Published:Updated:

எல்லோரும் சொந்தங்களே... உறவாடும் உள்ளங்களே! - நம்பிக்கையூட்டும் தம்பதி

#Motivation

பிரீமியம் ஸ்டோரி
கூட்டுக்குடும்பத்தைப் பிரதிபலிக்கும் அந்த வீட்டுக்குள் நுழைந்த நம்மை, அங்கிருந்த அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அங்கிருந்த பெண்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்டும், குடும்பத்துக்குச் சுமையாக இருக்கக் கூடாது என நினைத்தும் வீட்டைவிட்டு வெளியேறிய மூத்த குடிமக்களான மாற்றுத்திறனாளிகள். தங்குமிடம், உணவு, வேலைவாய்ப்பு கொடுத்து தங்கள் குடும்பத்தினர்போல அனைவரையும் பார்த்துக்கொள்கிறார்கள் சாந்தி - சேகர் தம்பதி. நம்பிக்கையூட்டும் இந்த இல்லம், சென்னையை அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ளது.

“குழந்தைப் பருவத்துல கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு கால் ஊனமாகிடுச்சு. ஐ.டி.ஐ முடிச்சுட்டு வேலூர்ல ஷூ தொழிற்சாலையில வேலை செஞ்சேன். திடீர்னு அந்த கம்பெனியை மூடவே, அங்கு கத்துக்கிட்ட அனுபவத்தை வெச்சு தனியா உற்பத்திக்கூடம் ஆரம்பிச்சேன். ஷூ கம்பெனியில ஆர்டர் எடுத்து, ஷூவின் மேல் பாகத்தை மட்டும் தயாரிச்சோம். அந்த நேரம் சாலை விபத்துல எனக்கு ஆக்ஸிடென்ட் ஆகி பல மாதங்களுக்கு ஸ்டிக் வெச்சுக்கூட நடக்க முடியாம இருந்தேன். இனி நான் தேறி வர மாட்டேன்னு நினைச்சு, என்கிட்ட வேலை செய்த பலரும் வேலையில் இருந்து விலகிட்டாங்க.

குமுதா
குமுதா

மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை அந்தத் தருணத்துல ரொம்பவே உணர்ந்தேன். வேலைவாய்ப்பில்லாம சிரமப்படுற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவலாம்னு தமிழகம் முழுக்கப் பல்வேறு சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பினேன். மாற்றுத்திறனாளிகள் பலரும் என்னைத் தேடிவரவே, மறுபடியும் ஷூ தயாரிப்பு வேகமெடுத்துச்சு. அப்போ என்கிட்ட வேலை செய்தவங்கதான் மனைவி சாந்தி. காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். வயதானோரும் ஆதரவற்றோரும் அடைக்கலம் தேடிவரவே, எல்லோரையும் குடும்பத்தினரா ஏத்துக்கிட்டோம். இருப்பதைவெச்சு சிறப்பா வாழ்ந்தோம். பிறகு, வேலூர்ல இருந்து 2004-ல் இந்த வீட்டுக்கு வந்துட்டோம். தொடர்ந்து பல வருஷமா ஷூ தயாரிப்புதான் போயிட்டிருக்கு. பொருளாதார ரீதியா சிரமப்படும் பெண்களை மட்டுமே இந்த இல்லத்துல சேர்க்கிறோம். எல்லோரும் குடும்பச் சொந்தங்களா ஒத்துமையோடு வாழுறோம்” என்று அடக்கமாகக் கூறும் சேகர், மனைவியைப் பேசச் சொல்கிறார்.

“நல்ல விஷயங்களுக்குத் தடைகளும் தடங்கல்களும் வரக்கூடும். ஆனா, அதையெல்லாம் தாண்டியும் நம்ம காரியம் நிச்சயம் நிறைவேறும். அதேபோல, எங்களை நம்பியிருந்தவங்களுக்கான தேவை களைப் பூர்த்திசெய்ய தொடக்கத்துல ரொம்பவே சிரமப்பட்டோம். பலருடைய நட்பும் உதவியும் கிடைக்க ஆரம்பிச்சது. கஷ்டங்களை எதிர்கொள்ளும் வலிமை கிடைச்சது. அப்பப்போ யாராச்சும் சாப்பாடு கொடுப்பாங்க; சமையல் பொருள்கள் வாங்கித் தருவாங்க. மத்தபடி, எங்க வருமானத்துலயே வாடகை, சாப்பாடு, மருத்துவத் தேவைகள்னு எல்லாத்தையும் பூர்த்தி செய்துக்கிறோம். இங்க வேலை அதிகம் இருக்கு. இங்கிருக்கிற ஆறு பெண்கள்தாம் ஷூ தைப்பாங்க.

சாந்தி - சேகர்
சாந்தி - சேகர்

இந்த வேலையை கையாலதான் செய்ய முடியும். ஒருத்தரால ஒருநாளைக்கு அதிகபட்சம் 15 ஜோடி ஷூதான் தைக்க முடியும். ஒரு ஜோடி ஷூ தைச்சா சராசரியா 20 ரூவா கூலி. ஒருத்தர் மாசத்துக்கு சில ஆயிரம் ரூவா சம்பாதிக்கிறாங்க. கொரோனா வால ஷூ ஆர்டர் சரியா கிடைக்கிறதில்லை. வேறு சுயதொழில் செய்ற யோசனைகள்ல இருக்கோம். ஆதரவற்ற மக்களுக்கு உதவுற கணவரோட நோக்கத்துக்கு என்னாலான பங்களிப்பைக் கொடுக்கிறது பெரிய பாக்கியம். மாற்றுத் திறனாளிகளின் உணர்வுகளுக்கும் திறமைக்கும் முக்கியத்துவம் கொடுத்து கவனிச்சுகிட்டா, இவங்களும் மகிழ்ச்சியோடு சாதிப்பாங்க. வேலைவாய்ப்பு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ நாங்க தயாரா இருக்கோம்” என்கிற சாந்தி, சுற்றியிருந்தவர்களைப் பார்த்துப் புன்னகைக்கிறார்.

எல்லோரும் சொந்தங்களே... உறவாடும் உள்ளங்களே! - நம்பிக்கையூட்டும் தம்பதி

இந்த இல்லத்தில் 20 ஆண்டுகளாக வசித்துவரும் குமுதா, “எனக்குக் கால் ஊனம். சரியான வேலை வாய்ப்பு இல்லாம, குடும் பத்துல சாப்பாட்டுக்கே சிரமப்பட்டோம். இந்தத் தம்பதியோடு குடும்பமா இணைஞ்சு, வேலை செய்ய ஆரம்பிச்சேன். எனக்கு பெற்றோர் இல்ல. பிறரை நம்பியில்லாம, சொந்த சம்பாத்தியத்துல தன்னிறை வோடு வாழுறேன்” என்று பெருமையுடன் கூறுகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு