'

`Hi

`I L U'

`I L U' - என்று பத்தே ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி, ஒரு ஒரு துண்டு பர்கரை விழுங்கி அது தொண்டையைக் கடப்பதற்குள் செம ஃபாஸ்ட்டாகக் காதலித்துவிடுகிறார்கள். இருப்பினும் இன்னும் இந்தியாவில் 80 சத விகிதத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் வீட்டில்தான் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த 2020-லும் முதலில் ஜோசியர் ஜாதகங்களைப் பார்த்து பச்சைக்கொடி காட்ட வேண்டும். ஒருவேளை… அன்று ஜோசியர் மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு, பெண்குலத்தின் மீதே வெறுப்பில் இருந்தால், `இந்தப் பொண்ணைக் கட்டினா பையன் நாசமாப்போயிடுவான்…' என்று திகிலேற்றி அனுப்பிவிடக் கூடும். எனவே, ஜோசியர் நல்ல மூடில் இருக்கும்போது ஜாதகங்களைப் பார்த்து முதலில் ஓகே சொல்ல வேண்டும். பின்னர் பார்க்கப்போகும் பெண்ணைவிட அதீத மேக்கப் பெண்களுடன் வேனில் சென்று இறங்கி, மாப்பிள்ளை பெண்ணை ஓரக்கண்ணால், மேல்கண்ணால், கீழ் கண்ணால், நேர்க்கண்ணால் என்று கண்களை பலவிதங்களிலும் சுழற்றி சுழற்றிப் பார்த்து முடிக்கும்வரை பெருசுகளிடையே கருத்து வேறுபாடு ஏதும் ஏற்படாமல் இருந்தால், அதன் பிறகு சீர், செனத்தி எல்லாம் கட்டுப்படியான பிறகுதான் ஓர் இந்திய திருமணம் நடக்கிறது.

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

இந்திய திருமண முறையில், பெரும்பாலும் அழகு மற்றும் அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்டே தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்கிறார்கள். நான் கவனித்தவரையில், பெரும்பாலான ஆண்கள் அழகுக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறார்கள். ஏனெனில் அவர்கள் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பல அழகான பெண்களை சைட்டடித்து அடித்து, அவர்கள் மனத்தில் தன் நண்பர்களுக்கு முன்பு ஓர் அழகான பெண்ணை மனைவி யாக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்துள்ளது. ஆனால், ஆச்சர்யகரமாகப் பெரும்பாலான பெண்கள் அழகைவிட, தங்கள் எதிர்காலம் யார் கையில் பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பாக இருக்கும் என்பதன் அடிப்படையிலேயே முடிவெடுக்கிறார்கள். இப்படி ஜாதகம், நிறம், அழகு, அந்தஸ்து ஆகியவற்றை வைத்தே பெரும்பாலானோர் தங்களுக்கான ஜோடியைத் தேர்வு செய்கிறார்கள். இது சரியா?

ஓர் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் துணையாக, சாகும் வரை மகிழ்ச்சியாக வாழ்வதற்காக ஏற்படுத்தப்பட்ட விஷயம்தான் திருமணம். மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அழகும் நிறமும் பணமும் இருந்தால் மட்டும் போதாது. அவர்கள் மனரீதியாக எந்தளவு ஒன்றிணைந்து, சண்டை சச்சரவுகளின்றி சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதில்தான் திருமண வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது. எனவே, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது கீழ்க்கண்டவற்றை பரிசீலிக்கவும்...

கன்னத்தில் இளமையின் செழுசெழுப்புடன், உதடுகள் பளபளக்க... ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்த வானவில் போல எதிரே நிற்கும் 21 வயதுப் பெண்ணைப் பார்க்கும்போது, பொண்ணுக்கு கொரோனா அட்வான்ஸ்டு ஸ்டேஜில் இருந்தாலும் பரவாயில்லை. மறுநாளே கல்யாணம் வைத்துக்கொள்ளலாம் என்று தோன்றுவது இயல்புதான். ஆனால், அதற்கு மாப்பிள்ளையின் வயது 25-க்குள் இருக்க வேண்டும்.

30 வயதில் 20 வயது பெண்ணுக்கு ஆசைப்படக் கூடாது. ஏனெனில் இப்போது ஐந்து வருட இடைவெளியே ஒரு தலைமுறை இடைவெளிக்குச் சமம். அவர்களிடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் வரும். எனவே அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்யாதீர்கள். அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று வயது வித்தியாசத்துக்குள் பாருங்கள். சம வயதிருந்தால் இன்னும் நல்லது.

ஒரே பின்புலத்திலிருந்து திருமணம் செய்து கொள் பவர்களிடையே அதிக பிரச்னைகள் ஏற்படுவதில்லை என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. முடிந்தவரை ஒரேவிதமான சோஷியல் ஸ்டேட்டஸ் மற்றும் லைஃப்ஸ்டைல் கொண்ட வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்யவும்.

பல திருமணங்களில் பெற்றோர் ஒரு மிகப்பெரிய தவற்றைச் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகள் சந்தோஷமாக வாழ்வதற்கேற்ற துணையைத் தேடுவதில்லை. தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு முன்பு பெருமை பீற்றிக்கொள்வதற்காக, தங்களை விடப் பெரிய இடத்தில் திருமணம் செய்து வைக்கவே விரும்புகிறார்கள். பெரிய இடமென்றால், பெண்ணும், மாப்பிள்ளையும் பிடிக்கவில்லை என்று சொன்னாலும் எப்படியாவது சமாதானம் செய்து கட்டிவைத்து விடுகிறார்கள். இது சிக்கலுக்கே வழிவகுக்கும். பல விவாகரத்து வழக்குகளில், ‘ஏற்கெனவே நான் வேண்டாம் என்று சொன்னேன். வீட்டில்தான் வற்புறுத்திக் கட்டி வைத்தார்கள்’ என்று சொல்கிறார்கள். எனவே, பணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பெற்றோர் வற்புறுத்தும்போது தெள்ளத் தெளிவாக `நோ' சொல்லிவிடுங்கள்.

பையன் அல்லது பெண்ணை பற்றி விசாரிக்கும் அளவுக்கு அவர் களுடைய பெற்றோர் பற்றியும் நன்கு விசாரியுங்கள். ஏனெனில், இங்கு பல பிரச்னைகள் பெற்றோர்களால் உருவாக்கப்படுபவையே.

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

நியாயமில்லாத எதிர்பார்ப்புகள் கூடாது. நீங்கள் தேடும் மாப்பிள்ளை அல்லது பெண் மிகவும் அழகாக, ஸ்டைலாக, நிறைய சம்பாதிப்பவராக, இணையான ரசனை உடையவராக, இழுத்த இழுப்புக்கு வருபவராக, சகிப்புத்தன்மைமிக்கவராக, கனிவான நபராக, எல்லா வீட்டு வேலைகளும் செய்பவராக இருக்க வேண்டும் என்று

ஏராளமான எதிர்பார்ப்புகளுடன் இருக்காதீர்கள். அப்படியென்றால் எதிர்பார்ப்புகளே கூடாதா? இருக்கலாம். ஆனால், தனது எதிர்பார்ப்புகள் அனைத்தும் நூறு சதவிகிதம் இருந்தே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள்.

பிறகு எப்படித் தேர்வு செய்வது? நீங்கள் உங்கள் வாழ்க்கைத்துணையிடம் அழகு உட்பட என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள் என்று ஒன் பை ஒன்னாகக் குறித்துக்கொள்ளவும். அதில் 60 சதவிகிதம் சரிபட்டுவந்தால்கூட ஓகே சொல்லிவிடுங்கள். நீங்கள் நிச்சயமாக சந்தோஷமாக வாழ்ந்துவிடலாம். ஏனெனில் உலகிலுள்ள சகல நல்ல விஷயங்களும் ஒரே நபரிடம் இருக்க முடியாது. ‘அப்படி ஒரு ஆளை ரெடி செய்யுங்கள்’ என்ற கடவுளிடம் ஆர்டர் கொடுத்தால் கூட, `என்னா…விளையாடறியா?' என்று உங்களைத் தூக்கிப்போட்டு மிதித்துவிடுவார்.

தோற்றத்தைவிட குணத்துக்கு அதிக முக்கியத்துவம் தரவும். வீட்டில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில் குணத்தை எப்படி அறிவது?

குணம்தான் பெரும்பாலும் உங்கள் மணவாழ்க்கையின் மகிழ்ச்சியை நிர்ணயிக்கப்போகிறது என்பதால் அதுபற்றி அடுத்த இதழில் விரிவாக விவாதிப்போம்.

(நல்ல சாய்ஸ் அமையும்!)